Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்கோள் சிறுவர்கள்
#1
<span style='font-size:22pt;line-height:100%'> முன்னைய எந்தவொரு இயற்கை அனர்த்தத்தையும் விட 2004 டிசம்பர் 26 கடற்கோள் சிறுவர்கள் மீது படுமோசமாக அதன் கொடூரத்தைக் காட்டியிருக்கிறது. பேரழிவுக்குள்ளான சகல நாடுகளிலும் இறந்து போனவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் குருத்து வயதுச் சிறுவர்களே. நெஞ்சைப் பிழியும் இந்த இழப்புகளுக்குப் புறம்பாக உயிர் தப்பியவர்களில் மிகவும் பாதிப்புறக் கூடியவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் சிறுவர்களே விளங்குவது மிகுந்த வேதனையைத் தருகிறது. கடற்கோளுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரத்தை எட்டும் நிலையில், பல ஆயிரக் கணக்கான சிறுவர்களும் சிறுமிகளும் அநாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு எதிர்காலம் குறித்துச் சிந்திக்கவோ அல்லது நேர்ந்த கதியின் பாரதூரத் தன்மையை புரிந்துக் கொள்ளவோ இயலாத பராயத்தில் பராரிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெற்றோரில் எவராவது ஒருவர் அல்லது இருவருமே கடல் அலைகளினால் காவு கொள்ளப்பட்டதைக் கண்டதனால் உணர்வதிர்ச்சிக் கோளாறுக்குள்ளாகியிருக்கும் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் பற்றிய வேதனை மிகு தகவல்கள் அன்றாடம் வந்துகொண்டிருக்கின்றன. தங்களது வாழ்க்கைச் சூழ்நிலைகளைத் தடம்காண முடியாத அளவுக்கு மாற்றியமைத்து விட்ட அந்த விதிவசமான தினத்தின் கோர நிகழ்வுகளில் எந்தவொன்றையுமே நினைவு மீட்க இயலாத கைக்குழந்தைகள் கூட அநாதைகளாகியிருக்கும் அவலத்தை என்னென்று வர்ணிப்பதென்றே எமக்குப் புரியவில்லை.

இந்தச் சிறுவர்கள் எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் காண்பிக்கப்படும் அதேயளவு சிரத்தை அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற சிறுவர்களும் சிறுமிகளும் கவனிக்கப்படாமல் விடப்பட்டால் பழிபாவத்துக்கு அஞ்சாத பிரகிருதிகளினால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய விபரீதம் சொல்லுந்தரமன்று. இயற்கையின் சீற்றத்தினால் எமது கரையோரப் பகுதிகள் பேரழிவுக்குள்ளான ஓரிரு நாட்களுக்குள்ளாகவே வைத்தியசாலைகளில் இருந்தும் அகதி முகாம்களில் இருந்தும் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் அநாதைகளாகி நிற்கும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், நாளடைவில் நேரக்கூடிய பேரபாயத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன.

இது விடயத்தில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை பாதிப்புற்ற நாடுகளின் அரசாங்கங்கள் விரைவாக உணர்ந்து சில உடனடி நடவடிக்கைகளில் இறங்கியமை ஓரளவுக்கு ஆறுதலைத் தருகிறது. உல்லாசப் பிரயாணத்துறையை ஊக்குவிப்பதற்கு வழங்கப்பட்ட கட்டுமீறிய சுதந்திரத்தின் விளைவாக இலங்கையின் கரையோரப் பகுதிகள் நீண்ட காலமாகவே சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதில் வக்கிர திருப்திகாணும் வெளிநாட்டுப் பிரகிருதிகளினதும் அவர்களுக்கு தரகுவேலை செய்து பணம் பண்ணும் உள்நாட்டு சமூகவிரோதக் கும்பல்களினதும் உறைவிடங்களாக விளங்கி வந்திருக்கின்றன. தற்போது தோன்றியிருக்கும் முன்னென்றுமில்லாத மனிதாபிமான நெருக்கடி நிலைமையில் பாதுகாப்பின்றியிருக்கும் சிறுவர்களை தங்களுக்கு இரையாக்குவதற்கு இப்பிரகிருதிகளும் பழிபாவத்துக்கு அஞ்சாத கும்பல்களும் கிஞ்சித்தும் தயங்கப் போவதில்லை.

