Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீர்வுக்கும் தயார்- தீர்த்துக் கட்ட விரும்பினால் ..........
#1
<b>தீர்வுக்கும் தயார்- தீர்த்துக் கட்ட விரும்பினால் முகம் கொடுக்கவும் தயார்: க.வே.பாலகுமாரன் </b>

[திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2006, 03:53 ஈழம்] [ம.சேரமான்]

சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களினூடே தீர்வு காண முன்வந்தாலும், பேச்சுவார்த்தையை இழுத்தடித்து தீர்த்து கட்ட முனைந்தாலும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார்.

<b>புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (11.02.06) ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் பகுதியில் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

இம்முறை ஜெனீவா பேச்சுக்கள் பற்றிய எண்ணப்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

ஜெனீவா என்று சொல்லும்போது எங்கள் எண்ணங்களில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வுகள் விரிகின்றன.

உலகத்தின் தூய்மையான நகரமாக ஜெனீவா விளங்குகிறது. எத்தனையோ உடன்பாடுகள் எட்டப்பட்ட நகரம் அது. ஜெனீவாவின் பெயரில் நூற்றுக்கணக்கான உடன்பாடுகள் காணப்பட்டு சர்வதேச ரீதியாக மிகப் புகழ்பெற்ற நகரம் அது.

குறிப்பாக போர் நடைபெறுகிற நாடுகளில் மனித நேயம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதைக் கூட ஜெனீவா சட்டங்களினூடாகத்தான் உலகம் கண்டுகொண்டிருக்கிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகமும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அலுவலகங்களும் அங்குதான் இருக்கின்றன. ஆயுதக் குறைப்பு மாநாடு அங்கேதான் நடைபெற்றது.

1954 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாளில் தியன்பியன்பு சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னால் வியட்நாமின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பேச்சுக்களும் ஜெனீவாவில்தான் நடைபெற்றது. 17 ஆவது அகலக் கோட்பாட்டு அடிப்படையில் வட வியட்நாம், தென் வியட்நாம் எனப் பிரிக்கப்பட்டு ஹோசிமினின் ஆட்சியும் ஏற்கப்பட்டது ஜெனீவா உடன்பாட்டில்தான்.

ஆகவே, ஜெனீவாவில் பேசுவது என்பது எங்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சிக்குரிய விடயம். எங்களுடைய தலைவரின் மதிநுட்பம் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்களுக்கான வாய்ப்பு எட்டப்பட்டதை உலகம் கவனத்தில் கொண்டிருப்பதால் நாங்கள் இதை மகிழ்ச்சியோடு பார்க்கிறோம்.

மிக அண்மைக்காலமாக சிங்கள அரசின் முழுச் செயற்பாடும் ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழு பற்றியே அமைகிறது. ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழு தெரிவு செய்யப்பட்ட விதம், அது தொடர்பான பரபரப்பான செய்திகள், அதில் இடம்பெற்றவர்கள்- விலகியவர்கள் என்று மிகப் பெரிய செய்தியாக்கப்படுகிறது.

ஜெனீவா பேச்சுக்கான குழுவைத் தயார் செய்ய மிகப் பாரிய ஏற்பாடுகள் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை மகிந்தர் உருவாக்கி வருகிறார். சிறிலங்காவின் ஜெனீவா பேச்சுக்குழுவிற்கு எத்தனையோ ஆலோசனைக் கூட்டங்கள், ஆலோசகர்கள் என்று மிகப் பெரிய ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன.

ஐ.நா.வின் உடன்பாடுகள் பற்றிய பிரிவின் தலைவராக இருக்கக் கூடிய பாலித கொகன்ன வரவழைக்கப்பட்டிருக்கிறார். சிங்களவரான அவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். எம்.ஆர்.நாராயணசுவாமி என்கிற பத்திரிகையாளர் அழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் ஹோவார்ட் பல்கலைக்கழகத்தினர், சட்ட வல்லுநர்கள் என்று ஒரு போருக்கான ஆயுத்தத்தைப் போல் ஜெனீவா பேச்சுக்களுக்காக மகிந்தர் மேற்கொள்ளுவது ஏன்?

அண்மையில் ஊடகவியலாளர்களிடம் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதை நாம் ஒரு முக்கியமான விடயமாக சுட்டிக்காட்டுகிறோம்.

"தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் வரலாறு தமிழ் மக்கள் சந்தித்து வாழ்வியல் நெருக்கடிகள், பேரழிவுகள், இடப்பெயர்வுகள் பற்றி அரசதரப்பு பேச்சுவார்த்தை குழுவினர் புரிந்துகொண்டு வருவது பொருத்தமாக இருக்கும். தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைக்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு பேச்சுவார்த்தைக் குழுவினர் வரவேண்டும். தமிழ் மக்களுடைய சமகால வரலாறையும் ஆக்கிரமிப்பால் ஏற்பட்டிருக்கின்ற விளைவுகள் பற்றி புரிந்துகொண்டு வரும்போதுதான் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமே தவிர பேச்சுவார்த்தை அரங்கம் ஒரு விவாத அரங்கமல்ல. இரண்டு தரப்பும் மனம்விட்டுப் பேசி உண்மையான நிலைப்பாடுகளை பரிமாறிக்கொண்டு தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை மேசையே தவிர விவாதங்களை நடாத்தி கருத்துக்களுக்கு கருத்துக்கள் வெளிப்படுத்தி கருத்து முறியடிப்பு சமரை நடத்துகின்ற அரங்கல்ல- பேச்சுவார்த்தை மேசை" என்று தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் எப்போதும் நம்பிக்கையோடும் அவநம்பிக்கையற்றும் பேச்சுக்களுக்குப் போக விரும்புகிறோம். இந்தத் தீவில் இரத்தக் களரி இல்லாமல் ஒரு தீர்வை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள நாங்கள் தடையாக இல்லை என்பதைத்தான் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா பேச்சுக்கள் தொடர்பிலான சிங்களத் தரப்பின் எண்ணங்கள் எப்படியாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினை உங்கள் முன்னால் வைக்கலாம் என்று கருதுகிறோம்.

எதற்காக ஜெனீவாப் பேச்சுக்குழுவிற்கு பாரிய தோற்றப்பாடு கொடுக்கப்படுகிறது?

ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழு என்பது தொடர்ச்சியான பேச்சுவார்த்தையின் விளைவு என்பதுதான் உண்மை. ஏற்கனவே செய்யப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைதான் தற்போது நடைபெறுகிறதே தவிர புதியதான பேச்சுவார்த்தை அல்ல.

ஆனால் சிங்களத்தில் நடத்தப்பது அவ்வாறு அல்ல. அதனாலேயே ஏன் என்ற கேள்வி எழுகிறது?

இதற்கு சில பதில்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன.

- சிங்கள தேசத்தில் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிரவாதக் குழுவினருக்கு ஒரு தோற்றப்பாடு காட்டவா?

அதாவது முதலிலிருந்து நான் பேச்சுக்களைத் தொடங்கப் போகிறேன். பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு அறிவு இல்லை. அதனால் ஆய்வான கருத்துகளைச் சொல்லி பேச்சுவார்த்தைக் குழுவைத் தகைமையாக்கி பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தேசப் பிரதிநிதிகளை முறியடிப்பதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் காட்டுவதற்காகவா இந்த பாரிய ஏற்பாடுகள் என்பதுதான் முதல் கேள்வி.

இதற்கு பதிலாகத்தான் சு.ப.தமிழ்ச்செல்வன் சொன்ன கருத்து அமைகிறது.

- உண்மையிலேயே இந்த பேச்சுவார்த்தைக் குழு என்பது சர்வதேசத்தின் தோற்றப்பாட்டுக்கு அமைவாக தாங்கள் பாரிய முயற்சிகளின் பின்னால் செய்யக் கூடிய ஒரு செயல் என்று காட்டி சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கூடாக தாங்கள் செல்வதாகக் காட்டி ஒரு பரப்புரைக்கான ஏற்பாடா?

கடந்த விடுதலைப் புலிகள் ஏட்டில் சோமஸ்கந்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருக்கும் ஒரு தகவலை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அண்மைக்காலமாக சர்வதேச அளவில் தமிழரது நியாயப்பாடுகள் ஆய்வுகள் வழி வெளிவருகின்றன. பல்கலைக்கழகங்களில் முக்கியமான ஆய்வாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு எங்களைப் பற்றிய மிகத் தெளிவான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அதில் ஒரு செய்தி நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீல் டெவர்ட்டாவின் கூற்றாக சோமஸ்கந்தன் எழுதிய கட்டுரையில் அது வருகிறது.

