Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமாவைப்பற்றி குருதத் - இளையபாரதி
#1
''என்னிடம் அடிக்கடி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது - நல்ல படம் எடுப்பதும் அது வியாபாரம் ஆவதும் சாத்தியமா என்று. 'Classic' என்பதன் முதலெழுத்தும் 'Cash' என்பதன் முதலெழுத்தும் 'C' என்றிருப்பதைத் தவிர வேறு ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்தக் கேள்விக்கு திட்டவட்டமான பதில் சொல்ல முடியாது. கலைக்கும், வர்த்தகத்திற்கும், பரிசோதனைப் படத்திற்கும், வழக்கமான மசாலா படத்திற்கும், கலைப்படத்திற்கும், கமர்ஷியல் படத்திற்கும் வித்தியாசங்கள் நிறைய. திரைப்படம் தயாரிப்பது என்பதே ஒரு சிக்கலான விஷயம். சினிமாவுக்கென்று பிரத்யேகமாக சில சாதக பாதகங்கள் உள்ளன. இதற்கிடையில் ஒரு கலைப் படைப்பை உருவாக்குவதென்பது மற்ற கலைகளை உருவாக்குவதில் உள்ள பிரச்சனைகளையும் போலத்தான். ஒரு உன்னதமான ஓவியமோ, கவிதையோ, கலாசிருஷ்டியோ பாராட்டப்படாமல் போனால் அது யாருடைய தவறு? உன்னத சிருஷ்டியை ரசிக்கத் தெரியாத மக்களின் குற்றமே தவிர, கலைஞனின் தவறு அல்ல. உன்னத திரைப்படம் வர்க்கரீதியாக வெற்றி பெறாவிட்டால் நான் அந்த இயக்குநரைக் குறை கூறமாட்டேன். அதை ரசிக்கத் தெரியாத ரசிகர்களைத்தான் குற்றம் சாட்டுவேன். படத்தின் வெற்றி தோல்வி என்பது ரசிகர்களின் ரசனையைப் பொறுத்தது.

காலங்காலமாக உன்னதப் படைப்புகளைப் படைத்த படைப்பாளிகள் அதற்குக் கொடுத்த விலை கொஞ்சமா?

உலகம் புகழும் கவிஞனாகத் திகழ்ந்த ஹோமர் தன் வாழ்நாளில் பிச்சையெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

ஹோமர் இறந்ததாக ஏழு நகரங்கள் அறிவித்தன. உயிரோடிருக்கையில் ஹோமர் சோற்றுக்கே கஷ்டப்பட்டார்.

தன் வீட்டு வாடகையைக் கொடுப்பதற்காக ''விகார் ஆப் வேக் ஃபீல்ட்'' கையெழுத்துப் பிரதியை கோல்ட்ஸ்மித் விற்றார். தன் எழுத்தை விற்றுக் கிடைத்த பணத்தில்தான் உறவினர் ஒருவரின் ஈமச் சடங்கை ஜான்சன் நடத்தினார். ஓவியங்கள் வரைய வண்ணங்களை வாங்க வக்கின்றி வான்கா அலைந்தான். இராமாயணம் எழுதிய துளசிதாசர் காசுக்குப் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. கபீர்தாஸ் மட்டும் செல்வத்திலா புரண்டான்? வைஷ்ணவ ஜனதோ எழுதிய நர்சிங் மேத்தா 'கேதார்' ராகத்தை அடகு வைத்தார். பிருதிவிராஜ்கபூர் ஆதரிக்க ஆளின்றி தன்னுடைய 'பிருதிவி' தியேட்டர்ஸை மூடவேண்டி வந்தது. வெளிநாட்டினர் விருது கொடுத்து கௌரவித்தபிறகுதான் நம் கலைஞர்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தாகூருக்குகூட இதுதான் அளவுகோல். நோபல்பரிசு என்ற அளவுகோல். வெளிநாட்டினர் கொண்டாடியபிறகே நாம் சத்யஜித்ரேவை அங்கீகரித்தோம். உன்னதங்களுக்குக் கொடுக்கப்பட்ட விலைக்காகவே இந்த உதாரணங்களைச் சொன்னேன். பணத்திற்கும் படைப்புக்கும் இடையிலான உறவைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. அதே சமயத்தில் விக்டர் ஹ்யூகோ, தாமஸ் ஹார்டி, பெர்னார்ட்ஷா, சாமர்செட்மாம் போன்றவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள். பிக்காசோவின் ஒரே ஒரு ஓவியம்கூட பல இலட்ச ரூபாய்க்கு விலைபோனது. அதுவும் அவர் உயிரோடிருக்கும்போதே.

