Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயிலில் இருந்தே சாதித்த பெண்மணி
#1
<img src='http://www.spiegel.de/img/0,1020,181677,00.jpg' border='0' alt='user posted image'>

ஜெயிலில் இருந்தே சாதித்த பெண்மணி

உலகில் உள்ள முக்கிய பெண்களில் இவரும் ஒருவர். பர்மா நாட்டின் தலைவர்களில் ஒருவரான ஆங் சானின் இரண்டு வயது மகள் சூ கி. ஜப்பானின் பிடியிலிருந்து அப்போதுதான் ஒரு வழியாகத் தப்பித்திருந்த பர்மா, பிரிட்டனிடம் அடிமையாகிப் போயிருந்த நேரம் அது. ஆங் சான் போன்ற உள்ளுர்த் தலைவர்களின் போராட்ட முயற்சிகளின் காரணமாக, பர்மாவுக்கும் சீக்கிரமே சுதந்திரம் கிடைத்துவிடக் கூடும் என்ற பேச்சும் பரவியிருந்தது.சில நாட்களிலேயே ஆங் சான் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்! அந்தப் பிஞ்சு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டாள் குட்டிப்பெண் சூ கி.அதன்பின் அடுத்த வருடமே பர்மாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்றாலும், பர்மாவில் ராணுவ ஆட்சிதான் வந்தது.

கணவர் படுகொலை செய்யப்பட்ட அதே பர்மாவில் தன் மகளுக்குப் போதிய பாதுகாப்பில்லை என்ற நினைப்பு சூ கி-யின் அம்மா மனசில் இருந்து கொண்டிருந்ததால் குழந்தையை அந்த வயதிலேயே தனியாக லண்டனுக்கு அனுப்பி அங்கே படிக்க வைத்திருக்கிறார். அப்பாவின் அரசியல் அறிவு ரத்தத்தில் ஊறி இருந்ததால், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முக்கிய பாடங்களாக சூ கி எடுத்துப் படித்தது கூட தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றைதான்! படிப்பிலும் கெட்டி, பரம்பரையிலும் அரசியல் போன்ற காரணங்களினால் சூ கி-க்கு நியூயார்க்கிலிருக்கும் ஐ.நா.சபையின் செயலக ஆலோசனைக் குழு ஒன்றில் உதவிச் செயலாளர் பணி கிடைத்தது.

வேலை கிடைத்த பின் சூ கி. தான் காதலித்த மைக்கேல் ஆரிஸைத் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் பர்மாவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது காரணம் சூ கி திருமணம் செய்து கொண்டது ஓர் அந்நிய நாட்டவரை! அந்தத் திருமணம்தான் மக்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அதன் பிறகு சூ கியின் வாழ்க்கையை திசை திருப்பும் விஷயங்கள் அப்போதுதான் நடந்தன. அவரது சொந்த நாடான பர்மா சுதந்திரத்துக்கு அப்புறமும் ராணுவ ஆட்சியில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்த நாட்டு மக்கள். நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்! உன் தாய்நாட்டின் கதியை நேரில் வந்து பார் பெண்ணே! என்று தங்கள் அபிமானத் தலைவரின் மகளுக்கு மிக உரிமையோடு கடிதங்கள் மேல் கடிதங்கள் போட்டார்கள்.இந்த நிலையில் ரங்கூனியிலிருந்த சூ கியின் அம்மாவின் உடல்நிலை வேறு மோசமடைய, உடனடியாக பூட்டானிலிருந்து புறப்பட்டுச் சென்றார் சூ கி.

அதற்குள், 26 ஆண்டுகள் பர்மாவை ஆண்ட நெவின் பதவியிறக்கப்பட்டார். இனி பர்மாவின் அரசியலமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அறிவித்தது அரசு. மக்கள் வேறெதை விரும்புவார்கள்... ஜனநாயகத்தைத்தானே? ஆனால் ராணுவம் இதற்கு ஒப்புகொள்ளவில்லை. தங்கள் ஆட்சியே நடக்கவேண்டும் எனத் தீர்மானித்தது. நெவின்னுக்குப் பிறகு பதவியேற்ற தளபதி ஷா நவுங் பலாத்காரத்தைப் பயன்படுத்தினார். அதனால் பர்மாவில் மாணவர்கள் போராட்டம் உச்சமடைந்திருந்தது. மக்களாட்சி வேண்டுமென்று போரிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் ராணுவத்தால் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள்!

பார்த்துக் கொண்டிருந்த சூ கியால் சும்மா இருக்க முடியவில்லை. தாய் மண்ணுக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனசு பரபரத்தது தன்னை மறந்தார்... தன் குடும்பம் மறந்தார்... சூ கி பல்வேறு ஜனநாயக ஆர்வக் குழுக்களை இணைத்தார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அந்த நவம்பர் 4-ம் தேதி ஜனநாயக தேசிய அணி உருவானது. அதன் செயலாளராக எல்லோராலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சூ கி.

