Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மக்களிடமிருந்து புலிகள் எதிர்பார்த்திருக்கும் பதில்
#1
<b>மக்களிடமிருந்து புலிகள் எதிர்பார்த்திருக்கும் பதில்</b>

* தமிமீழம் கேட்டு,

சமஷ்டி கேட்டு,

இடைக்கால நிர்வாகம் கேட்டு,

பொதுக்கட்டமைப்பு கேட்டு...

3 வருடத்தில் நடந்த கீழிறக்கம்...

<b>வவுனியாவில் புதுவை உரை</b>

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" வெளியீட்டு விழாவில் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆற்றிய உரை.

"மீண்டும் நாமெல்லோரும் கூடி இப்படியான ஒரு விழாவில் சேருவோமோ என்பது சந்தேகம். ஏனெனில், இன்றைய அரசியல் நிலைவரம் அப்படி. இதைச் சொல்வதன் மூலம் நான் ஒரு அமைப்பினுடைய பொறுப்பாளர் என்ற கருத்தை எத்தனிக்கவில்லை.

என்னைப் பொறுத்த அளவில் எதிர்காலம் எல்லோரும் கூடிக் களிக்கும் காலமாய் இராதோ என்று நினைக்கிறேன். இதனை அச்சப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை. அல்லது எனக்கு எதிர்வரும் யுத்த காலம் கண்ணில் தெரிகிறது என்று (முந்திரிகை கொட்டை) போல வெடிக்கவும் இல்லை. ஆனால், இப் பொழுதுதான் அறிந்தேன்,இராணுவம் எமது விழாவில் கட்டிய தேசியக் கொடியை இறக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது. (போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினரும் அன்று தேசியக் கொடியை படம் பிடித்தார்கள்)

உண்மையில் எமது தேசியக் கொடியை ஏற்றுவது அவர்களது `அரை ஞாண் கொடி' யில் ஏற்றியது போல நினைக்கிறார்கள். புறுபுறுக்கிறார்கள். (சபைசிரிப்பு)

தமிழர்களுடைய விழாவில் தமிழர்களுடைய தேசியக் கொடி (புலிக்கொடி) யை ஏற்றுவதற்கே இவ்வளவு சிரமம் என்று சொன்னால், இதுவே கடைசி விழாவென்று ஏன் சொல்லக்கூடாது(!).

எங்கள் எல்லோரையுமே அவர்கள் நினைக்கிறார்கள் ஒரு `பேய்க்கிளாத்தி'கள் என்று. எனக்குப் பிடிக்காதது அதுதான்.

நாங்கள் `தீச்சுவாலை'யை, வென்றதன் பின்பு கேட்டது` தமிழ் ஈழம்'. பின்னர் எமக்கு பிரச்சினை இல்லாத ஒன்று என்று `சமஷ்டி' யை காட்டினார்கள். அதனை உடனே நாங்கள் (விடுதலைப் புலிகள்) ஒப்புக் கொள்ளவில்லை. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் என்றோம். சமஷ்டி தொடர்பாக தெளிவாக ஒரு அறிக்கை விட்டதன் பின்பு தான் நாம் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.

நாம் `நட்டாமுட்டித் தனம்' செய்து கொண்டு இப்போ நிற்கவில்லை. நாங்கள் சமஷ்டியை ஏற்றுக் கொண்டு தன்னாட்சியை ஏற்றுக் கொண்டு பரிபூரணமாக தன்னாட்சியை ஏற்றுக் கொண்டதோடு மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதைத்தான் விரும்பினோம், மனப்பூர்வமாக.

அதன் பின்பு அவர்கள் (அரசாங்கம்) சொன்னார்கள் அதனை பின்னர் யோசிப்போம். இப்பொழுது இடைக்காலம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு அன்ரன் பாலசிங்கம் குழுவினர் ஜப்பான் போய் மரம் நட்டு `நட்புறவு மரம்' (சபை - சிரிப்பு)நட்டு திரும்பி வந்தார்கள். அப்பொழுது இடைக்கால நிர்வாகம் என்றார்கள் (அரசு).

இடைக்கால நிர்வாகம் என்று பேசிக் கொண்டிருக்கையில் தான் (இந்த போக்கறந்தது) கடல்கோள் வந்தது. அது ஆட்களை மட்டும் அழிக்க வில்லை (!)

