11-05-2004, 06:59 PM
<img src='http://www.kumudam.com/reporter/071104/pg1-t.jpg' border='0' alt='user posted image'>
ரிப்போர்ட்டர் டீம்
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக மாநில அதிரடிப்படைகளுக்கு ஒரு பெருத்த தலைவலியாக இருந்துவந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அத்தியாயம் கடந்த 18_ந் தேதியன்று முடிவுக்கு வந்தது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படையின் தந்திரவலையில் வகையாகச் சிக்கிக்கொண்ட வீரப்பனை அவனது கூட்டாளிகளுடன் அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர் என்றும், அதிரடிப்படையினருடன் வீரப்பன் தரப்பினர் நடத்திய மோதலின்போது, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அதிரடிப்படையின் தலைவர் விஜயகுமார் தெரிவித்திருந்தார். ஆனால், ‘வீரப்பனும் அவனது சகாக்களும் கொல்லப்பட்டது பாப்பாரப்பட்டி அருகே நடந்த மோதலில் அல்ல’ என்று இப்போது பரவலாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.
<img src='http://www.kumudam.com/reporter/071104/pg1.jpg' border='0' alt='user posted image'>
இந்த மோதலைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிய தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஒரு குழுவினை ஏற்படுத்தின. வீரப்பனின் மரணம் குறித்த பலவகையான சந்தேகங்களை, உண்மைகளை அறிய ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் குழுவினரிடம் பலரும் எழுப்பினர். அவை... வீரப்பன் வந்ததாகக் கூறப்படும் ஆம்புலன்ஸ், அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலினால் 250_க்கும் மேற்பட்ட புல்லட்டுகளால் துளைக்கப்பட்டுக் காணப்பட்டது. ஆனால், அந்த வேன் நின்ற இடத்தில் சிறிதும் ரத்தம் காணப்படவில்லை. வேனில் பாய்ந்த குண்டுகளின் சிதறல்கள், உள்ளே இருந்ததாகக் கூறப்படும் நால்வரின் உடலில் பாய்ந்திருந்தால் கூட, அவர்கள் அனைவரின் உடலும் சல்லடையாகத் துளைக்கப்பட்டிருக்கும். சாதாரணமாக ஒரு உடலைத் துப்பாக்கிக் குண்டு துளைத்திருந்தாலே அதிக அளவில் ரத்தம் வெளியேறும். இந்தச் சம்பவத்தில் இறந்ததோ நால்வர். அப்படியிருக்க... கட்டுக்கடங்காத அளவுக்கல்லவா ரத்தம் வெளியேறியிருக்கும்?
நூற்றுக்கணக்கான குண்டுகள் ஆம்புலன்ஸ் வேனைத் துளைத்திருந்த போதிலும், வீரப்பனின் இடது பக்க நெற்றியில் ஒற்றைக் குண்டு மட்டுமா பாய்ந்திருக்கும்? வீரப்பன் தவிர, மற்றவர்களுக்குக் குண்டு பாய்ந்ததா இல்லையா, என்ற விவரம்கூட அறிவிக்கப்படவில்லையே, அது ஏன்?
