சுதந்திரத்தின் பெயரோடு
கடந்து சென்ற வரலாறு
இலங்கையின் 58ஆவது சுதந்திர தினம் இன்று. தென்னிலங்கை இத்தினத்தை பெரும் விடுதலைத் திருநாளாகக் கொண்டாடுகின்றது.
ஆனால், வடக்கு கிழக்கில், தமிழர் தாயகத்தில், நமது மக் கள் தங்களின் அடிமைசாசனம் எழுதப்பட்ட நாளாக தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட தினமாக இதை அனுஷ்டிக்கின்ற னர். தமிழர் தாயகம் தன்னை அடிமை விலங்கு ஆக்கிரமித்த நாளாக இதைக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கின்றது. அதுதான் இந்தத் தீவின் கடந்த ஆறு தசாப்த கால சரித்திரமாகும்.
வெவ்வேறான பண்பாடுகளோடு, வாழ்வியல் நிலப்பரப்புகளோடு, தனித்தனி மொழி, வாழ்க்கை முறை, வழக்காறுகள் போன்ற அடையாளங்களோடு இந்தத் தீவில் இரண்டு தனித் தனி புராதன அரசுகளை அமைத்து வாழ்ந்தவர்கள் தமிழர்களும், சிங்களவர்களும்.
இற்றைக்கு சரியாக ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1505ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் முதல் அந்நிய ஆட்சியாளர்களான போர்த்துக்கேயர் காலடி எடுத்து வைத்தபோது இத்தீவு தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் எனத் தனித்தனி யான ஆட்சியமைப்போடுதான் நிர்வாகக் கட்டமைப்போடு தான் காணப்பட்டது.
இத்தீவைக் கைப்பற்றிய போர்த்துக்கேயரும் சரி, அவர்க ளின் பின்னர் வந்த ஒல்லாந்தரும் சரி, தமிழர் தாயகப் பிர தேசத்தை தனி இராச்சியமாகவே ஆண்டனர். அதன் மூலம் தமிழர் தாயகத்தின் பிரதேச ஒருமைப்பாட்டையும், இன அடையாளத் தையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்; ஏற்று அங்கீகரித்தனர்.
ஆனால், ஒல்லாந்தருக்குப் பின்னர் இலங்கைத் தீவைக்கைப்பற்றிய ஆங்கிலேயரோ பிரிட்டிஷாரோ இந்தத் தனித் துவ அடையாளத்தைப் புறம் ஒதுக்கி, தமது நிர்வாக வசதிக்காக தமிழ் இராச்சியத்தையும், சிங்கள இராச்சியத்தையும் ஒன்றாக்கி ஒற்றையாட்சி என்ற முறையைத் திணித்தனர்.
அதன் மூலம் பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு வெளியேறும்போது பெரும்பான்மையினராகிய சிங்களவர்களின் கைகளில் அடக்கப்படும் இனமாக சிறுபான்மையினரான தமி ழரின் தலைவிதி ஒப்படைக்கப்பட்டது.
கிறிஸ்துவுக்கு முந்திய காலம்வரை தொன்மையான வேரோடல்களைக் கொண்ட தனித்துவமானவையாக விளங் கிய இரண்டு இனங்களின் வாழியல் நிலைமை இவ்வாறு தான் மோசமாக்கப்பட்டு, பேரினவாதம் சிறிய இனத்தின் மீது மேலாண்மை செய்வதற்கு வழி செய்யப்பட்டது. அதற்கு வழி வகுத்த தினமே இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
1948 பெப்ரவரி 4இல் இலங்கைத்தீவின் அதிகாரத்தை தென்னிலங்கைத் தலைவர்களிடம் ஒப்படைத்து பிரிட்டிஷார் புறப்பட்டதன் "சுதந்திரக் கையளிப்பின் விளைவு எவ்வாறு அமைந்தது என்பதை புலிகளின் மதியுரைஞர் அன்டன் பால சிங்கம் தமது"போரும் சமாதானமும்' என்ற நூலில் கனகச்சித மாக சுருங்கக்கூறி விளங்கவைக்கிறார். அந்த வாசகங்கள் ஊடாக நாம் அந்த நிகழ்வுப் போக்கைத் தரிசிக்கலாம்.
""சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து சிங்களப் பேரினவாதம் மேலாண்மை பெற் றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவம் எடுத்தது. இந்த அரச அடக்கு முறையானது அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்ததை அடுத்து, மாறிமாறி ஆட்சி பீடம் ஏறிய சகல சிங்கள அரசு களும் இந்த ஒடுக்குமுறைக் கொள்கையையே கடைப்பிடித் தன. இந்த ஒடுக்குமுறைக் கொள்கையில் தமிழின ஒழிப்புத் திட்டமும் அடங்கியுள்ளது. அதாவது, தமிழரின் தேசியவாழ் விற்கு ஆதாரமான, அத்தியாவசிய அடித்தளங்களைப் படிப்படி யாகத் தகர்த்துவிடும் நாசகாரத் திட்டமாகவும் இந்த ஒடுக்கு முறை அமையப்பெற்றது. ஒன்றுபட்ட ஒரு தேசிய இனக்கட் டமைப்பாக தமிழ் மக்கள் தழைத்து நிற்பதற்கு என்னென்ன அவசியமோ அவற்றையெல்லாம் பல்வேறு மட்டங்களில் தாக்கி யழிப்பதை இவ்வொடுக்குமுறை இலக்காகக் கொண்டது. எனவே, இந்த இனவழிப்பு அடக்குமுறை பல்முனைத் தாக்கு தலாக வடிவெடுத்தது. தமிழரின் இருப்புக்கே ஆதாரமான மொழி உரிமை முதலில் பறித்தெடுக்கப்பட்டது. அதனை யடுத்து கல்வி உரிமைக்கும், வேலைவாய்ப்பு உரிமைக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. அவர்களுடைய பாரம்பரிய நிலங்கள் மீதான சொத்துரிமையையும் இழக்கச் செய்தது. அவர்களது சமய, பண்பாட்டு வாழ்விற்கும் ஊறு விளைத்தது. இறுதியாக தமிழர்களது உயிர்வாழும் உரிமைக்கே பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. தமிழ் மக்கள் ஓர் இனமாக ஒருங்கிணைந்து வாழ்வதற்கு, ஓர் இனமாகத் தம்மை அடையா ளப்படுத்துவதற்கும் அவசியமான அடித்தளத்தையே அரச ஒடுக்குமுறை தாக்கியது. இத்தமிழின ஒழிப்புத்திட்டத்தின் முக் கிய அங்கமாக சிங்கள அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப் பட்ட இனக்கலவரங்கள் காலத்திற்குக் காலம் தலைதூக்கின. இதன் விளைவாகப் பெருந்தொகையான தமிழ் மக்கள் கொன் றொழிக்கப்பட்டார்கள். பெருந்தொகைத் தமிழ்ச் சொத்துகள் நிர்மூலமாக்கப்பட்டன. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் பெரும்பான்மைக் கொடுங்கோன்மை யின் கருவியாகியது. அங்கு இனவாதம் அரசோச்சியது. சிறு பான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் அங்கு யாக்கப்பட்டன. கொடிய சிங்கள இனவாதத் தாக்கு தலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே முதல் பலியாகி வீழ்ந்தார்கள். இந்தத் தீவின் சுபீட்சத்துக்காக ஒரு நூற்றாண் டுக்கு மேலாகப் பாடுபட்ட பத்து லட்சம் தமிழ் மக்களின் வாக்கு ரிமை பறிக்கப்பட்டது. இலங்கை அரசின் வரலாற்றில் மிகவும் அநீதியாகக் கருதப்படும் குடியுரிமைச் சட்டம் அந்தக் கொடுமை யைப் புரிந்தது. இதன் மூலம், மலையகத் தமிழ் மக்களது அடிப்படை மனித உரிமை பறிக்கப்பட்டது. நாடற்றோர் என்ற இழிநிலைக்கு இவர்கள் தரம் இறக்கப்பட்டார்கள். அரசியலில் பங்கெடுக்கும் உரிமை பறிக்கப்பட்ட நிலையில், பெருந்தொகைத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு அரச நாடாளுமன்றக்கதவுகள் மூடப்பட்டன.......''
இப்படி விளக்குகிறார் மதியுரைஞர்.
இத்தகைய நிலையை ஏற்படுத்திய தினத்தை சுதந்திர தினமாகத் தமிழ் மக்கள் கொள்ளமுடியுமா? உலகம் பதில் சொல்லவேண்டும்.
http://www.uthayan.com/editor.html