பின்னர் பொதுக் கட்டமைப்பு என்றார்கள். மூன்று வருடத்துக்குள் நடந்த கீழிறக்கம் இது. தமிழீழம் கேட்டு, சமஷ்டி கேட்டு, இடைக்கால நிர்வாகம் கேட்டு, பொதுக் கட்டமைப்பு கேட்டு அதோடு நிற்கவில்லை எமது போராட்டம். அதற்கிடையில் புத்தர் சிலைப் போராட்டம். எங்கே வந்து நிற்கிறோம். எமது நிலைமையை சற்று யோசிக்க வேண்டும்.

எம்மை அவர்கள் `பேய்க்கிளாத்திகள்' என்று நினைக்கிறார்கள். இது அவர்கள் (அரசு) எடுக்கும் முடிவு அல்ல இதற்கு பின்பு பல பேர் இருக்கிறார்கள் (வெளிநாடுகள்)

எமக்காக பேசுகிறார்கள் என்று சொல்பவர்கள் எமக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். எமக்கு உதவி செய்ய வருபவர்கள் போல் வருபவர்களும் எமக்கு எதிராகவே இருக்கிறார்கள். எமக்கு ஏதாவது பெற்றுத் தருவதாக சொல்பவர்களும் எமக்கு எதிராகவே இயங்குகிறார்கள். எல்லோரும் எங்களை ஒரு `ஒழுக்குக்கு வைத்த சட்டிகளாக' ஆக்கிப் போட்டார்கள். (மேலே பார்த்தபடி வந்து விழுவதை மட்டும் எதிர்பார்த்ததாக) தயவு செய்து அவர்களிடம் நாம் கேட்பது. எந்த இடத்தில் இருந்து..... (யுத்தம் ஆரம்பிப்பது) அதனை விடுதலைப் புலிகளிடம் விட்டு விடாதீர்கள்.

விடுதலைப் புலிகள் (யுத்தத்தை) ஆரம்பித்தால் சொல்வார்கள் எதற்கும் விடுதலைப் புலிகள் விடமாட்டார்கள் என்று. ஏழு முறை இந்த அவப் பெயர் (யுத்தம் ஆரம்பித்தார்கள் என்ற) வந்திருக்கிறது எங்களுக்கு. எட்டாவது முறையும் இந்த அவப்பெயர் எங்களுக்கு (விடுதலைப் புலிகளுக்கு) வேண்டாம்.

எங்களைத் தாங்கி நிற்கும் எமது மக்கள் எந்த இடத்தில் இருந்து ஆரம்பிப்பது என்பதனை சொல்ல வேண்டும் (யுத்தத்தை). அதற்கு பின்னர் தான் நாம் முடிவெடுப்போம்.

திம்பு பேச்சு வார்த்தைக்கு எல்லா இயக்கமும் போனதன் பின்பு மருதனார்மடத்தில் இருந்து யாழ்ப்பாணம் கம்பஸ் வரைக்கும் ஒரு ஊர்வலம் போனது. அப்பொழுது எல்.ரீ.ரீ.ஈ. உட்பட எந்த இயக்கமும் இல்லை. எல்லாம் பேச்சுவார்த்தைக்கு போய்விட்டது.

தன்னெழுச்சியாக மக்கள் எழுந்த அந்த ஊர்வலம் பிரமாண்டமானதாக இருந்தது. அந்த ஊர்வலத்தின் கோஷம் இது தான் `ஏமாற்றப் போகிறார்கள் பேச்சு வார்த்தைக்கு போகாதீர்கள்'. அது ஒரு பேரெழுச்சி.

அதனுடைய வீடியோ கொப்பி இன்னும் என்னிடம் இருக்கிறது. அந்த ஊர்வலத்தில் ஆறாயிரம் ஏழாயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள்.

ஏலவே (பேச்சு வார்த்தைகள் உடைந்தது) பல முன்னுதாரணம் எங்களுக்கு முன்பு இருக்கிறது. நான் இதில் நின்று ஒரு யுத்தப் பிரகடனம் செய்யவில்லை. அப்படி நினைக்காதீர்கள். அந்த தொழிலும் எனக்கு இல்லை.

ஆனால், நாங்கள் இப்படியே போனால் அடுத்த தலைமுறைக்கு எதனை விட்டு விட்டு போகப் போகிறோம்.

எமது தமிழ் மக்கள் தமது சிந்தனையை மாற்ற வேண்டும். எல்லோரும் எண்ணுகிறார்கள் தங்கள் தங்களுடைய காலம் முடிந்தால் சரி என்று. அது பெரிய கொடுமை.

