Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கம்பியுட்டர் கஷ்டங்கள்
#1
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_com.jpeg' border='0' alt='user posted image'>


முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் ரேடியோ இருந்தது. பிறகு ரேடியோவின் இடத்தை டிவி அடைந்தது. இப்போது ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் கம்ப்யூட்டர் நுழைந்து கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டரைப் பற்றிப் படிப்பவர்கள் மேலதிகமாகத் தெரிந்துகொள்ள, வீட்டிலுள்ள பெரியவர்கள் பல விஷயங்களை டைப் செய்ய, இன்டர்நெட் பார்க்க, குழந்தைகள் விளையாட என்று பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கம்ப்யூட்டரை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் என்பது மரியாதைக்குரிய பொருள் மட்டுமல்ல, அத்தியாவசியமான பொருளும்கூட. ஆனால் இது வந்த பிறகு நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி நமக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. காரணம், கம்ப்யூட்டரால் நம்முடைய உடலில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கவில்லை. எனவே, கம்ப்யூட்டரைப் பற்றி நமக்கு இதுவரை எந்தப் புகாரும் இல்லை.

கம்ப்யூட்டரால் அப்படி என்ன பிரச்சினை நமக்கு வந்துவிடும்? இந்தக் கேள்விக்கு டாக்டர் மது சொன்ன விஷயம் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

"நான் அடிப்படையில் ஒரு எலும்பு மருத்துவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மலர் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னைத் தேடிவந்த நோயாளிகளில் பத்தில் மூன்றுபேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். எனவே, அதனால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், கம்ப்யூட்டரால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்கிற விஷயமே அவர்களுக்குத் தெரியவில்லை.

முதலில் கழுத்து வலிக்கிறது என்பார்கள். கை வலிக்கிறது என்பார்கள். கண் எரிகிறது என்பார்கள். இந்தப் பிரச்சினைகளைப் போக்கிக்கொள்ள முதலில் ஏதாவது ஒரு மருத்துவரைப் பார்த்திருப்பார்கள். பிறகு, எலும்பு நிபுணரையோ, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்கிற டாக்டரிடம் சென்று காட்டியிருப்பார்கள். கடைசியில்தான் என்னை வந்து பார்ப்பார்கள். இந்தக் காலகட்டத்துக்குள் அவர்களுக்கு இருக்கிற பிரச்சினை மிகவும் உக்கிரமாகி இருக்கும். இன்ன காரணத்திற்காக அவர்களுக்கு இது மாதிரியான வலி வருகிறது என்பதை மிகவும் கூர்மையாக கவனித்துப் பார்த்தால் கம்ப்யூட்டரால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வெளிநாடுகளில் கம்ப்யூட்டரால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதைத் தெளிவாகக் கண்டுபிடித்து, அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டரால் உடலுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் உடனே டாக்டர்களை அணுகுவது அங்கே வழக்கமான விஷயமாக இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களை மட்டும் நான் சொல்லவில்லை. கம்பெனிகளில்கூட அது மாதிரியான சூழ்நிலை இன்னும் வரவில்லை என்பதே உண்மை.

கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது உழைக்கவேண்டிய கட்டாயம். இப்படித் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பணிபுரிய வேண்டியதால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அறுவை சிகிச்சைகளோ, மாத்திரைகளை விழுங்குவதோ அல்ல. சின்னச் சின்னதாக சில உடற்பயிற்சிகள், நம்முடைய உடலை ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளும் சில டெக்னிக்குகள், உட்கார்ந்திருக்கும் முறைகள் இவற்றைத் தெரிந்து வைத்திருந்தாலே போதும், எளிதாக துன்பத்திலிருந்து எளிதாகத் தப்பித்து வந்துவிடலாம்.

முதலில், உங்களுக்கு முன் இருக்கும் கம்ப்யூட்டர் திரை, உங்கள் கண் பார்வையிலிருந்து இரண்டு இஞ்ச் தாழ்வாக இருக்க வேண்டும். உங்கள் கண் பார்வையிலிருந்து கம்ப்யூட்டர் திரை உயரமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் தலையைத் தூக்கித்தான் பார்க்க வேண்டும். அது உங்கள் கழுத்துக்கு அநாவசியமான வலியைக் கொடுக்கும். எனவே அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்.

எப்படி இதைச் சரி செய்வது?

