Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைக்கு சாராயம்: முதியோருக்கு வானொலி
#1
தமிழ்நாட்டில் உள்ள இரண்டரை வயதுப் பாலகனுக்கு ஒரு நாளைக்கு மூன்று பக்கெட் சாராயம் தேவை என்ற இந்தச் செய்தியைப் பார்த்ததும் தேகமெல்லாம் நடுங்கியது. எப்படி ஒரு சிறுவனை அவர்கள் பாழாக்கியிருக்கிறார்கள் என்ற வேதனை ஒருபுறம். இவ்வளவுக்கும் அந்தச் சிறுவன் தாய் தந்தையின் கவனிப்பு ஏதுமில்லாமல் தனது பாட்டியுடன் இருக்கிறானாம். போவோர் வருவோர் ஊட்டிப் பழக்கிவிட அவனுக்கு அதுவே இப்போது சாதாரண உணவாகிவிட்டது..

மேற்படி பாட்டியும் அச் சிறுவனைப் பராமரிக்கத் தெரியாத ஒருவராக இருப்பதால்தான் இந்தநிலைக்குச் சிறுவன் தள்ளப்பட்டான். இந்தக் கெட்டபழக்கம் தொடர்ந்தா இவன் செத்துப்போயிடுவான், என்ன செய்வது இவனை எங்காவது விடுதியில் சேர்த்துவிட வேண்டும், ஆனால் வழி தெரியவில்லை| என்று பத்திரிகைக்காரர்களிடம் புலம்பியிருக்கிறார்.

இதைப் பார்த்தபோது இங்கே நடக்கிற சில அவலங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து சில உண்மைகளை அவர்களுக்கு விளக்கவேண்டும் என்ற அவா எனக்குள் ஏற்பட்டது. ஏனென்றால் இங்கேயும் ஒரு சில முதியவர்கள் இந்தப் பாலகனைப் போலப் பாழடிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே பாட்டி கவனிக்காதது போல இங்கே இந்தச் சில முதியோர்களின் பிள்ளைகள் இவர்களைக் கவனிக்கவில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

தமிழீழத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய பல முதியவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையோடு ஒத்திசைந்து நல்ல வாழ்வு வாழ்கிறார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே தேவையற்ற சிக்கல்களுக்குள் தாமும் ஈடுபட்டு மற்றையவர்களுக்கும் பிரச்சினை தருபவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறானவர்களுக்கு உண்மையை புலப்படுத்தவே இந்த மடல்.

பொழுது போகாத நேரங்களில்

வானொலியை கேட்கவிரும்பிய அவர்களை விசமாக்கியுள்ளது இங்குள்ள வானொலி ஒன்று. வணக்கம் சொல்லப் புறப்பட்டவர்கள், பாட்டு, தேவாரம், கூத்து என தனது வலைக்குள் இழுத்து அவர்களை இப்போது தனது பகடைக் காய்களாக்குகிறது அந்த வானொலி. இவ்வாறு வானலைக்கு வரும் சில முதியவர்களுக்கு தொலைபேசி மூலம் பேசுவதும், வானலையில் தான் சங்கமிப்பதும் ஆச்சரியம் தரும் செயலாகவும், தனது வாழ்நாளில் இதுவரை செய்யாத ஒரு செயலாகவும் இருந்திருக்கும். எனவே அதை வைத்துப் பிழைப்பைத் தொடங்கிய அந்த நபர் இந்த முதியவர்களை புதைகுழிகளுக்குள் தள்ளியுள்ளார்.

எவ்வாறு வருவோர் போவோரால் சிறிது சிறிதாக சாராயம் கொடுத்து மேற்கண்ட சிறுவன் பாழடிக்கப்பட்டானோ அதேபோல முதியோர் அரங்கம், கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சிகளின் மூலம் படிப்படியாக இந்த முதியோர்கள் தாராளமாகக் கெடுக்கப்பட்டார்கள். தேவையற்ற பிரச்சினைகளையும், தனது வானொலி வளர்ச்சிக்காக தான் செய்யும் பிழையான காரியங்களையும் நியாயமான விடயங்களைப் போல அவர்களுக்குப் புகட்டப்பட்டன.

இதனால் என்ன ஏற்படப்போகிறது என அந்த ஒரு சில முதியவர்கள் எண்ணலாம். அவ்வாறு அவர்கள் நினைப்பதிலும் தவறில்லை. ஆனால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் வருத்தத்தை தங்களது பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் பரப்புகின்ற ஒரு நோய்க்காவிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மையை இன்னமும் புரியவில்லை.

