Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதி வேட்பாளர்களின் மீது அதிகரித்துள்ள பாதுகாப்பு அக்கறை
#1
* தேசிய பாதுகாப்புச் சபையின் ஆலோசனை பெறப்பட்டே பிரசார நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

1994 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பாலத்துறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸா நாயக்க கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மேலும் 30 பேர் கொல்லப்பட்டனர்.

பிரசாரக்கூட்ட மேடையிலிருந்த காமினி திஸாநாயக்காவை கூட்டத்தில் முன்வரிசையிலிருந்த இளம் யுவதியொருவர் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்து கொலை செய்தார்.

காமினி திஸாநாயக்காவை நெருங்கிச் செல்லும் வாய்ப்பு குறைவென்பதால், சற்று தூரத்திலுள்ள மேடையிலிருக்கும் காமினியை கொல்ல தற்கொலைக் குண்டுதாரி மிகவும் சக்திமிக்க வெடிகுண்டைப் பயன்படுத்தியதால் உயிரிழப்பு அதிகமாயிருந்தது.

இதன் பின் 1999 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்க, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு நகர மண்டப மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டார்.

அந்தத் தாக்குதலையும் பெண் தற்கொலைக் குண்டுதாரியே நடத்தினார். இழப்புக்களை பெருமளவில் குறைக்கவும், இலக்கை மட்டும் தாக்கும் நோக்கிலேயே இந்தத் தற்கொலைக் குண்டுதாரி செயற்பட்ட போதும் அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி சந்திரிகா காயங்களுடன் தப்பினார்.

ஜனாதிபதி சந்திரிகா மீதான தாக்குதலுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் (மிக நெருக்கமாக) இலக்கை கடுமையாகத் தாக்கும் விதத்திலேயே தற்கொலைக் குண்டுதாரி வெடி மருந்தின் அளவைப் பயன்படுத்தியிருந்தார். ஜனாதிபதி சந்திரிகா கூட்ட மேடையிலிருந்து இறங்கி தனது காரில் புறப்படும் இடைவெளியைப் பயன்படுத்தி அவரை நெருங்கிச் சென்று தாக்குவதே குண்டுதாரியின் நோக்காக இருந்த போதும் அவரை நெருங்கிச் செல்ல முடியாத சூழ்நிலையில் குண்டுதாரி தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்கவைக்க, கண்ணில் படுகாயத்துடன் ஜனாதிபதி தப்பினார்.

இந்தச் சூழ்நிலையிலேயே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த இரு ஜனாதிபதித் தேர்தலும் யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடந்தது. இம்முறை யுத்தநிறுத்த காலத்தில் நடைபெறுவதால் கடந்த காலங்களிலிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலளவிற்கு இம்முறை பாதுகாப்பு அச்சுறுத்தலிருக்க மாட்டாதென பாதுகாப்பு தரப்பு கருதினாலும் அமைச்சர் கதிர்காமரின் கொலையானது அந்த நினைப்பை இல்லாது செய்துவிட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறுகிறது.

இந்தத் தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், கடும் போட்டிக்குரியவர்கள் இருவரே. ஏனையோர் வெற்றிக்கு சமீபமாகக் கூட நெருங்க முடியாதவர்களென்பதால் பிரதான கட்சிகளினது இரு வேட்பாளர்களதும் பாதுகாப்பு குறித்தே முழுக் கவனமும் செலுத்தப்படுகிறது.

இருவரதும் பாதுகாப்பு குறித்தும் பாதுகாப்பு தரப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன் அவர்களைச் சுற்றி பாதுகாப்பு வளையமொன்றையும் ஏற்படுத்தி அவர்களுக்கு பலத்த பாதுகாப்பையும் வழங்கி வருகிறது.

இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. சிறுபான்மை கட்சிகள் பலவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைந்தவர் இவரெனக் கருதப்படுகிறது.

மிக மோசமான இனவாதிகளின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்‌ஷ களமிறங்கியுள்ளதால் இவரை இலக்கு வைக்கும் வாய்ப்பு அதிகமாயிருக்குமெனவும் இவரது பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் அதிகமெனவும் படைத்தரப்பு கருதுகிறது. இதனால், இவரது பாதுகாப்பு விடயத்தில் படைத்தரப்பு கூடிய கவனம் செலுத்துகிறது.

இருவரது பாதுகாப்பு குறித்தும் தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டு இவர்களது பாதுகாப்பை விஷேடமாகக் கவனிப்பதற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். சோலங்காராச்சி தலைமையில் விஷேட கமாண்டோ படையணிகளும் விஷேட அதிரடிப்படையும் சிறப்புப் பயிற்சி பெற்ற பொலிஸாரும் பாதுகாப்பு விடயங்களை கையாளுகின்றனர்.