உங்கள் டேபிளின் உயரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் உட்கார்ந்திருக்கும் சேரின் உயரத்தை அதிகரிக்கலாம். கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, ரோலிங் சேரைப் பயன்படுத்தினால் நல்லது. ரோலிங்சேர் மூலம் எளிதாக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நகர முடியும் என்பதோடு உயரத்தையும் அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். இந்த உயரத்தைச் சரிசெய்கிற விஷயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்வதே இல்லை. கம்ப்யூட்டர் பற்றி படித்தவர்கள் அனைவரும் இந்த உயரம் சரிசெய்கிற விஷயத்தை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, சேரில் சாய்ந்து உட்கார வேண்டும். சேரில் சாயாமல் நேராக உட்காருவதோ, கூன் போட்டு உட்காருவதோ கூடாது. கம்ப்யூட்டரில் உட்கார்ந்து டைப் செய்யும்போது, கைகள் இரண்டும் சேரின் கைப்பிடியின் மீது வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் கைப்பிடி மிகவும் கீழே இருக்கிறது அல்லது மிகவும் மேலே இருக்கிறது. இதனால் நமக்குத் தீமையே. இதைவிட, கைப்பிடி இல்லாமலிருப்பது நல்லது.

கம்ப்யூட்டரோடு பொருத்தப்பட்டிருக்கும் மௌஸ் பெரும்பாலும் அதற்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டுமே ஒழிய, டேபிளுக்கு மேலே தனியாக இருக்கக்கூடாது. மௌஸ் பக்கத்தில் இருந்தால்தான் அதை எளிதாக எட்டிப் பிடித்து பயன்படுத்த முடியும். மிக தூரத்தில் இருந்தால் கஷ்டப்பட்டு கையை நீட்டி மௌஸைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் கைகளுக்கும், தோளுக்கும் பாதிப்புதான்.

இதேபோல கம்ப்யூட்டர் டைப் செய்ய உதவும் விசைப்பலகையும் மேல்பாகம் சற்று தூக்கலாகவும், கீழ்பாகம் சற்று இறக்கமாகவும் இருப்பதைவிட, கீழ்பாகம் சற்று தூக்கலாகவும், மேல் பாகம் சற்று இறக்கமாகவும் இருந்தால் நல்லது.

கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பார்ப்பதனால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும். மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், ஒரு நல்ல கண் மருத்துவரை அணுகுவதுதான் சரியான விஷயம். ஆனால், கம்ப்யூட்டரால் கண்களுக்குப் பிரச்சினைகள் வராமல் தடுக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, இருபது நிமிடங்களுக்கு கம்ப்யூட்டர் திரையையே நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பத்து வினாடிக்கு திரையிலிருந்து பார்வையை விலக்கி வேறு பக்கத்தில் உள்ள பொருளைப் பார்க்கலாம்.

ஏன் இப்படிச் செய்கிறோம் தெரியுமா?

சாதாரணமாக, நாம் ஒரு பொருளைப் பார்க்கிறபோதோ, புத்தகம் படிக்கிறபோதோ கண்களை மூடி மூடித் திறக்கிறோம். கண்களுக்குத் தேவையான குளிர்ச்சியும், எண்ணெய்ப்பசையும் கண் சிமிட்டலால் கிடைக்கிறது. ஆனால், கம்ப்யூட்டர் திரைகளை நாம் பார்த்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் இந்தக் கண்சிமிட்டல் நடப்பதில்லை. இதனால் கண் பாதிப்படைகிறது. இதைப் போக்கத்தான் வேறு ஒரு திசையில் பத்து வினாடிகள் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்.

தொடர்ந்து ஐம்பது நிமிஷம் நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரிந்தால், ஒரு பத்து நிமிஷத்துக்கு வேறு ஒரு வேலையைச் செய்யலாம். உதாரணமாக, ஃபைல்களைக் கொஞ்சம் அடுக்கி வைக்கலாம். அல்லது போன் பேசலாம். லேசாக ஒரு நடை போட்டுவிட்டு வரலாம்.

இது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களை கவனித்தாலே போதும், கம்ப்யூட்டரால் எந்தக் கஷ்டத்தையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார் டாக்டர் மது.

_ சந்திப்பு: ஏ.ஆர்.குமார்
படம்: சித்ரம் மத்தியாஸ்

kumudam.com
Reply
#2
நன்றி....
Reply
#3
<b>தகவலுக்கு நன்றி அண்ணா</b>
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)