இப்படிப்பட்ட பல சந்தேகங்களை மனதில் கொண்டு, இந்தக் குழு தனது விசாரணையை ஆரம்பித்தது. மோதல் நடந்ததாகக் கூறப்படும் பாப்பாரப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான பென்னாகரம், மேட்டூர், கொளத்தூர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாம் போன்ற இடங்களுக்கு மூன்று குழுக்களாகப் பிரிந்து சென்ற இந்தக் குழுவினர், பொது மக்கள், அரசு அலுவலர்கள், இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைத் திரட்டினர். அதிரடிப்படைத் தரப்பிலிருந்து தங்களுக்குச் சரியான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்று கூறிய உண்மை அறியும் குழுவினர், கடந்த 27_ம் தேதியன்று சேலத்தில் பத்திரிகையாளர்களைக் கூட்டி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில், ‘‘மோதல் நிகழ்வு பற்றிப் பதில் தர வேண்டிய அதிகாரிகள், அதிரடிப்படையின் கண்டிப்பான நிர்ப்பந்தம் காரணமாக எங்களுடன் பேச மறுத்து மவுனம் சாதித்தனர். பிரேதப் பரிசோதனைகளை தேசிய மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியதைப்போல வீடியோப் படம் எடுக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களைப் பார்வையிட அவர்களது உறவினர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. இறந்தவர்களின் உடலின் காயங்களை மறைக்கும் முயற்சியாக இது இருக்கக் கூடும். வீரப்பனின் சடலம் தவிர, மற்ற மூவரின் உடல்களும் போலீஸாரின் வற்புறுத்தல் காரணமாக எரிக்கப்பட்டு விட்டன. உடலை எரிப்பதன் மூலம் மூவரின் உடலிலும் சித்திரவதையால் ஏற்பட்ட தடயங்களை அழிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் பாப்பாரப்பட்டி அருகே நடந்த மோதலில் கொல்லப்பட்டதாகக் கருதமுடியவில்லை. அதிரடிப்படையினருடன் வீரப்பன் தரப்பினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. உண்மையில் துப்பாக்கியால் சுட்டது ஒரு தரப்பினரே. அப்படிச் சுட்டவர்களும் அதிரடிப்படையினரே!’’ என்று தங்களது இடைக்கால அறிக்கையின் முடிவாக அந்தக் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.
உண்மை அறியும் குழுவின் இந்த இடைக்கால அறிக்கையால், தற்போது பெரும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இந்தப் பரபரப்பையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக அதன் இறுதி அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. புயலைக் கிளப்பப்போகும் அந்த இறுதி அறிக்கையில், வீரப்பன் கொல்லப்பட்டது பற்றிய உறைய வைக்கும் உண்மைகள் பல வெளியாகப் போகின்றன. அதை மனதில் வைத்தே தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ‘‘காட்டில் நடந்த காட்சிகளையெல்லாம் விளக்கிட முன்வராமல், இருப்பவர்களை உசுப்பிவிடும் விதமாக ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கிறார். இது அவருக்கு நல்லதல்ல. அவரிடம் பரிசும், பாராட்டும் பெற்றுத் தோள் தட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்லதல்ல. அந்த விஷயங்களைக் கிளறுகிற நிலைமையை உருவாக்கிடாமல் இருப்பதே முதலமைச்சருக்கும் அவரது தளபதிகளுக்கும் நல்லது’’ என்று மறைமுகமாக எச்சரிப்பதைப் போன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுச் சூடேற்றியுள்ளார்.
உண்மை அறியும் குழுவினர் சென்ற இடங்களுக்கு நாமும் மின்னலெனப் பயணத்தை மேற்கொண்டோம். குழுவின் முன்பாகத் தங்களது கருத்துக்களைக் கூறியவர்களை நாமும் சந்தித்து செய்திகளைத் திரட்டினோம். அந்தச் செய்திகள் மர்ம நாவலைக் காட்டிலும் நம்ப முடியாத பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தன. நாம் சந்தித்தவர்கள் பத்திரிகையில் தங்களைப் பற்றிய எந்தத் தகவலையும் வெளியிட்டு விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் தயங்கித் தயங்கிப் பேசினார்கள். நடந்தது இதுதான் என, அவர்கள் கூறுவது இதைத்தான்...
