Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகக்குரல்
#1
28.01.2004
தாயகக்குரல்
சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கூட்டணி உடன்படிக்கை இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்சியாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டணி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சாதகமாக அமையும் என ஒரு பகுதியினர் கருத, அரசு சார்பானவர்கள் இந்தக் கூட்டணி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கும் எனக்கருத்து தெரிவிக்கின்றனர். ஐ.தே.கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்தக் கூட்டணிக்கு எதிராக வைக்கும் விமர்சனங்களே தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தை பெறுகின்றன.
இலங்கை அரசியலில் ஜே.வி.பி. பலமான சக்தியாக வளர்ந்து வருவதை யாரும் மறுக்கமுடியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையும், வெளிநாட்டுக் கொள்கையும் இலங்கையின் தேசிய நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என நடுநிலை அரசியல் ஆய்வாளர்களும், இடதுசாரிகளும்; எச்சரித்து வருகின்ற நிலையில் ஜே.வி.பி. நாடு முழுவதும் அமைப்பு ரீதியாக இதை மக்களிடம் எடுத்துச் செல்கின்றது. இந்த நாட்டின் தேசிய வளங்களை அரசு தனியாருக்கு விற்பனை செய்தல், இலாபத்தில் இயங்கும் தொழில் நிறுவனங்களை மலிவு விலைக்கு விற்றல் போன்ற நடவடிக்கைகளை ஜே.வி.பி. புள்ளி விபரங்களுடன் மக்களுக்கு பகிரங்கப் படுத்துவதுடன் கடுமையாக எதிர்த்தும் வந்துள்ளனர். இந்த அரசு ஆட்சியமைத்த குறுகிய காலத்துக்குள் இந்த அரசின் மேல் சுமத்தப்பட்டுவரும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அளவுக்கு இதுவரை இலங்கை அரசியல் வரலாற்றில் வேறெந்த அரசின்மேலும் சுமத்தப்படவில்லை எனலாம். இந்த ஊழல்களை எல்லாம் ஜே.வி.பி பட்டியலிட்டு காட்டிவந்த போதிலும் அரசு அக்கறை கொள்ளவில்லை. ஆனால் இப்போது சுதந்திரக்கட்சியுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைத்தவுடன் ஐ.தே.கட்சியின் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளமை தெரிகிறது.
சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஜே.வி.பி. கடந்த காலங்களில் வெளியிட்ட கருத்துக்களையும் செயற்பாடுகளையும் காரணம் காட்டி சுதந்திரக்கட்சி - ஜே.வி.பி. கூட்டணி சமாதானத்துக்கு சாவுமணி அடிக்கும் கூட்டென தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டித்து வருகிறது. சமாதானப் பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என இந்தக் கூட்டணி தமது பிரகடனத்தில் தெரிவித்த பின்னரும் கடந்த கால செயற்பாடுகளை காரணம் காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பது அரசாங்கத்தை திருப்தி செய்யும் செயலாகவே கருதவேண்டியுள்ளது.
நிரந்தர தீர்வுக்கு எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பது சர்வதேசம் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்பதை அரசாங்கமும் எதிர்கட்சியான பொ.ஐ.முன்னணியும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளன. தெற்கில் பலம் வாய்ந்த சக்தியாக வளர்ந்து வரும் ஜே.வி.பி.யும் சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்த பின்னர் நடைபெற்ற அதன் முதலாவது ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர்கள் கூட்டாக விடுத்;த செய்தியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் புலிகளுடன் மட்டுமல்ல மேற்படி பிரச்சினையோடு தொடர்புடைய அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன் அனைத்து கட்சிகளினதும், இனங்களினதும் அரசியல் , ஜனநாக உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதென சுதந்திரக்கட்சி - ஜே.வி.பி. கூட்டணி திடசங்கற்பம் புூண்டுள்ளதாக கதிர்காமர் தெரிவித்துள்ளார். அத்துடன் புலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகசபை திட்டவரைவு யோசனைகள் குறித்தும் ஆராயப்படவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் புலிகளை ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளாத எவருடனும் புலிகள் பேச்சு நடத்தமாட்டார்கள் எனத் தெரிவித்ததுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வதற்கு இலங்கை அரசின் சார்பில் ஒரு குழு இந்தியா சென்றது பற்றி குறிப்பிடுகையில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ் கட்சிகள் தென்னிலங்கை அரசியல் மாற்றங்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எப்படி சாதகமாக மாற்றலாம் என சிந்திப்பதை விட்டு அரசு செய்வதெல்லாம் சரி, எதிர்கட்சிகள் செய்வதெல்லாம் தவறு என அரசுக்கு வக்காலத்து வாங்குவதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஜே.வி.பி.யின் கடந்த கால நடவடிக்கைகளை காரணம் காட்டி அவர்கள் சமாதானத்துக் எதிரிகள் எனக் கூறுவதானால் ஐ.தே.கட்சியை எப்படி தமிழ் மக்கள் நம்பமுடியும். இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது ஐ.தே.கட்சியினாலேயே என்பதை யாரும் மறுக்கவோ அல்லது மறந்துவிடவோ முடியாது.
