இன்னொரு போருக்கான இறுதி வேளை நெருங்குகிறது- தாயக, புலம்பெயர் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?: கா.வே.பாலகுமாரன் விளக்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 05:41 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப்போருக்கான இறுதிவேளை நெருங்கும் நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கிற தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அரசியல் அரங்கம் பகுதியில் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
பிரபாகரனது மாவீரர் நாள் உரை என்ன மாதிரியான தாக்கத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியுள்ளது?
பயங்கரவாதம்-தொழில்நுட்பம் என விரிந்த இந்தக் காலத்திலே நடைபெறுகிற ஒரு விடுதலைப் போராட்டம் எப்படியாக முகம் கொடுத்து நிற்கிறது?
இதை சர்வதேச சமூகம் எப்படி எதிர்கொள்ளும்?
சிங்கள தேசம் மேற்கொள்ளப் போகும் சதிவலைகள் என்ன?
சதிவலைகளை தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் எப்படி எதிர்கொள்வது?
என்பது உள்ளிட்ட விடயங்களை பாலகுமாரன் தனது உரையில் விளக்கி உள்ளார்.
கா.வே.பாலகுமாரன் பேசியதாவது:
மாவீரர் நாளில் ஏதோ புதிய பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று கூறப்பட்ட எதிர்பார்ப்பிற்கு அப்பால் மிக வித்தியாசமான ஒரு சூழல் ஒன்று மாவீரர் நாளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ளது.
இதுவரை நிகழ்த்தப்பட்டது போன்ற மாவீரர் நாள் உரை அல்ல அது. நம்பிக்கைக்குரிய ஒரு பொறுப்பாளரின் அறிக்கை என்று அதனை சுருக்கமாக கூறலாம். தமிழீழ மக்களுக்கு என்பதை விட சிங்களத் தேசத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சமர்பிக்கப்பட்ட அறிக்கை அது. அல்லது வினா-விடை என்று சொல்லலாம்.
காரல் மார்க்ஸ் பொதுவுடைமைக் கட்சியை உருவாக்கிய கால கட்டங்களில் வினா-விடையை வெளியிட்டது போல தலைவரின் மாவீரர் நாள் உரையானது எல்லாவித கேள்விகளுக்குமான விடையை தன்னகத்தேக் கொண்டுள்ளது.
உண்மையில் அந்த உரை என்பது பட்டயம் போல், பிரகடனம் போல் ஆகிவிட்டது. உரைக்குப் பின்னால் என்ன நிகழப் போகிறது, என்ன திசையில் செல்லப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
நாங்கள் முன்னர் கூறியது போலவே தமிழீழத்தில் அரங்கேறுகிற ஒவ்வொரு பெரிய காட்சியும் ஒரு ஒத்திகைபோல அல்லது பின்னாடி நிகழப்போகிற சம்பவங்களுக்கு முன்னோடி போல- நிகழ் தகவு போல தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஒரு வித்தியாசமான செய்தியை கூறிவருகிறது.
தேர்தலுக்கு முன்பாக அல்லது தேசியத் தலைவரது உரைக்கு முன்பாக சிங்களத்திலே என்ன குதியாட்டம்..வெறியாட்டம் நடந்தது.....
ஆனால்
இப்போது சிங்களத்திலே ஒரு பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம்.
எல்லோரும் மெளனித்துப் போய்விட்டார்கள். அந்த அளவுக்கு இந்த உரையினது தாக்கம், நீண்டகாலத்துக்கு வேலை செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது.
எல்லோருடைய மனசாட்சியையும் மனதையும் இறுகப் பிளக்கும் பாறையைப் போல பிளந்து அவர்களுக்கு உள்ளே சென்று மனசாட்சியையும் மனதையும் குழப்பும் வகையிலே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லோரும் எதிர்பார்த்தார்கள்...மகிந்தர் வந்த உடனேயே ஏதோ பூதாககாரமாக வெட்டி பிடுங்கப் போகிறார் என்று எதிர்பார்த்தார்கள்.
முன்னர் இருந்த தலைவர்களைப் போலவே சிங்களப் பெருந்தேசிய இனவாதத்துக்கு தீனி போடவும்
ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சமநிலையைப் பேணுகிற வகையிலுமாக அறிக்கைகளை வெளியிட முற்படுகிறார்.
இருப்பினும் எங்களது செயற்பாடுகள் இன்று மகிந்தருக்கு ஒரு சிக்கலைக் கொடுத்திருக்கிறது என்று நம்புகிறேன்.
