Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூவாக இருந்தவள் புலியாகினாள்
#1
அன்று அதிகாலை மூன்றுமணி இருக்கும். தெருவெங்கும் நாயின் குரைப்புச் சத்தம் ஊரெங்கும் கேட்டது. சிவா எழும்பி தன் குடிசை வீட்டின் ஓட்டையால் பார்க்கிறான். சிலர் நடமாடுவது தெரிந்தது.

அவன் நன்றாக உற்றுப் பார்க்கின்றான். படையினர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். சிவாவுக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. நேற்று நடந்த சுற்றிவளைப்பின் போது படையினரால் பிடிபட்டவன் முகமூடியாக வந்திருப்பான் என்ற எண்ணம் அவனின் மனதில் எழுந்தது. பயம் இன்னும் இரு மடங்காகியது. சிவா தன் மனைவி சாந்தியைப் பார்த்தான். அவள் நித்திரையில் இருந்தாள்.

அவளைக் கட்டியணைத்தபடி தன் ஒரே மகள் சுகன்யா படுத்துக்கொண்டிருந்தாள். சிவா மெல்ல சாந்தியை எழுப்பினான். என்ன இந்த நேரம் என்றாள் சாந்தி! பயந்தவனாகச் சிவா கூறினான். “நம்மட கடப்புல ஆமிக்காரனுகள் நிக்கிறார்கள். எனக்குப் பயமாய்க் கிடக்கு|| என்றான் சிவா. சாந்தி பதறியபடி சொன்னாள். படிச்சுப் படிச்சு சொன்னேன் தானே. கேட்டிங்களா? நான் இப்ப என்ன செய்வது. என்றபடி அழுதாள் சாந்தி.

சிவா சாந்தி இருவரும் பேசிய சத்தம் கேட்டு எழுந்தாள் மகள். என்ன அப்பா என்ன நடந்தது என்றபடி எழும்பினாள். அவங்கட தொடர்பு வேண்டாம் என்று சுகன்யா சிவா சாந்தியிடம் சொன்னான். என்னைப் பிடித்தால் எப்படியும் அடித்துக் கொன்று விடுவாங்கள். இப்போது என்ன செய்வது என்று தடுமாறினான் சிவா. அவர்களின் தகரக் கேற்கைத் தள்ளுவது போல் சத்தம் கேட்டது. சிவா நினைத்தான் இனியும் நான் இங்கிருந்தால் என்னைக் கொன்று விடுவார்கள். நான் எப்படியும் இங்கிருந்து தப்பித்தான் ஆக வேண்டும் என்றவன் தடுமாறினான்.

சிவா சொன்னான். ‘சாந்தி நான் பின்பக்கமாக ஓடுகிறேன். நீ மகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்! எப்படியும் தப்பிக் கொள்ளனும்’ இதைக் கேட்டதும் சாந்தி பதட்டம் கொண்டவளாக விம்மினாள். அவளுடன் மகளும் அழுதாள். சிவா சொன்னான் மகள் கவனம் அப்பா இங்கிருந்தேன் என்றால் என்னைக் கொன்று விடுவார்கள் மகள் என்றதைக் கேட்டதும் சாந்தியும் மகளும் வாய்களைக் கையால் பொத்தியபடி அலறினார்கள்.

அப்போது தான் யாரோ தங்கள் குடிசையை நோக்கி வருவது போல் சத்தம் கேட்டது. சிவா திடீரென்று பின்பக்கமாக ஓடினான். சிவா ஓடியதைக் கண்டு கொண்ட படையினர் புரியாத வார்த்தைகளால் ஏதோ சொல்லிக் கொண்டு பின்தொடர்ந்து ஓடினார்கள். சிறிது தூரம் ஓடிய பின் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது.

சாந்தியும் மகளும் குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்தார்கள். இருள் நீங்கி மெல்ல மெல்ல ஒளி வந்து கொண்டிருந்தது. பின்பக்கமாகப் பார்த்த சாந்தியின் கண்களில் சில இருட்டு உருவம் தாங்களை நோக்கி வருவதை உணர்ந்து கொண்ட மகளும் சாந்தியிடம் பயத்தால் நடுங்கினர். வந்த அந்த இருட்டு உருவங்கள் சாந்தியையும், மகளையும் பார்த்துக் கெட்ட வார்த்தைகளால் பேசினார்கள். சாந்தியும் மகளும் சுமனைக் கண்டாற்போல் இருந்த வேளை சாந்தி தன் கணவர் உயிருக்கு என்ன நேர்ந்து விட்டதோவென அலறினாள். சுகன்யாவும் தன்மீது பாசமான என் அப்பா கேட்ட பொருள் எல்லாம் எவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும் வாங்கித் தந்த என் அப்பாவுக்கு என்ன நடந்ததோ என்று அனலில் புழுவாய் துடித்தாள்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த ஏனைய படையினர் சாந்தியைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்.

