Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோர்வே நாட்டு அனுசரணையாளர்கள்......
#1
இலங்கை வந்தடைந்துள்ள நோர்வே நாட்டு சமாதான அனுசரணையாளர்கள், வெளியுறவுப் பிரதி அமைச்சர் விடார் ஹெல்கசன், சிறப்புத் தூதுவர் எரிக் சோல்ஹைம் ஆகியோர், இன்று இலங்கைத் தலைவர்களைச் சந்தித்து உரையாடினர். சுனாமி அனர்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாகவும் இன்றைய பேச்சுவார்த்தைகள் அமைந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் நிதியமைச்சர் சரத் அமுனுகாம, நோர்வே மேம்பாட்டு உதவி அமைச்சர் மற்றும் பிரதி வெளியுறவு அமைச்சர், நோர்வே தூதர் மற்றும் திரு எரிக் சொல்ஹைம் ஆகியோருடன் சந்த்தித்து பேசியதாகவும் சுனாமி பேரழிவிற்குப் பின் நோர்வே உதவியை எப்படித் தரலாம் அதை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து ஆராய்வதுதான் இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் கூறினார்.

நிவாரணப்பணிகள் தங்கள் மூலமாகத்தான் நடைபெறவேண்டும் என்று விடுதலைப்புலிகள் கருதுவது தொடர்பாக அரசுக்கும் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது போல் தெரிகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு பதிலளித்த சரத் அமுனுகம
நிவாரண உதவிகளை விடுதலைப்புலிகளே விநியோகிக்கப்போவதில்லை. அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற அமைப்பை வைத்திருக்கிறார்கள். எனவே அது ஒரு அரசு சாரா அமைப்புதான். அவர்களும் மற்ற அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றலாம் என்றார்.

மேலும், வடக்கு கிழக்கை எடுத்துக்கொண்டால், அங்குள்ள நிலப்பரப்பில் பெரும்பகுதி இன்னும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது; முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கூட அரசாங்க அதிபர்கள் இருக்கிறார்கள், அரசு இயந்திரம் செயல்படுகிறது. கிழக்கே பார்த்தீர்கள் என்றால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்கள் புலிகள் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அங்கு புலிகளால் மட்டும் இந்த வேலையை செய்யமுடியாது. அவர்களுக்கும் செய்ய உரிமை இருக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் அவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டுமென்று கவனமாக உழைக்கிறோம் என்றார் சரத் அமுனுகாம.

இதனிடையே நோர்வே வெளி விவகாரத் துறை அமைச்சர் யான் பேட்டர்சன் வெள்ளிக் கிழமை இலங்கை வரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------

'பன்னாட்டு உதவி அனைத்து மக்களுக்கும் செல்ல வேண்டும்' - ஆய்வாளர்

இலங்கை வந்துள்ள நோர்வே நாட்டின் வெளியுறவுப் பிரதி அமைச்சர் விடார் ஹெல்கசன், சிறப்புத் தூதுவர் எரிக் சோல்ஹைம் ஆகியோர், இலங்கைத் தலைவர்களைச் சந்தித்த பின் வன்னி சென்று விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், இவர்கள் வன்னி வரும்போது, அந்த சந்திப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இதுபற்றிக் கருத்து தெரிவித்த கொழும்பு அரசியல் ஆய்வாளர் தமிழ்மாறன். சமாதான வழிமுறையில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் இலங்கை அரசுக்குப் பன்னாட்டு உதவி கிட்டும் என்கிற நிலை மாறி, தற்போது சுனாமிக்குப் பிறகான் புனரமைப்புப் பணிக்குப் பன்னாட்டு உதவி கிட்டியிருப்பது இலங்கை அரசின் பொருளாதார பலத்தைக் கூட்டியிருக்கிறது, எனவே இலங்கை அரசு இப்போதைக்கு இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை தரும் என்று எதிர்பார்க்க முடியாது, ஆனால் பன்னாட்டு உதவி மக்களுக்குப் போய்ச்சேருவதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு என்கிறார் தமிழ்மாறன்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை, அவர்களுடைய இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக் கோரிக்கையின் அவசியத்தை புனரமைப்புப் பணிகள் நிறைவேற வேண்டிய தேவையுடன் இணைத்து, பன்னாட்டு அரங்கின் முன்பு வைக்க அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறுகிறார் தமிழ்மாறன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)