Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அயல் சினிமா
#1
<img src='http://74.52.34.130/kumudamcms/magazine/Theranadi/2006-03-01/imagefolder/pg3-t.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:red'>\"சினிமா என்பது ஒரு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு பிரேம்களில் சொல்லப்படும் உண்மை\" என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட்.
ஆனால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான பிரைன் டி பால்மா,
\"ஒரு நிமிஷத்தில் இருபத்து நான்கு முறை பொய் சொல்லக்கூடியதற்கு பெயர்தான் சினிமா\" என்கிறார். பெரும்பான்மை ஹாலிவுட் திரைப்படங்கள் பிரைன் டி பால்மாவின் வழித்தடத்தில் பயணிக்கக் கூடியவை.

வன்முறையும் கடத்தல் நாடகங்களும் துப்பறியும் கதைகளும் எப்போதுமே ஹாலிவுட்டின் மையப்பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஒரு தீமையை அழித்தொழிப்பதற்காக நூற்றுக்கணக்கான வன்செயல்களைப் புரிவதுதான் ஹாலிவுட் படங்களின் கதை சொல்லும் முறை.

ஹாலிவுட் சினிமாக்கள் பெரிதும் ஸ்டுடியோவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அங்கே கதைக்கான உரிமை பெறப்பட்ட பிறகு திரைக்கதை எழுதுபவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என யாவரும் ஸ்டுடியோவின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகின்றனர். ஸ்டுடியோ மாபெரும் வர்த்தக நிறுவனத்தைப் போல, தன் விருப்பத்தின்படி திரையுலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை, சார்லி சாப்ளினில் துவங்கி மார்லன் பிராண்டோ வரை பலரும் கண்டித்திருக்கிறார்கள். சாப்ளின் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துப் பேசுகிறார். சினிமாவை அடிநிலை மக்களுக்கான வெளிப்பாட்டு சாதனமாக மாற்ற முயற்சிக்கிறார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஹாலிவுட் ஸ்டுடியோகள் அவர் மீது பகிரங்க விசாரணைக்கு ஏற்பாடு செய்தன. சாப்ளின், இதுதான் குற்றம் என்றால் அதைத்தான் தொடர்ந்து செய்வேன் என்று பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். ஹாலிவுட் ஸ்டுடியோவால் அவரை எதுவும் செய்ய இயலவில்லை.

மார்லன் பிராண்டோவை காட்ஃபாதர் திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரான்சிஸ் போர்டு கபோலா சிபாரிசு செய்தபோது, தயாரிப்பு நிறுவனம் அவர் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துவாரா என்று வசனம் பேசச் செய்து, சோதனை செய்யவேண்டும் என வற்புறுத்தியது. இது புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சோதனை. ஆனால் பிராண்டோ, ஸ்டுடியோ அதிகாரத்தை விமரிசித்த காரணத்தால் அவரையும் இந்தச் சோதனையைச் செய்ய கட்டாயப்படுத்தினார்கள். பிராண்டோ, தான் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால், கபோலா, தனக்காக பிராண்டோ இதற்கு அனுமதிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதும், பிராண்டோ, தானே ஒரு ஒப்பனைக் கலைஞரை அழைத்து வந்து காட்ஃபாதர் படத்தில் வருவது போன்ற ஒப்பனையைத் தானே புனைந்துகொண்டு, வாயில் செயற்கையான தாடையைப் பொருத்திக்கொண்டு, கபோலா வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். கபோலாவால் நம்ப முடியவில்லை. சோதனை படப்பிடிப்பு நடத்தினார்கள். ஸ்டுடியோ வாயை மூடிக்கொண்டு மௌனமாகியது.

