Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழனுக்கு இனி திசைகள் நான்கல்ல; நாலாயிரம்.
#1
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_paries.jpeg' border='0' alt='user posted image'>


<span style='font-size:21pt;line-height:100%'>
பாரீஸ் _ என் இளம்பிராயத்தின் கனவுகளைக் கட்டிய நகரம். நான் பாண்டிச்சேரியில் பிறந்தவன். 'கஃபே' (காபி), 'ரிதோ' (திரைச்சீலை), 'ஷொக்ளா' (சாக்லெட்) என்று பல பிரெஞ்சு வார்த்தைகள் என் தாயின் நாவில் அன்றாடம் புரளும். இப்படித்தான் 'பரி' என்ற பிரெஞ்சு உச்சரிப்பில் பாரீஸ் நகரம் எனக்கு அறிமுகமானது. நான் வளர வளர எனது கனவு நகரத்தைப் பலமுறை கலைத்துப் போட்டிருக்கிறேன். எனது வாசிப்பின் எல்லைகள் விரிய விரிய, பாரீஸ் நகரம் எனது விருப்பத்திற்கேற்ப மறுபடி தன்னைக் கட்டியெழுப்பிக் கொண்டது. திடீரென்று ஒருநாள் நான் பாரீஸ் நகரத்தில், ரத்தமும் சதையுமாகச் சென்று நின்றபோது, எனது கனவுக்குள் நான் நுழைந்துவிட்டதாக உணர்ந்தேன். 'ஐரோப்பாவின் பண்பாட்டுத் தலைநகரம்', 'ஷாப்பிங் இன் மெக்கா, வெளிச்ச நகரம், காதலின் நகரம், கண்ணுக்குப் புலப்படாத நகரம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட பாரீஸ், என்னைப் பொறுத்தமட்டிலும் என் விளையாட்டுத் தோழன்.

புரட்சிகள், முரண்பாடுகள், காதல், வீரம் என்று இரண்டாயிரம் ஆண்டுக்கால வரலாற்றைச் சுமந்துகொண்டு ஒன்றும் தெரியாததுபோல் நகர்ந்து கொண்டிருந்தது நகரம். என்னை வரவேற்க வந்திருந்த எனது சகோதரர் மூர்த்தி எழாபேன் என் கையைப் பிடித்துக் குலுக்கினார். அப்போதும் நான் கனவிலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை. வான்கோ, பிகாசோ, சார்த்ரூ, காம்யூ, பாதலேர், ரைம்போ, ஃபூக்கோ, தெரிதா என்று... உலகத்தின் சிந்தனை நதியில் சுழல்களை உருவாக்கிய மேதைகளின் ஞாபகங்களின் கீழே நசுங்கிக் கொண்டிருந்தேன் நான். வெளியே மழைத்தூறல். என்னை காரில் ஏற்றிக்கொண்டு சென்றபோது எனது சகோதரர் சொன்னார், \"உன்னால் பாரீசைப் புரிந்துகொள்ள முடியாது. அது ஒரு புதிர். இருபது நாட்களானாலும், இருபது ஆண்டுகளானாலும் பாரீசைப் புரிந்து கொள்ள முடியாது. இதன் சீதோஷ்ண நிலையைப் பார். நாங்கள் இதை பைத்தியக்கார சீதோஷ்ண நிலை என்று சொல்வோம்.\" போகிற வழியில் பிப்ரவரி மாதத்து மழை வலுத்துவிட்டது.

எனக்கு பிரெஞ்சுக்கவி பாதெலெரின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வந்தன:

பிப்ரவரி மாதம்
பாரீசின்மீது சீறிப்பாய்கிறது.
இருண்ட மழையையும்
உயிரை வாங்கும் குளிரையும்
பக்கத்திலிருக்கும்
புதைகுழிகளை வாடகைக்கு விடுபவர்கள்மீதும்
மூடுபனியுள் மறையும்
புற நகரங்களில் வாடகைக்கு இருப்பவர் மீதும்
வாரித்தெறிக்கிறது.
வீட்டின் தரையில் பரவியிருக்கும் கற்கள்
எனது பூனை
தனது உடம்பை வசதியாக வைத்துக்கொள்ள
உகந்ததாக இல்லை.
யாரோ ஒரு பழைய கவிஞரின் ஆவி
சாக்கடையில் சென்று தங்கி
ஒரு பேய்கூட குளிரை வெறுக்கும் என்று
சொல்வதுபோல ஊளையிடுகிறது.

