Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்னை பூபதிக்காக...
#1
<img src='http://sooriyan.com/images/stories/ltte/ap.jpg' border='0' alt='user posted image'>

அகம்நிறை வாழ்கின்ற அன்புடைத் தெய்வமே!
அகிம்சைவழி வாழ்ந்திட்ட அன்னை பூபதியே!
இகமிங் குள்ளவரை என்றும் நிலைத்திடும்
இணையிலாப் புகழ்பூத்த இன்னுயிர் மாதே!
தகவுடை மங்கையர் திலகமே! தாயே!
தக்கவோர் கவிபுனைந்து தாள்மீது படைத்திட
மகள்நான் விருப்புற்றேன் மனத்துயர் வெளிப்படுத்தி!
மறைவின்றி வடிக்கின்றேன்! மனமுவந்து விடைதருக!

சிங்களத்தின் கொடுமையிற் சீற்றமுற்று நாமிருக்க
சிந்திய இரத்தமது உலர்ந்து வற்றுமுன்னே
வங்கக் கடல்கடந்து வந்தனர்வாழ் வளிக்கவென
வஞ்சம்செய் உளத்தினராய் வலிந்தங்கு புகுந்தனர்!
இங்குற்ற மாந்தரெலாம் இனிதே மகிழ்ந்திருக்க
இனியெமக் குத்துயரில்லை யெனக்கூறி நிமிர்ந்திருக்கப்
பொங்கிடும் மெய்யுணர்விற் கண்டனையோ அவர்குள்ளம்?
பொறுத்திருந்து செயற்படுத்தக் கொண்டனையோ திருவுளம்?

அமைதிபேண வந்தவரோ ஆக்கிரமிப் பாளரானார்!
ஆண்பெண் கிழவரொடு குழவியெனப் பேதமின்றி
எமையெண்ணிப் பார்த்திடா எரித்தும் புதைத்தும்
அளவிட முடியாத் தீமைகள் புரிகையிலே
தமையுணர்ந்து மட்டுநகர் மங்கையர் விழித்தெழத்
தலைவியாய் முன்வந் துண்ணா நோன்பிருந்து
இமயமே சரிந்திட இன்னுயிர் ஈய்ந்திட்ட
எம்முயிர்த் தாயேஎன் வினாவிற்குப் பதிலென்ன?

இன்றுநாம் உனக்கான விழாக்காணும் பொழுதினிலே
இன்துயில் புரிகின்ற பூங்காவின் நடுவினிலே
நன்றிலா விடயங்கள் நாடோறும் கண்டுமே
நானிலமும் மனம்நொந்து நயனநீர் சொரிகிறதே!
பன்றிகளாய் மனிதவினம் மாறுதல்தான் ஏன்தாயே?
பகைவருடன் கரம்கோத்துப் பாலகரைக் கொல்லுதலும்
ஒன்றிணைந்து பிரிவினைகள் மழலைகட்கு ஊட்டுதலும்
உன்மனதை வருத்தலையோ? உண்மைதனை விளம்பம்மா!

அன்னையே உன்நிலம் ஆண்டாண்டு காலமதாய்
அரக்கரின் அழிவிற்குள் அடங்கியதும், ஆங்கே
அந்நியரின் வரவதனால் அவர்பால் விளைநிலங்கள்
ஆனதனால் உன்னினம் அபலைகளாய் மாறி
இன்னுயிர்கள் துறந்தும் இடப்பெயர்வால் நலிந்தும்
ஏழ்மையுறு வாழ்வுடனே ஏதிலிக ளாகிடத்
தன்னின வரலாற்றைத் தெரிந்துமே சிலரங்கு
சதியின் வசமானாரே! தாழ்வுற்றுப் போதற்கோ?

வடக்கைமட்டும் ஏற்றிடுக! கிழக்கைநீர் மறந்திடுக!
வளமான வாழ்வங்கு வழியமைத்துக் கொடுத்திடுவோம்!
துடுக்குத் தனமாகத் தொடுத்தனர் சொல்லம்பு!
துடித்தெழுந் தான்தம்பி துட்டரை நோக்கியங்கு
திடமாகப் பதிலுரைத்தான்! தினவெடுத்த தோளுடனே!
தனித்தமி ழீழமொன்றே தாரகமொழி யென்றான்!
கடிதென மொழிந்தவுரை காத்ததுன் மண்தனை
கயவர்க ளறிவாரோ தியாகத்தின் மேன்மைதனை?

பருகிடும் தாய்ப்பாலின் சுவைதனிலே பிரிவுண்டோ?
பாய்கின்ற குருதியிலும் நிறவேறு பாடுண்டோ?
பிரபாகரன் என்னும் பெருந்தலைவன் மட்டுமன்றிப்
பிணைந்து களம்புகுந்த புலிப்படை மறவரும்
பிரதேசம் பேசவில்லை! பிறர்தமரென எண்ணவில்லை!
பிறந்தமண் காத்திட ஒருமித்துக் களம்புகுந்தார்!
பெருநிலத்தின் விடிவெண்ணி நீபுரிந்த தியாகமும்
பயனற்றுப் போனதுவோ? பகர்ந்திடுவாய் தாயே!

பண்கெட்டுப் போனதான பாடல்கள் போன்றும்,
பாதியாய்ப் பகிர்ந்தெடுத்த பளிங்குச் சிலைனெவும்,
மண்பிரிக்கப் புறப்பட்டார்! மாண்புறுமோ தாயே?
மன்னுமுயிர்க் கழிவில்லை, மாநிலத்தே யாதலினாற்
கண்திறந்து பாரம்மா! கல்லறைகள் விடுத்தெழுந்து
கண்மணிகள் தனைச்சேர்த்துக் காத்திடப் புறப்படுக!
எண்ணும் பொழுதிலென் இதயமே குமுறுதம்மா!
ஈனரின்அறி வீனத்தால் உன்உள்ளமும் வெந்ததோ?

முடிவான கருத்தொன்றை முன்வைக்க விரும்புகின்றேன்!
மனத்தின்கண் மாசகற்றி மனிதத்துடன் வேண்டுகிறேன்!
படித்தவர், பாமரர், பயிலுனர் யாராயினும்
பிரதேச வாதமெனும் புற்றுநோய்க் கிருமிதனை
நொடியினில் அகத்தினின்றும் நொருக்கிடுதல் வேண்டும்!
நூலளவு தங்கிடினும் நோய் பெரிதாகி
விடிவுதனைத் தடுத்திடும்! வேதனையை அளித்திடும்!
வளமான எதிர்காலம் அழிதற்குத் துணைபோகும்!

கனடாவிலிருந்து பவித்திரா

நன்றி தமிழ்நாதம்...பட உதவி சூரியன் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)