Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இணையம் - 8ஆவது அகவை
#1
<span style='color:red'>யாழ் இணையம் - 8ஆவது அகவை

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்...

வருகிற 30ம் நாள் மார்ச் மாதம் அன்று யாழ் இணையம் தனது 8 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அன்று யாழ் இணையம் தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து ஒரு பெரும் தளமாக - பல பார்வையாளர்களைக் கொண்ட தளமாக உயர்ந்து நிற்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னை வளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முயற்சிகளை யாழ் இணையம் முன்னெடுத்தது: யாழ் முற்றம் இணைய சஞ்சிகை, விம்பகம், மின்னஞ்சல் சேவை, வாழ்த்து அட்டை, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, கருத்துக்களம், அரட்டை அறை, வலைப்பதிவு என பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. CGI Script, Javascript, PHP Script, ASP Script என பல்வேறு இணையமொழிகளையும் பரீட்சித்துப் பார்த்தது. பாமினி எழுத்துரு, tscii எழுத்துரு, dynamic எழுத்துரு, Unicode எழுத்துரு என தமிழ் எழுத்துருக்களின் தொழில்நுட்பங்களோடும் கைகோர்த்துக்கொண்டது.

பல்வேறு தரப்பினரையும் தன் வசம் ஈர்த்துக்கொண்டு தனக்கே உரிய தனித்துவத்துடன் யாழ் இணையம் வளர்ச்சி கொண்டது. இணையத்தில் நீண்டு பல காலம் தொடர்கிற/இயங்குகிற இணையத்தளங்களில் யாழ் இணையமும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழிலே எழுதி விவாதிக்கக் கூடிய - பலர் பங்குகொள்கிற - பலர் பார்வையிடுகிற - ஈழத் தமிழ் இணையத்தளம் எது என்று கேள்வி எழுப்பினால், யாழ் இணையம் என்கிற பெயரைத் தவிர வேறு ஒரு பெயரை யாரால் கூற முடியும்?

யாழ் கருத்துக்களம்: யாழ் இணையத்தின் முயற்சிகளில் ஒன்று தான் இந்த யாழ் கருத்துக்களம். புலம்பெயர்ந்த மூத்த தலைமுறை, இன்றைய தலைமுறை என கைகோர்க்கிற இடம் இது. எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமிக்கிற இடமும் இதுதான். மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்களும் கூடுகிற இடமும் இதுதான். புதியவர்கள் நம்பிக்கையோடு எழுதப் பழகுகிற பயிற்சிக் கூடமும் இதுதான். தமிழில் மூர்க்கமாக விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், செல்லமாகச் சண்டைகள் போடவும், ஊடல் கொள்ளவும், தேடல் கொள்ளவும், பாடல் போடவும், கவிதை படிக்கவும், தொழில்நுட்ப உதவி கேட்கவும் ஒரு இடம் உண்டென்றால் - அது யாழ் கருத்துக்களம் தான்.

பல நண்பர்களை உள்வாங்கியது யாழ் இணையம். அதேபோல் சிலரின் எதிர்ப்புகளுக்கும் உள்ளானது. சிலநேரங்கள் ஊடுருவல் செய்யப்பட்டு தளம் செயலிழக்கச் செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் தாண்டி ஒளிர்கிறது இன்றும் உங்கள் முன்.

இணையம் பயன்படுத்துகிற பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு "யாழ் இணையம்" கேள்விப்பட்ட தளமாக இருக்கிறது. இவர்களில் பலருடைய கணினிகளில் தொடக்கப்பக்கமாக உள்ளது. இவர்களில் பலர் ஒவ்வொருநாளும் பலதடவைகள் யாழ் இணையத்தை பார்வையிடுபவர்களாக இருக்கிறார்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பார்ப்பவர்களும் இவர்களில் உண்டு. பல இணையத்தளங்களது முயற்சிகளுக்கு யாழ் இணையம் தனது பங்களிப்பை தாராளமாகச் செய்துள்ளது. பல தமிழ் ஊடகங்களும் யாழ் இணையத்தை பார்வையிடுகின்றன. அவற்றோடு யாழ் இணையம் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாகவும் இருக்கிறது. தாயகத்திலிருந்தும் யாழ் இணையம் பார்வையிடப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் துணைநிற்பதோடு அதுசார்ந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. அந்தவகையில் விடுதலைக்காய் விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

யாழ் இணையம் என்கிற இந்த மிகச் சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கி, அதை நெறிப்படுத்தி வருகிறவர் யார்? மோகன் என்கிற ஒரு தனிமனிதன். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல் - எவருடைய பணஉதவியும் இல்லாமல் - தனது பணத்தை செலவிட்டு இந்தத் தளத்தை நிர்வகிக்கிறார். தனது குடும்பம், வேலை, பிற வேலைகள் என பலவற்றுக்கு மத்தியிலும், நேர நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இத்தளத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.

இன்னும் இன்னும் நிறையவே சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இனி நான் சொல்வதைக் காட்டிலும், யாழ் இணையம் பற்றி ஏனைய கள உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பது சிறப்பாக இருக்கும்.

யாழ் இணையத்தின் 8 அகவையை முன்னிட்டு யாழில் பல சிறப்புத் தலைப்புக்கள் தொடங்கப்படவுள்ளன - போட்டிகள் இடம்பெற உள்ளன. எனவே அனைவரும் பங்குகொள்ளுங்கள்.

<b>தலைப்புகள்:</b>

<b>[size=18]யாழ் இணையத்துக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க</span></b>

<b>யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?</b>

<b>யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதைகள்</b>




Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)