1944 ம் ஆண்டிலேயே சிங்களம் அரகரும மொழியாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சட்டசபையில் ஜே.ஆர் முன்வைத்தார். ஆனால்அப்போது அதை சட்சபை நிராகரித்து விட்டது.
1956 பெப்ரவரி களனியில் நடைபெற்ற ஐ.தே.கட்சியின் வருடாந்த மகாநாட்டில் தனிச்சிங்களச் சட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1956 யுூன் மாதம் சுதந்திரக்கட்சி கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டத்தை ஐ.தே.கட்சியும் ஆதரித்தது.
அதுமட்டுமல்ல 58 கலவரத்தின் பின்னர் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியே காரணமாயிருந்ததை நாடறியும். குறிப்பாக 83 யுூலை கலவரத்தை தமிழ் தலைவர்கள் மறந்தாலும் தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை.
முதல் முதலாக 1995 ல் பொ.ஜ.முன்னணி தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்தது. அப்போது எதிர்கட்சியாக இருந்த ஐ.தே.கட்சி அந்த தீர்வுப் பொதியில் சிறுபான்மையினருக்கு சாதகமான பல அம்சங்கள் இருப்பதாக கூறி அதை எதிர்த்தது. பின்னர் அந்த தீர்வுப் பொதிக்கு ஐ.தே.கட்சி பல திருத்தங்களைக் கொண்டு வந்தபோது அதை ஏற்று அந்த திருத்தங்களுடன் 2000 ஆம் ஆண்டில் பொ.ஐ.முன்னணி அதை பாராளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த தீர்வுப் பொதியையும் ஐ.தே.கட்சி பாராளுமன்றத்தில் கிழித்தும் அதை எரித்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். அப்போது அதை எதிர்க்க ஐ.தே.கட்சி கூறிய காரணம், பொ.ஐ.முன்னணி வைத்த அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான தீர்வுப் பொதி மத்திய அரசை பலவீனப்படுத்தும் என்பதாகும். அதாவது பாராளுமன்றம் சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கவேண்டும் என்பதே ஐ.தே.கட்சியின் நிலைப்பாடாகும். இப்போதும் ஒற்றையாட்சி அமைப்பினுள் தீர்வு காண்பதே அவர்கள் நிலைப்பாடாக இருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழ் தலைவர்கள் பொ.ஐ.முன்னணியை எதிர்ப்பதற்காக ஐ. தே.கட்சியுடன் கைகோர்த்தனர். பொ.ஐ.முன்னணி அரசை வீழ்த்துவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ;.பி.ஆர்.எல்.எவ். சுரேஸ் அணி ஆகியன ஐ.தே.கட்சியுடனும் ஜே.வி.பி. யுடனும் கைகோர்த்து தெற்கில் நடைபெற்ற அரசியல் மேடைகளில் ஏறியதுடன் அரசின் மேல் நம்பிக்கை இல்லாப்பிரேரணையும் கொண்டுவர கூட்டாக கையெழுத்திட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அப்போதெல்லாம் இனவாதக்கட்சியாக தோன்றாத ஜே.வி.பி.யை இப்போது இனவாதக் கட்சி என கூச்சலிடுகின்றனர்.
ஜனாதிபதி மூன்று அமைச்சுக்களை பொறுப்பேற்றதால்தான் சமாதானப்பேச்சு தொடரவில்லை என்ற கருத்தை ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் திரும்ப திரும்ப கூறிவருகின்றனர். புலிகளுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்பட்ட பின்னர் நோர்வே அனுசரணையுடன் இருதரப்பினருக்குமிடையில் 6 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என குற்றம் சாட்டி புலிகள் 2003 ஏப்ரல் மாதத்திலேயே பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக்கொண்டனர். ஆனால் அதன் பின் 6மாதம் கடந்து 2003 நவம்பர் மாத்திலேயே ஜனாதிபதி மூன்று அமைச்சுக்களையும் பொறுப்பேற்றார் இந்த அமைச்சுக்களை ஜனாதிபதி பொறுப்பேற்றதால் பேச்சுவார்தையில் தடங்கல்கள் ஏற்படுமா? இல்லையா? என்பதெல்லாம் பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர் தெளிவடைய வேண்டிய விடயம். எனவே நின்று போன பேச்சுவார்த்தையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்க அரசை நிர்ப்பந்திப்பதுதான் இப்போது தமிழ் தலைவர்களின் முதல் கடமையாகும்.
மேலும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டுமானால் தமிழ் கட்சிகள் தென்னிலங்கை கட்சிகளுடன் சுமுகமான உறவை வலுப்படுத்தி இனப்பிரச்சினை தீர்வுக்கு அவர்களின் ஆதரவை திரட்டவேண்டும். எதிர்கட்சிகளை திட்டித்தீர்ப்;பதன்மூலம் அரசாங்கத்திடம் சபாஷ் பெற்றால் மட்டும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. தமிழ் தலைவர்கள் தீர்க்கதரிசனத்தோடு முடிவுகளை எடுக்கத் தவறினால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே இருக்கும்.
நன்றி : balasooriyan@yahoo.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)