அங்கே தான் ஆபத்தே ஆரம்பிக்கிறது. ஏனென்றால் முதலில் இந்த முதியோர்கள் சினமூட்டப்படுகிறார்கள். அவர்களுக்குத் தேவையற்ற ஒரு பிரச்சினையை அவர்களிடத்தே புகுத்துவதன் மூலம் அவர்கள் சினமேற்றி கோபநிலைக்கு மாற்றப்படுகிறார்கள். ஏற்கனவே இரத்தக் கொதிப்பு, இருதய அழுத்தம், நீரிழிவு, மன அழுத்தம் போன்ற நோய்களை பல முதியவர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையற்றதைப் புகுத்தி அவர்கள் கோபமூட்டப்பட்டதும், சினங் கொள்ள வைக்கப்பட்டதும் அவற்றை அவர்கள் தங்களின் இரத்த உறவுகளிடையேயே தீர்க்க முயலுவார்கள். அவர்களிடமே தங்கள் கோபத்தை இவர்கள் வெளிப்படுத்த முடியும்.

தாங்கள் மீண்டும் வானலைக்கு வர வேண்டுமென்றால் வானொலிக்காரர் சொல்வதற்கு ஆமாப் போட்டேயாகவேண்டும். அவர் சொல்வது பிழையென்பதை சுட்டிக்காட்ட விரும்பினாலும், சுட்டிக்காட்டினால் அடுத்த முறை வானலைக்கு வர முடியாதே என்ற பயம் அவர்களைத் தடுத்துவிடும். எனவே விருப்பமற்றவற்றையும் இந்த முதியவர்கள் ஏற்றுக் கொள்ள பலவந்தப்படுத்தப்படுகிறார்கள்.

அதையே வானொலிக்காரர் தனக்குச் சாதகமாக்கி தனது வியாபாரத்தை திறம்பட நடத்துகிறார். இந்த முதியவர்களைத் தனது ஆசைகளுக்குப் பலியாக்குகிறார். இங்கேயுள்ள முதியோர் இளைப்பாறுமிடங்கள், முதியோர் தங்ககங்களை எடுத்து நோக்கினால் அவை அனைத்தும் முதியவர்கள் மனச்சாந்தியாக, அமைதியாக இருப்பதற்கான நிகழ்ச்சிகளையே தயாரித்து வழங்குகின்றன.

ஆனால் இங்கே முதியோர் அரங்கு மற்றும் கலந்துரையாடல் என்ற போர்வையில் எடுக்கப்படும் சகல விடயங்களும் குழப்பான விடயங்களாகவே இருக்கின்றன. இதுதான் அவர் உங்களுக்கு ஊட்டும் விசம். இவ்வாறு கோபமூட்டப்பட்ட இந்த முதியோர்கள் தங்கள் மன அழுத்தத்தை எங்கே கொட்டித் தீர்ப்பார்கள்? பாவம் இவர்களது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும். ஏன் மருமக்களும் தான். ஏனென்றால் செய்வதற்கு ஏதுமற்ற இவர்கள் தாங்கள் வானலையில் பிரபல்யப்படுத்தப்பட்ட விடயத்தைப் பற்றியும், அடுத்த நிகழ்ச்சியில் எவ்வாறு கதைப்பது என்பது பற்றியும் தொடர்ந்து சிந்திப்பார்கள்.

இதனால் தங்கள் நாளாந்த கடமைகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்குரிய பாசங்களை எவற்றையும் அவர்களால் தகுந்த அளவுக்கு வழங்க முடியாது. குறிப்பாக தங்களது மன அழுத்தம், இரத்த அழுத்தம் ஆகியவற்றை அதிகரித்து தங்களின் மரணத்துக்கான திகதியை விரைவாக்கும் பணியையும் செய்து வருகிறார்கள்.

யோசித்துப் பாருங்கள். உங்களுக்குச் சொல்லப்படுபவை எல்லாம் நிஜமானவையா? இல்லவே இல்லை. முன்கூட்டியே ஒழுக்குபடுத்தப்பட்ட ஒரு சிலர், வானொலிக்காரர் நிகழ்ச்சியை ஆரம்பித்ததும், தங்களது வசைகளை எடுத்து விடுவார்கள். அது அந்த விடயத்திற்கு எண்ணெய் ஊற்றி நெருப்பை பெரிதாக்குவது போலாகும். பிறகென்ன நீங்கள் ஒரு சிலர் விட்டில் பூச்சிகள் போல அதற்குள் விழுந்து உங்களை அழித்துக் கொள்வீர்கள்.