ஸ்பீல்பெர்க், மார்டின் ஸ்கார்சசி, கபோலா, லூகாஸ் இந்த நால்வரின் வருகை ஹாலிவுட் சினிமாவின் போக்கை முற்றிலும் திசைமாற்றம் கொள்ளச் செய்தது. நால்வரில் ஸ்பீல்பெர்க் வணிக ரீதியான சாதனைகளை நிகழ்த்தியபோது, ஸ்கார்சசி, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அடித்தட்டு உலகமான குற்றவாளிகளின் நிழல் உலகை அறிமுகம் செய்து வைத்தார். திரையில் இருண்ட உலகின் தினசரி காட்சிகளை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார். லூகாஸ், ஹாலிவுட் சினிமாவிற்கு கிராபிக்ஸ் எனும் புதிய தொழில்நுட்பத்தை முக்கியப்படுத்தி தனது விஞ்ஞானக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தார். இந்த மூவருக்குப் பின்வந்த கபோலா, இத்தாலிய நிழல் உலகம் எப்படி அமெரிக்காவிற்குள் பெரிய சக்தியாக தொடர்ந்து வளர்ந்து வந்தது என்பதை, தனது காட்ஃபாதர் வரிசை படங்களில் உருவாக்கி, புதிய கதவை திறந்துவிட்டார். ஹாலிவுட் திரைப்படம் அதுவரை நம்பியிருந்த எளிய காதல் நாடகங்களும், சாகசக் கதைகளும், துப்பறியும் கதைகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகத் துவங்கின. மாறாக, விஞ்ஞான புனைக்கதைப் படங்களின் உருவாக்கம் மேலோங்கத் துவங்கியது. விண்வெளியை மையமாகக் கொண்ட கதைகள் ஏராளமாக திரைக்கு வரத் துவங்கின.

ஹாலிவுட் சினிமாவின் கையில் எப்போதுமே இருக்கும் கதைக்களஞ்சியம் பைபிள். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பைபிள் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்தபடியே இருக்கும். பைபிளில் வலியுறுத்தப்படும் அறக்கோட்பாடுகளை மறைமுகமாக வெளிப்படுத்தும் கதைகளும் எப்போதுமே மிகுந்த வரவேற்பு பெற்று வந்திருக்கின்றன.

அமெரிக்கா இதுவரை தனது தேசத்திற்குள் எந்த யுத்தத்தையும் சந்தித்ததில்லை. அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய பேரழிவு பியர்ல் ஹார்பர் மட்டும்தான். ஆனால், உலக யுத்தம் துவங்கி பல்வேறு யுத்தங்களில் அமெரிக்கா பங்கேற்றிருக்கிறது. அமெரிக்க வீரர்களை மக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆகவே, அமெரிக்க மக்கள் யுத்தம் குறித்த திரைப்படங்களைக் காண்பதில் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இதன் விளைவு ஆண்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட யுத்த சம்பவப் படங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்றன.

துப்பறியும் வகைப் படங்களும், குற்றவாளிகளின் உலகைப் பற்றிய படங்களும் கலைப்படங்களா என்ற கேள்வி எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. வெகுஜன சினிமா இந்த கதைக்கருக்களை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தியது. ஆனால் கலைப்படங்களோ, குற்றவாளிகள் மற்றும் கொலைக்கு பிந்திய மனநிலைகளை அதன் உளவியல் பார்வையில் ஆராயத் துவங்கியது. குற்றம் குறித்த நமது பார்வைகளுக்கு வெளியில் இந்தத் திரைப்படங்கள் குற்ற நிகழ்வை ஆழமான விசாரணைக்கு உட்படுத்தின. ஹிட்ச்காக்கின் படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ஹிட்ச்காக் கொலையை சுவாரஸ்யப்படுத்துவதில்லை; மாறாக அவர் துப்பறிவாளரின் வேலையை விடவும் மனோதத்துவவாதியின் வேலையைத்தான் அதிகம் செய்கிறார். குற்றம் மறைக்கப்படும்போது குற்றவாளியின் மனவுலகம் எப்படியிருக்கிறது என்பதையும், எதிர்பாராமை என்பது குற்றங்களுக்குப் பின்னணியில் என்ன பங்கு வகிக்கிறது என்பதையும் ஹிட்ச்காக்கின் படங்கள் விவரிக்கின்றன. இன்னொரு வகையில், கோடார்ட் போன்றவர்கள், குற்றவாளிகள் எந்தப் புள்ளியில் இருந்து உருவாகிறார்கள் என்பதில் துவங்கி, சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தை திரைப்படமாக உருவாக்குகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம், கோடார்ட்டின் பிரெத்லெஸ். இப்படத்தின் கதாநாயகன் ஒரு குற்றவாளி. ஆனால் அவனது அன்றாட செயல்களில் குற்றம் பிரதிபலிக்கப்படுவதில்லை. மாறாக, கலாசார நெருக்கடிகளை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையே கோடார்ட் முக்கியத்துவப்படுத்துகிறார். இந்தப் போக்கைதான் த்ரூபாவின் துப்பறியும் படங்களிலும் காண முடிகிறது.