சினிமாவில் 'சைன் ஆப் கிராஸ்', 'பென்ஹர்', 'ஹேம்லெட்', 'ஹெளகிரீன் வாஸ் மை வேலி', 'எசா டு ரிமெம்பர்', 'வுதரிங் ஹைட்ஸ்' போன்ற படங்கள் வசூலைக் குவித்தன. அதேசமயம் சிறந்த திரைப்படங்களான 'கிரேப்ஸ் ஆப் ராத்' (ஸ்டீன்பெக்) 'டெவில்ஸ் டிசைபிள்ஸ்' (பெர்னார்ட்ஷா), 'ஆன்ட்ரோகிளிஸ் அண்ட் தி லயன்' (பெர்னார்ட்ஷா) 'ஓல்ட்மேன் அண்ட் தி சீ' (ஹெமிங்வே) போன்றவை படுதோல்வியைத் தழுவின.

இந்தித் திரைப்படங்களில் 'பாரத் மிலாப்', 'ராம்ராஜ்யா', 'புகார்', 'சிக்கந்தர்', 'ராம்சாஸ்திரி' போன்ற படங்கள் வெற்றிகரமான படங்கள். 'கீதா', சித்ரலேகா', 'விக்கிரமாதித்யா', போன்ற நல்ல படங்கள் தோல்வியடைந்தன. ஒரு படத்தின் வெற்றி தோல்வி மக்களின் செயலால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாத இந்த விளையாட்டில்கூட தங்களின் சுயத்தன்மையை விட்டுக் கொடுக்காத கலைஞர்களும் இந்தத் துறையில் எதிர்நீச்சலிட்டிருக்கிறார்கள். ரவி வர்மாவைப்போல் ராஜவம்சத்தில் பிறந்த பரூவா மக்களின் பக்கம் நின்றார். அவருடைய காலத்தின் சமூக அநீதிகளைத் தன் திரைப்படங்களில் தீவிரமாகப் பதிவு செய்தார். தன் படங்கள் வசூலைக் குவிக்குமா என்பதைக் குறித்து பரூவா அக்கறை கொள்ளவில்லை. தான் என்ன செய்கிறோம் என்பதைத் துணிந்தே செய்தார். படப்பிடிப்பிற்குப் போவதற்கு முன்பே முழுத் திரைக்கதை வசனமும் தயாராக வைத்திருப்பார். லௌகீக உலகில் பரூவா இலட்சியங்களுக்காக வாழ்ந்தார் என்று சொல்ல மாட்டேன். அவருடைய சில திரைக்காவியங்கள் வெற்றியடைந்தன. அற்புதமான படங்களான 'அதிகாரி', 'மன்சில்' போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்தன. இந்தப் படங்களுக்கு உரிய மதிப்பை மக்கள் தரத் தவறினர். இந்தியத் திரை உலகம் பரூவா, தீபக்கி போஸ் போன்றவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. வரலாற்று ஞானமில்லாத இன்றைய இயக்குனர்களோ இந்த சினிமாவுக்கு ஒரு பெருமைக்குரிய நேற்று இல்லை என்பதுபோல் பேசுகின்றனர்.

நியூ தியேட்டர்ஸ், பிரபாத், பாம்பே டாக்கீஸ் போன்ற கம்பெனிகள் நல்ல திரைப்படங்களை எடுத்திருந்தபோதிலும் அவை மூடப்பட்டதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. திரைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் கூட்டத்தில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. போருக்குப் பின்னால் திரைப்படத்திற்குப் பேராதரவு தந்து வந்த மத்தியதர வர்க்கத்திடம் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. உழைக்கும் மக்களும் மேல்தட்டு மக்களுமே இன்றைய திரைப்படங்களின் ரசிகர்கள். இவர்களே ஒரு படத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள்.

இதனைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த நிலையில் நல்ல படம் எடுப்பது அரிதாகி வருகிறது. படத்தயாரிப்புச் செலவில் குறைந்தது 5 லட்சங்களைக் குறைத்தால்தான் சோதனைபூர்வமான படத்தைத் தயாரிக்க முடியும். பெரிய பட்ஜெட்டில், பிரபல நட்சத்திரங்கள், பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்து உருவாக்கும் 80 சதவீத படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைவதில்லை. வசூலைத் தருவதில்லை. ஒரு படமும் வர்த்தக ரீதியாக, வசூல் ரீதியாக வெற்றி பெற பிரபல நட்சத்திரமும், இசையமைப்பாளரும் மட்டும் போதாது. பிரபலங்களால் படங்கள் வெற்றி பெறும் என்பது பிரமை. குறைந்த வெற்றி பெறும் என்பது பிரமை. பெரிய பிரமை. குறைந்த முதலீட்டில் புதிய முயற்சிகளைச் செய்து பார்க்கலாம். கதைக்கும் திரைக்கதைக்கும் அதிக முக்கியத்துவம் தந்து திரைப்பட உலகில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தைப் போக்கலாம். பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க வேண்டுமென்ற மாயையை உடைக்கலாம். இன்றைய திரைப்படப் பாணியை மாற்றலாம். கதையின் உணர்வுபூர்வமான ஓட்டத்தில் பாடல்கள் ஒரு தடைதான். திரைப்பட தயாரிப்பில் பரிசோதனை முயற்சிகளுக்குப் பல இடையூறுகள் வரும். புளித்துப் போன பாணியிலிருந்து மாறுபட்டு ஒரு வித்யாசமான கதையைப் படமாக்க விரும்பினால் அதனை எச்சரிப்பதற்கென்றே இந்தத் திரையுலகில் தீர்க்கதரிசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களின் கூக்குரல் முன் நரிகெட்டது போங்கள். இதனை மீறி நீங்கள் வெற்றியடைந்தால் நல்லது. தவறிப்போய் உங்கள் படம் தோல்வியடைந்துவிட்டால் சகலரும் அறிவுரை கூற வந்துவிடுவார்கள். திரைப்பட ரசிகர்கள் குறிப்பிட்ட கருவை அடிப்படையாகக் கொண்ட கதைகளைத்தான் விரும்பிப்பார்க்கிறார்கள்; வெற்றிப் படமாக்குகிறார்கள். ரசிகர்களுக்கு முதலில் அந்தக் கதை பிடித்திருக்கவேண்டும். சோதனைபூர்வமாக எடுத்த 'பியாசா' வெற்றி பெற்றது. 'காகஸ் கே பூல்' தோல்வி அடைந்தது. 'சாஹிப் பீபி ஒளர் குலாம்' நாவலைப் படமாக்கும் முயற்சியில் நான் இறங்கியபோது திரையுலக தீர்க்கதரிசிகள் என்னைப் பயமுறுத்தினார்கள். 'தன்னுடைய கணவனின் அன்பைப் பெறுவதற்காக மனைவி குடிக்கிறாள்' என்ற காட்சியை ரசிகர்கள் விரும்பவில்லை. நாவலில் இருந்ததை அப்படியே படம் பிடித்திருந்தேன். நானே எதிர்பார்க்காத அளவிற்குப் பத்திரிகைகள் இந்தக் காட்சியைப் பாராட்டி எழுதின. மக்களும் பாராட்டினார்கள். இத்திரைப்படத்தை பம்பாயில் திரையிட்டபோது இரண்டு காட்சிகளை மட்டுமே ரசிகர்கள் விரும்பாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர். அன்பு மிகுதியால் பூத்நாத்தின் மடியில் சோட்டி பஹ¨ தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் காட்சி. இன்னொன்று, 'நான் குடியை முழுதுமாக விட்டுவிடப் போகிறேன். இதுதான் கடைசி முறை; இந்த கடைசிச் சொட்டு மதுவைக் குடிக்க அனுமதியுங்கள்' என்று சோட்டி பஹ¨ தன் கணவனிடம் கெஞ்சும் காட்சி. இந்த இரு காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கிவிட்டோம்.

'அலிபாபா' கதையை என்னுடைய அடுத்த தயாரிப்பாக எடுத்துக் கொண்டுள்ளேன். 'சமூகக் கதைகளை எடுத்துவந்த நீங்கள் அராபிய இரவுகளைப் படம் பிடிக்கப் போகிறீர்களா? என்ன இப்படி தரம் தாழ்ந்துவிட்டீர்கள்?' என்று என்னைக் கேட்கிறார்கள். அலிபாபா கதையையும் இன்றைய சமூக நோக்கில் படமாக்கலாம் என்று ஒவ்வொருவரிடமும் விளக்க வேண்டியுள்ளது. அதில் வரும் பிரதிபிம்பங்கள் இன்றைய நவீன வாழ்வின் வழி நெடுகிலும் காணக்கிடைக்கின்றனர்.

''வெற்றிடத்தில் சிறகடிக்கும் தேவதை'' - ஷெல்லியைப் பற்றி மாத்யூ அர்னால்ட் சொன்னது. இது வழக்கமான பாணியிலிருந்து விலகி திரைப்படம் எடுப்பவர்களுக்கும் பொருந்தும். நீங்கள் எடுக்கும் சினிமாவிற்கு பூங்கொத்தும் கிடைக்கும், கல்லடியும் கிடைக்கும், வசூலும் குவியலாம், தோல்வியும் அடையலாம். எது நடக்கும், எப்படி முடியும் என்று தீர்மானிக்க முடியாத பரபரப்பும், புதிருமே மீண்டும் மீண்டும் சினிமா எடுக்கத் தூண்டுகிறது.''

- இளையபாரதியின் 'குருதத்' புத்தகத்திலிருந்து

வெளியீடு
புதுமைப்பித்தன் பதிப்பகம்
52 முதல் தளம், நான்காவது தெரு,
அஞ்சகம் நகர்,
அசோக் நகர்,
சென்னை-600 083.

நன்றி: அம்பலம்
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)