Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகுத்தறிவு வழியில் நடப்பதற்கு சுயசிந்தனை அவசியமாகும்
#1
<i>கடவுள் இருக்கின்றார் என்ற நிலைப்பாட்டுக்கு தான் உடன்பாடானவனல்ல என்று வலியுறுத்திக் கூறும் பகுத்தறிவு வாதியான வேலனை வீரசிங்கம் அதற்காக கடவுள் கொள்கையுடையவர்களுக்கு விரோதியல்ல எனவும் தெரிவிக்கின்றார்.

பகுத்தறிவுப் பாதையிலும் மனித நேயத்துடனும் ஒரு நீண்ட பயணத்தை தொடர்ந்து வரும் பிரவுண்ஸன் இன்டஸ்ரீஸ் என்ற தொழில் நிறுவனத்தை நடத்தி வந்த வேலணை வீரசிங்கத்துடன் ஒரு காலைப் பொழுதுச் சந்திப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். சுமார் இரண்டு மணிநேரம் அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

மனிதநேயத்துடன் எவரது மனமும் புண்படாத வகையில் நடந்து கொள்ளும் ஒரு மானுட நேயனுடனான சந்திப்பை ஏற்படுத்திக் கொண்ட மன உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு இஸ்லாமியனாக இருந்த போதிலும் எனது மன உணர்வுகளுக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படாத விதத்தில் தனது பகுத்தறிவுக் கொள்கை நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

இனி வேலணை வீரசிங்கத்தின் தனது பகுத்தறிவு நிலைப்பாடுகளை அவர் மூலமாகவே நோக்குவோம்.</i>


1955 ஆம் ஆண்டில் பகுத்தறிவு இயக்கத்தை ஆரம்பித்தேன். அக்காலகட்டத்தில் மறைந்த நண்பரும் பத்திரிகையாளருமான எஸ்.டி.சிவநாயகமும் எம்மோடு சேர்ந்து செயற்பட்டார். பிற்பட்ட காலத்தில் அவர் சாயி பக்தனாக மாறினார். எனினும், எம்முடனான அவரது தொடர்பு நீடித்து வந்தது. அத்துடன் என்னோடு வேறு பலரும் இணைந்து இயங்கினர்.

என்னைப் பொறுத்த மட்டில் கடவுள் நம்பிக்கையை விட சுயமாக சிந்தித்து முன்னேற முடியுமென்ற உறுதியான நம்பிக்கையுடன் செயற்படுவதில் வெற்றியும் கண்டவன் நான். சுயமான சிந்தனை வெற்றி பெற வேண்டுமானால் மனக் கட்டுப்பாடு மிக முக்கியமானதாகும்.

இலங்கையில் ஆபிரகாம் கோவூர், தமிழகத்தில் ஈவேரா பெரியார், வீரமணி போன்றோரின் தொடர்பு, கலைஞர் மு.கருணாநிதியின் நட்பும் பகுத்தறிவுக் கொள்கையும் தான் நான் மேலோங்குவதற்குக் காரணமாக அமைந்தன.

மனிதனது பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதில் கடவுள் நம்பிக்கை முட்டுக்கட்டையாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். மனோதத்துவ ரீதியில் பரிகாரம் தேடிக் கொள்ள முடியும் என்ற கோவூரின் நிலைப்பாடு சரியானதாகவே நம்புகிறேன். மனத் தூய்மையுடனும் உண்மையுடனும் செயற்பட்டால் எதிலும் வெற்றி கொள்ளலாம். கொடுத்த வாக்குறுதி உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். சந்தர்ப்பத்துக்கேற்ற விதத்தில் அவை மாறக் கூடாது.

மற்றவர்களின் குறைகளைத் தேடுவதை தவிர்த்து, நாம் நேர்மையுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு வழியில் நடப்பதென்பது கஷ்டமானதொரு காரியம்தான். அதற்கு சுயமான சிந்தனை மிக முக்கியமான தொன்றாகும். உலகில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிவுக் கொள்கையுடையவர்களாகவே காணப்படுகின்றனர். இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் குடும்பம் கூட பகுத்தறிவுக் கொள்கையை கடைப்பிடித்தவர்கள்தான்.

