08-07-2005, 07:07 PM
கொரியாவில் நடைபெற்ற சர்வதேச மதங்களுக்கிடையேயான விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சகாயராஜா நிரஞ்சன் 400 மீற்றர், 300 மீற்றர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதுபோன்று திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் ரதீசன் நீளம் தாண்டுதலில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
கொரியா, மலேசியா, தாய்வான், ரஷ்யா, சல்பேனியா, மொங்கோலியா, பிலிப்பைன்ஸ், எஸ்தேனியா, இந்தியா, இலங்கை, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இளையோருக்கிடையேயான சமாதானத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 11 தங்கப் பதக்கங்களையும், நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், ஏழு வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நிரஞ்சன் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ரதீசன் ஒரு தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர். அத்தோடு வெள்ளிப்பதக்கங்கள் பெற்றுக் கொண்ட 4து400 மீற்றர் அஞ்சல் குழுவிலும் இவர்கள் இடம்பெற்றிருந்தனர். இதேவேளை, நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நிரஞ்சனுக்கு பாடசாலைச் சமூகம் வரவேற்பையும், பாராட்டு நிகழ்வையும் வழங்கியிருந்தது. தமிழர் தாயகத்தைச் சேர்ந்த இப்போட்டியாளர்களின் வெற்றி பல்வேறு தடைகளைத் தாண்டி எமது அடையாளத்தின் கௌரவமான இருப்பை உலகிற்கு உணர்த்தும் செயற்பாடாக அமையுமென தமிழீழ விளையாட்டுத்துறை பொறுப்பாளர் கி. பாப்பா தெரிவித்துள்ளார்.
Veerakesari

