Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலைஞரின் 'கண்ணம்மா'
#1
கலைஞரின் 'கண்ணம்மா'

கொஞ்சங்காலத்துக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம், தப்பிப் போய் இப்போது வந்திருக்கிறது.

படத்துக்கு கருணாநிதியின் வசனம், மீனாவின் பாந்தமான நடிப்பு, கவர்ச்சியுடன் கூடிய விந்தியாவின் வில்லத்தனம் என மூன்று பலங்கள். ஆனால், கதையில் தான் அந்த அளவுக்கு பலமில்லை.

தமிழர்களின் மாலை நேரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து வைத்துக் கொண்டுள்ள 'அழுமூஞ்சி' தொலைக்காட்சித் தொடர் நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதை ஏற்க மட்டுமல்ல, சகிக்கவும் முடியவில்லை.

ராதிகாவின் அண்ணாமலை தொடரில் நடித்த பிரேம்குமார், மெட்டி ஒலியில் நடித்த வெங்கட் இருவரும்தான் அந்தப் படத்தின் கதாநாயகர்கள்.நாடகத்தில் நடிப்பதைப் போலவே படத்திலும் 'நடித்துள்ளார்கள்'. இதில் வெங்கட் கொஞ்சம் போல தேறினாலும், பிரேம்குமார் நடிப்பு படுமோசம். இந்த வெங்கட் ஏற்கனவே, பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் வில்லனாக வந்து, கிளைமாக்ஸ் காட்சியில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கொஞ்சம் அந்த கால கதை தான். ஏழை ஆனந்த் (பிரேம்குமார்), பணக்கார மதன் (வெங்கட்) இருவரும் நல்ல நண்பர்கள். ஆனந்த்தை டாக்டருக்குப் படிக்க வைக்கிறான் மதன். படிக்கும்போது கண்ணம்மாவின் (மீனா) நட்பு பிரேம்குமாருக்கு கிடைக்கிறது. இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

இந்நிலையில் மதனுக்கு, கண்ணம்மாவை பேசி முடிக்கிறார் அவளது அப்பா (சந்திரசேகர்). இதை எதிர்பார்க்காத மதன், தனது நண்பனுக்கே கண்ணம்மாவை கல்யாணம் செய்து வைக்கிறான். திருமணத்திற்குப் பின்னர் ராணுவத்தில் வேலை கிடைத்து இந்தியாவின் இமயமலையின் பனி படர்ந்த கார்கில் போர் முனைக்கு செல்கிறான் ராணுவ டாக்டரான ஆனந்த். சில நாட்களிலேயே பனிப்புயலில் சிக்கி இறந்து விட்டதாக கர்ப்பிணியான கண்ணம்மாவுக்கு தகவல் வர உடைந்து போகிறாள். மார்க்கம் தெரியாமல் தத்தளிக்கும் கண்ணம்மாவை தனது வீட்டுக்குக் கூட்டி வருகிறான் மதன். இதை மதனின் மனைவி மாலா (விந்தியா) எதிர்க்கிறார். மீனாவுக்கும், தன் கணவருக்கும் தொடர்பு இருப்பதாய் விஷம் கக்குகிறார் விந்தியா. இதனால் மதன் குடும்பத்தில் குழப்பம். மீனாவை வீட்டை விட்டு விரட்ட பல குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்து தோற்ற விந்தியா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதே சமயம் எதிர்பாராத திருப்பமாக பனிப்புயலில் சிக்கி இறந்ததாகக் கருதப்பட்ட ஆனந்தும் ஊர் திரும்புகிறார்.

கண்ணம்மாவின் அவலநிலையைப் பார்த்து கொதிக்கும் அவன், அடுத்து என்ன செய்கிறான் என்பதே கதை.

மொத்தமாக படத்தைப் பார்த்தால், பல குறைகள் பளிச் பளிச்சென தெரிகின்றன. நாடகத்தனமான காட்சிகள், அதற்கு வலுவேற்றும் வகையிலான நடிகர்கள், கனமில்லாத கதை என குறைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

மீனாவின் நடிப்பு மிக அருமை. தனக்கும் மதனுக்கும் தொடர்பிருப்பதாய் விந்தியாவால் பஞ்சாயத்தில் நிறுத்தப்படும்போது, கருணாநிதியின் நீண்ட வசனங்களை உணர்ச்சிகரமாய் உச்சரித்து கைத்தட்டல் வாங்குகிறார். அதே போல சந்திரசேகர். வழக்கமாகவே கொடுத்த பாத்திரத்தில் சிறப்பாக நடிக்கும் இவர் கூடுதலாக சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

ஆனால், டிவி நடிகரான பிரேம் படத்தில் டூயட் பாடி ஆடுகிறார். பார்க்க கண்றாவியாக இருக்கிறது. விந்தியாவுக்கு வழக்கம்போல் நடிப்பை விட கவர்ச்சி நன்றாகவே கைகூடி வருகிறது. பேசாமல் அந்த வழியிலேயே தொடர்ந்து அவர் போய் விடலாம். அதிலும் கிச்சு கிச்சு தாம்பாளம் பாட்டில் நம்மை ரொம்பவே உசுப்பேத்துகிறார்.

படம் முழுவதும் நறுக் வசனங்களால் தற்கால நாட்டு நடப்புகளை விளாசித் தள்ளியிருக்கிறார் கருணாநிதி.

"கண்ணம்மா இல்லாமல் வீடே வெறிச்சோடி விட்டது" என்று குயிலி கூறும்போது, "கண்ணகி இல்லாமல் கடற்கரையே வெறிச்சோடி கிடக்கிறது" என்று வையாபுரி பதில் சொல்ல, கருணாநிதியின் பேனா வார்த்தை ஜாலம் செய்கிறது. தமிழன் புகழ் பாடும் வசனங்களுக்கும் குறைவில்லை.

விஷப் பாம்பும் பளபளப்பானது, விலாங்கு மீனும் பளபளப்பானது என்று வரும் வரிகள் பழைய பூம்புகார் பட வசனங்களை நினைவுபடுத்துகிறது. சில இடங்களில் வசனங்கள் ரொம்ப நீளம். திரைக்கதை அமைப்பில் பெரிதாக ஓ(கோ)ட்டை விட்டிருக்கிறார்கள். காட்சிகள் அந்த கால சினிமா மாதிரி நாடக பாணியில் நகர்கின்றன.

படத்தின் தலைப்புப் பாட்டையும் கருணாநிதியே எழுதியிருக்கிறார். பாடல் வரிகள் சூரியக் கதிர்கள். 'இசை வசந்தம்' எஸ்.ஏ.ராஜ்குமாரன் இசை காதுகளை பல இடங்களில் பதம் பார்க்கிறது. இயக்குனர் பாபா போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, சன் டிவி நாடகத்தை பெரிய திரையில் பார்த்த உணர்வு ஏற்படுவதை தவிர்ப்பது ரொம்ப சிரமம்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)