ஹாலிவுட் திரைப்படங்களில் மார்டின் ஸ்கார்சசி எப்போதுமே தனியிடம் கொண்டவர். அவரது திரைப்படங்கள் வடிவ ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் மிகுந்த நுட்பமானவை. டாக்சி டிரைவர், ரேகிங் புல், காசினோ, மீன் ஸ்ட்ரீட் போன்ற அவரது திரைப்படங்கள் சம்பிரதாயமான ஹாலிவுட் சினிமாவின் வரம்புகளை மீறியவை. நிழல் உலகை முன்வைத்து கதை சொல்வதைப் போலவே மார்டின் ஸ்கார்சசிக்கு இன்னொரு பக்கமிருக்கிறது. இயேசு கிறிஸ்து குறித்த, தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் ஜீசஸ் கிரைஸ்ட், மற்றும் தலாய்லாமாவின் வாழ்வை விவரிக்கும் குந்தன், இந்த இரண்டு படங்களிலும் மார்டின் ஸ்கார்சசி, மதம் நிறுவனமயமாகிப் போனதால் அதற்கு வெளியில் உள்ள தனிநபரின் இறை நம்பிக்கைகள் குறித்து ஆராய்கிறார். குந்தன், தலாய்லாமாவின் வாழ்வை விவரிக்கின்ற போதும், அது ஒரு அரசியல் நிலைப்பாட்டினையும் முன்வைக்கிறது. அதே நேரம் பௌத்த வாழ்வியலை நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது. குந்தன் திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கதை சொல்லும் முறை மிக நவீனமயமானது.

இந்த வரிசையில் சமகால ஹாலிவுட் திரைப்படங்களில் முக்கிய இயக்குனர்களாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் இருவர்; ஒருவர், ஸ்பைக் லீ; மற்றவர் குவென்டின் டெரான்டினோ. ஸ்பைக் லீ, மால்கம் எக்ஸ் பற்றிய திரைப்படத்தை இயக்கியவர். இவர் கறுப்பின மக்களுக்கான விடுதலையை முன்வைக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவரது திரைப்படங்கள் ஹாலிவுட்டின் வெகுஜனத் திரைப்படங்களுக்குள் அடங்காதவை. கறுப்பின மக்களின் கல்வி மற்றும் குடும்ப உறவுகள் பற்றியதே இவரது திரைப்படங்கள். "எதிர்கால அமெரிக்க சினிமாவில் ஸ்பைக் லீ மாபெரும் சக்தியாக இருப்பார்" என்கிறார் ஸ்பீல்பெர்க்.

