Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<i>கதையை லிங் கொடுத்திருப்பதால் பலர் படிக்கவில்லை போலிருக்கு. அதனால் அதனை முழுமையாக இங்கே இணைத்து விடுகின்றேன் சாந்தி அக்கா.</i>
இனிதான நினைவுகளின் வாசம்
எழுதியவர்: சாந்தி ரமேஷ் வவுனியன்
அந்தமண்ணைக் கால்கள் மிதித்த போது ஏதோவொரு பரவசம். பிரியத்துக்கினியவரை நெடுநாள்
பிரிந்திருந்து மீண்டும் சந்தித்தாற்போலிருந்தது அந்தநாள். வீதிகள் யாருமற்று
நெடுநாட்கள் வாகனங்கள் ஓடாததன்
அடையாளமாக புற்கள் முளைத்து வீதியின் இருமருங்கும்
கால்வைக்க முடியாது பற்றைகளாயிருந்தது. இத்தனையையும் தாண்டி அந்தப்பிரதேசத்தினுள்
போயாகிற்று.
இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசமான எங்களது பாடசாலை வளவு அந்த அரக்கர்களின்
பிடியிலிருந்து மீண்டு நாங்கள் போனபோது எங்களுக்கெல்லாம் கல்விதந்த சரஸ்வதி
குடியிருந்த அந்தக்கோவில் இடிபாடுகளின் நடுவே சிதிலமாக்கப்பட்டுக் கிடந்தது. தென்றல்
பட்டசைந்து இ அழகின் இருப்பிடமான அந்த அழகிய குரோட்டன்களெல்லாம் காய்ந்து
சருகாகி....எங்களுக்குக் காப்பரணாயிருந்த அந்தப்பனைகள் வட்டுமட்டும் மிஞ்சி.....ஆறாத
வடுக்கள் தாங்கி பாலையாய்க் கிடந்தது.
அந்தச் சிதைவுகளை நிமிர்த்திச் சுவர்களாக்கி கூரைகள் எழுந்து ஓலைகளால் வேயப்பட்டு
வகுப்புகளான அந்த ஓலைக்கூரையொன்றின் கீழ் எங்கள் வகுப்பு. அதன் எதிர்க்கூரையில்
எங்களிலும் மூத்தவர்களின் வகுப்பொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வகுப்பு வந்ததில்
எங்களுக்கு விருப்பமில்லைத்தான். ஏனெனில் எங்களால் சுதந்திரமாகச் சத்தமிட்டுக்
கதைக்கவோ இ கும்மாளமிடவோ முடியாது. எங்களின் சத்தங்களை அடக்க அவர்கள் வந்து
விடுவதால் எங்களது கும்மாளமிடும் அந்த இடைவேளையே இப்போ தடைவேளையாகியிருந்தது.
இப்போதெல்லாம் ஏனோ அவர்களில் யாரையும் பிடிப்பதில்லை. தோழி செல்வாவுடன்
கிடைக்கின்ற மணித்துளிகளையெல்லாம் கதைத்துக் கதைத்தும் அவை காணாது வீதியில் இ வீட்டு
வாசலில் இ வழிபாட்டு இடங்களில் இ குச்சொழுங்கைகளிலெல்லாம் எங்களது ஓயாத கதை ஓயாது
போக.....இப்போ அவர்களின் கண்காணிப்பு அவர்களைக் கருநாகங்களாகவே காட்சிதர
வைக்கிறது. அவர்களி;ன் புன்னகைக்குப் பதிலான எனது புன்னகைகூட இப்போ மறந்து விட்டேன்.
ஏனெங்களோடை இப்ப கதைக்கிறீங்களில்ல....? ம்....கோவமே.....?
ஓமோம் இப்ப உனக்குத் தான் இதாலை பெரிய கவலைபோலை......!
அவனது தோழர்கள் அவனைக் கேலிபண்ணிய போது என் விழிகள் அவர்களைக் கோபித்துக்
கொண்டது.
ஏன் கதைக்கிறீங்களில்ல.....? என்ன கோவம் ?
அந்த அழகிய விழிகளின் மேல் வளைந்திருந்த பிறையின் வடிவான புருவங்கள் உயர்ந்து
வினாவியபோது அவனது நண்பர்கள் மீதும் அவன் மீதுமிருந்த கோபத்தை அவனது வார்த்தைகள்
தூரமாக்கி தள்ளியது. மீண்டும் மீண்டும் அவன் விழிகள் என்மீது விழுந்த ஒவ்வொரு
நொடியிலும் புதிதுபுதிதாய் இனிமைகள் இதயத்தில் விழுந்து புரண்டன. அந்த நினைவுகளெல்லாம்
ஒருசேர நான் அவன் வசமாக நாளெழுதிச்சென்றது அந்த மணித்துளிகள்.