மக்கள் ஏதோ அமைதியாக இருந்தால் சரி என்று நினைக்கிறார்கள். மக்களுடைய எண்ணம் பொதுக் கட்டமைப்பு இல்லாவிடினும் அதற்கு கீழே கொடுத்தாலும் சரி, போதும் என்று இருக்கிறது. (மக்கள் தன்னிலை எண்ணங்களில் இருந்து மீள வேண்டும்)

காலம் நீடித்தால் பெரிய ஆபத்து. தருவதை தாருங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்ற நிலைக்கு எமது இனம் வரும். ஏனெனில், எமது இனம் அப்படியான இனம். நேற்று நடந்ததை இன்று மறந்து விடுவோம் நாம். இது மிகவும் கவலைக்குரியது.

அவர்களுக்கு இந்த மறதி நன்றாக விளங்கி விட்டது. சந்திரிகாவுக்கு எமது மறதி தொடர்பான நம்பிக்கை இருக்கிறது. (இது எனது கருத்து). இன்னும் இரண்டு வருடத்துக்கு இந்தக் காலத்தை (யுத்தமுமில்லாத சமாதானமுமில்லாத) இழுத்துக் கொண்டு போவதற்கு அவர் விரும்புகிறார். எனவே, இந்தக் கால தாமதம் தமிழர்களுடைய சுய உணர்வுகளை அதல பாதாளத்துக்கு கொண்டு போய்விடும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு உங்களிடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்த்து நிற்கிறது. (இப்பொழுது விடுதலைப் புலிகளின் சார்பாக கதைக்கிறேன்) தமிழ் மக்களின் மன நிலை என்ன? எமக்குத் தெரியவேண்டும். சில இடங்களில் தமிழ் மக்கள் தமது மனக்கிளர்ச்சியினை சொல்கிறார்கள். வடமராட்சியில் சொன்னார்கள் `போரை உடனடியாக ஆரம்பிக்கும்படி' ஊர்காவற்றுறையில் எண்ணாயிரம் தமிழர் கூடி சொன்னார்கள்' போரை உடனடியாக ஆரம்பிக்கும்படி,.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு தங்களது கருத்தைச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். வவுனியா மக்களும் தமது கருத்தைச் சொல்ல வேண்டும். பெரிய சொற்களான `தமிழீழம்' , `தனிநாடு' என்ற சொற்களை(!) சொல்ல விரும்பவில்லை. எமக்கான விடுதலை வேண்டும். விடுதலை எப்படியாக இருக்கும்! தென்னிலங்கையில் சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் அனுபவிக்கிறார்களே அவ்வளவும் எமக்கு வேண்டும். வேறெதுவுமில்லை.

விடுதலை என்றால் அச்சமில்லாமல் உலாவுதல், யாருக்கும் அஞ்சாமல் கருத்துச் சொல்வது, நான் எனக்கு வேண்டிய வாழ்வை எழுதியபடி சாவது, என்னைப் போல் மற்றவரை நேசிப்பது, மற்றவருக்கு கிடைப்பது அனைத்தும் எனக்கு கிடைக்கச் செய்வது. இப்படி விடுதலையின் எல்லை பரந்தது.

எமக்கு இப்பொழுது வேண்டியது எல்லாம் ஷ்ரீ லங்காவில் இருக்கும் மக்களெல்லாம் ஒரே அளவாக வாழ்வது. சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்றில்லாமல் ஒரே அளவாக வாழ்வது. அது போதும் முதலில். தருவீர்களா? நாம் எல்லாவற்றையும் விடத் தயாராக இருக்கிறோம். இருக்கிற `ஆட்லெறி'களையும் இழுத்துக் கொண்டு வந்து விடுகிறோம். `பிளேன்' என்கிறீர்கள் தருகிறோம். தருவீர்களா! (அரசே!)

சந்திரிகா வாழ்கின்ற வாழ்வு எங்களாலும் வாழ முடியுமா? தனி ஈழம் வேண்டாம். ஒன்றும் வேண்டாம். சரி சமமாக இந்த நாட்டில் வாழ்வதற்கு ஒரு உரிமையை தருவீர்களென்றால் போதும்.

தெரியவில்லையே! அப்படி ஒரு நல்ல நிமித்தமும் தெரியவில்லையே! ஒரு ஒளியும் தெரியவில்லையே! பொதுக் கட்டமைப்புக்கே இவ்வளவு `குத்திமுறிப்பு' என்றால் எப்படி எங்களுக்கு விடுதலை தருவார்கள்? இந்த முத்தையா மண்டபத்தில் புலிக் கொடியை ஏற்றுவதற்கே எமக்கு உரிமையில்லையென்றால் ... எமது நிலை என்ன?

தினக்குரல்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)