"தமது வன்முறைகள் மூலம் தமிழர்களைப் பிரிந்து செல்லும் தூண்டும் சிங்கள ஆட்சியாளர்கள் அந்தப் பிரிவினையைத் தடுப்பதற்காகவும் இராணுவ நடவடிக்கையை நடத்துகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

வன்முறை மூலம் தமிழர்களைப் பிரிந்து செல்லத் தூண்டிவிட்டு அந்த வன்முறையைத் தூண்டியவர்களே பிரிவினையைத் தடுக்கிற நிலையையும் உலகம் இன்றைக்கு அறிந்திருக்கிறது.

இப்படியாக இழந்துவிட்ட தனது கருத்து ஆதரவு தளத்தைப் பெறுவதற்காக இப்படியான முயற்சிகள் ஜெனீவா பேச்சுக்களுக்கு சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையிலேயே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெனீவாப் பேச்சுக்களுக்கு எதுவுமே தெரியாதா?

அல்லது

தமிழ் மக்களாகிய நாங்கள் சந்தேகிப்பது போல்-

நீண்டகால நோக்கத்திற்காக-

ஒரு சதித்திட்டத்தை உருவாக்குவதற்காக-

இந்தப் பேச்சுவார்த்தையை மகிந்தர் பயன்படுத்த விரும்புகிறாரா?

இன்றைக்கு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமான கேள்வி இது.

சிங்களத்தில் ஏகோபித்த கருத்தை உருவாக்க விரும்புவதாக மகிந்தர் சொல்லுகிற போது,

எது ஏகோபித்த கருத்து?

தமிழ் மக்களின் தீர்வை வைப்பதற்காகவா?

அல்லது

விடுதலைப் புலிகளின் பலத்தைக் குறைத்து அவர்களைத் தீர்த்துக் கட்டுவதற்காக தீர்வை முன்வைப்பதற்காகவா? ஜெனீவாப் பேச்சுக்குழுவிற்கு இந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

இவை ஒருபுறமிருந்தாலும் கூட நாங்கள் உண்மையிலேயே விரும்புவது என்னவெனில்-

தலைவர் அவர்கள் சொன்னது போல், இந்த வாய்ப்பை சரியாக மகிந்தர் பயன்படுத்தி மனப்பூர்வமாக ஒரு ஒட்டுமொத்தமான தீர்வை நோக்கி நகருவதற்கான வழிவகைக்கான ஒரு முதல் கட்ட நிகழ்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்பதுதான்.

ஆனால் மகிந்தரின் செயற்பாடுகளினால் எங்களுக்கு திரும்ப திரும்ப சந்தேகம் எழுகிறது.

அண்மைக்காலமாக அதிகாரிகள்- அமைச்சர்கள்- தளபதிகளை வைத்துக் கொண்டு நடத்துகிற கூட்டங்களில் மகிந்தர் என்ன செய்ய விரும்புகிறார் என்ற கேள்வி எழுகிறது?

ஒருவேளை சில விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கூடாக மகிந்தர் ஒரு நீண்டகாலமாக விடுதலைப் புலிகளைப் பேச்சு மேசையில் இருக்க வைத்து தான் ஒரு ரணிலாக மாறுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே இத்தகைய தெரிவுகளுக்கூடாகவே எல்லாவற்றுக்கும் முகம் கொடுக்கவே நாங்கள் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லுகிறோம்.

இதனை வியட்நாமின் பட்டறிவு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமாயின்,

"நுணுக்கமாகவும் இறுக்கமாகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு மூல உபாயம் வியட்நாமியத் தரப்பால் பின்பற்றப்பட்டது.

அது எவ்வாறு எனில்,

அரசியல், இராணுவம், இராஜதந்திரம் ஆகிய மூன்றும் நன்றாக ஒன்றிணைக்கப்பட்டு அதனடிப்படையில் நுணுக்கமாகவும் இறுக்கமாகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு மூல உபாயத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மேசையில் வியட்நாம் குழு செயற்பட்டது".

இதுதான் எங்களது தேசியத் தலைவருடைய அற்புதமான திட்டமும்.

அதாவது

தீர்வுக்கு அவர்கள் இணங்கிவந்தால் நாங்களும் தீர்வுக்கு இணங்கி வரத் தயாராக இருக்கிறோம்.

தீர்வாக எங்களைத் தீர்த்துக் கட்ட விரும்பினால் அதற்கும் ஏற்ற வகையில் நாங்கள் செல்கிறோம் என்பதுதான் எங்கள் கருத்தின் பொருளாக அமையும்.

அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சொன்னது போல

மனந்திறந்து, நியாயமான தீர்வை எதிர்பார்த்து பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லுகிறோம் என்பதுதான் தமிழ் மக்களின் கருத்து.

மற்றொரு செய்தியையும் நாங்கள் இங்கே இணைக்கிறோம்.

எம்.ஆர். நாராயணசுவாமி பற்றியது.

எம்.ஆர்.நாராயணசுவாமி எழுதிய ஒரு புத்தகத்தை மகிந்தர் நான்கைந்து முறை வாசித்தாராம். அந்தப் புத்தகத்தை வாங்கி பேச்சுவார்த்தைக்குச் செல்லுகிற சிறிலங்கா அரசாங்கக் குழுவின் 3 பிரதான அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினருக்கும் வழங்கியுள்ளாராம். அந்தப் புத்தகத்தை ஆழமாக வாசிக்கும்படியும் கூறினாராம்.

என்னதான் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்பதுதான் எங்கள் கேள்வி.

அந்தப் புத்தகத்தை நாங்களும் வாங்கி முழுமையாக வாசித்துப் பார்த்தோம்.

ஒரு விடயம் அனைவருக்கும் தெரியும். தேசியத் தலைவரது மனது என்ன என்பதை அறிவது என்பது ஒருவராலும் அறிந்துவிட முடியாத காரியம். அவருடன் இருக்கிற எங்களால் கூட அவரது எண்ணத்தின் வேகத்தை, வீச்சை அறிய முடியாமல் இருக்கிறது.

இப்படியான நிலையில் ஒரே ஒருமுறை தேசியத் தலைவரைச் சந்தித்த நாராயணசுவாமியால் தேசியத் தலைவரைப் பற்றிய கருத்தை முன்வைக்க முடியும் என்று மகிந்தர் நம்பினால் அதுபற்றி எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை.

ஆனால் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிற விடயங்கள் பற்றி நாங்கள் எங்கள் மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

அந்த நூலின் ஆங்கிலத் தலைப்பு: இன்சைட் அண்ட் எலுசிவ் மைண்ட்.

தமிழில் சொல்ல வேண்டுமானால், பிடிபடாத, மர்மமான மனநிலையைக் கொண்டவரின் மனநிலையை அறிய முற்படுகிறேன் என்பதுதான்.

தலைவரது மன நிலையை அறிவது என்பது நடக்காது. அவரது மனநிலையை நீங்கள் தேடிச் சென்றாலும் அவர் தப்பித்துக்கொண்டு முன்னாலே சென்று கொண்டிருப்பார் என்பதுதான் எங்கள் கருத்து.

இந்த மனநிலையை அறிவதற்காகத்தான் அந்த நூலை மகிந்தர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

விற்பனைக்கும் பரபரப்புக்குமான சில குறிப்பிட்ட ஆங்கிலப் பதங்களைப் பயன்படுத்தி குழப்பமான, சந்தேகத்துக்கிடமான, மிக கவர்ச்சிகரமான சில ஆங்கிலத் தொடர்கள் இருக்கின்றன. அவற்றை இந்த நூலில் பயன்படுத்தி எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஒரு மர்மமான, சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் உள்ளடக்கியதாக இருப்பதாக- நாவலாக சித்தரிக்கின்ற அந்த உத்தியை நாங்கள் புறந்தள்ளிவிடுகிறோம்.

சில சமயங்களில் எம்.ஆர்.நாராயணசுவாமி சொல்லக் கூடிய சில கருத்துகள் எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன.

ஒரு தேசிய இனத்தினது சிக்கலை ஒரு புலி இயக்கத்தினது சிக்கலாக மட்டுப்படுத்திச் சொல்லப்படுகின்ற விதம் பெருத்த வேதனை அளிக்கிறது.

உதாரணமாக எங்களை அவர் சொல்லுகின்ற போது,

ஒசாமா பின்லேடன் குண்டுவைக்கும் முன்னரே பிரபாகரன் குண்டுவைக்க அனுப்பினார் என்கிற வகையிலான செய்திகள்,

இயக்கத்தினது புனிதமான கட்டுப்பாடுகளை ஒரு பைத்தியக்கார குழுவினது கட்டுப்பாடுகளுக்கு ஒப்பிட்டுப் பேசுவது

என்று பல்வேறு சொற்பதங்கள் எங்களைப் புண்படுத்தினாலும் கூட அவர் குழப்பமான செய்தியைத்தான் கொடுக்கின்றார்.