ஏதோ மாற்றங்கள் என்னில்....நான் மாறிப்போனதான உணர்வு....மனப்பரப்பில் என்னை
உரசும் அவனது விழிகள்..... அந்த இனிய அதிர்வுகளில் நனைந்து கிடந்த என் இதயத்துக்குள்
குடிவந்து இனிதான குயிலின் ராகமிசைத்து என்னை அசைத்து....அந்தச்சுகந்தத்தில் என்னைக்
கரைத்து..... என்னுயிரின் அதிர்வெல்லாம் அவனாகி.....
அந்தா உன்ர சரக்கு வருகுது.....
அவனது தோழர்களின் மெல்லிய குரல்களெல்லாம் என் காதுகளிலும் வந்து விழுந்தன.
இப்போது என் பின் ஒருசோடி கண்கள் மொய்ப்பதை என்னால் உணர முடிகிறது. என் வீட்டு
வாசல்தாண்டும் போது மட்டும் அந்த உந்துருளி வேகம் குறைந்து எதையோ உச்சரித்துப்
போகிறது. எனக்காக அந்த உந்துருளி காத்திருக்கிறது. எனது வாசம்தேடி அந்த நிழல் என்னைத்
தொடர்கிறது. மாலைவேளைகளில் என்வாசலில் புதிது புதிதான இசையதிர்வுகள். அந்தக்
கைகளில் என் பெயரின் வாசம். ஓ....அவனும் என்னை நேசிக்கிறான்.
உதட்டின் கீழ் வார்த்தைகள் யாகம் செய்து கொண்டிருந்தன. வார்த்தைகளைக் கோர்த்து
உதடுகள் உச்சரிக்க எத்தனித்தாலும் ஏதோ ஒன்று என் தொண்டைக்குழியில் வந்து நின்று
அனைத்தையும் அழுத்தி வைத்திருக்கும். லட்சோப லட்சம் வார்த்தைகள் தொண்டைக்குளிக்குள்
விழுந்து கிடந்தது. அந்த ஞாபகங்களில் தகிப்பில் மணிக்கணக்கில் மனசு இறக்கை
கட்டிப்பறந்து திரியத்தொடங்கியது.
பார்வைகள் மட்டும் பேசிக்கொள்ள உதடுகள் மௌனவிரதமிருந்தன.....தனிமையில் அந்த
நினைவுகளில் குளித்து எழுவதில்தான் எத்தனை ஆனந்தம். அலட்டல் என்ற பட்டம் மாறி
அவனிப்போ மௌனியாக இ என் மனசைக்கரைத்த கள்வன் அவன்இ என் காதல் தீபம் இ என்
கனவுகளின் இராசகுமாரன் இ அந்த விழிகள் காணாமல் என் விழிகள் அழுதநாளும் இ
அந்தப்புன்னகை படாமல் என் நந்தவனம் கருகிய நாளும் அவன் சுவாசம் நுகராமல் என் சுவாசம்
துடிக்க மறந்த கணங்களும் இ அவன் பெயரை என் உள்ளங்கைகள் பேனா மை தொட்டு வர்ணம்
தீட்டிய நாட்களுமாக அந்த நினைவுகள் என்னில் உயிர் தந்த கணங்கள்.
அந்த விழிகளின் வழியே ஊற்றெடுத்துப் பாயும் ஒவ்வொரு பார்வையும் இதயத்தை ரம்மியம்
மிகுந்த இனிய பொழுதுகளால் வருடிச்செல்லும் இனிய வருடல்கள். அந்தக் கரிய கேசம் கலையும்
ஒவ்வொரு கணமும் என்னையும் அசைத்து அதிர வைக்கும். அந்த உதட்டின் மேல் பூத்திருக்கும்
அந்தக்கரிய பூந்தோப்பில் விழிகள் விழுந்து எழமுன்னம் அந்த இதழ்கள் சிதறும்
பூமழையில் நனைந்துவிடும் என்னிதயம். பின் மீண்டெழுந்து வர நிமிடங்கள் கரைந்து விடும்.
