Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணிரத்னம் முன் வைக்கும் மாற்று அரசியல்
#1
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_ajeevan.authaeluththu.jpeg' border='0' alt='user posted image'>

ஆய்த எழுத்தின் கதை சொல்லும் உத்தி, கதையின் கட்டமைப்பு, கதாபாத்திரங்களின் உருவாக்கம், இவற்றில் உள்ள குறைகள், நிறைகள், கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகை, நடிகர்களின் பொருத்தமான நடிப்புத்திறன், பாடல்கள், இசை, ஒளிப்பதிவுக் கூர்மை, ஒலிப்பதிவின் கவனமின்மை பற்றியெல்லாம் பத்திரிகைகளில் நிறைய விமரிசனங்கள் வந்துவிட்டன. ஆனால், ஆய்த எழுத்து ஒரு திரைப்படம் என்கிற எல்லையையும் தாண்டி விவாதிக்கப்பட வேண்டிய படம். குறிப்பாக, அதன் அரசியல் பார்வை. இவ்விமரிசனம் அதில்தான் கவனம் செலுத்தப் போகிறது.

ஆய்த எழுத்து நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த படம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நிறைவு பெற்று விட்டது என்றாலும், திரையரங்கிற்கு அப்படம் வந்தபொழுது தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மத்தியில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சியும் இணைந்த கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மு. கருணாநிதி அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்று, மைய அரசின் அதிகாரத்தில் பெரும்பங்கைப் பெற்றுள்ளது. ஆய்த எழுத்து படத்தைத் தயாரித்துள்ள மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இருவர் என்ற படம், 1996_ல் வெளியானபோதும் ஆட்சியிலிருந்த அ.இ.அ.தி.மு.க. பெரும் தோல்வி அடைய, ஜெயலலிதா அதிகாரம் இழந்தார். மு.கருணாநிதி ஆட்சியைப் பிடித்தார். இருவர் படத்திற்கும் ஆய்த எழுத்து படத்திற்கும் ஒருவிதத்தில் நோக்கம் ஒன்றுதான். 1967க்குப் பின் தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருந்துவரும் திராவிட இயக்க அரசியலை விமரிசனம் செய்வது. இருவர், திராவிட இயக்க அரசியல் தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றோரின் இரட்டை நிலையை, அந்தரங்க வாழ்வு ஒன்றாகவும் அரசியல் வாழ்வு வேறாகவும் இருக்கிறது என நேரடியாகப் பேசியது. ஆய்த எழுத்தோ, திராவிட இயக்க அரசியல்வாதிகளின் அரசியலை, நடைமுறைகளை, அதிகார வெறியை, பின்பற்றும் உத்திகளை, அவற்றில் உள்ள குரூரமான வன்முறைகளை மறைமுகமாக விமரிசனம் செய்கிறது. ஆனால், இவ்விரண்டு படங்களையுமே தமிழ் சினிமாவின் பார்வையாளன், அவனுக்கே உரிய வெறியுடன் அணுகவில்லை என்பது சுவாரசியமான முரண்பாடு. பொதுவாக மணிரத்னத்தின் படங்களை அளவுக்கதிகமாக ஆதரித்து எழுதும் பெரும்பத்திரிகைகளும்கூட ஆதரவைத் தந்ததில்லை.

ஒரு திரைப்படத்தின் ஒருவரிக் கதை என்பது, பெரும்பாலும், அப்படத்தின் மூலம் அதன் இயக்குநர், பார்வையாளனுக்குச் சொல்ல விரும்பும் செய்திதான். தமிழ்ப் பட இயக்குநர்கள் அனைவரும், சொல்ல விரும்பும் செய்தியிலிருந்தே, தங்களின் சமூகப் பார்வையிலிருந்தே ஒருவரிக்கதையை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், மணிரத்னம் அப்படிப்பட்டவர் அல்ல. தனது நோக்கத்திலிருந்தே, சமூக அக்கறையிலிருந்தே, சமூகம் எவ்வாறு மாறவேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே ஒரு வரிக் கதையை உருவாக்குகிறார். அதன் பேரிலேயே தனது படங்களின் திரைக்கதையைக் கட்டமைக்கிறார். அவரது எல்லா படங்களிலும் தெளிவான ஒற்றை நோக்கம் ஒருவரிக் கதை இருக்கத்தான் செய்கிறது. அவரது படங்கள் பெரும்பாலும் நிகÊழ்காலச் சம்பவங்களின் பின்னணியில் அமைக்கப்படுவதால், சர்ச்சையை எழுப்பிக் கொள்ளும் தன்மையுடன் விரிகிறது. ஆய்த எழுத்தின் தன்மையும் அதுதான். ஆய்த எழுத்தின் ஒருவரிக் கதை, நிகழ்காலத் தேர்தல் அரசியலைக் கண்டு மாணவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது. பங்கேற்க வேண்டும். மாற்றம் கொண்டு வர முயலவேண்டும் என்பது.