அதில் வந்த ஒரு இனவெறி பிடித்தவன் சாந்தியை தாறுமாறாகத் தாக்கினான். அப்போது சுகன்யா அம்மாவை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அழுது புலம்பினாள். அவள் என்ன தான் செய்வாள். அவளும் பருவமடைந்து இரண்டு வருடமாகின்றது. அந்த வெறிபிடித்தவர்களிடம் நின்று பேசுவதற்கு கசப்புடனும் அச்சத்துடனும் நிலை தடுமாறி செய்வதறியாமல் உதவுவார் யாருமில்லாமல் தவித்தாள் சுகன்யா.

சற்று பொழுது விடிந்தது. அங்கும் இங்குமாக சில வீடுகளில் நடமாட்டம் தெரிந்தது. படையினர் சிரிப்பும் கும்மாளமுமாக அங்குமிங்குமாய் சிலரைப் பிடித்து வைத்திருந்தார்கள். சாந்தியும் மகளும் ஓடிப்போய் தன் கணவரைத் தேடும் முயற்சியில் வெளியே போக எண்ணிய வேளை அப்போது தான் ஆமியின் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து ஏதோ ஒன்றை இருவர் கொண்டு போனார்கள். பின் சிறிது தூரத்திலிருந்து ஒரு பிணத்தைத் தூக்கி வந்தார்கள். சாந்தி சற்றுப் பதட்டத்துடன் தலையில் அடித்துக் கத்திக்கொண்டு ஓடினாள். ஓடியவளிடம் தன் கணவன் புலி அவனைக் கொன்று விட்டோம் என்றான் ஒருவன்.

சாந்தி அவ்விடத்திலேயே மயங்கி வீழ்ந்ததைக் கண்ட சுகன்யா தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் தாயைத் தூக்கி மடியில் வைத்துக் கத்தினாள். யாராவது வாங்களேன் என்று அலறினாள். பின்னர் சாந்தியின் கணவனைப் பிணமாக்கிய அந்த எமன்கள் சிரித்துக் கும்மாளம் போட்டபடி சென்றுவிட்டார்கள்.

அதன் பின் அங்குள்ள சிலர் சாந்தியும் மகளும் கிடந்த இடத்திற்கு வந்தார்கள். சாந்தியின் கணவன் புலி என்று படையினர் முத்திரை குத்தினர். காலங் கடந்தது. சாந்தியும் மகளும் தங்கள் வாழ்வைக்கடத்த பல பாடுகள்பட்டனர். சுகன்யாவும் தன் படிப்பை நிறுத்தி விட்டாள். சாந்தி தன்னாலான பல வேலைகளைச் செய்தாள். அவளின் வாழ்க்கைக்கு அதுவும் போதவில்லை. சுகன்யா தன் தந்தையின் இழப்பை ஜீரணிக்க முடியாமல் கலங்கினாள்.

அந்த நேரம் தான் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு படைமுகாம் கட்டப்பட்டது. படைமுகாம் வந்து சிறிது காலம் பிரச்சினை ஒன்றும் நடக்கவில்லை. அங்கிருந்த படையினர் அந்தக் கிராம மக்களுடன் அன்புடன் பழகினார்கள். ஆனால் அங்குள்ள மக்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் நயவஞ்சகமாகத்தான் பழகுகின்றார்கள் என்று. அந்தக் கிராம மக்களுக்குப் புரியவில்லை. அப்போது தான் சாந்தியின் வீட்டிற்கும் ஒரு சில படையினர் வருவதும், அன்பாகப் பேசுவதும் சில சாமான்கள், உணவுப் பொருட்கள், உடைகள் என்பன கொண்டு போய்க் கொடுப்பார்கள். ஆனால் சுகன்யாவுக்கு இது எல்லாம் பிடிக்கவில்லை.

