Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு" -அ.இரவி
#1
'தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு"
என்று நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் கவிதை எழுதிவிட்டுப் போய்விட்டார். என்ன அர்த்தத்தில் இப்படி எழுதினார்? கிண்டலா கோபமா புகழும் வார்த்தைகளா?
'அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்"
என்று மீதி இரண்டு வரிகளை எழுதிவிடுகிறார். ஓகோ அப்படியெனில் தமிழர்களை அவர் புகழ்கிறார் என்றுதான் அர்த்தம். புகழுகின்றாரா? புளுகுகின்றாரா?

கோபக்கார மீசை கொண்ட நமது மகாகவி பாரதியார் வேறுமாதிரிச் சொல்லி விடுகின்றார். அவருக்கு தமிழ் இனத்தின் கோபம்-கடும் கோபம். நாமக்கல்லார்போல் இனம் என்று சொல்லக்கூட அவர் ஆத்திரம் விடவில்லை. பல்லை நெருமி சாதி என்கின்றார்.

தமிழ்ச்சாதி!
'விதியே விதியே தமிழ்ச்சாதியை
என் செயக் கருதியிருக்கிறாயெடா"
பாரதியாருக்கு விதியின் மீது கோபமா? தமிழ்ச்சாதி மீது கோபமா? தமிழ்ச்சாதி மீது என்பது வரியிலேயே தெரிந்துவிடுகிறது.

தமிழ்மொழி மீது பாரதியாருக்கு மிகுந்த பற்றுள்ளதை நாம் பலமுறை பார்த்துவிடுகின்றோம்.
'யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடுவதிலும்
'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே"
என்று வாழ்த்துவதிலும் பாரதியாரின் தமிழ்ப் பற்றைப் பார்க்கின்றோம். கோபம் அவருக்கு தமிழர்கள் மீதுதான்.

'மழை பெய்கிறது
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள் எருமைகளைப்போல் எப்போதும்
ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே
உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள்.
ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல்.
ஈரத்திலேயே உணவு
உலர்ந்த தமிழன் மருந்துக்கும் கூட அகப்படமாட்டான்."

இந்த வசன கவிதையிலேயே 'எருமைத் தமிழர்" என்று தமிழரை வைது விடுகிறார் பாரதியார்.
சரி தமிழ்ச்சாதி அப்படி என்ன தவறு செய்துவிட்டது. மீசை துடிதுடிக்க கண்களில் கோபம் கொப்புளிக்க பாரதியார் இந்தத்திட்டு திட்டுகிறாரே ஏன்?
பாரதிதாசனுக்கோ 'தமிழ்ச் சாதியைக்" கண்டாலே தோள்கலெல்லாம் பரிக்கிறது. சிந்தை குளிர்கிறது. பாரதியாருக்கோ அப்படியே மாறுபாடாக இருக்கிறது. என்ன காரணம்?

'தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்ற குரல்களையும் நாம் எப்போதுமே கேட்டுக்கொண்டுதானிருக்கிறோம். தலை நிமிர்ந்து நிற்கும் தகுதி நமக்கு இருக்கின்றதுதானா?

பண்பாடு மிக்க மொழி தமிழ். பண்பாடு மிக்க இனம் தமிழ். இதை நாம் காண்பதற்கு ப10தக்கண்ணாடி தேவையில்லை. காலக்கண்ணாடி போதும். நம் மொழியின் முன்னைய இலக்கியங்களைப் பார்த்தோமானால் இந்த உண்மையை அறியலாம். அவ்வாறு நாம் அறிய முயல்கின்றபோது-நம் உடலெங்கும் ஒரு கூதல் ஓடும். சட்டெனவே மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கும். இதனை நாம் அனைவரும் உணர்வோம்.

இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களின் முன்னர் நமது தமிழ்க் கவிஞர் கணியன் ப10ங்குன்றனார் ஒரு கவிதை பாத்தார். இந்தக் கவிதை கற்பனையில் கால்கொண்டு உள்ளத்தில் ஊற்றெடுத்து உணர்ச்சிக் கழிப்பில் பெருக்கெடுத்தது அல்ல. பாரம்பரியம் மிக்க நமது மொழியிலிருந்து பண்பாட்டிலிருந்து ஊற்றெடுத்து சுரந்து உடைப்பெடுத்துப் பெருகிறது. கணியன் ப10ங்குன்றனாரின் சங்ககாலக் கவிதையைச் சொல்கின்றேன்-கேளுங்கள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிஷன்
இன்னாதென்றாலும் இலமே...
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்ததும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே"

இதன் பொருளும் சொல்லவேண்டும் எனில் இதோ:

எல்லா ஊர்களும் நமது ஊர்களே. எல்லோரும் நமது உறவுகளே. தீமையும் நன்மையும் தாமே கொள்வது அல்லாது பிறர் தர வாராது. அவ்வாறே நோவும் அதன் தீர்வும் தாமே வருவன. சாவும் புதியதல்ல. வாழ்வு இனிமை என்று மகிழ்வதும் இல்லை. விரக்தி வந்துற்றபோது கொடுமை என்று வெறுப்பது இல்லை. நம்மை நாமே தெளிவாக உணர்ந்துகொண்டோ ஆதலினால் மாட்சிமை தங்கிய பெரியோரை வியந்து போற்றப் புகழமாட்டோம். அதேசமயம் சிறியோரை இகழ்தல் என்பன ஒருபோதும் செய்யோம்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு கவி தமிழ் மகனிடமிருந்து வருகின்றதென்றால் அது தமிழ்ச் சமூகத்துப் பண்பாட்டுடன் விழுமியத்தின் வெளிப்பாடு அல்லாது வேறு என்ன?