கடந்த அக்டோபர் மாதம் 18_ந் தேதி தர்மபுரி பாப்பாரப்பட்டி அருகே நடந்த மோதலில் வீரப்பனும் அவனது குழுவினரும் கொல்லப்படவில்லை. உண்மையில் அதற்குச் சில நாட்களுக்கு முன்னரே அதாவது 15_ம் தேதி வாக்கிலேயே வீரப்பனைப் பிடித்துவிட்டிருக்கின்றனர். பாலாற்றங்கரையை அடுத்துள்ள பகுதிதான் சிங்காபுரம். அது வீரப்பனின் மாமனார் ஊர். அங்குதான் வீரப்பன் பிடிபட்டிருக்கிறான். வீரப்பன் கதை முடிவின் மர்மமுடிச்சே சிங்காபுரம்தான் என்கின்றனர் நம்மிடம் பேசிய மக்கள். வீரப்பனைப் பிடித்துத் தரச்சொல்லி அதிரடிப்படையினர் வீரப்பனின் தங்கை முனியம்மாவுக்கு ஒரு பெருந்தொகையைத் தர முன்வந்ததாகவும் ஆனால், அதற்கு தான் ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம், முனியம்மாளே கூறியிருந்திருக்கிறார். அதேபோல வீரப்பனுக்கு உணவில் விஷ மருந்தைக் கலந்து அதிரடிப்படையிடம் பிடித்துக் கொடுத்ததே முத்துலட்சுமியின் சொந்த அண்ணன் செங்கோடனின் மனைவி என்றும், சிலர் முத்துலட்சுமியிடம் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மிகவும் சிறிய கிராமமான சிங்காபுரத்தில் மொத்தமே பதினைந்திலிருந்து இருபது வீடுகள் மட்டுமே உள்ளன என்று கூறும் அவர்கள், அங்கே இரு வீடுகளுக்கிடையே குறைந்தபட்சம் இடைவெளி ஒரு கிலோ மீட்டராவது இருக்கும் என்றும் கூறுகின்றனர். வீரப்பன் முன்பு நடமாடிய பகுதி அது என்பதால் பாலாற்றங்கரைப் பகுதியில் அதிரடிப்படையின் முகாம் ஒன்று வீரப்பனின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதனால் அண்மைக் காலமாக அந்தப் பகுதியில் வீரப்பன் அங்கு வருவதையே தவிர்த்து விட்டிருக்கிறான். நல்லூர் பிலேந்திரன் போன்று தனக்கு மிக நெருங்கிய நம்பிக்கைக்கு உரிய ஒரு சிலரின் வீட்டுக்கு மட்டுமே சென்று உரிமையாகச் சாப்பிட்டு வருவானாம் வீரப்பன். அதிரடிப்படையால் பிடிக்கப்பட்ட பிலேந்திரன், தற்போது சிறையில் இருக்கிறார்.
தன் நம்பிக்கைக்குரிய ஆட்களெல்லாம் சிறையில் இருந்த நிலைமையில், வீரப்பனுக்கு ஆள் பலத்தைப் பெருக்கியாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சிங்காபுரத்தில் உள்ள தனது நெருங்கிய உறவினர்களை எப்படியேனும் சந்தித்து, தன்னுடைய ஆள் பலத்தைப் பெருக்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்து வந்திருக்கிறான் வீரப்பன். இதை அரசல்புரசலாக அறிந்த அதிரடிப்படையினர், வீரப்பன் அங்கே வருவதற்கு வாய்ப்பைத் தருவதைப்போல முகாமின் கெடுபிடியான கண்காணிப்புகளை, சிங்காபுரத்திலிருந்து விலக்கிக் கொண்டதைப் போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
அதிரடிப்படையின் கண்காணிப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது என்ற தகவலை வீரப்பனின் உறவினர்கள் தெரிவிக்க, சிங்காபுரத்துக்கு வர வீரப்பனும் எத்தனித்திருக்கிறான். இந்த சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த அதிரடிப்படை, வீரப்பனின் உறவினர்களுக்குக் கடுமையான பிரஷர்களைத் தந்து, அவர்களைத் தங்களுடைய திட்டத்துக்கு ஒத்துழைக்க வைத்திருக்கிறது. சிங்காபுரத்திலுள்ள தனது மிக நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சகாக்களுடன் வந்திருக்கிறான் வீரப்பன். அப்போது அவனுக்காக விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது. தனக்கு அம்மை போட்டிருக்கிறது என்பதால் விருந்து வேண்டாமென மறுத்த வீரப்பன், சிம்பிளாக தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டிருக்கிறான். அந்தச் சாப்பாட்டில் கலக்கப்பட்ட மருந்து கச்சிதமாக வேலை செய்ய, சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறான் வீரப்பன். அதே நேரத்தில் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோரை மடக்கிப் பிடித்த அதிரடிப்படை, அவர்களைச் சித்திரவதை செய்து அவர்களிடமிருந்து பல உண்மைகளைக் கறந்திருக்கிறது.