அவர் நினைத்திருந்தால் இவ்வளவு கடுமையான நிலைப்பாடுகளை மேற்கொண்டதற்குப் பின்னாலே புலிகளைத் தூண்டி அல்லது சீண்டி, சமநிலையை தவறச் செய்து சிக்கலான சூழலை உருவாக்கி அதை தலைவரனது அறிக்கை ஊடாகப் பெற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே ஒட்டுமொத்தமாக ஒடுக்கியிருக்கலாம்.
ஆனால் மிக குறுகியதும் நீண்ட ஆழமானதுமான வல்லுநரின் ஆராய்ச்சியிலேயே உருவாக்கப்பட்ட மகிந்தரின் சிந்தனைகளோ இன்று சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
இன்று தலைவரது உரைக்குப் பின்னால் அதை வழிமொழிந்து பின்பற்றி நடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மகிந்தருக்கு ஏற்பட்டுள்ளது.
அதுபோலவே ஜே.வி.பி.யும் தான்....தேசியத் தலைவரது உரை அவர்கள் அனைவருக்குமே சாட்டையடியாக மாறி இருக்கிறது.
ஜே.வி.பி.யினது உபாயங்களும் உத்திகளும் தூக்கி எறியப்பட்டிருப்பதால் அது தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இப்போது ஜே.வி.பி.க்கும் மகிந்தருக்குமான உறவுகள் முட்ட வேண்டிய காலம் தோன்றிவிட்டது. இவ்வளவு விரைவில் அது வரும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சூழல் தேசியத் தலைவரது உரைக்கு ஊடாக வெளிப்பட்டுள்ளது.
தேசியத் தலைவர் அவர்கள் மிக நுட்பமாக, எதையும் வீணாக்காமல் கடந்த 4 ஆண்டுகாலம் அவர் மேற்கொண்ட முயற்சியினது வெளிப்பாட்டை, தொனியை எள்ளளவும் குறைக்க விரும்பாமல் அதன் தொடர்ச்சியாக பெரிய அடியை தலைவர் இறக்கி உள்ளார்.
தலைவரின் உரையூடாக சிங்கள தேசம் மட்டுமல்ல உலகமே இன்று கலகலத்துப் போய்விட்டது.
தமிழ் மக்கள், சிங்கள தேசம் என்பதற்கு அப்பால் சர்வதேச கொள்கை வகுப்பாளர்களை நோக்கி எழுதப்பட்டதாக இந்த உரை அமைந்துள்ளது.
உலக வரலாற்றில் குடியேற்ற கால கட்டத்தைத் தாண்டி, உலகப் போர்களைத் தாண்டி, பனிப்போர்களைத் தாண்டி ஒவ்வொரு காலகட்டத்திலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு பொதுவான தன்மைகள் இருந்தன.
ஆனால் இந்த புதிய ஒழுங்கிலே நாம் செயற்படுகிற விதம் பார்த்து உலகமே மிகப் பெரிய திகைப்புக்குள்ளாகி இருக்கிறது. எங்களை எந்த வழியிலும் எந்த நுணுக்கத்திலும் சென்று கையாள முடியாது என்ற நுணுக்கமான நிலைப்பாட்டை தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கி உள்ளார்கள்.
<span style='font-size:30pt;line-height:100%'>தலைவர் கூறியதில் முக்கியமானது என்பது \"குறுகிய கால இடைவெளி\" என்பது. </span>இந்தக் குறுகிய கால இடைவெளி என்ற சொல் மிகப் பெரிய இடைவெளியை நீண்டகாலத்துக்கு சிங்களத் தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் கொடுக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.
இந்த குறுகிய கால இடைவெளியை என்ன மாதிரி நிரப்ப முடியும் என்பது உலகத்துக்குச் சொல்லப்பட்ட கேள்வியாக அமைந்துள்ளது.
இந்த உரையானது சர்வதேச ரீதியில் அறிவார்ந்த, ஒரு விடுதலைப் போராட்டத்தினது உச்சமான வெளிப்பாடாக மாறி இருக்கிறது. தேசியத் தலைவரது உரையை எவரேனும் கண்டனம் செய்திருக்கிறார்களா? கண்டனம் செய்கிற துணிவற்று இருக்கிறார்கள். ஒரு கண்டனமும் கூட தெரிவிக்க இயலாத வகையிலேயே ஒரு விடுதலைப் போராட்டத்தின் உச்ச வெளிப்பாடாக தலைவரின் மாவீரர் நாள் உரை அமைந்துள்ளது.