பெரியோரை வியத்தல் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
என்று சொல்ல வேறு எந்த சமூகத்தால் முடிந்திருந்தது? நமது பண்பாட்டு விழுமியப் பெருக்கின் பெறுபேறு அல்லவா இது! இதனால் பெருமிதம் அடையவேண்டும் அல்லவா நாம்! ஊற்று அடைபட்டிருந்தால் இங்ஙனம் சுரந்திருக்க முடியுமா?
இப்போதும் கூட இப்படிப் பாடுகின்றோம்தானே- நம் தேசத்துக்கவி-தேசியக்கவி புதுவை இரத்தினதுரையின் கவிதை வரி. இப்படியாகிறது.

'நமக்கு மேலும் ஒருவரிலர்
நமக்குக் கீழும் எவருமிலர்"
புதுவை இரத்தினதுரை போருக்கு முகம் கொடுத்தபடியே வாழும் கவிஞர். ஒரு ஆயுதப் போராளி அடையக்கூடிய அத்தனை இடர்களையும் இன்னல்களையும் இந்த எழுத்துப் போராளியும் ஏற்றுக்கொண்டவர். நம்மெல்லோரையும் போலவே தேசியத் தலைவரையும் தலைவனாக வரித்துக்கொண்டவர். அப்படிப்பட்ட நம் கவிஞனால்தான் இப்படியும் கவி சொல்ல முடிகிறது.

'நமக்கு மேலும் ஒருவரிலர்"
இப்படிக் கவிதை பாடிய புதுவை இரத்தினதுரையை எம்மால் புரிய முடிகின்றது. வீரச்செயலுக்கு இலட்சிய உறுதி விட்டுக்கொடுக்காத்துணிவு விலைபோகா உணர்வு என்னும் இன்னோரன்ன தகுதிகள் கண்டதனால் தலைவனாக ஏற்றுக்கொள்ளத் தயங்கியதில்லை. அதே சமயம் தகுதிகாண் தலைவன் ஆயினும் தோழமை ப10ண்டு தோழனாய்க் கொள்ளும் பண்பும் இருக்கின்றது. அது தமிழ்ப் பண்பாடு சொல்லிக் கொடுத்த ஒன்று. யாரினது காலிலும் விழோம். அதே சமயம் யாரையும் தலையில் தூக்கிவைத்துக்கொள்ளோம்.

தமிழ்நாட்டுத் தமிழரில் அப்படி நடக்கின்றதே என்று கேட்கின்றீர்களா? வேதனைதான். வெட்கம் வரத்தான் செய்கின்றது. ஆனால் தயவுசெய்து எது தமிழ்ப்பண்பாடு அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். ஆரியர் நம்மை அடிமையாக்கி ஆண்டு புகட்டிவிட்ட ஆரியப்பண்பாடு அது. மனிதரை மனிதர் கையெடுத்துக் கும்பிடுவதுகூட தமிழ்ப்பண்பாடு அல்ல. கைலாகு கொடுத்தலும் அல்ல. கட்டித்தழுவுதல்! எதிர்ப்பாலார் எனில் கைகளைப் பற்றுதல். இவைதாம் தமிழ்ப் பண்பாடு எழில் இவற்றில் ஒளிர்ந்திருப்பது சகமனிதர் மீது கொண்ட நேயம் அன்பு தோழமை உரிமை.

இஃது இவ்வாறு இருக்க பாரதியார் தமிழ்ச்சாதியின் மீது கோபம் கொள்ளுதல் சரிதானா? நம்மூர்க்கவிஞர் சிவசேகரம் கூட இவ்வாறு கோபம் கொண்டார். அதைக் கோபம் என்று சொல்லலாமா? கவிதை வரியைச் சொல்கின்றேன். நீங்களே முடிவெடுங்கள்.

கணியன் ப10ங்குன்றனாரின் 'யாதும் ஊரே" கவிதையைத்தான் இப்படி மாற்றிப் பாடுகின்றார்:
'நமக்கு நாமே பகை என ஆனோம்
ஆதலினால்
எம்மூர் தவிர்ந்த யாதும் ஊரே
எம்மவர் தவிர்ந்த யாவரும் கேளிர்"
விரக்தியின் விளிம்பில் நின்று சிவசேகரம் பாடியது புரிகின்றது. இந்த விரக்தி நம்மெல்லோருக்கும் அடிக்கடி நேர்வதுதான்.