ஜனாதிபதி திருமதி குமாரதுங்க கடற்கோளினால் அநாதையான வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக அறிவித்திருக்கின்றார். தனிப்பட்ட ரீதியில் திருமதி குமாரதுங்க மேற்கொண்ட இத்தீர்மானம் உணர்ச்சி வசமானதொன்றாக இருக்கின்ற அதேவேளை, தமிழ் நாட்டில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் அரசாங்கம் சமுதாய ரீதியிலும் தார்மீக ரீதியிலும் முன்னுதாரணமான ஒரு முடிவை அறிவித்திருக்கிறது. கடற்கோளினால் அந்த மாநிலத்தில் அநாதைகளாகிப் போன சகல சிறுவர்களையும் தத்தெடுத்து வளர்க்கப் போவதாக அனர்த்தம் நிகழ்ந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஜெயலலிதாவின் அரசாங்கம் அறிவித்தது.

அவசர நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணிகளில் இருந்து இப்போது புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளில் அரசாங்கத்தின் கவனம் திரும்பியிருக்கும் நிலையில், இந்தச் சிறுவர்களினதும் சிறுமிகளினதும் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகாலத் திட்டங்கள் குறித்து விரைவாக சிந்திக்க வேண்டியது மிக மிக அவசியமானதாகும். அநாதைச் சிறுவர்களின் புனர்வாழ்வைப் பொறுத்தவரை, முதல் தெரிவு அச் சிறுவர்களை உறவினர்களுடன் இணைத்து விடுவதாகவே இருக்க வேண்டுமென்று சில நிபுணர்கள் வாதிடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அச்சிறுவர்களுக்கு பரிச்சயமான சமூகத்தில் - சுற்றாடலில் அவர்கள் வாழ்வைத் தொடரக் கூடியதாக இருக்கும் என்பது இந்நிபுணர்களின் வாதம். ஆனால், முழுச் சமூகமும் அல்லது அச்சமூகத்தில் கணிசமான எண்ணிக்கையில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அக்குடும்பங்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் சிறுவர்களை உறவினர்களின் கவனிப்பில் விடுவதென்பது அவர்களின் வாழ்வை மேலும் பாழாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தத்தெடுப்பைப் பொறுத்தவரை, சிறுவர்களைச் சட்டபூர்வமாகத் தத்தெடுத்து அவர்களை நன்றாக வளர்க்கக் கூடிய ஆற்றலு டைய குடும்பங்களை நாடுவதே உகந்ததாகும். தத்தெடுப்பு நடைமுறை சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அடிமை வியாபாரத்தை ஊக்குவிக்கும் பிரகிருதிகளுக்கு வசதியான ஒரு ஏற்பாடாகி விடாதிருப்பதை இன்றைய துயர்மிகுந்த வேளையில் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். மறுபுறத்தில், பெற்றோருடன் சேர்ந்து கடற்கோளினால் பாதிக்கப்பட்டு உணர்வதிர்ச்சிக் கோளாறுக்குள்ளாகியிருக்கும் சிறுவர்களைப் பொறுத்தவரை, இயல்பு வாழ்க்கையின் தொடர்ச்சியை ஓரளவுக்கேனும் அவர்கள் உணரக்கூடியதாக சாத்தியமானளவு விரைவாக பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யூனிசெவ்) ஆலோசனை தெரிவித்திருக்கிறது. இதற்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பாடசாலைகளை விரைவாக புனர்நிர்மாணம் செய்யவேண்டியது அவசியமாகும். அகதி முகாம்களில் பேட்டி காணப்பட்ட பல மாணவர்கள் தாங்கள் ஒழுங்காக கல்வி கற்று பண்பான வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட நிலையில் கணப்பொழுதில் கடற்கோள் தங்களை அகதி முகாம்களில் கொண்டு வந்துவிட்டிருப்பதை ஜீரணித்துக்கொண்டு அரசாங்கத்தினதும் பரோபகாரி களினதும் கருணையில் வாழுவதற்கு இயலாமல் இருக்கிறது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.

கடற்கோளினால் அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் அஞ்சப்பட்டதைப் போன்று அதிகளவானதாக இல்லை என்று இப்போது தெரியவந்திருப்பதாக யூனிசெவ் நிறைவேற்று பணிப்பாளர் கரோல் பெலாமி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருப்பது ஒப்பீட்டளவில் ஒரு மனநிம்மதியைத் தருகிறது. அரசாங்கங்களும் தன்னார்வ நிறுவனங்களும் பரோபகாரச் சிந்தை கொண்டவர்களும் இந்தச் சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு- முறையாக அவர்கள் கல்வியைத் தொடர உருப்படியானதும் நிலைபேறானதுமான வழியில் நிதியுதவியையும் ஆதரவையும் அளிக்கவேண்டும்.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)