Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிலக்கடலை திருவிழா
#1
தசரா பண்டிகைக்கு அடுத்தபடியாக வெகுவிமர்சையாக கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்படுவது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் "நிலக்கடலை திருவிழா'தான். கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை நடக்கும் இவ்விழா, பெங்களூரின் புறப்பகுதியில் அமைந்துள்ள "பசவங்குடி தொட்ட பசவண்ண' கோவிலில் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் "கடேல்காய் பர்சி' எனும் இவ்விழாவுக்கு, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிலக்கடலை சாகுபடியாளர்கள் ஒன்று சேர்வர். தங்களது நிலத்தில் விளைந்த நிலக்கடலையை, அறுவடை செய்த முதல் பகுதியை பசவங்குடி தொட்ட பசவண்ண கோவிலின் "பாசாவா' எனும் மிகப் பெரிய நந்தி சிலைக்கு படைக்கின்றனர். அன்றைய தினம் "தொட்ட பசவண்ண கோவில்' விழாக் கோலம் பூண்டிருக்கும்.


தங்களது விளைச்சலின் ஒரு பகுதியை எடுத்து வந்து, நந்தி சிலையின் இரு ஓரங்களில் கொட்டி காட்சிக்கு வைத்திருப்பர் நிலக்கடலை சாகுபடியாளர்கள். அன்று அந்த பகுதியில் நிலக்கடலையின் மீதுதான் நடக்கும்படி இருக்கும். நிலக்கடலை பல வடிவங்களில், அவித்தது, வெல்லத்துடன் கலந்தது, வறுத்தது என ரகவாரியாகவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

"கடேல் காய் பர்சி' எனும் கடலை திருவிழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், அது எப்போது தொடங்கியது என தெரியவில்லை. கர்நாடகாவின் பூர்வீக பழங்குடியினருக்கு விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. இதன் காரணமாகவே இன்றும் கர்நாடக மாநில விவசாயிகள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதன் விளைவாக கொண்டாடப்படுவது தான் மார்கழி பவுர்ணமியில் நடக்கும் "அறுவடை திருநாள்' மற்றும் நிலக்கடலை திருவிழா.

தற்போது பசவங்குடி உள்ள பகுதி, அந்நாளில் நிலக்கடலை சாகுபடியாகும் விளைநிலமாக இருந்ததை சுற்றி மாஹள்ளி, குட்டநெல்லி, பைரசந்த்ரா போன்ற பகுதிகளிலும் நிலக்கடலையே விளைந்தது. பசவங்குடி உள்ள பகுதிக்கு "சங்கன ஹள்ளி' என்று அப்போது பெயர். இப்பகுதியிலுள்ள விவசாயிகள் அந்நாளில் நிலக்கடலையை சாகுபடி செய்து வந்தனர்.

அப்போது ஒரு சமயம் ஒரு பெரிய காளை மாடு அவர்கள் பயிர் செய்த நிலக்கடலை பயிர்களை சாப்பிட்டு நாசம் செய்து வந்தது. அதை எப்படியாவது விரட்டி விட வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் ஒன்று கூடி ஒரு முறை அந்த காளையை விரட்டி சென்றனர்.

ஆனால், அந்த காளை குறிப்பிட்ட துõரம் சென்றவுடன் திடீரென்று கல்லாகி விட்டது. இதை பார்த்து பரவசமான விவசாயிகள், காளை உருவத்தில் வந்தது சிவபெருமான் தான் என்று அந்த காளை சிலைக்கு கோவில் கட்டி வணங்கி வந்தனர். அத்தோடு அந்த காளை மறைந்த தினத்தன்று அக்கோவிலுக்கு வந்த தங்களது வயலில் விளையும் முதல் சாகுபடி நிலக்கடலையை கடவுளுக்கு படைப்பதாக வேண்டி கொண்டனர். அதுதான் நிலக்கடலை திருவிழாவாக இன்றும் தொடர்கிறது. கிட்டத்தட்ட அன்றைய தினம் 50 ஆயிரம் பேர்களாவது கலந்து கொள்வர்.

நான்கு, ஐந்து மாதங்கள் பூமியின் உள்ளே வளரும் கடலை, அதன் பின்பே வெளியே எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. நிலக்கடலையை அதிகளவு சாப்பிட முடியாது. ஏனெனில், அது குறைந்தளவு சாப்பிட்டாலேயே வயிறு நிறைந்தது போன்ற உணர்வை தரும். காரணம், அதிலுள்ள புரோட்டீன் சத்து. நிலக்கடலையை வெல்லத்துடன் சாப்பிட நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். "அனிமியா' நோய் வருவது தடுக்கப்படும். ஆனால், நிலக்கடலையை அதிகளவு சாப்பிட கூடாது. அதனால் ஈரல் பாதிக்கப்படும்.

-கோ.வீ.ராஜேந்திரன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)