அந்த அழகினைச் சுமந்து போகும் உந்துருளியின் பின் தொடரும் என் விழிகள்.....என்
விழிகள் அவன் வழியில் விழுந்து கிடப்பதை அவன் வரவில் மீண்டும் துளிர்த்து எழுவதை
அவனறியான். ஆனால் அவன் விழிகள் பேசிச்செல்லும் வார்த்தைகள் உயிர் தந்து என்னை
உயிர்ப்பித்து....காதல் என்னைக் கரைத்து அவனில் என்னை அணிந்து விட்டுப்
போய்விட்டது.
அன்று வகுப்பு நண்பி தர்சினியின் பூப்புனித நீராட்டுவிழா. அவளது அழைப்பின் பேரில்
நானும் செல்வாவும் தர்சினி வீட்டுக்குப் போயிருந்தோம். பந்தலில்
வடிவமைக்கப்பட்டிருந்த மணவறையில் தர்சினி நின்றிருந்தாள். எங்களை அவளது பார்வை
வரவேற்று மகிழ்ந்தது.
கமராவுடன் நின்ற அந்த விழியோடு என் விழிகள் மோதிக்கொள்கிறது. கனவா என அதிர்ந்து
மீண்டும் விழிகளை எறிகிறேன் அந்தத்திசை நோக்கி. ஆம் சந்தேகமேயில்லை அது
அவன்தான். என் நந்தவனத்தில் தன் பார்வைப் பூக்களை அள்ளியெறிந்து என் நாட்களை
நந்தவனமாக்கியவன். நீண்ட சில காலங்களாக அமைதியாய்க் கிடந்த என் உதடுகளுக்கு அழகிய
வார்த்தைகளை வரம் தந்து போனது. நானும் அவனும் நிறையப்பேசும் வாய்ப்பை தர்சி
ஏற்படுத்தித் தந்திருந்தாள்.
தர்சியை எப்பிடித் தெரியும் ?
அப்பான்ரை அக்காதான் தர்சியின்ரை அம்மா.
ஓ....தர்சியப்ப உங்களுக்கு மச்சாள்.
ம்....அந்தா அதான் என்ர அம்மா இ இந்தா இந்த வரிசையிலை இருக்கிறவதான் என்ரை
அக்கா.
அப்பா எங்கை ?
அவர் இறந்திட்டார்.
நான்தான் அம்மாக்குச் செல்லப்பிள்ளை இ அக்காவுக்கு ஆசைத்தம்பி.
அவன்தன்னைப்பற்றியும் இ தன்குடும்பத்தையும் பற்றிச் சொன்னான். அவனைப்பற்றி
அறிந்ததில் அலாதி மகிழ்வு.
அது நாங்கள் விடைபெறும் நிமிடங்கள். விழிகளுக்குள் இன்னும் நிறையவிடயங்கள் நிறைந்து
கிடந்ததை அந்தப்பார்வைகள் சொல்லிக்கொண்டிருந்தன.
அடுத்த கிழமையிலையிருந்து பள்ளிக்கூடத்துக்கு நான் வரமாட்டன்.
ஏன் ?
அடுத்தமாதம் சோதினை வருகுது அதாலை வீட்டிலை பெடியள் சேந்து படிக்கப்போறம்.
இந்த விலாசத்துக்குக் கடிதம் போட்டா எனக்குக் கிடைக்கும். எந்த விலாசத்துக்கு நான்
கடிதம் போட வேணுமெண்ட விலாசத்தை நீங்க தந்தா நான் பதில் போடுவன்.
செல்வான்ரை வீட்டுக்குப் பதில் போடுங்கோ எனக்குக் கிடைக்கும்.
விலாசங்களை ஏந்திக்கொண்டு விரல்கள் நர்த்தனமிட்டுக்கொண்டிருக்க விடைபெறும் நேரம்
ஓடிவந்து மணிக்கூட்டில் தங்கியது.
நல்லபடியா சோதினை பாஸ்பண்ண என்ர வாழ்த்துக்கள்.
புன்னகையோடு எனது வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டுப்போனான். அதுவரை எங்களைக்
கவனித்த செல்வா முணுமுணுக்கத் தொடங்கினாள்.
தர்சியின்ரை அப்பா அவனை தர்சிக்கெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறார். அவன்ரை
அம்மாவும் அப்பிடித்தான் நினைச்சுக்கொண்டிருக்கிறா. இதுக்கை நீ நிக்கிறது சரியில்லை.
