Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவ ஆக்கிரமிப்பு சின்னங்கள் எரிப்பு
#1
இராணுவ ஆக்கிரமிப்பு சின்னங்களை பாடையில் தூக்கிச் சென்று தீயிட்டு எரித்த பெண்கள்

-யாழ்.குடாநாட்டு இராணுவத்தினருக்கு துண்டுப் பிரசுரமும் விநியோகம்

சர்வதேச பெண்கள் எழுச்சி நாளான செவ்வாய்க்கிழமை பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் தடையாக இருப்பதை எதிர்த்து, இராணுவ ஆக்கிரமிப்புச் சின்னங்களை பாடை கட்டி எடுத்துச் சென்ற யாழ். மாவட்ட பெண்கள் பண்பாட்டு மையத்தினர், கந்தர் மடம் பகுதியில் வைத்து அதனைத் தீயிட்டு எரித்தனர்.

அத்துடன், "ஸ்ரீலங்கா இராணுவ வீரருக்கு" எனத் தலைப்பிட்ட கடிதம் ஒன்றினையும் கந்தர் மடம் ஆலடிச் சந்தியில் உள்ள இராணுவ காவலரணில் உள்ள இராணுவத்தினரிடம் அவர்கள் கையளித்தனர்.

செவ்வாய் மாலை 6.30 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பெண்கள் பண்பாட்டு மையத்திலிருந்து தீப்பந்தங்களை ஏந்தியவாறு, இராணுவ ஆக்கிரமிப்புச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ள பாடையை பெண்கள் சுமந்து சென்றனர். பல்கலைக்கழக இராமநாதன் வீதி, பலாலி வீதி வழியாக இப் பாடையை சுமந்தவாறு இவர்கள் சென்றனர்.

செல்லும் பாதைகளில் முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்த "உயர் பாதுகாப்பு வலயம்", "அனுமதியின்றி பிரவேசித்தால் தண்டனை", "அப்பக்கடை", போன்ற வாசகங்கள் அடங்கிய சின்னங்களை பாடையிலே எடுத்துச் சென்றனர்.

பரமேஸ்வராச் சந்தியை சென்றடைந்த இவர்கள் அங்கு வைத்து பாடையை தீயிட்டுக் கொளுத்தியதுடன் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவக் காவலரணில் வைத்து இராணுவத்தினரிடம் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களுக்கு எனத் தலைப்பிடப்பட்ட கடிதத்தினைக் கையளித்தனர்.

யாழ். குடாநாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் பெண் செயலாளிகள் சர்வதேச மகளிர் தினமான இன்று ஒன்றுகூடினோம். பெண்களை அவர்களது பிரச்சினைகளிலிருந்து விடுவித்து ஆற்றலுள்ளவர்களாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் எமது செயலாளிகளில் எங்கள் தேச நிர்மாணப் பணியில் பங்கெடுப்பதற்கு பெண்கள் அனைவரையும் தயார்படுத்தி ஒன்று திரட்டுவதெனத் தீர்மானித்தோம். சர்வதேசத்திடமிருந்து கூட எமது தமிழ் தேச நிர்மாணத்தில் எமது பெண்களின் பங்கு என்ன என்ற கேள்வி ஒலித்துக்கொண்டிருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆனால், நாங்கள் பெண்கள் ஒன்று திரண்டு இந்தப் பணியில் ஈடுபடுவதற்கு நீங்கள் எங்கள் தெருக்களில் துப்பாக்கியோடும் சப்பாத்துக் கால்களோடும் நிற்பது எமக்குப் பெரும் தடையாகவுள்ளது.

நீங்கள் சிங்களக் கிராமங்களிலிருந்து இங்கு வந்து எங்கள் தேசத்தின் தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் எங்கள் வீடுகளிலும் வீட்டு முற்றங்களிலும் இராணுவ உடையுடனும் கைகளில் துப்பாக்கியுடனும் நிற்பது செய்யத்தகாத செயலெனவே நாம் எண்ணுகிறோம். எங்கள் குடிமனைகளில் சிங்கள இராணுவம் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் கால் பதித்து நடக்கும் மண்ணில் உங்கள் சப்பாத்துக் கால்கள் உலாவித் திரிவதை எங்கள் மனம் எற்றுக்கொள்ளவில்லை. எமது பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளை வீட்டிலிருந்து வெளியே விடுவதற்கு அஞ்சுகிறார்கள். நீங்கள் அந்நிய இராணுவம் என்பதை அவர்கள் எங்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். தங்கள் பெண் பிள்ளைகள் ஆற்றல் மிக்கவர்களாய் வளர்வதை அவர்கள் விரும்புகிறார்கள். எங்கள் பெண் பிள்ளைகளும் வெளியே வந்து ஆளுமை பெற்று சாதிக்கும் மனிதர்களாக உருவாகவே விருப்பம் கொண்டுள்ளார்கள். ஆனால், தமது பிள்ளையின் வளர்ச்சி மீது கொண்டுள்ள விருப்பத்தை விட நீங்கள் அந்நியர் எமது மண்ணில் இருக்கின்றீர்கள் என்ற ஞாபகம் தரும் பயமே எமது பெற்றோரை வழிநடத்துகிறது.

நீங்கள் எல்லா இடங்களிலும் நிற்பதும் சில வேளைகளில் உங்கள் அருகிலேயே நின்று எமது இளைஞர்கள் சிலர் பெண்களைக் கேலி பேசுவதும் எமது சுதந்திரமான நடமாட்டத்துக்கு தடையாகவுள்ளது. எனவே நீங்கள் உங்கள் ஊருக்குத் திரும்பிப் போவதையே நாம் விரும்புகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் ஒரு யுத்தம் வந்து விடும். அநியாயமாக இலங்கைத்தீவில் இரத்தம் சிந்தப்படுவதை நாம் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவதெல்லாம் எங்கள் வீடுகளிலும் எங்கள் தெருக்களிலும் நாம் சுதந்திரமாக நடமாடுவதையும் நாம் சுதந்திரமாக செயல்புரிவதையுமே. நீங்கள் இதை புரிந்துகொள்ளவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

உங்களது அரசியல் வாதிகள் (தெற்கின்) தங்கள் சுய பதவி மோகத்திற்காக உங்களைப் பலிக்கடாக்களாக அனுப்பியுள்ளார்கள். ஆனால், எம்மைப் போன்ற சக மனிதரான நீங்கள் பலிக்கடாக்களாகப் போய்விடக்கூடாதென நாம் கவலைப்படுகின்றோம். எனவே உங்கள் வீடுகளுக்கு நீங்கள் திரும்பிப்போய்விடுங்கள்.

உங்கள் எதிர்காலத்திற்காகவும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் உங்கள் உறவுகளுக்காகவும் எங்களுடைய சுதந்திரமான வாழ்விற்காகவும் நீங்கள் திரும்பிப் போய்விடுங்கள்
தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)