முக்கிய இரு வேட்பாளர்களதும் பயண ஒழுங்குகள் பிரசாரக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் பற்றிய முழு விபரமும் முன்கூட்டியே இவர்களிடம் கையளிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு முன் சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பு நிலைமைகளை முழுமையாக ஆராயும் இந்தப் படையணிகள், கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்பே கூட்டம் நடைபெறும் பகுதியை முற்றுகையிடுகிறது. மேடை அமைப்பு முதல் பார்வையாளர் வருகை வரையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இவர்கள் அக்குவேறு ஆணி வேறாக ஆராய்கின்றனர்.

இவர்களது அறிவுறுத்தல்களுக்கமையவே மேடை அமைப்பு முதற்கொண்டு மேடையில் வைக்கப்படும் ஒலிவாங்கிகள் வரையான அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. கூட்ட ஏற்பாட்டாளர்கள் இவர்களது அறிவுறுத்தல்களை பூரணமாக அமுல்படுத்தாவிட்டால் கூட்டங்கள் ரத்துச் செய்யப்படும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுகிறது.

தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டதாகவே இந்தப் படையணிகள் செயற்படுவதால் பிரதான இரு வேட்பாளர்களும் இந்தப் படையணியின் அறிவுறுத்தல்களை பூரணமாகவே கடைப்பிடிக்கின்றனர். வேட்பாளர்களுக்கு நெருங்கியவர்களின் ஆலோசனைகளை விட பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும் பிரதான வேட்பாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளைப் பொறுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் சற்று தளர்வுத் தன்மைகள் காட்டப்பட்டாலும் கூட்டம் நடைபெறும் இடங்கள் பல அடுக்கு பாதுகாப்பு வலையமைப்புக்குள் உட்படுத்தப்படுகிறது. கூட்டம் நடைபெறும் இடம் தெரிவு செய்யப்பட்டதும், அப்பகுதியெங்கும், மோப்ப நாய்கள் சல்லடை போட்டு வெடி குண்டுகளைத் தேடும். எதுவுமில்லையென அவை தலையாட்டிய பின்பே மேடை அமைப்புக்கான அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்காக பெல்ஜியத்திலிருந்து, விஷேட பயிற்சிபெற்ற 55 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. பெரும் கூடுகள் அமைக்கப்பட்ட விஷேட வாகனங்களில் இந்த மோப்ப நாய்கள் இடத்திற்கு இடம் கொண்டு செல்லப்படுகின்றன. கூட்டம் நடைபெறும் போதும் அப்பகுதியில் நாலா புறங்களிலும் இவை தயார் நிலையில் வைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான பொருட்கள், உடைமைகள் சோதனையிடப்படுகின்றன.

இதேநேரம், கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றியும் கூட்டத்திற்கு நடுவிலும் கூட்ட மேடையைச் சுற்றியும் தயார் நிலையில் விஷேட கமாண்டோ படையினர் நிறுத்தப்படுவர். இந்த வளைய அமைப்பில் சிவில் உடையிலும் கமாண்டோ படைகள் நிறுத்தப்படுவர். எந்த நிலைமையையும் சமாளிக்கும் விதத்தில் செயற்படும் வகையில் இவர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மிக மிக முக்கிய தலைவர்களின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ள `கறுப்பு பூனைகள்' (Black Cats) படையணியின் பயிற்சியைப் பெற்றவர்களே இலங்கையில் இம்முறை விஷேட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேரடி உத்தரவுகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சோலங்காராச்சி பிறப்பித்து வருகிறார்.

சிறந்த தேகாரோக்கியம், உடனடியாக விழிப்புடன் செயற்படக்கூடிய நிலை, கண்ணிமைப்பொழுதில் ஆயுதங்களைக் கையாழும் திறமைமிக்கவர்களே முக்கிய அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் சோலங்காராச்சி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒன்றரை செக்கனுக்குள் இலக்கை நோக்கி சுடும் திறன் கொண்டவர்களாக எனது படையணி இருக்க வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாயிருப்பதாகவும் கூறினார்.

இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நாலா திசையிலிருந்தும் வீடியோ படமெடுத்து (Close Up) அவை மிக நுணுக்கமாக ஆராயப்படுகிறது. கூட்டத்திற்கு இடையில் எவராவது சந்தேகத்திற்கிடமாக நடமாடுகின்றனரா, வேட்பாளர்களை அல்லது முக்கிய தலைவர்களை எவராவது பின் தொடர்கின்றாரா என்பதெல்லாம் அவதானிக்கப்பட்டு துரித உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

1994 இல் காமினி திஸநாயக்கா கொல்லப்படுவதற்கு முன்னர் தற்கொலைக் குண்டுதாரி அவரை பல கூட்டங்களில் பின்தொடர்ந்ததை சுட்டிக்காட்டும் சோலங்காராச்சி, பாதுகாப்பென்று வரும் போது வேறு எந்தச் சோதனையையும் விட, ஒருவரை கைகளால் உடற்பரிசோதனைக்குட்படுத்துவதுபோன்ற சிறந்த சோதனை வேறொன்றுமில்லையெனவும் கூறுகின்றார்.