பிறகு பிரிஞ்சு அழுகிறதைவிட இப்பவே தொடர்பை அறுக்கிறது நல்லதெண்டு நினைக்கிறேன்.
செல்வாவின் வார்த்தைகள் ஆயிரம் சாட்டைகள் ஒன்றானதாய் வந்து விழுந்து என்
இதயக்கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுளைந்து கொண்டன. செல்வாவின் ஒவ்வொரு
சொற்களிலிருந்தும் புதிதாய் ஒரு புயல் மையங்கொள்ளத் தொடங்கியது.
அமைதியாய் இனிய கனவுகளில் மிதந்த மனம் ஆழ்கடலின் சுழியில் அகப்பட்டுத் துடித்தது.
ஆனால் அவனை இழந்துவிடத்தயாராயில்லாத மனம் வரும் தடைகளையெல்லாம் உடைத்து விடும்
துணிவைப்பெற்றதாய் நிமிர்ந்து கொண்டது. அந்த நிமிர்வோடு அவனிடமிருந்து வந்த
முதல்கடிதத்துக்குப் பதிலெழுதினேன். புதிதான ஒரு உலகின் சஞ்சாரத்தில் நமது கடிதங்கள்
நம்மை நகர்த்திக் கொண்டிருந்தது. நாங்கள் கடிதங்களில் இ நமது கையெழுத்துக்களில்
நம்மைத் தொலைத்துக் கொண்டோம்.
காதலின் மென்கரங்களின் தாலாட்டில் நாங்கள் தொலைந்து போனோம். அந்த உலகு எங்களைத்
தன்னோடு சேர்த்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த அந்த நாள் வராமலே இருந்திருக்கலாம்.
என்னடி தங்கைச்சி உவன் தம்பிக்குக் கடிதங்கள் வருகுது ?
ஆரும் பெடியள் போடுவங்களம்மா.
இல்லைப்பிள்ளை உவர் எங்கெயோ விழுந்திட்டார் போலைகிடக்கு.
நீங்களம்மா உங்கடை காலத்திலை நிக்கிறியள். சும்மாயிருங்கோ அவனப்பிடியொண்டும்
செய்யமாட்டான்.
இந்தா பார்பிள்ளை இந்தக்கடிதத்தை....!
என் கையெழுத்துக்களைக் கண்ட அவன் அக்கா திகைத்துப் போனாள்.
அவன் தனக்கு விரும்பினமாதிரிச் செய்யட்டுமனம்மா....
ஓ.....ஓ......ஓ.....நீயுமவருக்கு உதவியே.....
அம்மாவுக்கும் அக்காவுக்குமிடையிலான இந்தச் சலசலப்பில் அவனும் சிக்கிக்கொண்ட போது
அங்கு பூகம்பமே வெடித்தாற்போல அவனுள்ளிருந்த எரிமலை வெளிக்கிழம்பி அம்மாவின் மீது
சீற.....அம்மா ருத்திரதாண்டவமாடியதன் விளைவு அவனையும் வாய்நீட்டிப்பேச வைத்துவிட்டது.
ஒரு பிள்ளையெண்டு செல்லம் தந்து வளத்தனான். எனக்கே துரோகமேடா தம்பி.
இல்லை இதிலை மட்டும் தலையிடாதைங்கோம்மா......
ஓமோம் நீர் பெரிய மனிசன்தானே நீர் நினைச்சமாதிரி நடக்க பாப்பமொருக்கா நீயோ
நானோண்டு.....
அம்மாவுக்கும் மகனுக்குமிடையிலான தர்க்கம் நீண்டு அவன் அம்மா எட்டுமைல் தள்ளியிருந்த
என்னுருக்குப் பேரூந்தேறி வந்திறங்கிறங்கினார்.
தர்சியும் தர்சியின் அப்பாவும் என் வீட்டு வாசலில் வந்து நின்று என்னை அழைத்தார்கள்.
அவர்களுடன் அவனது அம்மாவும் நின்றிருந்தா.
வா தர்சி இ வாங்கோ மாமா....
இஞ்சை விருந்துக்கு நாங்க வரேல்ல நீரோ அந்த அழகி.....?