தொடர்ந்து மயக்கமாகவே இருந்த வீரப்பனிடமிருந்து எந்தத் தகவலையும் உருப்படியாகப் பெற முடியாத நிலைமையில், அவர்கள் நால்வரையும் உயிருடன் விட்டு வைக்க விரும்பாத அதிரடிப்படை, கடந்த 18_ம் தேதியை அவர்கள் கதையை முடிக்கும் நாளாகக் குறித்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த நாளில், சிங்காபுரத்தை ஒட்டிச் செல்லும் ஆற்றுப்பகுதியின் கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், வழக்கத்துக்கு மாறாக மாலை நான்கு மணிக்கே அந்தப் பகுதியிலிருந்து கெடுபிடியாக விரட்டப்பட்டிருக்கின்றனர். அதேநாளில் ஆற்றைக் கடக்க பரிசல் ஒன்றையும் 3000 ரூபாய் தந்து அதிரடிப்படையினர் வாங்கியிருக்கிறார்கள். அந்தப் பரிசலில் வீரப்பன் மற்றும் அவனது சகாக்களும் தூக்கி வரப்பட்டிருக்கின்றனர். இதை அந்த மீனவர்கள் உண்மை அறியும் குழுவிடம் சொல்லியிருக்கிறார்கள்.
பரிசலிலிருந்து குற்றுயிராகவோ (அ) பிணமாகவோ ஆற்றங்கரையில் இறக்கப்பட்ட நால்வரையும், அங்கே தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸ் வண்டி ஏற்றிக்கொண்டு கிளம்பியிருக்கிறது. பாப்பாரப்பட்டி அருகே வீரப்பன் தனது குழுவினருடன் வந்து பிடிபட்டதாகக் கூறப்பட்ட, அந்த ஆம்புலன்ஸ் வண்டியே இது என்றும், அதில் யார் இருந்தார்கள் என்பதைத் தாங்கள் கவனிக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கொளத்தூர் செக் போஸ்ட் பகுதியைக் கடந்து, பாலாற்றங்கரையை நோக்கி 18_ம் தேதி மாலை 5.30 மணியளவில் ஆம்புலன்ஸ் சென்றதாகவும், பின்னர் 8.30 மணிக்கு அதே ஆம்புலன்ஸ் வண்டி திரும்பி வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். போகும்போது தனியாகச் சென்ற ஆம்புலன்ஸ், திரும்பும்போது முன்னே ஒரு போலீஸ் ஜீப், பின்னே ஒரு போலீஸ் ஜீப் தொடர வந்ததாம். கொளத்தூர் செக்போஸ்டில் உண்மை அறியும் குழுவினர் விசாரித்தபோது, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களின் எண்களைக் குறிப்பது வழக்கம் இல்லை என்ற பதிலே கிடைத்திருக்கிறது. அதன்பின்னர் பாப்பாரப்பட்டிக்குக் கொண்டு வரப்பட்ட அந்த ஆம்புலன்சை நிறுத்தி அதைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்திருக்கின்றனர் அதிரடிப்படையினர். அதன்பின்னர் வீரப்பன் அதிரடிப்படையினருடன் நடத்திய மோதலில் கொல்லப்பட்டான் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீரப்பனும் அவனது சகாக்களும் கொல்லப்பட்டது பற்றி, உண்மை அறியும் குழு இன்னும் சில நாட்களில் வெளியிட்டு பூகம்பத்தைக் கிளப்பப் போகும் உண்மைகள் இவைகளாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது.
உண்மை அறியும் குழுவின் பொதுச் செயலாளரான சேசைய்யா நம்மிடம் பேசும்போது, ‘‘வீரப்பன் விவகாரத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. வீரப்பனின் டைரிகள் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் கூறுகிறார்கள். உண்மையில் அவை வீரப்பனின் டைரிகளே அல்ல. பயங்கர நாசத்தை ஏற்படுத்தவல்ல குண்டுகளைப் போன்றவை அவை. அவற்றில் வேண்டாதவர்களின் பெயரை இடைச்செருகலாகச் செருகி ஆபத்தை விளைவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எங்களுக்குத் தேவையெல்லாம் மத்திய அரசின் பாரபட்சமற்ற விசாரணையே!’’ என்றார். இவர் நக்சலைட்டுகளுக்கும் ஆந்திர அரசுக்குமிடையே மீடியேட்டராகச் செயல்பட்டு வருபவர்.