உங்களது காசுகூட எவ்வாறு உங்களிடம் இருந்து சுரண்டப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? அந்திப்பூக்கள்| ஆகட்டும், அப்பே ரட்ட| ஆகட்டும் தமிழீழப் பிரச்சினையை மையமாக வைத்தே அவர் நடத்தினார். ஏனென்றால் அப்படியாயின் தானே மக்களைக் கவர முடியும். ஆனால் பணத்தை இழந்தது நீங்களல்லவா? இப்போது உணர்ச்சி வசப்படும் இந்த முதியவர்களில் எத்தனைபேர் அப்போது இருந்தீர்களோ தெரியாது, ஆனால் ஒரு விடயத்தை மட்டும் பார்ப்போம்.

இவரது அந்திப்பூக்களுக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலை சம்பந்தப்பட்டவர்கள். வை.கோ. மற்றும் வர்ணரமேஸ்வரன், வண. பிதா ஜெகத் காஸ்பர்ராஜ் என எல்லோரும் விடுதலை சம்பந்தப்பட்டவர்கள். நிதி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு என்ற பிரச்சாரம் ஒருபக்கம். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தான் அரங்கை ஒழுங்கு செய்வது உட்பட பலவேலைகளைச் செய்து கொடுத்தது. நூறு டொலர்கள் பெறுமதியான ரிக்கற்றைப் பெறுமாறு முதியவர்கள் வானொலியூடே வற்புறுத்தப்பட்டார்கள். பெயர்கள் கூட வாசிக்கப்பட்டு மற்றைய முதியவர்களும் இந்த நயவஞ்சக வலைக்குள் வீழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு விடுதலையைப் பயன்படுத்தினாலே சனம் திரளும் என்பதால் அதனைப் பயன்படுத்தியவர் ஒருசதமேனும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்குக் கொடுக்கவில்லை. வானலையில் நீங்கள் வந்து கண்டித்ததும் அவர் அழுதார், தொடர்ந்து அழுதார். தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு காசு கொடுப்பதாக அறிவித்தார், நீங்கள் கரைந்து விட்டீர்கள். 7,000 பேர் கலந்து கொண்ட நிகழ்வில் இவர் ஈட்டியது சுமார் 2 மில்லியன்களுக்கு மேல். ஆனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்குக் கொடுக்க ஒப்புக் கொண்டது வெறும் 60,000 (அறுபதினாயிரம் டொலர்கள்) மட்டுமே.

நீங்கள் நிம்மதியடைந்தீர்கள். ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நூறு தடவைக்கு மேல் தொடர்பு கொண்டும் காசைப் பெறமுடியவில்லையாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்த்தீர்களா எவ்வாறானதொரு மோசடிப் பேர்வழியுடன் நீங்கள் இப்போது பழகுகிறீர்கள் என்பதை? இவ்வாறு ஒருபக்கமாக பணத்தால் ஏமாற்றப்படும் நீங்கள் மற்றப்பக்கத்தால் உங்கள் உடல், உளநலத்தையும் இழந்து வருகிறீர்கள் என்பதை அறிவீர்களா? உங்கள் நல்ல மனங்களில் நீங்கள் இப்போது அசுத்தத்தை சுமக்கத் தொடங்கியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?

எனவே சிந்தியுங்கள். நீங்கள் உங்கள் வயதுக்குரிய பொழுது போக்குகள் மற்றும் தன்னம்பிக்கையூட்டும் வழிகளை நாடி உங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளும் வழிநடத்தும் நற்பிரஜைகளாக மாறுங்கள். உண்மைத் தன்மையற்றவற்றில் பங்குபற்றி உங்களை நீங்களே இழக்காதீர்கள். ஏனென்றால் ஒருமுறை நீங்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்பவை உங்களை மீண்டும் மீண்டும் சிக்கலுக்குள் ஈடுபட வழிவகுக்கும்.

ஏனவே நீங்கள் சொன்னவற்றை வைத்தே அவர் மீண்டும் உங்களை மேலும் மனச் சிக்கலுக்கும், உளச்சிக்கலுக்கும் உள்ளாக்குவார். இதுவே உங்களை வைத்தியர்களை மீண்டும் மீண்டும் நாட வைக்கும். என்ன நான் சொல்வது புரிகிறதா?

புரியாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகளிடம் இதைக்காட்டி இவ்வாறான தாக்கங்கள் உங்களுக்கும் ஏற்படுமா எனக் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு உண்மையைத் தெரிவிப்பார்கள்.

இரண்டரை வயதுப் பாலகனுக்கு எவ்வாறு சாராயமோ அதுபோலவே உங்களில் சிலருக்கு இந்த வானொலியும்.

- ஜே. ஆசிர்வாதம், மின்னல்.
நன்றி: முழக்கம்
http://www.muzhakkam.com/21112003/FrontNew...ews/News_05.htm
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)