அவன் அம்மா விழித்த விழிப்பு உள்வீட்டிலிருந்த என் அக்காமாரையும் இ அம்மா இ
அப்பாவையும் வெளியே அழைத்தது. அயல் வீடுகளின் வேலிகளுக்கால் பலதலைகள் முளைத்து
விடுப்புப்பார்த்துக் கொள்ள அவன் அம்மாவின் வாயிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு
வார்த்தைக்குள்ளிருந்தும் 100வாற்ஸ் தணலிருந்தது. அத்தனை மோசமான வார்த்தைகள் என்னை
வதம் செய்து கொண்டன. தர்சி வாயடைத்து நிற்க அவள் அப்பா என்னைத் தங்கள் குடும்பத்தை
நிம்மதியாக விடு எனக் கேட்டுக்கொண்டார்.
இனிமேல் அவனுக்குக் கடிதம் போடுறது. சந்திக்கிறதெண்டு நான் கேள்விப்படக்குடாது.
பிள்ளைக்கு நல்ல புத்தியைச் சொல்லித் திருத்துங்கோ.
சொல்லிவிட்டு அவனது அம்மா என் வீட்டுப்படலையைத் தாண்டிவிட அக்காமார் இ அம்மா இ
அப்பா எல்லோருமே என்னில் நெருப்பாகின்றனர்.
உனக்குக்காதல் கேக்குதே காதல்....ம்....அடி செருப்பாலை....அப்பாவின் கைகள்
கன்னங்களைத் தாக்கியது. அம்மாவின் வார்த்தைகள் அணுக்குண்டைவிட
மேலானதாய்....அக்காமாரின் பார்வைகள் அவர்கள் செய்யாத தவறொன்றை நான் செய்து
விட்டதாய் என்னை எரித்தது. சின்னக்காவின் காதலுக்கு நெருப்பெடுத்த அப்பா பின்னர்
அமைதியாகி அவள் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியவர் என்னில் வீரபத்திர அவதாரமெடுத்து
என்னை எதிர்த்தார் இ ஏசினார் இ திட்டினார் இ செத்துவிடு என்றுகூடத் திட்டினார்.
அவன் அம்மாவின் வார்த்தைகளில் பொசுங்கிக்கிடந்த என் ஆத்மாவை
வீட்டிலுள்ளோரெல்லாம் ஆளுக்கொரு அவதாரங்களாய் மாறி வதைசெய்ய நான்
தனியாய்.....அழுதழுது சிவந்த விழிகளும் இ அடிவாங்கித் தடித்த உடலுமாக அவனை மறந்துவிட
முடியாமல் தினம்தினம் செத்தபடி.....
விழியோடு மொழிசொன்ன அவன் விழிகள் என் கடிதங்கள் காணாமல் ஏமாந்ததை செல்வாவிற்கு
அவன் எழுதிய கடிதத்தை செல்வா என்னிடம் தந்தாள்.
முன்னுக்கே நான் சொன்னான் ஆனா நீ கேக்கேல்ல.....இந்தக் கடிதத்தோடை இனி
அந்தத்தொடர்பை நிப்பாட்டு.... இதுவும் ஒரு அனுபவமெண்டு மறந்திடு....
செல்வா அப்போதும் அவனை மறந்துவிடு என்றே சொன்னாள். அவளுக்கு என் மௌனம் விடையானது.
என் நினைவுகளை விட்டு அவன் தொலையாமல் என்னுடனேயே ஒட்டியிருந்தான். குண்டு வீச்சுக்கள்
இ இடப்பெயர்வுகள் தொடராய் நாங்களும் ஊர் விட்டு அடுத்த ஊர்போய் சிலமாதங்கள்
கழிந்தது.
அந்த மாதங்கள் கழிந்து ஒரு நாள் மதியம் எதிர்பாராத அந்தச்சந்திப்பு. சுட்டெரித்துக்
கொண்டிருந்த மாசிவெயிலில் அவன் வந்துகொண்டிருந்தான். என்னைத்தாண்டிப் போனவன் என்
அருகே திரும்பி வந்தான். அவனை அடையாளம் கண்டுகொண்டது என் புலன்கள். சின்னதாய்
தாடிவளர்த்திருந்தான். அந்தக்காந்தக் கண்களில் இன்னும் அதே வசீகரம் ஒட்டியிருந்தது.
அன்று மாலை தன்னூர்க்கோவிலில் சப்பறத்திருவிழா எனவும் அங்கு என்னையும் வரும்படியும்
சொல்லிவிட்டுப் போனான்.
செல்வா இண்டைக்கு மட்டும் வாடி....இனிமே உன்னைக் கேக்கமாட்டன்.