பாதலேர் பிறந்து, ஓர் எழுத்தாளனாக வாழ்ந்து, நிறைய கடன் சுமையும் மேக நோயும் பெற்ற நகரம் இது. அவரைத் திருத்துவதற்காக அவரது பெற்றோர் கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பினார்கள். ஆனால், அவர் கப்பலிலிருந்து தப்பி மீண்டும் பாரீசுக்கே வந்தார். திரும்பி வந்த அவருக்கு நிறைய சொத்து கிடைத்தது. ஆர்ட்காலரிகளிலும் கேஃப்களிலும் காலம் கழித்தார். பிரெஞ்சுக் கவிதையைத் திசை திருப்பினார். முந்தைய ரொமாண்டிக் கவிஞர்கள் போலல்லாமல் இந்த பாரீஸ் நகரத்திலிருந்தே தன் கவிதைக்கான உத்வேகத்தைப் பெற்றார். கவிதைத்தனமில்லாத சூழல்களிலிருந்தும் அழகை உருவாக்க வேண்டும் என்று வாதிட்டார். இவரது கவிதைகள் நகரத்தின் அழகையும், அழிவையும் ஒரே நேரத்தில் பதிவு செய்தன. ஆனாலும், அவரை அவர் காலத்தில், 'சபிக்கப்பட்ட கவிஞன்' என்றுதான் சொன்னார்கள்.

மாறாக, அவரது கவிதையினால் பாதிக்கப்பட்டு பிரெஞ்சுக் கவிஞர்கள் பலர் தோன்றினார்கள். குறிப்பாக, ஸ்டீஃபன் மல்லார்ம். தூய கவிதையின் எடுத்துக்காட்டு இவர். \"யதார்த்தத்தின் பின்னால் ஏதுமில்லை. ஆனால், இந்த ஏதுமற்ற சூன்யத்தில்தான் சுருதி சுத்தமான வடிவத்தின் சாரம் இருக்கிறது. இந்த சாரத்தை ஒரு திட வடிவமாக்குவதுதான் கவிஞனின் கடமை\" என்று பேசிய மல்லார்ம், ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.எஸ். எலியட் போன்றவர்களையெல்லாம் தனது தூய கவிதையால் பாதித்தார். ஆன்டிரி கைட், பால் வெலேரி போன்ற பிரெஞ்சுக் கவிஞர்கள் இவரைச் சூழ்ந்திருந்தார்கள். குட்டி போட்டு பால் கொடுக்கும் ஒரு விலங்கைப்போல பாரீஸ் நகரம் இவர்களை ஈன்று வளர்த்தெடுத்திருக்கிறது.

பாரீஸ் நகரத்தை ஒரு விலங்கு என்று சொன்னதற்கு ஒரு காரணமிருக்கிறது. நான் தங்கிய சில நாள்களில் எனக்கு தரிசனம் கொடுத்த பாரீஸ் அத்தகையதாகத்தான் எனக்குத் தோன்றியது. வைகறைக்கு முன்னால் செய்ன் நதியிலிருந்து மூடுபனி நகரத்துக்குள் நுழைந்து, பாலங்களையும், விளக்குக் கம்பங்களையும் தாண்டி ஊடுருவுகிறபோது கவர்ச்சியாகத்தான் தெரிகிறது. பகல் நேரங்களில் _ குறிப்பாக மழை பெய்யும் நேரங்களில் _ சலோன்களில் தேனீர் அருந்திக்கொண்டும், மாலை நேரங்களில் பியோனா பார்களில் விஸ்கியை உறிஞ்சிக் கொண்டும் ஓவியர்களும், கவிஞர்களும், நாடகக்காரர்களும், இசைவாணர்களும், இவர்களை ரசிப்பவர்களும் வாழ்க்கையை ரசித்துவிட்டு, இரவிலும் இன்னும் வாழ்க்கை எஞ்சியிருக்கிறது என்று அதை சுவைக்கத் தொடங்குகையில் பாரீஸ் வெளிச்ச நகரம்தான்.

ஆனால், எனக்கு நெருங்கிய பெண் ஓவிய சேகரிப்பாளர் சோஃப்பி லிஸ்காட் பாரீசின் மற்றொரு முகத்தை எனக்கு விளக்கிக் காட்டினார். அந்த நகரத்திலேயே பிறந்து வளர்ந்த அவரது இளமைக்காலத்து பாரீஸ் நகரம் இன்று தளர்ந்துபோய் நிற்பதாகக் குறிப்பிட்டார். இந்த நகரம் இன்று போக்குவரத்து நெரிசலிலும், மாசடைந்த நிலையிலும், கும்பல் கும்பலாக மக்கள் ஈடுபடும் வன்முறைகளிலும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பரந்து கிடக்கும் வேலையில்லா திண்டாட்டத்திலும் கிடந்து தவிப்பதாகச் சொல்லிப் புலம்பினார்.

