கனடாவில் அண்மையில் நடைபெற்ற தமிழ்மொழிவாரம் பற்றி தமிழ்நாதத்தில் வந்த கட்டுரைகளிலிருந்து சில துளிகள்.....
தமிழ் வளர்ச்சி என்பதும் தமிழ்ப்பற்று என்பதும் தமிழ்ப் பாதுகாப்பு என்பதும் அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழியை அழியவிடாமல் அடைகாத்து கையளிப்பதில்தான் இருக்கிறது.
நடந்து முடிந்த தமிழ்மொழி வாரம் தமிழ் மக்களிடையே தமிழ் மொழி, பண்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே கொண்டாடப்பட்டது. முக்கியமாக <b>தமிழ்மொழியைப் படிப்பதில் மாணவர்கள் ஏன் பின்நிற்கிறார்கள்? அதற்கான தடைகள் எவை? </b>என்பவற்றைக் கண்டறிந்து அவற்றைக் களைவதே தமிழ்மொழி வாரத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அதையொட்டிய பிற குறிக்கோள்களும் இருந்தன. அதற்கு இசையவே தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு என்று முழக்கம் முன்வைக்கப்பட்டது.
<b>மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கு மட்டும் தேவைப்படும் கருவி இல்லை. அதற்கும் மேலாக மொழி என்பது ஒரு இனத்தின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகிய விழுமியங்களையும் வெளிகாட்டும் கருவி ஆகும்.</b>
தமிழ்மொழி என்பது தமிழ்மக்களது வாழ்வியலில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். தமிழ்மொழி தமிழர்களது வாழ்வியலின் சகல துறைகளிலும் தளங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்மொழி வாரம் இந்த இலக்கினைத் தொட்டதா? அதில் வெற்றி கண்டதா? என்பதை மீள் பார்வை செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இதில் கூறப்படும் கருத்துக்களை செரிக்கும் மனப்பாங்கு தொடர்புள்ளவர்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் தமிழ்மொழி வார முதல்நாள் நிகழ்ச்சியே தடுமாற்றத்தோடு தொடங்கியது.
தமிழ்மொழி பயன்பாட்டுக்கு ஊடகங்களின் பங்கு என்ன என்பதைப் பேச வந்த ஊடகவியலாளர்களில் இரண்டொருவர் அந்தப் பங்களிப்பைப் பற்றிப் பேசாமல் தமிழில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கி தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்ற வேண்டுகோளுக்கு விடை இறுப்பது போல் பேசினார்கள். அவர்கள் முன்வைத்த வாதங்கள் பின்வருமாறு-
1) வடமொழிச் சொற்களுக்கு இணையான சொற்கள் தமிழில் இல்லை.
2) தமிழ்மொழி தனித்து நிற்க முடியாது. ஆங்கில மொழியின் செல்வாக்குக் காரணம் அது பிறமொழிகளிடம் ஏராளமான சொற்களைக் கடன் வாங்கி இருப்பதே.
3) தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் அது மக்களுக்கு விளங்காது. செய்திகள் மக்களைச் சென்று அடையவேண்டும் என்றால் வடமொழிச் சொற்களை பயன்படுத்தியே ஆக வேண்டும்.
இந்த வாதங்கள் மிகவும் சொத்தையானவை. தங்களுக்கு இருக்கும் தமிழ் அறிவுப் பஞ்சத்தை மூடி மறைக்க பழியைத் தமிழ்மொழி மீது ஏற்றுகிறார்கள். இவர்களுக்கு மறைமலை அடிகளார் 1946 இல் தொடக்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் பற்றிய வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
மறைமலை அடிகளார் தொடக்கி வைத்த தனித்தமிழ் இயக்கத்தை அவருக்குப் பின்வந்த தமிழ்த் தென்றல் திரு. வி..க.பரிதிமாற்கலைஞர்;, திருமதி தி. நீலாம்பிகை அம்மையார், பாவேந்தர் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இரா. இளங்குமாரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் முன்னெடுத்தார்கள். அதன் பயனாக தமிழ் மொழியை மூடியிருந்த அழுக்கு நீக்கப்பட்டு அதன் தூய்மை காக்கப்பட்டது. மொழித் தூய்மைதான் தமிழை என்றுமுள தென்தமிழாக இளமையுடன் வாழவைக்கும். வாழ வைத்திருக்கிறது. மொழித் தூய்மை கெட்டபோதுதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் பிறந்தன..................