அந்த நூலை வாசிக்கும் போது பிரபாகரனின் மனநிலையை அறிவது மிகக் கடினம் என்பதும் அவர் ஒருபோதும் தன் இலட்சியத்தை விட்டு விலகமாட்டார் என்பதும் அந்த நூலில் இன்னொரு வெளிப்பாடாக இருக்கிறது.

இப்படியாக குழப்பமான செய்தியைக் கொடுக்கிற நூலை மகிந்தர் வாங்கிக் கொடுத்திருப்பது மேலும் குழப்பத்தான் செய்யும். அதற்காக மகிந்தரை உண்மையில் பாராட்டுகிறோம்.

அந்த நூலில் இறுதியாக ஒரு வரி வருகிறது.

171 ஆம் பக்கத்தில் கடைசிப் பந்தியாக அது உள்ளது.

"சிறிலங்கா இன்றைக்கு முக்கியமான ஒரு திருப்புமுனையிலே நிற்கின்றது. அது உண்மையிலே நடைமுறைச் சாத்தியமான தீர்வைக் கண்டு ஒரு வளர்ச்சியை நோக்கச் செல்ல விரும்பினால் ஒரு அரசியல் முதிர்ச்சி உள்ள ஒருவேளை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கசப்பான தீர்வாக இருந்தபோதும் கூட அதை எடுக்கக் கூடிய அரசியல் முதிர்ச்சி இந்தத் தலைமையிடம் இருக்கிறதா? இல்லையா?"

என்கிற கேள்வியைத்தான் நாராயணசுவாமி எழுப்பியிருக்கிறார்.

அவர் கடைசியாக சொல்கிற விடயம்

"அந்தத் தீர்வை எடுக்காவிட்டால் என்ன நடக்குமெனில் இந்த சிறிலங்காவின் எதிர்காலம்- 20 மில்லியன் மக்களின் எதிர்காலம்- ஒரே ஒரு மனிதரின் கையில்தான் இருக்கிறது. அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்" என்று கூறியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலம் எப்போது? இன்றைகு 2006 ஆம் ஆண்டு பேச்சுக்குச் செல்லும் போது கூட இதே வரிகளைத்தான் வாசிக்கப் போகிறார்கள் எனில் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்.

உண்மையில் ஒரு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூட அண்மையில் சொல்லியிருக்கிறாராம்.. தங்களுக்கு அளிக்கப்பட்ட கடைசி வாயுப்பு இது என்று.

வரலாற்றில் அளிக்கப்பட்டிருக்கிற கடைசி வாய்ப்பை ஜெனீவாவில் எடுக்க முடியுமென்றில் நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் ஜெனீவாவின் நகரத்துக்கும் புகழ் சேர்க்கும். எங்கள் வரலாற்றிலும் ஜெனீவா ஒரு புகழ்மிக்க நகரமாகப் பதியப்படும்.

ஆனால் அதைவிடுத்து இந்தப் பேச்சுவார்த்தைக் குழுவினது மனநிலையை ஒரு சந்தேகத்துக்கிடமானதாக மாற்றி புலிகளின் உளவியலையும் வலிமையையும் நீண்ட காலத்துக்குப் பேச்சுவார்த்தை மேசை மீது வைத்து இழுத்தடித்து நசுக்குவதற்கான ஒரு தந்திரோபாயமாக ரணில் பயன்படுத்தியது போல் மகிந்தரும் இந்தக் குழுவினருக்கு ஆலோசனைக் குழுவினருக்கு வழங்கினால்-

அதனது விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே நாங்கள் விரும்புகிற விடயம் என்னவெனில்

இந்தத் தீவில் அமைதிக்கான இன்னொரு மேலதிகமான வாய்ப்பு எமது தேசியத் தலைவரால் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வாய்ப்பை சரியான முறையிலே பயன்படுத்திக் கொள்வதற்கான தகைமையைத்தான் பேச்சுக்குச் செல்லும் குழுவினருக்கு இத்தகைய பட்டறைகள் மூலம் ஏற்படுத்த வேண்டும்.

அல்லாமல்

அதுவேறு வழியில் செல்லுமாயின் நிச்சயமாக அதை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதைத்தான் வியட்நாம் பேச்சுவார்த்தைக் குழுவின் பட்டறிவினூடாக இங்கே தெரிவித்தோம் என்றார் க.வே. பாலகுமாரன்.
</b>

http://www.eelampage.com/?cn=24178
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)