தமிழ் மக்கள் மத்தியில் மூடக் கொள்கைகள் இன்றும் கூட தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. சாஸ்திர முறைப்படி எண் சோதிடம் பார்த்தல், அர்த்தம் புரியாத வகையில் பெயர் சூட்டப்படுவது தமிழுக்கே பொருத்தமற்ற விதத்தில் பெயர்களை வைத்தல் போன்றவை தொடர்ந்த வண்ணமே உள்ளன. சாஸ்திரம், சோதிடத்தை நம்புகிறார்கள் தன்னம்பிக்கையில் தயக்கம் கொள்கின்றனர். மனிதனது வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை பிரதானமானது என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

இந்தியாவில் பெரியாரின் திராவிடர் கழகம் மட்டும்தான் பகுத்தறிவுக் கொள்கை இயக்கம் என்று சொல்ல முடியாது. அங்கு பகுத்தறிவு இயக்கங்கள் நிறையவே இருந்தன. இன்றும் இருக்கவே செய்கின்றன. கலைஞர் கருணாநிதி கூட பகுத்தறிவு வாதியாகவே காணப்படுகிறார். ஆனால், காலப்போக்கில் அவரது அரசியல் காரணமாக அக்கொள்கையில் தளர்வு ஏற்பட்டது. தமிழக அசியல் மாற்றத்துக்கு அமைய பிற்பட்ட காலத்தில் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கை மாற்றம் அவரிடம் ஏற்பட்டது.

மனிதர்களிடத்தில் நட்பு வளர்க்கப்பட வேண்டும். நாம் பலவிதமான போக்குகளைக் கொண்டோருடன் பழக நேரிடுகின்றது. அவர்களுடன் ஒத்துப் போகப் பழகிக் கொள்வதும் கூட பகுத்தறிவுக் கொள்கையில் ஒரு அம்சமாகும். கடவுள் கொள்கை உடையவர்களுக்கு நான் விரோதியில்லை. ஆனால், கடவுள் இருக்கின்றார் என்ற கொள்கைக்கு நான் உடன்பாடில்லாதவன்.

எனது ஆசைகளைப்பற்றி மட்டும் நான் சிந்திக்க முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்திலிருந்து நாம் பிரிந்து நிற்க முடியாது. சமூக மட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் சுதந்திரம் இருக்க வேண்டும். விட்டுக் கொடுப்புடன் செயற்படுவது மிக முக்கியமானதாகும். இதுவும் பகுத்தறிவுக் கொள்கையின் மற்றொரு அம்சமாகும்.

சித்தர், விவேகானந்தர், இயேசு நாதர், நபிகள் நாயகம் போன்றோரின் போதனைகளின்படி மனித சமுதாயம் செயற்படவோ, முழுமையாக சிந்திக்கவோ தவறியதன் காரணமாகவே உலகில் மதவெறி தாண்டவமாடுகின்றது. மானிடநேயத்துடன் எமது எண்ணங்கள் அமையுமானால் இந்த மாதிரி வெறித் தனங்கள் ஒரு போதும் ஏற்படப் போவதில்லை.

பௌத்தம் கூட கடவுள் கொள்கையை மறுக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது இன்று போதை போன்றாகியுள்ளது. இது தான் மனித அழிவுகளுக்கு மூலப் பொருளாகிக் கூட அமைந்து காணப்படுகிறது.

இந்து சமயம் கூட இன்று வர்த்தகப் பொருளாக மாறிப் போயுள்ளது. மதத்தின் பெயரால் உலகம் வர்த்தக மயமாக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள் சந்தைப் பொருளாகி மாற்றம் கண்டுள்ளன. குருமார் சமயத்தை காட்டி பணம் பண்ணுவதிலேயே கரிசனை காட்டி வருவதாகவே நோக்க முடிகிறது. இன்னொரு விதமாகப் பார்க்கம் போது மனித சமுதாயம் மூட நம்பிக்கை எனும் இருளுக்குள் சிக்குண்டு போயுள்ளது.

மனிதன் வாழ்வதற்கு பொருளாதாரம் தேவைதான். ஆனால், அது தான் வாழ்க்கையாகிவிடக் கூடாது. தேடிய பொருளை முடக்கி வைப்பதல்ல மனித வாழ்க்கை, செலவு செய்யப்பட வேண்டும். நண்பர்கள், உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இல்லாதோர்களுக்கு உதவும் மனப்பக்குவம் வளர்ந்தோங்க வேண்டும்.