அந்த உண்மை அறியும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் அரிபாபுவைச் சந்தித்தோம். ‘‘வீரப்பனைக் கொன்றதற்காக உண்மை அறியும் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட நீங்கள், வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஏன் உண்மையை ஆராய முன்வரவில்லை?’’ என்ற கேள்வியை அவர்முன் வைத்தோம்.
‘‘வீரப்பன் செய்த கொலைகளை நாங்கள் ஒருபோதும் நியாயப்படுத்த முன்வரவில்லை. வீரப்பனால் கொல்லப்பட்டவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் மனித உரிமை உண்டு என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. வீரப்பன் செய்த கொலைகளுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதற்கான விசாரணைகள் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களிலே நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சில வழக்குகள் இறுதிக் கட்டத்தையும் எட்டிவிட்டன. முறையாக விசாரணை நடத்தப்பட்டு விசாரிக்கப்படும் அந்த வழக்குகளில் மனித உரிமை அமைப்புகள் தலையிட வேண்டிய தேவை எழவில்லை. ஆனால், வீரப்பன் விவகாரம் அப்படியல்ல.’’
‘‘வீரப்பன் கொல்லப்பட்டிருக்கக்கூடாது என்று நீங்கள் கூறக் காரணம்?’’
‘‘பல நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளை வீரப்பன் மேலும் அவன் கூட்டாளிகள் மேலும் சுமத்தியுள்ள அரசு, அவற்றை விசாரித்து அதன் பின்னணி என்ன என்று கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். உயிருடன் பிடிக்கப்பட்ட வீரப்பனிடமும் அவனது கூட்டாளிகளிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தால் உண்மையில் அவர்களை இயக்கிக் கொண்டிருந்தது யார், வீரப்பனுடன் தொடர்புடையவர்கள் யார்? என்ற உண்மை, மற்றும் வீரப்பனால் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பல கோடிக்கணக்கான பணம் ஆகியவை குறித்து ஆதாரபூர்வமான தகவல்களைப் பெற்று ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், வீரப்பனைப் பேசவிடாமல் கொன்றுவிட்டதன் மூலம் பல திடுக்கிடும் உண்மைகளும் அவனுடனேயே கொல்லப்பட்டுவிட்டன. உண்மைகள் கல்லறைக்குச் செல்லக் காரணமான இந்த அவசர நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.’’
‘‘எண்ணற்ற கொலைகளை ஈவு இரக்கமில்லாமல் செய்த ஒரு கொலைகாரனை வதம் செய்தது தவறில்லைதானே?’’
‘‘அப்படிப் பார்த்தால் ஒன்றரை இலட்சம் குர்திஷ் இன மக்களைக் கொன்றதாக அமெரிக்க அரசால் குற்றம் சாட்டப்பட்டவர்தான் சதாம் உசேன். பதுங்கு குழியில் மறைந்திருந்த சதாம் உசேனை உயிருடன் பிடித்த அமெரிக்க ராணுவத்தினர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கல்லவா உட்படுத்தியுள்ளார்கள். அவர்கள் நினைத்திருந்தால் பதுங்கு குழியிலேயே சதாமின் கதையைச் சடுதியில் முடித்திருக்க முடியுமே! எனவே, மனித உரிமை மீறல் நடைபெற்றிருக்குமேயாயின், அதைக் கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயகக் கடமையுள்ள அரசுக்கு நிச்சயம் உண்டு. வீரப்பனைத் தேடிச் சென்ற அதிரடிப் படையினர் நடத்திய எண்ணற்ற கொலைகளும் கற்பழிப்புகளும் நீதிபதி சதாசிவா கமிஷன் முன்பாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய மனித உரிமை மீறலை மேற்கொண்ட அதிரடிப்படையினர் மேல் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள்தாம் என்ன? வீரப்பனுக்கு ஒரு நீதி. அவனைத் தேடிச் சென்று குற்றங்கள் பல செய்த அதிரடிப்படைக்கு இன்னொரு நீதியா?’’ என்ற அரிபாபு,
‘‘உண்மை அறியும் குழுவின் இறுதிக் கட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் உண்மைகளைக் கொண்டதாக இருக்கும். இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து அந்த அறிக்கையைப் படியுங்கள்!’’ என சஸ்பென்ஸாகக் கூறி முடித்துக் கொண்டார்.


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->