Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜர் சோதியாவின் 16 ஆவது நினைவு தினம்
#1
ஆளுமையும் விவேகமும் நிரம்பிய மகளிர் அணியின் முதல் தளபதி! மேஜர் சோதியாவின் 16 ஆவது நினைவு தினம் புதன்கிழமையாகும்

<img src='http://img221.imageshack.us/img221/3464/sothiya4aw.jpg' border='0' alt='user posted image'>

எம் தாயகத்தின் இதய பூமியென வர்ணிக்கப்படும் அந்தப் பெருங்காடு. அதன் இன்னொரு சிறப்பு வடதாயகத்தையும் தென் தாயகத்தையும் ஒரு சேர அணைத்துக் கொள்வதேயாகும்.

அந்தக் காட்டின் நடுவே அந்த முகாம். அதை யாரும் அறியவில்லை; அறிவதற்கான நேரமும் கிடைத்திருக்கவில்லை. அந்த முகாம் எப்போதும் கலகலவெனத்தானிருக்கும். காரணம் புலிகளாய்ப் பிறப்பெடுத்த பெண்கள் வாழும் அந்தக் காடு சிறியதோர் நகராய் மாறியதுதான்.

இங்குதான் மூத்த தளபதியாயும் மருத்துவராயும் விளங்கினாள் சோதியா. பெயர் ஆளுக்கேற்றாற் போல்தான் இருந்தது. சோதியா, சோதியாய் மிகவும் ஆற்றல் மிக்கவராய் விளங்கினார். அண்ணனின் தங்கைகளாகவும் நாட்டைக் காக்கும் வீரர்களாகவும் வளர்ந்தது அணிகள். தன்னிலை மறந்து அன்பால் அணைப்பாள் சோதியா. அன்னையே வடிவானவள். அவரிடம் யாருமே அறியாமல் புகுந்தது நோய். தன்நோயை மறைத்து மற்றவரைக் கவனமாக அவதானித்தாள். இதனால் இவளிடமிருந்த அந்த நோய் யாருமே அறியமுடியாதபடி அவளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டது.

அன்றையநாள் பாலன் பிறந்த நாள். அந்த நாள் சிறு விளையாட்டு நிகழ்வாய் குதூகலமாக பாட்டும் கூத்தும் பகிடியுமாக இருந்தது. அன்று இயல்பு நிலையில் மாற்றம் சோதியா மறைக்க முயன்றாள்; முடியவில்லை; மாறாகப்படுத்துக் கொள்ள நேரிடுகிறது. துடித்தனர் அனைவரும். இயல்பு நிலை குறைய, குறைய அவள் சாவின் பிடியில் சென்று கொண்டிருந்தாள். அதனை மட்டும்தான் அவள் அறிவாள். அதனை நாம் யாரும் அறியவில்லை. மருத்துவம் துரிதகதியில் நடந்தன, நாட்கள் வேகமாகச் சுழல, அந்த நாள் விடிந்தது.

தன்னையே உருக்கிய அந்த தீப்பொறி, விடியலுக்காய் மௌ னித்துப் போ னது என அறிவித்த நாள் 11.01. 1990 யாரும் நினைக்காத, நடக்காத ஒன்று நடந்தேறிப் போனது. வானம் மங்கியபடியே இருந்தது. கானகம் அசைவற்று வெறும் ஜடமானது. எல்லாரினதும் தாயாய் விளங்கியவள் விதையானாள், மேஜர் சோதியாவாக. அந்த கடைசி கிறிஸ்மஸ் நாட்களில் இருந்த குதூகலம், அது அவளின் சாவின் ஆரம்பமா என்று கூட நினைக்க வைக்கின்றது. மூத்த தளபதியை மகளிரணி இழந்தது. இது கடந்த 15 வருடங்களுக்கு முந்தியது.

இதன் பின்னர் சோதியா என்ற தியாகச் சுடரின் ஒளியாய்த் திகழும் மேஜர் சோதியா படையணி, தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களின் விழுமியமாய் 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமானது. காடுகளில் இப்படையணி தன்னை வளர்த்துக் கொண்டாலும், காலம் நகர களங்களிலும் கால் பதித்தது. முதல் களமாக பரந்தன் மண்ணில் தத்தி நடைபோட்ட இப்படையணி, முதலாவது மாவீர மறத்தியாக வீரவேங்கை இன்குயிலை இச்சமரில் அணைத்துக் கொண்டது. களமுனைகள் விரிந்தன. ஆனையிறவுச் சமர், ஓயாத அலை-02, ஓயாத அலை-03, குடாரப்பு தரையிறக்கம், தீச்சுவாலை, ஜெயசிக்குறு, சத்ஜெய என்று தொடர்ந்து, அணித் தலைவிகளையும் தொலைத் தொடர்பாளர்களையும் முன்னிலை நோக்குபவரையும், கனரக அணியினர் என ஆளுமைமிக்க பல போராளிகளையும் இழந்து கொண்டது.