இதை நான் எனது குறுகிய காலத்திலேயே உணர முடிந்தது. உன்னதமான நாட்டர் டாம் தேவாலயத்தைப் பார்க்கச் சென்றபோது அந்தப் பகுதி, பேருந்துகளாலும் கார்களின் நிறுத்தல்களாலும் அழகு குலைந்திருந்தது. ஹாம்பர்கள் விற்பவர்களால் நிரம்பி வழிகிறது கடற்கரை. டூரிஸ்ட் படகுகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க அரை டஜன் மொழிகளில் கத்துகிறார்கள் மனிதர்கள். ஆனால் பாரீஸ் நகரத்தின் அக்கறை எல்லையற்றது.

இதனால்தான் ஸ்பெயினிலிருந்து தன்னை நோக்கி வந்த ஓவிய மேதை பிகாசோவையும், ஹாலந்திலிருந்து வந்த வின்சென்ட் வான்கோவையும், ரஷ்யாவிலிருந்து வந்த மார்க் ஷேகலையும் (Mare Chagall) அணைத்து அவர்களை வளர்த்தெடுத்தது பாரீஸ். பிகாசோ பாரீஸ் வந்த பிறகுதான் ஜியார்ஜ் பிரேக் (1882_1963) எனும் ஓவியருடன் சேர்ந்து ஓவிய வடிவங்களில் புதிய பரிமாணங்களைத் தேடினார். பிரேக் தீட்டிய இயற்கைக் காட்சி ஓவியம் ஒன்றை விளக்கி எழுதியபோதுதான் ஹென்றி மத்தீஸ் (1869_1964) எனும் ஓவியர் 'கியூபிசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இவர்தான் கேன்வாஸின் மீது வண்ணங்களை அவற்றின் டியூபிலிருந்தே நேரிடையாகப் பூசும் முறையைக் கொண்டு வந்தார். 'ஃபாவிசம்' (Fawuism) தோன்றியது. மார்ஷல் டுஷாம்ப் 'டாடாயிசம்' என்பதையும், ஆன்ட்ரே பிரிட்டன் 'சர்ரியலிசம்' என்பதையும் முன் வைத்து வளர்த்தது இந்த நகரத்தில்தான்.

பாரீஸ் எனக்கு மிகவும் சுவாரசியமாகத் தெரிந்ததற்குக் காரணம், அது தனது மரபான பழமையை விடாமல் கையில் பிடித்துக்கொண்டிருக்கிற அதே நேரத்தில், அதிநல்ல புதுமைக்கும் இடம் கொடுக்கிறது என்பதுதான்.

இதை உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான 'லூர்' (Louvre) கட்டடத்தைப் பார்க்கிற எவரும் உணர்ந்துகொள்ளலாம். கடந்த எட்டு நூற்றாண்டுகளாக நிலை கொண்டிருக்கும் இக்கட்டடம் உண்மையில் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டு பிறகு அரண்மனையாகப் பயன்பட்டது. ஆனால், இத்தகைய வரலாற்றுப்பழமை கொண்ட ஒரு கட்டடம் இன்று லூர் மியூசியமாகத் திகழ்கிறது. இந்தப் பழமையைப் பாதுகாக்கிற அதே நேரத்தில், இதன் நுழைவாயிலின் முன்னால் 1981_ல் மிஸ் பை எனும் நவீன கட்டடக் கலைஞரால் கண்ணாடியும், ஸ்டீலும், கேபிளும் கொண்டு அதிநவீன பிரமிட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்த அருங்காட்சியகம் பழமைக்கும் புதுமைக்கும் ஒரே நேரத்தில் இடம் கொடுத்துக்கொண்டு கம்பீரமாய் நிற்கிறது.

உலகப் புகழ்பெற்ற 'மோனலிசா' ஓவியத்திலிருந்து பளிங்குச் சிற்பம் 'வீனஸ்' வரை உன்னதமான கலைப் படைப்புகளைத் தாங்கி நிற்கிறது லூர்.