பிரதமர் மஹிந்த தான் செல்லும் கூட்டங்களில் உரையாற்றும் போது, குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்றே பேசுகிறார். ஆனால், கூட்டம் தொடங்கி அவர் பேசும்வரையும், அவர் பேசிய பின் மற்றவர்கள் பேசி முடியும் வரையும் அந்தக் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் அவர் இருப்பதில்லை. திறந்த மேடையிலேயே நீண்ட நேரம் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு புலிகளால் பேராபத்து இருப்பதாக அவரைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கின்றனர். புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்கவையும் தொடர்புபடுத்தி பிரசாரம் செய்கின்றனர். குண்டுதுளைக்காத கண்ணாடிக் கூண்டு உரையும், பிரதமருக்கு பெரும் ஆபத்துள்ளதாக மக்களுக்கு காண்பிக்கும் பிரசார உத்தியெனவும் ஐ.தே.க. கூறுகின்றது.

இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தவின் பாதுகாப்பை அவரது சகோதரர்கள், குடும்ப விவகாரமாகவே பார்க்கின்றனர். இதனால், முன்னாள் படை அதிகாரியான மகிந்தவின் சகோதரர் கோத்தபய அமெரிக்காவிலிருந்து வருகை தந்து மகிந்தவின் பாதுகாப்பு விவகாரங்களை தானும் கையாள்கிறார்.

திருகோணமலையில் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தில் பேனைத் துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரொருவரை அவரது பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்ததாக கூறப்பட்டது. அந்தப் பேனைத் துப்பாக்கியுடன் வந்தவர் சிங்கள இளைஞரே எனவும் கூறப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலிருக்கிறதென்பதை காட்டும் அதேநேரம் அது சிறுபான்மையினத்தவர்களால் ஏற்படுவதாகக் காண்பிக்கக் கூடாதென்பதும் ஐ.தே.க.வின் தந்திரமெனக் கூறப்படுகிறது.

இல்லையேல் பிடிபடாத அந்த இளைஞர் சிங்களவர் தானென்று இவர்களால் எப்படிக் கூற முடியும். தமிழர் ஒருவர் தான் துப்பாக்கியுடன் வந்தாரென்றால் அது தமிழர்களது வாக்குகளை கிடைக்காது செய்து விடுமென்பதும் இதன் நோக்கமாயிருக்கலாமெனவும் கூறப்பட்டது.

இதேநேரம், பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கவை பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். ரணிலின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளாலும் கருணா குழுவாலேயுமே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களை குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தெற்கில் தினமும் தமிழ் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. பிரதமரது கூட்டம் நடைபெறுவதற்கு முன் அல்லது ரணிலின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் அந்தப் பகுதியில் நடமாடினார்களெனக் கூறியே தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தினமும் கைது செய்யப்படுகின்றனர். அப்பாவி இளைஞர் யுவதிகளைக் கைதுசெய்து அரசியல் தலைவர்களுக்கு தமிழர்களால் ஆபத்துள்ளதாக ஒரு மாயையை ஏற்படுத்தும் நோக்கமே இதுவாகும்.

தென்பகுதியில் இதுவரை காலமும் அரசியல் கொலைகள் எதுவுமே நடைபெறவில்லை என்பது போன்றும் தமிழர்கள் தான் சிங்களத் தலைவர்களைக் கொல்வது போன்றுமொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இதனால், தென்பகுதியில் தமிழர்கள் தினமும் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.

இதைவிட, இம்முறை தேர்தலில் வடக்கு - கிழக்கு வாக்குகளே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கவுள்ளதால் அப்பகுதியில் நிலைமைகளை மோசமடையச் செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கிழக்கில் தேர்தலைக் குழப்ப கருணாகுழு முயற்சிப்பதாக இராணுவ தரப்பு கூறுகிறது. தமிழர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் கிழக்கில் மோசடிகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. கருணா குழுவின் பெயரால் இந்த மோசடிகளை மேற்கொள்ள படைத்தரப்பு திட்டமிட்டுள்ளதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கருணா குழுவின் பெயரால் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதும் எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதும் வழமையாகிவிட்டன. இவையெல்லாம் இரவு நேரங்களிலேயே நடைபெறுகிறது. கருணா குழுவின் பலம் என்ன என்பதை இன்று கிழக்கு மக்கள் நன்கறிவரென்பதால் இதன் பின்னணியிலிருப்பவர்களையும் மக்கள் நன்கு தெரிந்தே வைத்துள்ளனர்.

நாட்டில் இம்முறை தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கும் சூழல் உள்ள நிலையில் வடக்கு - கிழக்கில் மஹிந்தவுக்கு பெருமளவு வாக்குகளைக் குவிக்க திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்த் தரப்பு சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச கண்காணிப்புக்குழுவை வடக்கு - கிழக்கிற்கு அனுப்புமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரித்தால் அந்தப் பகுதியில் போடப்படும் வாக்குகள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்காணிப்பது அவசியம் தான்.

http://www.thinakural.com/New%20web%20site...30/vithuran.htm
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)