படித்தவர்கள் அரசியலில் ஈடுபட்டால், சாக்கடையாகிவிட்ட இந்திய அரசியல் சுத்தம் செய்யப்பட்டுவிடும் என்பது ஒரு பொதுப் புத்தி வாசகம். ஆனால், ஆய்த எழுத்து, படித்தவர்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நடைமுறை அரசியலில் எல்லாக் கட்சியிலும், குறிப்பாக திராவிட இயக்க அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் பட்டதாரிகளாகவும் முதுநிலைப் பட்டதாரிகளாகவும் சட்டம், பொறியியல், மருத்துவம் எனத் தொழிற்கல்வி கற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் படித்தவர்கள் என்று பொதுநிலையில் சொல்வது அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும் என்பதால், சிறப்பான தகுதியுடைய மாணவர்கள் என்கிறது படம். இந்தச் சிறப்புத் தகுதிகள்: அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியைப் (ஸ்காலர்சிப்) பெறுவது, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கல்வி கற்பது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்வு பெறும் ஆசையுள்ள அளவு மதிநுட்பம் அல்லது அமெரிக்க கம்பெனிகளுக்கு சாஃப்ட்வேர் எழுதும் அறிவு; முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று டாக்டர்களாகும் அல்லது ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு நிலை நிறுவனங்களில் கல்வி கற்கும் தகுதியுடைய திறன் போன்றவைதான். இத்தகைய சிறப்பான மாணவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் இப்போதுள்ள அதிகாரத்துவக் கட்சிகளை, அதன் தலைவர்களான முரட்டு மனிதர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் எனக் கூறுகிறது படம். வெளியில் கறுப்புச் சட்டையுடனும் மனதில் சதித்திட்டங்களுடனும் அலையும் அரசியல்வாதிகள் அனைவரும் சட்டசபையில் வெள்ளைச் சட்டை, வெள்ளைவேட்டிக்காரர்களாகக் காட்சி தருகிறார்கள். அவர்களின் முகமூடிகளை அம்பலப்படுத்த ஜீன்ஸ் போட்டவர்களும் சல்வார்கம்மிஸ் பெண்களும் பலவண்ண ஆயத்த ஆடை இளைஞர்களும் நுழைய வேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின் விருப்பம், நோக்கம்.

இந்த நோக்கம், விருப்பம் ஏற்புடைய ஒன்றுதான். இப்போதுள்ள அரசியல்வாதிகளும் அவர்களின் கட்சிகளும் தமிழக அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள் என்கிற முன்மொழிதல் நடுத்தரவர்க்கத்தின் படித்தவர்களின் விருப்பங்கள்தான். அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்துதான் மாற்றம் வேண்டும்; நாகரிகமான அரசியல் வேண்டும் என்பது. இதை யார்தான் மறுக்கப் போகிறார்கள்?

