Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள இனவெறியில் பற்றி எரிந்த திருமலை
#1
இருபத்தொரு பேர் சாவு!
அறுபது பேர்வரை காயம்!
முப்பத்தொரு வர்த்தக நிலையங்கள் எரிப்பு!
சேதமதிப்பீடு பன்னிரண்டரைக் கோடி!
வாகனங்கள், உடைமைகள் சேதம்!
நாற்பத்தொரு வீடுகள் எரிப்பு!

தமிழர் தாயகத்தின் தலை நகர் திருமலையில் சிங்களக் காடையர் கும்பலும், சிங்களக் குண்டர்களும் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கையானது தமிழினத்தினைத் திட்டமிட்டு அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது.

திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத்தலைவர் மாமனிதர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் சோபையிழந்து சோகத்துடன் காணப்பட்ட மக்களுக்குக் கடந்த 12ம் திகதி நடைபெற்ற சம்பவம் திட்டமிட்ட இனஅழிப்பின் ஒரு உச்ச நடவடிக்கையாக நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவதானிக்கின்ற போது இது தெளிவாகத் தெரிகிறது. சம்பவதினமான ஏப்ரல் 12ம் திகதி திருமலை நகரத்திலுள்ள மரக்கறி சந்தைப் பகுதிகளிலுள்ள தேங்காய்க் கடை ஒன்றுக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் உட்பட ஏழுபேர் பலியாகினர். இதில் தமிழ்ப் பெண்கள் மூவர் அடங்குவர். இதனைத் தொடர்ந்து வன்முறைகள் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்டன. ஏற்கனவே தயார் நிலையில் இருந்த சிங்களக் காடையர் கும்பல்கள் வாகனங்களில் வந்து இறக்கப்பட்டதும் வன்முறைகளில் ஈடுபட்டன. தமிழ் மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டன. சிங்கள ரவுடிக் கும்பல் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது நேர்மை, சட்ட, ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்கின்ற படைத்தரப்பாக சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இருந்திருந்தால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

சிங்களக் குண்டர்கள் தாக்குதல் நடத்தும்போது சிறிலங்காப் படையினர் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். உண்மையில் இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு இனஅழிப்பு நடவடிக்கை என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளன. திருமலை மரக்கறிக் கடைக்குள் குண்டு வெடித்து வன்முறைகள் ஆரம்பித்த போது தாக்குதல் நடத்தத் தயார் நிலையிலிருந்த சிங்களக் குண்டர்கள் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.

பொல்லுகள், தடிகள், மண்வெட்டிகள், கோடரிகள், கத்திகள் போன்ற கூரிய ஆயுதங்களை அவர்கள் தாக்குதலின் போது பயன்படுத்தினர். அந்த ஆயுதங்கள் எவையும் பாவனையில் இருந்த ஆயுதங்களல்ல. அத்துடன் பொல்லுகள், தடிகள்கூட எதிர்பாராத விதமாக தாக்குதலுக்குத் தேடி எடுத்தவையாகத் தோன்றவில்லை. கத்தி, கோடாரி, மண்வெட்டி என்பனவற்றின் பிடிகள் புதிதாகச் சீவி போடப்பட்டிருந்ததுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பொல்லுகள், தடிகள் என்பனவும் அவ்வாறே வைக்கப்பட்டிருந்தன.

எனவே எதிர்பாராத விதமாக ஒரு தாக்குதலுக்கு வருவதானால் இவ்வாறு ஆயுதங்களை உடனடியாக எடுத்துவர முடியாது என்பது உண்மையான விடயம். அடுத்தது திருமலை நகரப் பகுதியில் முச்சக்கரவண்டிகள் நிறுத்துமிடங்களிலிருந்த சிங்களவர்களுக்குச் சொந்தமான முச்சக்கரவண்டிகள் ஏற்கனவே திட்டமிட்டு அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டன.

அது மாத்திரமன்றி வன்முறையில் ஈடுபட்ட கும்பல் தமிழ் மக்களின் பெறுமதி மிக்க சொத்துக்களைச் சூறையாடிக் கொண்டு போயுள்ளனர். சொத்துக்கள் வெளியே கொண்டு செல்லப்பட்ட பின்னரே தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்த நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. திருமலை மரக்கறிச் சந்தையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பிரதான வீதி, மத்தியவீதி, ஏகாம்பரவீதி ஆகிய வீதிகளில் சிங்களக் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்ட அதேவேளை மூன்று மைல் தொலைவிலுள்ள அபயபுரத்திலுள்ள தமிழ் மக்கள் மீதும் வன்முறைகளில் சிங்களக் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். திருமலையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது திருமலை நகர இராணுவ அதிகாரி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது கண்காணிப்பின் பேரிலேயே வன்முறையாளர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இரு மணி நேரத்திற்கு இவ்வாறான பேரனர்த்தம் நடைபெற்று நிறைவடைந்த பின்னர்தான் படையினர் வந்து கண்துடைப்பிற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த நேரத்தில் கூட வன்முறையாளர்கள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் எவரையும் சிறிலங்கா படையினர் கைது செய்யவோ அல்லது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து காயப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. வேண்டுமென்று தமிழ் மக்கள் மீதான இன அழிப்பைப் பார்த்து சிங்கள படைச்சிப்பாய்கள் ரசித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வன்முறையினால் 21 அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. 31 வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இந்த 31 வர்த்தக நிலையங்களிலிருந்த சொத்துக்களின் ஆரம்பகட்ட மதிப்பீடு பன்னிரெண்டரைக் கோடி ரூபா எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எரியூட்டப்பட்டதன் போது சேதமடைந்த கட்டிடங்களின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை.

