Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சோ..........
#1
நான் இந்தக்கட்டுரையில் எந்த ஒருகுறிப்பிட்ட செய்தியின் அடிப்படையிலும் துக்ளக் (சோ)வை விமர்சிக்கவில்லை, மாறாக அவரது பத்திரிக்கையை சிலகாலம் வாசித்து அறிந்த அவரது மனப்பாங்கினை அடிப்படையாக வைத்தே எழுதுகிறேன்.

சோவினை ஒரு நேர்மையான பத்திரிக்கையாளராகவோ, ஒரு உண்மையான மனிதராகவோ நான் அறியவில்லை. அவர் பெண்களை வெறுப்பவர். பெண் அடிமைத்தனத்தை நாகரீகமாக, ஆணாதிக்கவாதிகள் சிலாகிக்கும் வண்ணம் எளிய, ஆழமற்ற தர்க்க உத்திகளால் நிறுவமுயல்பவர். இந்தி எதிர்ப்பை எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவுதூரம் கொச்சைப்படுத்துவதன் மூலம் தமிழர்களிடம் ஒரு குற்ற உணர்வையும், தமிழ் எதிர்ப்பு உணர்வையும், இளக்காரத்தையும் பரப்புவதில் ஒருங்கே கணிசமான வெற்றியைக்கண்டவர். மனித உரிமைகள் என்பது பற்றி ஒரு ஆதிக்கவாதியின் அபிப்பிராயங்களையே கொண்டவர். ஒரு இந்து அடிப்படைவாதி.

அவரது பத்திரிக்கை வியாபாரம் ஒரே எளிமையான தந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதை பின்வருமாறு சொல்லலாம். அதாவது தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கும் சுயமுரண்களை, போலித்தனங்களையும் மிகை நாடக வடிவத்தில், பாமரத்தனமாக கடைவிரிப்பதன் மூலம், மேலோட்டமாக சிந்திக்கும், மாநிலக் கட்சிகளை எதிர்க்கும் மனப்பான்மை கொண்ட, பொதுஜன அரசியலை விரும்பாதவர்களின் ஆதரவை சுலபமாக பெறுதலே அது. இந்த சுயமுரண்கள் எல்லோரிடமும் இருக்கும், இம்முரண்களை வைத்து எல்லோரையும் கிண்டலடிக்கும், வாக்கு சாதூர்யமும், சாமர்த்தியமும் கொண்டவர்கள் ஊருக்கு ஒருவர் இருப்பர்; அவர்களிடம் மக்கள் எளிதாக தம் கவலைகளை மறந்து சிரித்து மகிழ்வர். அதுபோன்றவர்தான் சோவும்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதை விமர்ச்சிப்பதென்பதும், மொழிபிரச்சனையை அணுகுவதென்பதும் கருணாநிதியின் மகன்கள் இந்தி படிக்கிறார்களா இல்லையா என்பதை வைத்துத்தானே ஒழிய மாற்று வழிகளை, கருத்துகளை முன்வைத்தல்ல. இது பாமர மனங்களில் உடனே ஒரு தாக்கத்தை உண்டாக்கக்கூடியது. வாரிசு அரசியலை முன் வைத்து செய்யப்படும் கேலிகளை மக்கள் ரசித்து வியக்கும்படி தீட்டுபவர் மடங்களில் முற்றும் துறந்த முனிவர்களான (சனாதிபதி வரையில் அதிகாரம் செலுத்தும்) சங்கராச்சாரியார்கள், மட அதிகாரங்களையும், ட்ரஸ்டுகளை கையாளும் அதிகாரத்தையும் தமது சொந்தங்களுக்கும், தம்பிகளுக்கும் கொடுத்திருப்பதப் பற்றி பேசமாட்டார். அதை மக்களும் கவனிக்க மாட்டார்கள். சாதிக்கட்சிகள் என்று பா.ம.க வை கேலிசெய்யும் துக்ளக், தனது சாதிக்காரர்களை மட்டுமே கொண்டு நடந்துவரும் ஒரு மடம் தன்னை இந்துமதத் தலைமையாக சொல்லிக்கொள்வதை கண்டுகொள்ளாது. தமிழினக்காவலர், தலைவர் போன்ற அடைமொழிகளை ஒரு மூன்றாம்தர ரசிப்புத்தன்மையைக் கிளர்த்தும் விதமாக நையாண்டி செய்யும் துக்ளக், ஜகத்குரு, லோககுரு, ஸ்ரீஸ்ரீ.. போன்ற பட்டங்களை துதிபாடுவதற்கு தயங்காது.

இடஒதுகீட்டை எதிர்ப்பதற்க்காக, தகுதியின்மையால் விளையும் அனர்த்தங்களை அதன் தகுதிக்கு மீறி விரித்துப்பேசும் துக்ளக், 2000 வருட இடஒதுக்கீட்டை அமுல்படுத்திய சமூகத்தைப்பற்றியோ, அதனால் விளைந்த அனர்த்தங்களைப் பற்றியோ, அதில் தகுதியின்மை எந்த இடத்தைப்பெற்றது என்பதைப் பற்றியோ, கருத்தாழமிக்க எந்த விவாதத்தையும் முன்னெடுத்ததில்லை. தயானந்த சரஸ்வதி மாதிரியான நவீன கார்பரேட் சாமியர்களைக்கொண்டு பூசிமொழுகிய மொழியில் வர்ணாசிரமத்தை புழக்கத்துக்கு விடுவதும் அதன் வழமைகளில் ஒன்று. தமிழை காப்பாற்றுவதாக யாராவது தமிழ் நாட்டுத்தலைவர்கள் சொன்னால் அதை கேலிசெய்து, நையாண்டி செய்து அட்டைப்படங்கள் போடும் துக்ளக், விதவைகளை வரண்ட நிலமென்றும், வேலைக்குப்போகும் பெண்களை ஒழுக்கம் குறைந்தவர்கள் என்றும் பச்சையாக பேசும் சங்கராச்சாரியார் குறித்து அட்டைப் படமல்ல, ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிடாது தனது கடமையைச் செய்யும்.