சுகன்யா தன் தாயிடம் சொன்னாள். அப்பாவைக் கொன்ற பாவிகளிடம் நாங்கள் கைநீட்டி வாங்கிச் சாப்பிடுகிறதோ? என்று எரிந்து விழுந்தாள் சுகன்யா. சாந்தி சொன்னாள் மகள் அவங்கள் வேற ஆக்கள். இவங்கள் வேற ஆக்கள். இவங்கள் நல்லவங்க தானே என்றாள் சாந்தி. என்ன அம்மா சொல்றீங்கள். எல்லாம் பேய் தான். எங்கள் உயிர்களையும் உடமைகளையும் குடிக்க வந்த காடேறி தான் என்றாள் ஆவேசத்துடன் சுகன்யா.

சுகன்யாவுக்குத் தான் தாயின் போக்குப் பிடிக்கவில்லை. நாட்கள் போகப் போக சாந்தியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. படை அதிகாரி அடிக்கடி தன் வீட்டுக்கு வருவது சுகன்யாவுக்குப் பிடிக்கவில்லை. எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தாள் சுகன்யா. சாந்தி எதையும் ஏற்பதாயில்லை. அங்கு வரும் படையினர் சுகன்யாவிடமும் கேலியும், சேட்டையும் செய்தார்கள். சுகன்யா எவ்வளவோ தன் தாயிடம் சொல்லியும் பார்த்தாள். அழுதும் பார்த்தாள் சுகன்யா. சாந்தி எதையும் கேட்பதாகவில்லை. ஒரு முடிவுக்கு வந்தாள். அன்று இரவு ஏழு மணியிருக்கும் நாடகம் பார்ப்பதற்காக சிறிது தூரம் தள்ளியிருக்கும் வசந்தி அக்காவின் வீட்டிற்கு நாடகம் பார்க்க போனாள் சுகன்யா.

நாடகம் முடிந்ததும் தன் குடிசை வீட்டை நோக்கி வந்தாள். வீட்டை நெருங்கியவள் ஏதோ தன் குடிசைக்குள் சத்தம் கேட்க மெதுவாக வந்தாள். அங்கு அவள் கண்ட காட்சி சுகன்யாவைத் தீயில் தூக்கிப் போட்டது போல் இருந்தது. என்ன அசிங்கம். இப்படியும் ஒரு தாயா? என்று அவள் மனம் பதறியது. கோபம் ஒரு பக்கம் தன் தாயை நினைத்து ஆவேசம் கொண்டாள் சுகன்யா. எனக்கும் என் அப்பாவுக்கும் துரோகம் செய்த இவளை அழிக்க வேண்டும் என்று மனதில் ஆவேசம் பொங்கத் தேடினாள். கண்ணில் ஒன்றும் படவில்லை. மூலையில் பார்த்தாள் அவனின் துப்பாக்கி இருந்தது. அதை எடுத்து ஒன்றும் செய்ய தன்னால் முடியாதே!

விறாந்தையில் பார்த்தாள் மங்கல் வெளிச்சத்துடன் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கோ பல்ப்பினாலானது. அதை மெதுவாகக் கையில் எடுத்தாள். விளக்கின் திரியை இன்னும் கொஞ்சம் இழுத்தாள். அந்த வெளிச்சம் தங்கள் மேல் பட்டதும் சட்டென்று எழும்ப முயன்றார்கள் இருவரும். அதற்குள் சுகன்யா ஆவேசத்துடன் எடுத்த விளக்கை அவர்கள் மேல் வீசினாள். பல்ப் என்பதால் அது சட்டென்று தீப்பிடித்தது. எண்ணெய் சிதறி குடிசை பற்றி எரிந்து தீச்சுவாலை எழுந்தது. அந்த வெளிச்சத்தில் வேங்கைகளின் பாசறையை நோக்கி நடந்தாள் சுகன்யா.

பாண்டியூர் புலேந்திரா


நன்றி
http://www.battieezhanatham.com
Reply
#2
நல்ல சிறு கதை..... முடிவு வருத்தம் தான்... நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு.....

Reply
#3
எல்லைக்கிராம மக்களில் ஒரு பெண்ணின் கதையை கட்டுரை ஆசிரியர் சொல்ல முயற்சித்துள்ளார், ஆனாலும் அனைத்துப் பெண்களும் இவ்வாறு இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#4
அக்கிராமங்களில் வாழும் மற்றைய பெண்களின் வாழ்வையும் தொட்டுக் காட்டியருந்தால் கதாசிரியரால் தன் இலக்கினை முழுதாக எட்டப்பட்டிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)