தலைவரின் உரையூடாக நிகழப்போகிற விபரீதங்கள் அல்லது மாற்றங்கள் என்பன மெல்ல மெல்ல உலகத்துக்கு உரைக்கத் தொடங்கியிருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய முடியாமல் தயங்கி, தயக்கம் காட்டி நிற்கிறார்கள்.
இப்போது இந்திய மாநாடு, இணைத் தலைமை நாடுகளின் மாநாடு, சொல்ஹெய்ம் மாநாடு என்று கூட்டப்பட்டு வருகின்றன...தலைவரது உரைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது சர்வதேசத்துக்கு உள்ள சிக்கலாக இருக்கிறது.
இப்படியான ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்குவதனூடாகத்தான் எமது விடுதலை வென்றெடுக்கப்படும் என்பது தெளிவான செய்தி.
[size=18]செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னால், ஈராக் படையெடுப்புக்குப் பின்னால் புலிகள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருவருடத்துக்கு அமெரிக்கா செலவழிக்கிற தொகை 450 பில்லியன் டொலர். இந்தத் தொகையில் 15-ல் ஒரு பங்கு டொலரினால் உலகத்தினது வறுமைப் பிரச்சனைக்கே தீர்வு கண்டுவிடலாம்.இப்படியான அச்சத்தை உற்பத்தி செய்கிற ஒரு காலகட்டத்தில் முதன் முறையாக தனியனாக எவருடைய முன்உதாரணமும் அற்று எங்களுடைய விடுதலைப் போராட்டம் முகம் கொடுத்துள்ளது.
புதிய உலக ஒழுங்கினது 2 ஆம் கட்ட நிகழ்ச்சி நிரலுக்கு நேரடியாக முகம் கொடுக்கிற வகையில் இனிவரும் சம்பவங்கள் அமையப் போகிறது.
நாங்கள் அதற்கான வழிமுறையை வகுத்திருக்கிறோம்.
எவ்வாறு வகுத்திருக்கிறோம் எனில்
எது பயங்கரவாதம்?
எங்களுடைய நிலை என்ன?
எவ்வளவு காலம் நாங்கள் பேசியிருக்கிறோம்?
எங்களுடைய உட்பொருள் என்ன?
என எல்லாவற்றையும் விளக்கி உள்ளோம்.
இதனூடாக எங்களைக் கையாள இனி உலகம் ஏதேனும் புதிய யுத்திகளைக் கையாளுமா என்பது குறித்து எமக்குத் தெரியாது.
ஏனெனில் இதுவரை உலகம் கடைபிடித்த உத்திகள் அனைத்துமே உச்ச உத்திகள்தான்.
ரஸ்ய புரட்சி, சீன விடுதலைப் போராட்டம், கியூபா விடுதலைப் போராட்டம், வியட்நாம் விடுதலைப் போராட்டம் போன்ற காலகட்டங்களில் உலகத்திலே எப்படி மிகப் பெரிய சூழல் உருவானதோ உலகத்திலே மிகப் பெரிய வியப்பும் அதிசயமும் உருவானதோ அதைப் போல்..
இப்போதும் அதாவது
தொழில்நுட்பம் வளர்ந்து,
உலகம் சுருங்கி
ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் வேறுவிதமாக மாற்றப்பட்டு
எது புரட்சி? எது கிளர்ச்சி என்று தெரியாத அளவிற்கு
நாடுகள் எல்லாம் தலைகீழாக மாறி
எல்லைகள் எல்லாம் சுருங்கி இருக்கிற இந்த காலகட்டத்தில்-
முதன் முறையாக
புதிய பாதையை இந்த உரை ஊடாக உலகத்துக்குக் காட்டியிருக்கிறோம்.அதே நேரத்தில் மகிந்தரது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச ராசந்தந்திரப் போரிலே பயன்படுத்த வேண்டிய உத்திகளையும் இந்த உரையில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இதற்கு அப்பால் மாவீரர் நாள் உரையை நீங்கள் பார்த்தால்..
முதலில் முடியாது என்றும்
இடையில் முடியுமா என்று பார்ப்பதாகவும்
இறுதியில் முடியாது என்றும் முடிந்திருக்கிறது.
அப்படியானால் மகிந்தரின் காலத்தை நாம் எப்படி அணுக வேண்டும்? இது தொடர்பான பார்வை எங்கள் மக்களிடையே எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துப் பரிமாற்றங்கள் செய்ய வேண்டிய காலமாக இந்தக் காலம் அமைகிறது.