தமிழ் தேசியம் பேசுபவர்களையும், தமிழ் நாட்டில் தமிழ், ஆட்சி, சட்ட, வழிபாட்டு மொழியாக இருப்பதை ஆதரித்து வாதிடுபவர்களை எந்த அறிவு நாணயமும் இன்றி கேலிப்படங்களை வரைந்து மொழி வெறியர்களாய் சித்தரித்து தமிழர்களிடம் இளக்காரத்தையும், பிழையான கருத்தாக்கங்களை வளர்ப்பதில் களிப்புறும் துக்ளக், தென்னிந்திய மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தமது மொழியை, அதிகாரத்தை திணிக்கும் மத்திய அரசின் மொழி வெறியை தேசியம் என்றும் நாட்டுப் பற்று என்றும் கதைக்கும்.

பிராமணியத்துக்கெதிரான உணர்வு கிளர்ந்தெழுந்த போது 'யார் பிராமணன் ?' என்றும் 'பிராமணியம் வெறுக்கத்தக்கதா?' என்றும் கட்டுரைகளில் பிராமணனின் இலக்கணங்களையும், கடமைகளையும், தியாகங்களையும் உள்ளம் உருகும் வண்ணம் எழுதிய சோ,இப்போது பிராமணர்களில் எவரெவர் அப்படிப்பட்ட வர்ணக்கடமைகளை ஒழுகவில்லையோ அவர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைக்கப்படுவதை அழைத்துக்கொள்வதை நிறுத்தவேண்டும் என்று ஒருபோதும் ஏன் கோரவில்லை. இதன் மூலம் தனது வாதத்துக்கே நியாயம் செய்யாத போலி அவர். ஆனால் அவர் மற்றவர்களை சாதிக்கட்சிகள் என்று கேலி செய்வதில் காட்டும் வேகம் அருவருப்புக்குரியது.

சிற்றிதழ் இலக்கியங்களை மக்களிடம் போய்ச்சேரமுடியாத, புரியாத, பயனற்ற எழுத்துக்குப்பைகள் என்று கருத்தை முன்வைப்பதில் தயங்காத துக்ளக், மக்களுக்கோ, சொல்லும் அர்ச்சகருக்கோ கூட புரியாத மொழியில் வழிபாடுகளையும், திருமணச் சடங்குகளையும் செய்வதற்கு எதிராக எந்த கருத்தையும் சொல்வதில்லை.

தமிழர் தலைவர் என்றழைக்கப்படுவதில் இருக்கும் போலித்தன்மையை எள்ளி நகையாடி வயிறுவளர்க்கும் சோ, அத்வைத சங்கராச்சாரியார், சிவாகமங்களைப் பற்றியும், ஆறுகால பூசைகளைப்பற்றியும் பேசுவதைக் குறித்து ஏன் கேலிசெய்வதில்லை? தொண்டர்களிடம் தலைவர்கள் போலித்தனமாக செயல்பட்டு ஏமாற்றுவதாக ஒரு கருத்தை முன்வைப்பதில் உற்சாகத்தோடு ஈடுபடும் துக்ளக், தலித்துகளின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதாக சங்கரமடம் சொல்லும் பச்சைப்பொய்யை கண்கொண்டும் பார்க்காத நேர்மைத்திறன் கொண்டது.

இப்படி சோ தமிழனவிரோதியாகவும், பெண்ணடிமை ஆதரவாளராகவும், சாதியமைப்பின் காவலராகவும், அதிக்க மடத்தின் அடிவருடியாகவும் இருந்தும் தன்னை நேர்மையானவராக, துணிச்சல்காரராக காட்டிக்கொள்ள முடிவதன் இரகசியம் மிகவும் பழமையானது, பலனளிக்கக்கூடியது.

அந்த இரகசியம் ஒரு ஜென்கதையில் காணக்கிடைக்கும்.

ஒருவனை ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் கிண்டலடித்துக்கொண்டே இருந்தார்கள். அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அது குறித்து கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதனால் மனம் வருந்திய அவன் ஒரு ஜென் குருவை சந்தித்து இதில் இருந்து தப்பிக்க வழி கேட்டான். அவர் மக்கள் இயல்பாகவே மதம் ஏற்படுத்திய நுட்பமான குற்ற உணர்வால் இரகசியாமாக, தம்மை அறியாமலே அவதிப்படுபவர்கள், எனவே அதைப்போக்கிக்கொள்ள மற்றவர்களை குற்றம் கண்டுபிடித்தும் கேலி செய்யவும் முனைகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தம்மை நியாயப்படுத்திக்கொள்ள முடிகிறது. எனவே நீ செய்யவேண்டியதெல்லாம், அவர்கள் எதைச்சொன்னாலும், செய்தாலும் அவர்கள் உன்னை கேலி செய்யும் முன்பே அவர்களை கேலி செய்ய ஆரம்பித்துவிடுவதுதான். நீ அவர்கள் எதைச் சொன்னாலும் கேலி செய். நாளடைவில் நீ பெரிய அறிஞனாகக் கருதப்படுவாய் என்ற அந்த இரசியத்தை சொல்லியனுப்பினார்.

சோ இந்த இரகசியத்தை அப்போது ஒட்டுக்கேட்டு இன்றளவும் நடைமுறை படுத்திவருகிறார். (நன்றி en முரசு) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)