பாம்பிடோ மையம், உலகின் நவீன படைப்புகளையெல்லாம் திறந்த கண்களுடன் ஊக்கப்படுத்தி நிற்கிறது. உலகின் பல கோடிகளிலிருந்து வந்த கலை ஆர்வலர்கள் இவற்றை ரசிப்பதைப் பார்க்கிறபோது Êஏனோ என் மனம் சற்று நிம்மதியிழந்து தவித்தது. லூர் மியூசியத்தின் உன்னதமான சேகரிப்புகளைக் காண்கிறபோது எனது மனம் 1943_ஆம் ஆண்டின் மே மாதம் 27_ஆம் நாளுக்குப் பின்னோக்கிச் சென்றது.

அன்றுதான் பாரீசுக்குள் நுழைந்த ஹிட்லரின் படைகள் பிகாசோ, எர்னஸ்ட், க்ளி, மிரோ போன்ற உன்னதமான ஓவியர்களின் ஆயிரக்கணக்கான ஓவியங்களை தீக்கிரையாக்கின. அந்தத் தீ தின்று மீந்த படைப்புகள்தான் இன்று லூர் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஹிட்லரின் படை உள் நுழையப்போகிறது என்று தெரிந்தவுடனேயே லூர் அருங்காட்சியகப் படைப்புகள் பாரீசின் நிலவறைகளுக்குள் சென்று பதுங்கிவிட்டன. இவ்வாறு உலகின் உன்னத கலைப்பொக்கிஷங்களைக் காப்பாற்றியதால்தான் அது ஐரோப்பிய பண்பாட்டின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

என் வாழ்க்கையில் நான் கண்டு என் உயிருக்குள் ரசித்த இயற்கைக் காட்சி... உலக அதிசயங்களில் ஒன்றெனப் புகழப்படும் ஈஃபிள் கோபுரத்தின்மீது பௌர்ணமி முழுநிலவு ஒளிர்ந்த காட்சி. ஈஃபிள் கோபுரத்தின் பிரமாண்டத்தில் எனது சிறுமையை உணர்ந்த அதே நேரத்தில், அதன் லிஃப்டில் ஏறி மேலே சென்றபோது நான் கண்ட காட்சி என்னை மெய்மறக்கச் செய்தது. மொத்த பாரீஸ் நகரமும் எனக்குக் கீழே. பௌர்ணமி நிலவின் பால்வெளிச்சத்தில் நனைந்துகொண்டு, எனது இளமைக்காலம் தொட்டு எனது விளையாட்டு பொம்மையாய் இருந்து வந்த ஈஃபிள் கோபுரம் இன்றைக்கு எனது விசாலப் பார்வைக்கு ஒரு விருந்தாயிற்று. இரும்பும், ஆணியும் கொண்டு எழுப்பப்பட்ட ஈஃபிள் கோபுரமும் நிலவும் ஒரு புதிய இயந்திர அழகியல் உணர்வை எனக்கு ஊட்டின. நான் என்னை ஒரு கவிஞனாக உணர்ந்தேன்.

இன்று பாரீஸ் நகரத் தெருக்களில் ஏராளமான தமிழர்களைப் பார்க்கிறேன். தமிழ்ப் பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களைப் பார்க்கிறேன். தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்ப்பு செய்து தரும், 'மொழி பெயர்ப்புக் கடை' என்ற ஒன்றை கவிஞர் கி.பி. அரவிந்தன் எனக்குக் காட்டியபோது வியந்து போனேன்.

என் கனவு நகரத்தின் காற்றில் தமிழின் ஓசையும் கலந்திருப்பது என் இதயத்தைக் குளிர்வித்தது. குறிப்பாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் பாரீஸ் நகரில் இன்று அதிகரித்துள்ளனர்.

எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை விமர்சனம், தத்துவம், கோட்பாடு ஆகியவை பாரீசின் இலக்கியத்தின் மீது நிறைய செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. சம்பிரதாய முறையில் கதை சொல்லுதலை கேள்விக்குள்ளாக்கிய \"nouvean roman' 'புதுநாவல்' எனும் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. கவிதையின் எல்லைகள் விசாலப்படுத்தப்பட்டுள்ளன.

பரிசோதனைக்கான சுதந்திரக் காற்றை பாரீஸ் நகரத் தமிழர்கள் சுவாசிக்கையில், நவீனத் தமிழுக்கு ஒரு புத்துயிர் ஊட்டப்படுமென உணர்ந்தேன்.

எனது ஐரோப்பிய கலைப்பயணம் எனக்குச் சொன்னதெல்லாம் இதுதான்: தமிழனுக்கு இனி திசைகள் நான்கல்ல; நாலாயிரம்.</span>

தீராநதி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)