Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் உடனடியாக பேச்சை
#1
புலிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் உடனடியாக பேச்சை ஆரம்பிக்க வேண்டும்'

பதுளை கருத்தரங்கில் கேட்டவை

விடுதலைப்புலிகள் அமைப்பினர் முன்வைத்திருக்கும் இடைக்கால தன்னாட்சி முறைமை தொடர்பான பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களில் பெரும்பாலானவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகும். ஆனாலும், ஒருசில விடயங்கள் நாட்டிற்கு நன்மை பயப்பனவையாக உள்ளன. ஆகவே, அரசு புலிகளின் கோரிக்கையினை ஏற்று, உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும், பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பினரின் விட்டுக்கொடுப்புகளுக்கமைய நாட்டைப் பாதிக்கும் விடயங்களை அகற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்".

இவ்வாறு றுகுணு பல்கலைக்கழக விரிவுரையாளர் உபுல் அபேரட்ன, சமாதானம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பாக, ஊவா மாகாண தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், பதுளையில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபைத் தலைவரும், ஊவா பிரஜைகள் அபிவிருத்தி நிலையத் தலைவருமான மானெல் ரட்னாயக்கவின் தலைமையில் பதுளை கூல் ஸ்பிறிங் ரெஸ்ட் விடுதியில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற இச்செயலமர்வில் விரிவுரையாளர் உபுல் அபேரட்ன தொடர்ந்து கூறியதாவது;

"சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், பேச்சுவார்த்தைகள் உடன் ஆரம்பிக்கப்பட்டு, சுமுகநிலை ஏற்படுத்தப்பட வேண்டும். புலிகள் அமைப்பினர் சமர்ப்பித்திருக்கும், இடைக்கால தன்னாட்சி முறை பிரேரணை யோசனை மட்டுமே. அது குறித்து தீர்மானிக்க வேண்டியது பேச்சுவார்த்தையின் போதாகும். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருக்கும் கருணா அம்மான், தற்போது எப்பக்கத்தில் இருந்தாலும் அவரது பலம் பெரியனவாக இல்லை. புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்திருந்த போதிலும் புலிகள் அமைப்பிற்கு அது பேரிழப்பாக இல்லை. குறிப்பாக பிரபாகரன் இல்லாதிருந்தாலும் கூட புலிகள் அமைப்பினரின் செயற்பாடுகளில் எத்தகைய பின்னடைவுகளும் ஏற்படுவதற்கில்லை.

ஆனால், வட - கிழக்குப் பகுதிகளில் பிரதேசவாதம் தலைதூக்கியிருப்பதை எம்மால் உணரமுடிகின்றது.

எமது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இனப்பிரச்சினை தீர்விற்கான முன்னேற்றகரமானதும் சிறப்பானதுமான அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான பிரேரணையொன்றை சமர்ப்பித்த போது, அவற்றை கிழித்தெறிந்து தீமூட்டி எரித்த சம்பவம் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஏற்படுத்தப்பட்டது. தீமூட்டி எரிக்கப்பட்ட அப்பிரேரணையை புலிகள் அமைப்பினரும் ஏற்றிருந்தனர். இத்தகைய துரதிர்ஷ்ட நடவடிக்கைகளினால், இனப்பிரச்சினை தீர்வை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. இதேநிலையில், ஐ.தே.க. முன்னெடுத்த இனப்பிரச்சினை தீர்வுப் பிரேரணைகளை ஜனாதிபதி தலைமையிலான கட்சி நிராகரித்தது. இதுபோன்ற அரசியல் கலாசாரமே எமது நாட்டிலிருந்து வருகின்றது. இவ்விரு தரப்பினரிடையே உணர்வு ரீதியிலான ஏகோபித்த நிலைப்பாடு உருவாகு மட்டும் நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதென்பது கடினமேயாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியிலும் தமிழ்ப் பிரதேசங்களும், தமிழ் மக்களும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். இவ்வரசின் மூலம் அமைக்கப்பட்டுவரும் 10 ஆயிரம் குளம் நிர்மாணிப்பு வேலைத்திட்டத்தின் போதும், தமிழ்ப் பிரதேசங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டன. அரசின் வளப் பகிர்விலும் தமிழ் மக்களுக்கு பாரபட்சமே காட்டப்பட்டு வருகின்றது. கடல்கோள் அனர்த்தத்தின் போதும் தமிழ்ப் பகுதிகளின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் சென்றடையவில்லை. கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்களின் நன்மை கருதி வெளிநாடுகளிடமிருந்து கிடைத்த உதவி நிதி மூலம் கொழும்புப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும், கிராமப்புற மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்படுகின்றது. வங்கியில் வைப்பிலிடும் அச் சேமிப்பு நிதி கொழும்பு அபிவிருத்திக்கும், பெரும் வர்த்தகர்களுக்கு கடன் வழங்கவுமே பயன்படுத்தப்படுகின்றது.

அத்துடன், எமது பகுதிகளிலிருந்து தேர்தலில் வெற்றியீட்டும் மக்கள் பிரதிநிதிகளும், தமது வெற்றிக்கு காரணமான மக்களிடமிருந்து கொழும்பு பகுதிக்கு இடம்பெயர்ந்து வசித்து வரும் நிலையைக் கண்டுவருகின்றோம்.

எமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் அமைப்புச் சட்டங்கள் அனைத்துமே மக்கள் மீது திணிக்கப்பட்டவைகளேயாகும். 1948 இல் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் பிறிதொரு நாட்டின் விருப்பிற்கமைய எமக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதாகும். அடுத்து 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் அமைப்புச்சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தச் சட்டம் தமிழ் மக்களை பாதிக்கக்கூடியதாகவே அமைந்திருந்தது. அடுத்து 1978 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் அரசியல் திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது. 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட அமைப்பு, இந்நாட்டின் ஏகாதிபத்திய நிலைக்கான அத்திவாரத்தை பதித்திருந்தது. 1978 இல் அரசியல் திருத்தச் சட்டமூலம் அந்த ஏகாதிபத்திய நிலையை, உறுதிப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.

கொண்டுவரப்பட்ட இச்சட்ட மூலங்களினால் பிரிவினை ஏற்பட வழிவகுத்தது. அத்துடன், இச்சட்டங்களில் பௌத்த கலாசாரத்தை மேன்மைப்படுத்தும் வகையில், சரத்துகள் இடம்பெற்றிருந்தன. இத்தகைய சரத்துகள், நாட்டின் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்த வழிவகுத்தன.

மேலும், ஒற்றையாட்சி முறை குறித்தும், நாம் மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது. எதிர்காலங்களில் "செனட்சபை" முறைமையும் எம் நாட்டில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இச்சபை மூலம் இனமுரண்பாடுகளைத் தவிர்க்கக்கூடியதாக இருக்கும். எது எப்படியிருந்த போதிலும், சிறுபான்மையின சமூகத்திற்கு முக்கிய இடமளிக்கும் வகையில் பெரும்பான்மை இன சமூகத் தலைவர்கள் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். எவ்வகையிலும், சிறுபான்மையின சமூகத்தினரை ஓரம் கட்டும் நிலையை இயன்றவரையில் தவிர்க்க வேண்டும்.

மொத்தத்தில் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும் அரசியல் நிலைமையே எமது நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்".


--------------------------------------------------------------------------------

சுட்டபழம் நன்றி தினக்குரல்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
உந்த பேச்சுக்கே இடமில்லை பாருங்கோ...!
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)