நாமும் அதே சனக்கூட்டத்தில் ஒருவராக இருந்துகொண்டு தகிடுதத்தங்கள் வஞ்சகங்கள் செய்துகொண்டு பொறாமையில் புழுங்கி அவிந்து வெந்துகொண்டு 'எங்கன்ரை சனம் திருந்தாது" என்று சொல்வோம். 'உது நாய்ச்சாதி" என்போம். 'தமிழன் எங்கை இருக்கிறானோ அங்கை பொறாமையும் இருக்கும். குழப்பமும் இருக்கும்" என்றெல்லாம் தமிழ்ச்சாதனையை வாய் ஓயாமல் தூற்றுவோம். 'நான்" என்னும் என்பதை தவிர மற்றைய 'எங்கன்ரை சனம் 'அதாவது" தமிழ்ச்சாதி. எதுவும் திருந்தாது என்று சுலபமாக ஏனையோர் மீது பழி சுமத்தி விடுவோம்.

நம்மை நாமே தூற்றுவதும்ää பழிப்பதும்ää நமது தாழ்வுச் சிக்கலேயன்றி வேறு காரணம் எதுவும் இல. கொஞ்சம் கூர்ந்து கவனிப்போமெனில் எம்மிடம் என்ன குறைபாடுகள் பலவீனங்கள் உளவோ அவை ஏனைய சமூகங்களிலும் உளதை அவதானிக்கலாம்.

அவரவர்களுக்குரிய பண்பாட்டின் வழி அவரவர்கள் அதனை வெளிப்படுத்துகிறார்கள். கைலாகு கொடுத்து முகத்தில் கடுமை குறைத்து இயலுமெனில் சிரித்து வெளிப்பாட்டை மறைக்கிறார்கள் செயலில் புரிகிறார்கள். நாங்கள் வேலி பிரித்து அல்லது வேலிக்குள் பொட்டுவைத்து விடுப்புப் பார்த்த பரம்பரையில் வந்ததன்படி வெளிப்படுத்துகின்றோம். ஆனால் ஒன்றை உறுதியாக உணர்வோம். வேலி பிரித்தது விடுப்பு பார்க்க மாத்திரமல்ல அயல்வீட்டில் அவலக்குரல் எழுந்தபோது ஓடோடிச் சென்று ஓரத்தில் வந்து உதவி புரிவதற்காகவும்தான். அதுதான் தமிழ்ச்சாதி.

ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது மகனை மகளை வேறும் நெருங்கிய உறவுகளை பிறர் அறிய நாம் பெருமையாகப் பேச வேண்டும். தவறுகள் களைய விமர்சனம் தேவைதான். அது எமக்குள். அது ஒருபுறம் இருக்க
நாம் அஞ்சத் தேவையில்லை. நம்மை நான் குறைத்து மதிப்பிடவும் தேவை இல்லை. நம் இனம் தலை நிமிர்ந்து வாழ ஆயிரக்கணக்கில் தம்மைக் கொடையாய் கொடுத்தவர்களின் சமூகம் நமது சமூகம். ஓர் உன்னத சமூகத்தின் வயிற்று மைந்தர் நாம். அதனால் பெருமிதப்படுவோம். நெஞ்சு நிமிர்த்தி வீறுநடை போடுவோம்.

பதினாறு நூற்றாண்டுகளின் முன் 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று சொன்ன சிலப்பதிகாரம் எழுந்த தமிழ்ச்சாதி நமது.

'தன்னிலையில் தாழாமை தாழ்ந்த பின் உயிர் வாழாமை" என்று பதினைந்து நூற்றாண்டுகளின் முன் பாடிய வள்ளுவன் வாழ்ந்த தமிழ்ச்சாதி நமது.

'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பாடியே பன்னிரண்டு நூற்றாண்டுகள் அழிந்து விட்டன. அதுதான் நமது தமிழ்ச்சாதி.
'மானுடம் வென்றதம்மா" என்று மானுடத்தை வியர்ந்து போற்றிய காலம் கழிந்து பத்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்ச்சாதிதான் அதைச் சாதித்தது.

மனிதனுக்கு மேலொரு தெய்வமுமில்லை
மானுடம் போலொரு மெய்மையுமில்லை
என்று மனிதரைப் போற்றி ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் பாடிய சாதி நம் தமிழ்ச்சாதி
சொல்லுங்கள்-தமிழ்ச்சாதி என்பது தரக்குறைவா?
விதியை தமிழர் நாம் வெல்வோம். தமிழ்ச்சாதி என்று தலை நிமிர்த்தி தோள் உயர்த்தி நெஞ்சு விரித்து நிமிர்வோம்
வானம் அளந்த அனைத்தும் அளப்போம்.

-அ.இரவி-

நன்றி ஈழநாதம் தமிழ்நாதம்.கொம்
.
.!!
Reply
#2
அருமையான கட்டுரை ! நன்றி அ.இரவி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)