இதற்கிடையில் சூ கியின் தாயார் இறப்பு. தாயாரின் இறுதி ஊர்வலத்திற்கு திரண்ல் அந்த பிரமாண்டமான ஊர்வலம் தங்களது ஆட்சிக்கு விடப்பட்ட சவால் என்று கருதியது. உடனே சூ கியை வீட்டுக் காவலில் அடைத்தது ராணுவம்! அவரது கட்சியைக் சேர்ந்தவர்களையும் கொத்துக் கொத்தாக சிறைக்குள் அடைத்தார்கள்.வீட்டுச் சிறையிலிருந்து என்னையும் அவர்கள் இருக்கும் சிறையிலேயே அடையுங்கள்... என்றபடி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் சூ கி.

உலகையே விலுக்கென்று திரும்பிப் பார்க்க வைத்து விட்டது அவரது போராட்டம்! அந்தப் பெண்ணின் உறுதியையும் தியாகத்தையும் பாராட்டும் வகையில் மனித உரிமைக்காக வழங்கப்படும் சகரோவ பரிசை சூ கி-க்கு வழங்கியது ஐரோப்பிய பாராளுமன்றம். இதனால் இன்னும் கொதிப்படைந்தது ராணுவ அரசு. ஐந்து வருடங்களுக்கு எந்த விசாரணையும் இல்லாமலேயே சூ கியைக் கைது செய்து காவலில் வைக்கலாம் என்று சட்டத்தையே மாற்றியது.

ஆனால்...இப்படி சட்டம் மாற்றப்பட்ட அதே ஆண்டில் சூ கிக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது. அதன் பின் சூ கி கட்சித் தலைமைத் தேர்தலில் நின்றார். கட்சி அவரை மீண்டும் பொதுச் செயலாளராக்கி மகிழ்ந்தது. இதைத் தொடர்ந்து ராணுவ அரசு பலவித அடாவடிச் செயல்களில் ஈடுபட்டது. புத்தாண்டு தினத்தன்று சூ கிக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்காக குழுமியிருந்த பெரும் கூட்டத்தில் பாம்புகளை வீசியெறிந்து கூட்டத்தின் ஒரு பகுதியைக் கலைத்தது.

மறுபடி இரண்டு வருடங்களிலேயே மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சூ கி. இதற்கு நடுவே சூ கியின் தனி வாழ்வில் மேலும் சில சோகங்கள். நான்கு வருடங்களாக அவரைச் சந்திக்காதிருந்த அவர் கணவருக்கு ப்ராஸ்டேட் புற்று நோய் வந்து சிரமப்பட்டார். சூ கி பர்மாவை விட்டு வெளியேறலாம். ஆனால் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னது அரசு. போகாதே சூ கி... நீ போய்விட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் வரும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று ஒருபக்கம் கதறினார்கள் மக்கள். கணவரை பர்மாவுக்கு அழைத்து வரலாம் என்றால் அவருக்கு விஸா வழங்க மறுத்தது அரசு. ஆக, இறுதிவரை நோய் வாய்ப்பட்ட கணவனைப் பார்க்க முடியாமலே போனது சூ கிக்கு. அடுத்த ஒரே வருடத்தில் சூ கியின் கணவர் லண்டனில் இறந்தார்.

அதன்பிறகு சூ கியின் வீட்டுக் காவலை அவ்வப்போது விலக்கிக் கொண்டாலும் ரங்கூனை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று நிபந்தனையிட்டது அரசு. உலகமே உங்களை கவனிக்கிறது என்று அந்த அரசை பில் கிளிண்டன் கூட எச்சரித்துப் பார்த்தார். ஆனால் உடனடிப் பலன் இல்லை. தொடர்ந்து பல நாடுகளும் ஐ.நா.வும் கண்டிக்க, கடைசியாக மூன்று வருடங்களுக்கு முன்பிருந்து தனது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டது ராணுவ அரசு.

அதற்காக சூ கியின் தொல்லைகள் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை மறைமுகமாக உறவினர்கள் மூலம் தொல்லைகளைத் தர ஆரம்பித்திருக்கிறது. போராட்டம் தான் வாழ்க்கை என்றாகி விட்டது சூ கிக்கு. ஆனால் வாழ்க்கையே போர்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் என்ற வரிகளுக்கு உதாரணமாகத் திகழும் சூ கி. இன்றளவும் பர்மாவில் ஜனநாயகம் மலர வேண்டுமென்று போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.பர்மா இப்போது தன் பெயரை மியான்மர் என்று மாற்றிக் கொண்டுவிட்டது. அதன் தலைநகரின் பெயரும் ரங்கூன் என்பதிலிருந்து யாங்கூனாக மாறிவிட்டது. ஆனால் ஆட்சியின் தன்மை தான் மாறவில்லை. சூ கியின் வாழ்நாளுக்குள் அது மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது பலருக்கும். இதைவிட வேறென்ன சாதனை வேண்டும்.

நன்றி: மலேஷியநண்பன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)