Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் பலவாறு நகர்த்தப்படுகின்றது.நேற்றைய பகையாளிகள் நண்பர்களாகவும் நண்பர்கள் பகையாளிகளாகவும் உருவமெடுத்திருக்கிறார்கள்.
இதுவரை தமிழகத்தில் ஆட்சியிலில்லாத கட்சிதான் மத்தியில் அதிக பலத்தோடு நாடாளுமன்றம் செல்வது...அப்படிப்பார்த்தால் திமுகதான் வரவேண்டும்.திமுக பெரும்பலத்தோடு எழுந்தால் சோனியாகாந்தியும் பலப்படுவார்.
சோனியா காந்தி அயல்நாட்டு கொள்கையில் எப்படி செயல்படுவார்?..சாதகமாயினும் பாதகமாயினும் சர்வதேச அரசியல் மயமாக்கல் எமது பக்க பலமாக தற்சமயம் இருப்பதால் இந்தியாவில் யார் பிரதமராக வந்தாலும் பெரிதாக ஒன்றையும்
திணித்துவிடமுடியாது.
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்தும் விலகிவந்ததற்காக தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தொலைபேசியின் மூலம் வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் - தி.மு.க ஆகிய இருகட்சிகளிடையே வருகிற நாடாளுமன்றதேர்தலுக்கான புதிய உறவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புள்ளி வைத்தார் என்றால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தங்கள் கூட்டணிக்கான வியூகத்தை தொடங்கி வைத்தார் துணைப்பிரதமரும் பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கிய தலைவருமான அத்வானி.
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முன்கூட்டியே நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு பல அரசியல்கட்சிகளிடையே நிலவுவதும், துணைப்பிரதமர் அத்வானியின் தேர்தலை முன்கூட்டியே நடத்தவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்கிற பேச்சுமே கட்சிகள் தங்கள் அணிகளை அமைத்துக்கொள்வதற்கு காய்களை நகர்த்த தொடங்கிவிட்டன என்பதே அறிகுறியாக தெரிகிறது.
ஜெயலலிதாவிற்கு முன்பே தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டணிக்கான வியூகத்தை அமைக்க அடியெடுத்து வைத்துவிட்டார். தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற கட்சிகள் எல்லாவற்றையும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்து விலகிவந்தவுடன் தங்கள் வழியிலேயே பா.ம.க., ம.தி.மு.க ஆகிய இருகட்சிகளும் பின்பற்றும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த தி.மு.க.விற்கு பா.ம.க.வின் ' நாங்கள் பிரதமர் பக்கம்' என்கிற கொள்கை சற்று ஏமாற்றத்தை தந்தது என்றாலும் ம.தி.மு.க இவர்கள் பின் வழிநடக்க அடியெடுத்து வைத்ததில் சற்று தெம்பாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., காங்கிரஸ் ஜனநாயக பேரவை மற்றும் பல சிறுசிறு கட்சிகளை மதசார்ப்பற்ற கூட்டணி, மக்கள் நலகூட்டணி என்கிற குடையின் கீழ் ஒன்று சேர்த்து ஆளும் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கில் தி.மு.க. செயல்பட துவங்கியுள்ளது.
தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெகுவிரைவில் அதிகாரப்பூர்வமாக துவங்க உள்ளது. தி.மு.க.வுடன் பேசுவதற்காக சோனியாகாந்தி கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை தூதராக நியமித்துள்ளதாக தில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த வார இறுதியில் கர்நாடக முதல்வர், தி.மு.க. தலைவர் சந்திப்பு சென்னையில் நிகழக்கூடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையேற்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். தி.மு.க.வும் காங்கிரஸ¤ம் அமைத்துள்ள கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறிய ராதாகிருஷ்ணன் அக்கூட்டணியை தோற்கடிக்கும்விதத்தில் பாரதிய ஜனதா வியூகங்கள் அமைக்கும் என்று கூறியுள்ளது முக்கியமானது ஆகும்.
தமிழகத்தில் தி.மு.க தலைமையில் ஓர் அணியும், அ.தி.மு.க.ஓர் அணியும் உருவாகக்கூடிய சூழல் அதிகம் நிலவுகிறது என்றே தோன்றுகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்சி நேர்காணல் முடிவுக்கு பின்பு அதிகாரப்பூர்வமான கூட்டணிகள் வெளிவரும் என்றே தோன்றுகிறது. அதிமுக கூட்டணியில் பா.ம.க.வும் இடம்பெறும் என்றே தெரிகிறது.
தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்காக காங்கிரஸ் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விடுதலைபுலிகளை ஆதரிக்கும் ம.தி.மு.க.வுடனும், தி.மு.க.வுடனும் கூட்டுசேர முடிவெடுப்பதும், ஜெயலலிதாவால் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததை மறந்து அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டுசேர முனைவதும் இன்றைய அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது! நிரந்தர பகைவனும் கிடையாது! என்கிற அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளையே சுட்டிக்காட்டுகிறது.
கடந்த கால சம்பவங்கள், பேச்சுகள், நிகழ்வுகளைப் பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும் எந்தவொரு கட்சியோடும் கூட்டுச்சேர முடியாது. தத்துவார்த்த அடிப்படையில் கூட்டணிகள் அமைவதில்லை. அரசியல் நிர்பந்தம் காரணமாகவே கூட்டுச் சேர்கிறோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
கொள்கைகள் அடிப்படையில் கூட்டணிகள் உருவாகிய நிலை மாறி ஆட்சிஅதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாகும் சந்தர்ப்பவாத கூட்டணிகள் எந்தவிதத்தில் மக்கள் நல அரசாக செயல்படும் என்பதே இன்றைய சாமான்யர்களின் விடைதெரியா கேள்வி!
நன்றி: ஆறாம்திணை
[i][b]
!