தமிழ்மொழி வாரத்தின் தொனிப்பொருள் என்ன தெரியுமா? <b>'தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு</b>" என்பதாகும். அதாவது தமிழ் வாழ்ந்தாலே தமிழர் வாழ்வார் என்பதாகும்.
தமிழ் ஊடகங்களைப் பொறுத்தளவில் தமிழ் வாழ்ந்தாலே அவை வாழ முடியும் என்பது சொல்லாமலே விளங்கும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழை மறந்தால் தமிழ் ஊடகங்கள் மறைந்து விடும். அவற்றுக்கான தேவை இல்லாது போய்விடும். எனவே தமிழின் வாழ்வில் மற்றவர்களைவிட ஊடகவியலாளர்களுக்கே அதிக அக்கறை இருக்க வேண்டும்.
தமிழ் வாழ தமிழ்மொழியை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம், தமிழ்மொழியின் இலக்கிய வளம் பற்றி எடுத்துச் சொல்வோம், தமிழின் தொன்மை பற்றி எழுதுவோம், தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்போம் எனப் பேசுவார்கள் என்றுதான் எவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பேரளவு அப்படி எதுவும் நடைபெறவில்லை.
கலப்புத் தமிழ்தான் பேசுவோம், அப்படிப் பேசினால்தான் நாங்கள் சொல்ல வேண்டிய செய்தி மக்களைப் போய் சேரும் என்று இன்னொரு ஒலிபரப்பாளரும் முன்னைய ஒலிபரப்பாளரை வழிமொழிந்து பேசினார்.
தெரியாமல்தான் கேட்கிறேன், <b>ஆங்கில ஊடகவியலாளர்கள் யாராவது இப்படிப் பேசுகிறார்களா? மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக கலப்பு ஆங்கிலத்தில் பேசுகிறார்களா? பேசத்தான் முடியுமா?</b>
ஆங்கிலமொழி ஒலி, ஒளிப்பாளர்கள் பேசும்போதும் சரி, செய்தி வாசிக்கும் போதும் சரி, இலக்கணத்தோடுதான் பேசுகிறார்கள். இலக்கணத்தோடுதான் எழுதுகிறார்கள். அதுமட்டுமல்ல பேசும் போதும் சொற்களைச் சரியாக உச்சரிப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். இதனால் பிபிசியின் ஒலி, ஒளி பரப்பு ஆங்கிலம் 'அரசியார் ஆங்கிலம்" (Queens English) என்ற சிறப்புப் பெற்று ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.
உலகில் இன்று தமிழ்மொழிப் பயன்பாட்டில் முடிந்த மட்டும் தூய தமிழ்ப் பயன்படுதப்படல் வேண்டும் என்பதில் தமிழீழ நிழல் அரசே மிகக் கூடுதலான அக்கறை காட்டி வருகிறது. அதற்காக முனைப்போடு செயல்பட்டும் வருகிறது என்பது வெள்ளிடமலை.
1992 ஆம் ஆண்டிலேயே விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் <b>'மக்கட் பெயர் அகர வரிசை</b>" என்ற நூலை வெயிட்டுத் தூய தமிழ்ப் பெயர்களைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இட்டு வழங்க வழிகாட்டியது. அதனைத் தொடர்ந்து <b>'நடைமுறைத் தமிழ் வழிகாட்டி</b>" என்ற நூல் வெளியிடப்பட்டது. ஏறத்தாழ 1,800 பிறமொழிச் சொற்களுக்கு, பெரும்பாலும் வடமொழிச் சொற்களுக்கு, நேரான தூய தமிழ்ச் சொற்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது
இந்த நூலின் முகவுரையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது,
<b>'வட சொற்களும் திசைச் சொற்களுமாகக் காலந்தோறும் தமிழிடையே பிறமொழிச் சொற்கள் எண்ணுக்கணக்கற்று வந்து கலப்பதாலே, தமிழின் தூய்மையும் தனித்தன்மையும் பாழ்பட்டு வருவதனைத் தமிழராகிய நாம் உணர்ந்து கொள்ளாதிருக்கின்றோம். இந்நிலை தொடருமாயின் 'மெல்லத் தமிழினிச் சாகும்" என்பது திண்ணம்.</b>