இப்போதுள்ள அரசியலுக்கு மாற்றாகப் பலரும் பலவிதமான முன்மொழிதல்களை, முன்மாதிரிகளைச் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். பேரரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து தோல்விகளைத் தழுவிக்கொண்டும் அதற்கு மாறாக நுண்ணரசியல் சாதி, மத, இனம் சார்ந்த அடையாள அரசியலாக வெற்றி பெற்றுக் கொண்டும் வரும் சூழலில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏன் ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குமான அரசியலையும்கூட முன்வைக்க முடியாமல் தவிக்கின்றனர். சாதி, இன அரசியலுக்கு மாற்றாக மதமும் நிற்க முடியாமல் போகின்றபொழுது, யுக புருஷர்கள் முன் நிறுத்தப்படுவது ஓர் உத்தி. பாபா உருவத்தில் ரஜினிகாந்த் முன்னிறுத்தப்பட்டது அதன் வெளிப்பாடு. மணிரத்னம், யுகபுருஷர்கள் வேண்டாம்; பிறவிப் புத்திசாலிகள் வேண்டும் என்கிறார். அவர்களிடம் நேர்மையும் அச்சமின்மையும் எதிர்ப்புக் குணமும் ரத்தத்திலேயே ஊறியிருக்கும் என்கிறார். புத்திசாலிப் படிப்பாளிகளால் மாற்றம் தர முடியும் என்னும் மணிரத்னத்தின் காட்சி விரிப்புகளுக்கு, வசனம் சுஜாதா. சென்னையின் துறைமுகப்பகுதியில் உள்ள நேப்பியர் பாலம் அரசு அதிகாரத்தின் குறியீடான தலைமைச் செயலகத்தையும் அறிவின் குறியீடான சென்னைப் பல்கலைக்கழகத்தையும் இணைக்கும் பாலம். அதன் அருகில், சென்னைத் தாதாக்களின் உறைவிடங்களான மீனவக் குப்பங்களும் உள்ளன. அந்தப் பாலத்திலிருந்து தனது படத்தைத் தொடங்கி விரித்துள்ளார் மணிரத்னம். ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே நேர்கோட்டில் வருகிறார்கள் மூன்று இளைஞர்கள். அந்த மூவரும் அதுவரை சந்தித்துக் கொண்டதில்லை.

காதலியை அவளது பணி இடத்தில் இறக்கி விட்டுவிட்டுத் திரும்புகிறான் மைக்கேல் (சூர்யா). அமெரிக்காவில் படிக்க உதவித் தொகை கிடைத்தும் இந்தியாவிலேயே தங்கி, அந்நாட்டு அரசியலை மாணவர்களைக் கொண்டு தூயதாக்கத் தயாராகவுள்ள அறிவு ஜீவி அவன். காதல், காமம், குடும்பம், அன்பு, கலை, தேசம் பற்றியெல்லாம் மரபான சிந்தனைகளுக்கு மாற்றான சிந்தனையுடையவன். இவனைச் சுட்டுக் கொல்லும்படி அனுப்பப்பட்டவன் இன்பா (மாதவன்). கட்டிக்கொண்ட மனைவி (மீரா ஜாஸ்மீன்)யின் மீது தீராக்காமமும் அடிதடி வன்முறைமீது ஆறாக்காதலும் கொண்ட குப்பத்து இளைஞன். இந்த இன்பசேகரனின் அண்ணன் குணா (சேகரன்). அமைச்சர் செல்வநாயகத்தின் ஏவலாளி. அமைச்சர் செல்வநாயகம் (பாரதிராஜா) கறுப்புச் சட்டை போட்டபடி வெளியில் உலவும் அரசியல்வாதி. எதிலும் ஆழமான பிடிப்பின்றி, சவடால் மொழி மூலமே பொய்களைப் புனைவுகளாக்கி வீரவுரையாற்றி, டெல்லி அரசியலுக்கு எதிராகத் தமிழ் திராவிட அரசியல் நடத்துபவர். மைக்கேலைக் கொல்லும்படி குணாவின் மூலம் இன்பாவை ஏவிவிட்டவர்.

இடையில் தனது தற்காலிகக் காதலை, நிரந்தரக் காதல் என நம்பும்படி வலியுறுத்தி உரையாடிச் செல்லும் இன்னொரு இளைஞன் அர்ஜுன் (சித்தார்த்). அவனது காதலி மீரா (த்ரிஷா). பைக்கில் வந்த மைக்கேலை, ஜீப்பில் வந்த இன்பா சுட்டுத்தள்ள, நடந்து வந்த அர்ஜுன் அதைப் பார்க்கிறான். தனக்கு லிஃப்ட் கொடுத்து உதவியவன் சுட்டுத்தள்ளப்பட, பார்த்தவன் என்ன செய்கிறான் என்பதை மூன்று திருப்புக் காட்சிகள் (Flash back) மூலம் சொல்கிறார் இயக்குநர். அம்மூன்று இளைஞர்களின் கடந்த கால வாழ்வில், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் கண்ணிகள் எவ்வாறு ஊடும்பாவுமாக இழையோடுகின்றன என்பதையும் காட்டி விடுகிறார்.