இழப்புக்கள் எமக்குப் புதியவை அல்ல; இழப்புக்களைச் சந்திப்பது இதுதான் முதல் தடவையுமல்ல என்ற தலைவரின் வாக்கு மனதில் பதிய வீறு கொண்டு இப்படையணி விருட்சமென நிமிர்ந்தது. இன்று பத்தாண்டுகள் நிறைந்து பதினோராவது ஆண்டில் காலடி பதித்துள்ள போது, இதுவரை 459 மாவீரர்களை மண்ணுக்காய் ஒப்படைத்து, அவர்கள் மனங்களில் இருந்த விடுதலைக் கனவை நனவாக்கக் காத்திருக்கின்றது.

மேஜர் சோதியா, இவள் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாகவும் விளையாட்டு, கலை நிகழ்வு போன்ற பல துறைகளிலும் தலைசிறந்து விளங்கினாள். எதையும் விளங்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவள். இவள் முதல் முதல் 1984 இல் தன்னை மண்ணின் மலர்விற்காய் அர்ப்பணிக்க நினைத்து, வீறு நடைபோட்ட போதும், முதல் புகுந்த பாதை சரியான பாதை அல்ல என்பதை விளங்கி சரியான பாதையை தெரிவு செய்ய முயன்றார். முடிவில் தன்னை எமது இயக்கத்தில் இணைத்துக் கொண்டாள். இந்தியாவில் நடத்தப்பட்ட முதலாவது பெண்களுக்கான முதலாவது பயிற்சிப் பாசறையில் தனது பயிற்சியை ஆரம்பித்தாள். பயிற்சியில், பண்பில் என சிறந்து விளங்கினாள்.

1985 ஆம் ஆண்டு பயிற்சியை முடித்து வெளியேறிய மகளிர் அணியினர் முதலாவதாக லெப்.கேணல் விக்ரர் தலைமையில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சண்டையை அடம்பனில் சந்தித்தனர். இதுவே மகளிர் அணியினர் பங்குபற்றிய முதலாவது சண்டை ஆகும். இச்சண்டையில் மேஜர் சோதியா பெரும் பங்கு வகித்தார். இதனைவிட, யாழ் தொலைத் தொடர்பு நிலைய இராணுவ முகாம் தகர்ப்பிலும் இந்திய இராணுவத்திற்கு எதிரான கோப்பாயில் நடந்த தாக்குதலிலும் கல்லுண்டாய் வெளியில் நடந்த தாக்குதலிலும் பங்குகொள்ளத் தவறவில்லை. அனைத்துத் தாக்குதலிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியது.

இவ்வாறு களம் பல கண்ட சோதியா, 1989 ஆம் ஆண்டு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் மகளிர் அணிக்குத் தளபதியாக நியமிக்கப்படுகின்றார். பெற்றோருக்கு இவள் ஒரு பெண் பிள்ளை. வசதியாக வாழ்ந்தவள்தான். அமலோற்பவ வசந்தி அன்றைய காலத்தில் தேச விடுதலையை வென்றெடுக்கவென தமிழீழ விடுதலைப் புலிகள் அணியில் புகுந்து சோதியா எனத் திகழ்ந்தாள். இவளை இழந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவுற்றாலும், அவளது நினைவு வாழும் எம்முள்.

சோதியாவின் ஆளுமையும் வேகமும் பற்றி தலைவர் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு கூறினார். அணிகள் பற்றி தலைவருடன் சோதியா கதைத்துவிட்டு சென்றபோது திடீரென்று ஒரு வெடியோசை கேட்டதாகவும் அப்போது அருகில் நின்ற போராளிகள் வருவதற்கு முன் சோதியா தான் முதலில் வந்து நின்றதாகவும் கூறினார். இதிலிருந்து அவரின் ஆளுமையையும் வேகத்தையும் அறியக் கூடியதாக இருந்தது. அவரது கனவுகளையும் விளங்கி அவள் கனவுகள் நனவாகும் வரை எம் பாதங்கள் விடியலின் திசையில் தொடரும்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=156747#156747

பன்னிலா
lankasri
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)