மகிந்தர் முதலில் என்ன செய்யப் போகிறார் எனில் மிக இரகசியமான ஒரு சதிவலைப் பின்னலை மிக இரகசியமாகச் செய்யப் போகிறார். ரணில் இதனை பகிரங்கமாக செய்தார்.
மகிந்தர் தன்னிடம் உள்ள முஸ்லிம் கைக்கூலித் தலைமைகளையும் தமிழ்த் துரோகக் குழுக்களையும் வைத்துக் கொண்டு எங்கள் தமிழீழப் பகுதிகளிலே குறிப்பாக தென் தமிழீழத்திலே முஸ்லிம்-தமிழ் உறவுகளுக்கு இடையேயான உறவை சிதைக்கக் கூடிய செயற்பாடுகள் போன்ற சதிப்பின்னலை ஒரு பக்கமாகவும்,
உலக நாடுகளில் தங்களது செயற்பாடுகளை விரிவடையச் செய்து சில முறைகளைக் கையாண்டு பயங்கரவாதிகள் என்று எம்மை சொல்ல வைக்கிற நிலையை உருவாக்கி அண்மையிலே அவுஸ்திரேலியாவில் நடந்தது போன்ற சில சம்பவங்கள் போன்ற சதிவலைப் பின்னலை ஒருபக்கமாகவும் பின்னக் கூடும்.
இதை மகிந்தர் செய்யாவிட்டால் அவர் ஒருநாள் கூட பதவியில் இருக்க முடியாது. ஜே.வி.பி.யினர் ஒருநாள் கூட அவரை பதவியில் இருக்கவிடமாட்டார்கள்.
இந்தச் சூழலில் தமிழீழ மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழீழத் தலைமையினது நிலைப்பாட்டைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏதோ ஆறப்போடப்பட்டு இருக்கிறது. கஞ்சி ஆறிய பின்னர் குடிக்கலாம் என்று நாம் நினைக்கவில்லை.
நாங்கள் சர்வதேசத்துக்கு கூறுகிற செய்தி வேறு.
எங்கள் தாயகத்திலே வாழ்கிற மக்களுக்குச் கூறுகிற செய்தி
தமிழீழத்திலே இப்படியாக வருகிற இந்தச் சிக்கலைப் புரிந்து கொண்டு நம்முடைய ஒற்றுமையை நாம் உள்ளகச் சிக்கல் இல்லாமல் வளர்த்தெடுத்த வேண்டும்.புலம்பெயர் நாடுகளிலே வாழ்கிற தமிழர்கள் செய்ய வேண்டியது,
தலைவரது உரையூடாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் சிங்களத்தை முழுமையாக அம்பலப்படுத்துகிற சகல செயற்பாடுகளையும் முழு அளவில் தொடர்ந்து விரைந்து செய்ய வேண்டும்.
வியட்நாம் விடுதலைப் போராட்டத்தில் 10 வருடம் பேசினார்கள். அதற்கு அப்பாலும் அவர்கள் போராடி வென்றார்கள்.
வென்ற போது கடைசியாக கூறினார்கள், இந்த பேச்சுவார்த்தை-இராஜதந்திரம்-அரசியல் நிலைப்பாடுகள் என்பது எல்லாமே இராணுவ ரீதியான வெற்றிக்குத் துணைக் காரணியாகச் செயற்பட்டதே அல்லாமல் பிரதான காரணிகள் அல்ல என்று தெரிவித்திருந்தார்கள்.
தாயகம் மற்றும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களே!
காலம் கனிந்துவிட்டது. இன்னொரு போருக்கான இறுதி வேளை நெருங்கி விட்டது. அதை வெல்ல நாம் ஆயத்தப்பட வேண்டியிருக்கிறது.
இந்தப் போர்க் களங்களில் மட்டுமல்ல..களங்களிலும் மனங்களிலும் செய்யப்பட வேண்டிய போர்.
இந்தப் போரானது எல்லா முனைகளிலும் ஒருமித்துச் செயற்படக் கூடிய போராக மாறும்.
அதுவே விடுதலைப் போராட்டத்தின் கடைசி நாளாக அமையும்.
அந்த நாளில் நம் வெற்றிக் கொடியேறுவதை பார்ப்பதற்காக நாம் எல்லோரும் காத்திருக்கிறோம் என்றார் பாலகுமாரன்.
http://www.eelampage.com/index6.php?cn=22226