அவனைச்சந்திக்கப் போவதற்கு வரமறுத்த செல்வாவைக்கெஞ்சி என்னோடு வரச்சம்மதிக்க
வைத்து வீட்டிலும் செல்வாவுடன் கோவிலுக்குப் போவதாக அனுமதி வாங்கி மாலை கோவிலுக்குப்
போய்விட்டோம். மதியம் சொன்னபடி அவன் வந்திருந்தான். சின்னதாய் முகத்தில்
குடியிருந்த தாடியைவழித்து அழகாயிருந்தான். ஏதோ ஒரு புத்துணர்வு அவனில் இருந்தது.
சனநெரிசலிலிருந்து விலகி என்னிடம் வந்தான்.
எங்கடை பிள்ளையார் வீதிக்கு வாங்கோ கனக்கக்கதைக்க வேணும்.
செல்வாவைக் காவலுக்கு நிறுத்திவிட்டு அவனது உந்துருளியின் பின் என் உந்துருளி
போய்க்கொண்டிருந்தது. அது மைம்மல்ப்பொழுதாகையால் ஒருவரது முகம் ஒருவருக்கு அடையாளம்
தெரியாதிருந்தது. பிள்ளையார் மேற்கு வீதியில் அவனது உந்துருளி நின்றது. இருவரது
உந்துருளியும் அருகருகே நிற்க சற்று நேர அமைதியின் பின் அவன்தான்
கதையைத்தொடக்கினான்.
அம்மா உங்கடை வீட்டை வந்து சத்தம் போட்டது எனக்குத் தெரியாது. தர்சி சொன்னவள்.
அம்மா அப்பிடித்திட்டினதுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். ஆனா நான் மாறேல்ல.
என்னாலை மாறவுமேலாது. நீங்களும் மாறமாட்டீங்களெண்டு நம்பிறன். எங்கையிருந்தாலும்
உங்களை மறக்கமாட்டன். அம்மாவை எப்பிடியும் மாத்துவன். அதுமட்டுக்கும் காத்திருங்கோ.
தனது நிலைப்பாட்டினை அவன் விளக்கி என் பதிலுக்காகக் காத்திருந்தான்.
அவனை இழந்துவிட நானும் தயாரில்லை என்பதை அவனுக்கு விளக்கியபின் விடைபெற்றுக்
கொண்டேன். ஊர் எல்லைவரை வந்து வழியனுப்பிவிட்டுப் போனான். அதுதான்
கடைசிச்சந்திப்பு என எந்த அசரீரியும் கேட்கவில்லை. ஆனால் அந்தச்சந்திப்பின் பின்
நாம் சந்திக்கவேயில்லை. இருவரும் இருவழியில்.....
இறுதிவரை பிரியோம் என்றும் இணைந்திருப்போம். காலம் நமக்கானதொரு சந்திப்பை
மீண்டும் நிச்சயம் ஏற்படுத்தித் தரும். அதுவரை நாங்கள் தனிவழியே போனாலும்
நினைவுகளில் நிறைந்திருப்போம். நாங்கள் தனித்திருப்போம். மீண்டும் ஒருநாள் நாம்
சந்திப்போம். அவனது கடைசிக்கடிதம் இன்றும் இனிக்கிறது.
அவன்.....? நான்......?
காலம் தேய்ந்து தேய்ந்து அமைதியாய்க் கரைந்து எங்கள் காதலையும் கரைத்து......
இனிதான நினைவுகளின் வாசம் இன்றும் இனிக்கிறது.....
<b>நன்றி - தமிழமுதம்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Quote:இறுதிவரை பிரியோம் என்றும் இணைந்திருப்போம். காலம் நமக்கானதொரு சந்திப்பை
மீண்டும் நிச்சயம் ஏற்படுத்தித் தரும். அதுவரை நாங்கள் தனிவழியே போனாலும்
நினைவுகளில் நிறைந்திருப்போம். நாங்கள் தனித்திருப்போம். மீண்டும் ஒருநாள் நாம்
சந்திப்போம். அவனது கடைசிக்கடிதம் இன்றும் இனிக்கிறது.
அவன்.....? நான்......?
காலம் தேய்ந்து தேய்ந்து அமைதியாய்க் கரைந்து எங்கள் காதலையும் கரைத்து......
இனிதான நினைவுகளின் வாசம் இன்றும் இனிக்கிறது.....
காதலை காலம் கரைத்துவிட்டதா? இன்றுவரை சந்திக்கவில்லையா <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>