இந்த ஆய்த எழுத்தின் பின்னணியில் நடப்பு அரசியலின் சுயநலமும், இலக்கற்ற வெற்று கோஷங்களும், அதிகார வெறியும், விஷயங்களை மொண்ணையாகப் புரிந்து கொள்ளும் மௌடீகமும் உள்ளன என்பதைக் காட்டி அவை வென்றெடுக்கப்பட வேண்டியவை எனவும் முன்மொழிகிறார் இயக்குநர். மாற்றத்தைக் கொண்டு வரப்போவது அதிபுத்திசாலித்தனம் நிரம்பிய மாணவர் தலைமைதான் எனக் கைகாட்டுகிறார் மணிரத்னம். இந்தக் கைகாட்டுதல்தான் பார்வையாளர்களின் நம்பிக்கையைப் பெறத் தக்கதாக இல்லை.

நெய்க்காரன்பட்டிப் பஞ்சாயத்து இடைத் தேர்தலில் ஒரு பெண்ணை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது போலவே சட்டமன்ற _ நாடாளுமன்றத் தேர்தல்களையும் கணித்துச் செயல்படும் அப்பாவித்தனமான மாணவர்களை இந்தியாவின் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவர்கள் எனக் கைகாட்டும் மணிரத்னமும் வசனகர்த்தா சுஜாதாவும், இவ்வளவு அப்பாவித்தனமாக யோசிப்பவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அது தெரியாமல் இருந்தால், இவையெல்லாம் வெறும் சினிமா, பார்வையாளர்களைக் கவர்வதற்கான கதைப்பின்னல் மட்டும்தான் எனக் கருதிப் படத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிட முடியாதபடி வேறொன்றையும் கலந்தே கொடுத்துள்ளது படம். அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லும், அருள் போன்ற பொத்தாம் பொதுவான படமாக இல்லாமல், அரசியல் விமரிசனத்தை வேறொரு வஸ்துவுடன் கலந்து தரவேண்டும் எனத் தீர்மானித்து எடுக்கப்பட்டுள்ள படம் ஆய்த எழுத்து. மருந்தைக் கலந்து கொடுப்பதுபோல என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அரசியல் என்னும் மருந்தைத் தனக்குள் கொண்டுள்ள அந்தத் தேன், பாலியல் இன்பத்தைத் தூண்டும் காட்சிகள்தான். போதையில் தனது உடலை மிதக்கச் செய்ய விரும்பும் மனிதன் விரும்புவது மது அல்லது கஞ்சா. இந்த வஸ்துக்கள் மனித உடலைத் தற்காலிகமாக வேறொரு பிரக்ஞைக்குள் கொண்டு போய்விட்டுத் திரும்பவும் தன்னுணர்வுக்குத் திருப்பிவிடும் இயல்புடையன. அந்த உடலையே போதைப் பொருளாக்கிவிட்டால், என்ன விளைவுகள் ஏற்படும்?