பகுத்தறிவு என்பது மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பது தான். மனச்சாட்சியை கொன்று விட்டு மனிதனால் மனிதனாக வாழவே முடியாது. பகுத்தறிவுக்குள் சமயம் புகுந்துவிட முடியாது. புகுந்து விடவும் கூடாது. இரண்டும் ஒன்றாகிவிட முடியாது. பகுத்தறிவாளன் ஒரு போதும் மனித நேயத்துக்கு அப்பால் சென்று சிந்திக்க முற்பட மாட்டான்.

அரசியல் இயக்கங்கள், அமைப்புகள் சாதி ரீதியாக உருவாவதற்கு காரணம் அந்த மக்களின் ஆதரவைப் பெற்று தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவே ஆகும்.

பொது நலம் என்பது முதலில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எல்லா வீடுகளும் நன்றாக மாறக் கூடிய சூழ்நிலை தோன்றிவிடும்.

எல்லாமே கடவுள் துணை என்று மௌட்டீக சிந்தனை வயப்பட்டு சும்மா இருந்து விட்டால் எதுவுமே நடக்கப் போவதில்லை. ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்க முன்வர வேண்டும். 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறியவன் நான். எனது அறிவை தனித்தவனாக இருந்து வாசிப்பதன் மூலம் பெற்றுக் கொண்டேன். இதன் வழியாக மொழி அறிவையும் தொழில் அறிவையும் பெற்றுக் கொண்டேன். சுயமான சிந்தனையூடாக பொருளாதர ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டேன். எல்லோரும் நலமாக வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் எனது ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிட்டேன். இன்றும் அவ்வாறே செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

நானும் மனிதனாக இருப்பதால் ஓய்வு தேவைப்படுகிறது. சிறிது காலமாவது ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறேன். எனது சுய சிந்தனையுடனான பகுத்தறிவுக் கொள்கையில் எதிர்காலத்தையும் செலவிட உறுதி பூண்டிருக்கிறேன்.

எனது மனைவி, மக்கள் எவருடைய விடயத்திலும் நான் ஆதிக்கம் செலுத்தவில்லை. அவர்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயற்பட பூரணமாக சந்தர்ப்பமளித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் எனது பகுத்தறிவுக் கொள்கைக்குத் தடையாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆதரவும் ஒத்தாசையும் முழுமையாகவே வழங்கி வருகின்றனர்" என்று அவர் மனம் திறந்து பேசினார்.

<i>ஈவேரா.பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் ஆபிரகாம் கோவூர், கந்த முருகேசனார் போன்றவர்களின் வழியில் வீரசிங்கத்தின் பகுத்தறிவுச் சிந்தனை செயற்பாடுகள் அமைந்துள்ளன.

திராவிட கழக செயலாளர் வீரமணியுடனும் அவரது தோழர்களுடனும் மிக நெருக்கமாக உறவு கொண்டிருந்த வீரசிங்கம் 1982 இல் பெரியார் நூற்றாண்டு விழாவை கொழும்பில் பெருவிழா எடுத்துக் கொண்டாடினார்.

தன்னோடு இணைந்து செயற்பட்டவர்கள் கொழும்பிலும் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் இருந்ததாகத் தெரிவித்த வீரசிங்கம் இவர்களில் கம்பளை தாசன், ஏ.எஸ்.மணவைத்தம்பி, பிறைட்டன் செல்வராஜ், "தினக்குரல்" நிறுவனர் எஸ்.பி.சாமி போன்றோரை நன்றியுணர்வுடன் நினைவுபடுத்தினார்.

மன உறுதியும் கொள்கை பிடிப்பும் கொண்ட மானுடநேயம் நிறைந்த ஒரு மனிதன் இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணுகின்ற போது உண்மையிலேயே மனம் நிறைவடைகிறது.

வேலணை என்ற தமிழ் மண்ணில் பிறந்து தனது தாய்நாட்டிலும் வெளி உலகிலும் புகழைத் தேடிக் கொண்டிருக்கும் வீரசிங்கம் ஐயாவின் சேவை மானுட சமுதாயத்துக்கும் இன்னுமின்னும் கிட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.</i>



<b>-எம்.ஏ.எம்.நிலாம்-

நன்றி: தினக்குரல்</b>


Reply
#2
---------------------------------------------------------------------------------------------------------------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)