இவை மாத்திரமன்றி பெருமளவிலான வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. லொறி, தனியார் வான், உந்துருளிகள் இவற்றில் அடங்கும். இவை மாத்திரமன்றி ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் எரியூட்டப்பட்டதுடன் இரு தொண்டர் நிறுவனங்களும் சிங்களக் காடையர்களால் அடித்து நொருக்கி சேதமாக்கப்பட்டுள்ளன. ஒப்பர்சிலோன். இளைஞர் அபிவிருத்தி அலுவலகம் ஆகிய தொண்டர் நிறுவனங்களே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை திருமலை நகரப்பகுதியில் ஒரு வீடு மாத்திரமே எரிக்கப்பட்ட அதேவேளை மகிந்தபுரம், நடேசபுரம் பகுதியில் 40 வீடுகள் சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடேசபுரம், மகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

அன்பு வெளிபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 260 பேரும், துவரங்காடு பாரதி வித்தியாலயத்தில் 81 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேரும் இடம் பெயர்ந்துள்ளனர். அத்துடன் கன்னியா கிராமத்தைச் சேர்ந்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேரும், மாங்காயுங்கைச் சேர்ந்த 72 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேரும், பீடியடிக் கிராமத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களைச் சேர்ந்த பேரும் 170 பேரும் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. எனினும் சித்திரைப் புதுவருடத்திற்கு முதல் நாளும் சித்திரைப் புது வருட தினத்தன்றும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் காரணமாக மக்களிடையே அச்சமும் பீதியும் அதிகரித்துள்ளன.

இவை ஒருபுறமிருக்க திருமலை மாவட்டத்திலுள்ள வங்கிகள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாத வiர் பணிகளை இடைநிறுத்தப் போவதாக அறிவித்ததுடன் வங்கிப் பணிகளை இடை நிறுத்தியுள்ளன. திருமலையிலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, செலான் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகிய ஏழு வங்கிகளின் நிர்வாகத்தினரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சம்பவதினத்தன்று இலங்கை வங்கி சிங்களக் கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம், மற்றும் வங்கிப் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இவ்வாறு வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் இணைந்து வங்கிப் பணிகளை இடை நிறுத்தியுள்ளனர்.

இதனால் திருமலை மாவட்டத்தில் பொது மக்களுடனான கொடுக்கல் வாங்கல்கள் முடக்கப்பட்டதுடன் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவை மாத்திரமன்றி திருமலையில் தொடரும் பதட்டம் காரணமாக திருமலை மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வெளிப்படுத்தினாலும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் திருமலை மக்களின் வாழ்வியலை மிக வேகமாகப் பாதிப்படையச் செய்துள்ளன.

திருமலை மாவட்டத்தில் தமிழினத்திற்கு எதிரான இனவன்முறைகள் என்பன இன்று நேற்று அல்ல. காலங்காலமாக அரங்கேறி வருகிறன. சிங்களப் பேரினவாதம் திருமலையிலிருந்து தமிழினத்தை பூண்டோடு அழித்து திருமலையை சிங்கள பூமியாக்கும் நடவடிக்கைகள் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்றுள்ளன.

இதனடிப்படையில் 83ம், 85ம், 86ம், 87ம், 90ம் ஆண்டுகளில் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. திருமலை நகரில் கடந்த 83ம் ஆண்டு யூலை 26ம் நாளன்று திருமலை கடற்படைத் தளத்திலிருந்து சீருடையில் நகருக்குள் நுழைந்த சிறிலங்கா கடற்படையினர் தமிழ் மக்களது வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பனவற்றைக் கொழுத்தி சாம்பல் மேடாக்கி விட்டுச்சென்றனர்.

அதன் பின்னர் கடந்த 90ஆம் ஆண்டு திருமலை நகரம் மற்றொரு சோகத்தில் மூழ்கியது. சிங்களப் பேரினவாதிகள் புகுந்து தமிழ் மக்களைப் படுகொலை செய்திருந்தனர். அதன் பின்னர் தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் பல்வேறு வன்முறைகளையும் படுகொலைகளையும் செய்தாலும் ஒட்டுமொத்தமாகப் பாரிய இனஅழிப்பு நடவடிக்கை என்றால் அண்மைய சம்பவம்தான்.

இதுவரை காலமும் திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளுடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் குறுகிய நேரத்துக்குள் இடம்பெற்ற சம்பவம் மிகப் பெரிய உயிரழிவையும், சொத்தழிவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்திலும் சிங்களப் பேரினவாதம் இவ்வாறான தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் திருமலையில் தமிழ் மக்கள் பேரினவாதத்தில் சிக்கிவிடாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதானால் வன்முறைகளுக்கு உடந்தையாகவிருந்த இராணுவ உயர் அதிகாரியும் ஏனைய வன்முறைக் கும்பல்களும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மாறாக விசாரணைகள் கண்துடைப்பாக நடைபெறுமானால் எதிர்காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

அஸ்வதன்
மட்டக்களப்பு ஈழநாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)