தமிழ்நாட்டின் அரசியல் நடைமுறைகளும், செயல்பாடுகளும் மாற்றப்பட வேண்டுமென்று லட்சியம் பேசும் ஒரு படத்தில் ஆண் உடலும் பெண் உடலும் போதையின் களன்களாகக் காட்டப்படும் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் என்று கேட்டுப் பாருங்கள். வெளியில் அடிதடியும் கோபமும் கொண்டவனாகக் காட்டப்படும் இன்பா, மனைவியிடம் காட்டுவதைக் காதல் என்றோ காமம் என்றோ வகைப்படுத்திவிட முடியாது. முரட்டுத்தனமான காமம் என்று வகைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இயக்குநரின் விருப்பம். த்ரிஷாவை சித்தார்த் சந்திக்கும் டிஸ்கொதோ ஒரு மென்பொருள் என்றால், அவர்கள் இருவரும் கடற்கரையில் சந்தித்துக் கட்டிப் புரள்வது வன்பொருள் நிலைதான். மிகத்துல்லியமாக உடலில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு மணற்துளியையும் நீர்த்திவலையையும் தனித்துக் காட்டிவிடும் காமிராவின் கோணங்கள், பெண்ணுடலையும் ஆணுடலையும் தனித்தனியேயும் இணைத்தும் திரை முழுக்க விரிக்கும்பொழுது பார்வையாளன், குறிப்பாக யுவதியாகவும் இளைஞனாகவும் இருக்கும் பார்வையாளன் அடைவது தன்னை மறக்கும் நிலையாகத்தானே இருக்கமுடியும்? அரசியலைத் தூய்மையாக்கப் போவதாகச் சூளுரைக்கும் மைக்கேல் வசந்தும் கூடத் தனது காதலியின் மேலாடையைக் கிழித்துப் பார்வையாளர்களைக் கிரங்கடிக்கத் தவறவில்லை. அதிபுத்திசாலி மாணவர்களின் லட்சியப் பயணத்தில் யுவதிகளின் பணி தனது உடலின் மூலம் போதையேற்றுவது மட்டும்தான் போலும்! மணிரத்னம், உன்னதமான அரசியலை, காமமயக்கத்தில் ஆழ்த்திய நிலையில், ஆழ்மனத்திற்குள் புகுத்திவிடும் முறையியலை இப்படத்தில் பரிசோதனை செய்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

முடிவாகச் சில கேள்விகள்...

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தில் உள்ள திராவிட இயக்க அரசியலை வீழ்த்த நினைப்பவர்கள், நேரடியாகக் காட்சிகளை அமைத்துப் படம் எடுக்கத் தயங்குவதும், மறைத்து மறைத்துப் பேசுவதும் கலையியல் சார்ந்த சங்கதிகள்தானா அல்லது பயம் கலந்த தவிர்ப்பா?

காமத்தின் வழியான பயணமோ, போதையின் வழியான தேடலோ உன்னதத்தைத் தரும் என்பது தனிநபர் சார்ந்த சித்தாந்தம்தானே; அதனை அரசியல் போன்ற வெகுமக்கள் சார்ந்த நடைமுறைக்குப் பயன்படுத்த முடியுமா?

மாற்று அமைப்புகளையோ, இயக்க நடைமுறைகளையோ, அரசியல் தத்துவத்தையோ அடையாளங்காட்டாமல், புத்திசாலி மாணவர்கள் என்று அடையாளம் காட்டுவது, திராவிட அரசியலுக்கு எதிராகப் பிராமணீய மறுஉயிர்ப்புதான் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை மணிரத்னம் அறியாதவரா? பிராமணீய மறுஉயிர்ப்பு இந்தியாவில் இனி சாத்தியம்தானா?

ஹார்டுவேடுப் பல்கலைக்கழகப் பட்டதாரியும் பேராசிரியருமான சுப்பிரமணிய சுவாமி அதிபுத்திசாலிதான். அவரது அரசியல் மாதிரியைத்தான் மணிரத்னம் பரிந்துரைக்கிறாரா?

தீராநதி
Reply
#2
தகவலுக்கு நன்றி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
தமிழ் படங்களே பார்ப்பதில்லை என பேட்டி கொடுப்பார் ஆனால் பல படங்களில் இருந்து பல காட்சிகளை உருவி தனது படத்தில் புகுத்திவிடுவார்.
ஆயுத எழுத்து படத்தில் மாதவன் கபடி விளையாடும் காட்சி சம்பந்தமில்லாமல் இருக்கிறது.(கில்லியின் பாதிப்போ?)
கதைக்கரு கூட விக்ரமனின் புதியமன்னர்கள் படத்தை ஒத்திருக்கிறது.
Reply
#4
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பிராமணீய மறுஉயிர்ப்பு இந்தியாவில் இனி சாத்தியம்தானா?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மறு உயிர்ப்பா? அப்ப இவ்வளவுகாலமும் இது இல்லையா????? Confusedhock: :?
Reply
#5
மணிரத்னம் வில்லன் அரசியல்வாதிக்கு செல்வநாயகம் என்று பெயர் வைத்தது ஏன்? இதுவும் ஒரு வகையில் தமிழீழத் தமிழர்களை இழிவு செய்யும் முயற்சி என்று எங்கோ பார்த்த ஞாபகம்.
<b> . .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)