பள்ளிப்படிப்பை பாதியில் முடித்துவிட்டு, ஐந்து ஆண்டு காலம் ஒரு வீடியோ கடையில் வாடிக்கையாளர்களுக்கு கேசட் எடுத்து தரும் பணியாளராக வேலை செய்த குவென்டின் டெரான்டினோ, இன்று ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனராக உருக்கொண்டிருக்கிறார். 1963 ஆம் ஆண்டு டென்னசி பகுதியில் பிறந்த டெரான்டினோ இத்தாலிய வம்சாவழியைச் சார்ந்தவர். இரண்டு வயதில் இருந்தே இவரைத் தான் செல்லும் திரைப்படங்கள் அத்தனைக்கும் அவரது அம்மா அழைத்து சென்றிருக்கிறார். அதனால் சினிமாவைப் பற்றிய கனவுகள் சிறுவயதிலே அவருக்குள் முளைவிடத் துவங்கின. தனது இருபது வயதில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு வீடியோ கடையில் நாள் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற குவென்டின் டெரான்டினோ, அங்கு தினமும் பத்து திரைப்படங்களையாவது பார்க்கக் கூடியவராக மாறியிருந்தார். அவரோடு அதே கடையில் வேலை செய்த ரோஜர் அவாரியோவும் சேர்ந்து கொள்வார். இருவரும் மணிக்கணக்கில் தாங்கள் பார்த்த படங்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசித் தீர்த்திருக்கிறார்கள். சிறுவயது முதலே காமிக்ஸ் வாசிப்பதில் மிக ஆர்வம் கொண்டிருந்த டெரான்டினோ சாகசப்படங்களை மிகவும் ரசித்து பார்த்து வந்தார். வீடியோ கடையில் பார்த்த படங்களில் உள்ள சிறந்த காட்சிகளை தனித்தனியாக எடுத்து, அதை ஒன்றாகச் சேர்த்து ஒரே படமாக அமைத்துப் பார்க்கும் விருப்பம் கொண்டவராக இருந்தார். இதனால் ஹிட்ச்காக்கில் இருந்து ஒரு காட்சி, <b>கான் வித் த விண்ட்</b>டில் இருந்து இரண்டு காட்சிகள், கோடார்ட் படத்திலிருந்து இரண்டு காட்சிகள், பிரைன் டி பால்மா படத்திலிருந்து நான்கு காட்சிகள் என்று ஒன்று கலந்த ஒரு கலவையாக இவர் உருவாக்கிய துண்டுப் படங்களை, வீடியோ கடையில் பலரும் ரசித்து பார்த்தனர்.

ஹாலிவுட் சினிமாவிற்குள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற தடைகளிருந்தால், குவென்டின், தானே ஒரு திரைக்கதையை எழுதி வீடியோ கடை வாடிக்கையாளர்கள் சிலரையும் தன் நண்பர்களையும் ஒன்று சேர்த்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். ஆனால் அது பெரிய தோல்வியடைந்தது. அதன் பிறகு My Best Friend's Birthday என்ற திரைக்கதையை எழுதி அதை பல ஸ்டுடியோகளுக்கு அனுப்பி திரைப்படமாக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நண்பரின் உதவியால் True Romance என்ற திரைக்கதையை முக்கிய திரைப்பட நிறுவனம் ஒன்றிற்கு விற்க முடிந்தது. அதுதான் குவென்டின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. அந்தப் படம் சிறப்பாகப் பேசப்பட்டது. Natural Born Killers என்ற அவரது அடுத்த கதையை ஆலிவர் ஸ்டோன் இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் சரியான மண உறவு அமையாத ஒரு கணவனும் மனைவியும், தங்களது மனச்சோர்வை போக்கிக்கொள்ள தொடர்ந்து கொலை செய்யத் துவங்குகிறார்கள். ஒரு காரில் பயணம் செய்தபடியே அவர்கள் காரணமற்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சம்பிரதாயமான ஹாலிவுட் படங்களில் இருந்து, வந்த மூன்றடுக்கு திரைக்கதை முறையை தூரத் தள்ளிவிட்டு, இப்படம் நீண்ட காட்சிகளும் எதிர்பாராத வன்முறை வெடித்தலுமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வகை படங்களுக்கு முன் உதாரணமாக இருந்தது போனி அண்ட் கிளைடு. இப்படம், குற்றத்திற்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை என்று வெளிப்படையாக உணர்த்தியதால் அதன் பாதையில் இன்னொரு பயணத்தை மேற்கொண்டது குவென்டினின் திரைப்படம்.

இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை உருவாக்காத போதும் குவென்டின் திரைக்கதையில் இருந்த புதிய உத்திகளும் உரையாடல்களும் பெரிதும் பேசப்பட்டன. Reservoir Dogs என்ற குவென்டினின் அடுத்த படம் குற்றவாளிகளின் உலகினை இன்னொரு கோணத்தில் ஆய்வு செய்வதாக அமைந்தது. நகைக்கடை ஒன்றினை கொள்ளையடிப்பதற்காகத் திட்டமிடும் குழு ஒன்றில், போலீஸ்காரன் ஒருவன் வேறு அடையாளங்களுடன் சேர்ந்து கொள்கிறான். அது அவர்களுக்குத் தெரிந்து விடுகிறது. யார் அந்த போலீஸ் உளவாளி என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் மீது சந்தேகம் உருவாகிறது. இந்த மனச்சிக்கலில் அவர்கள் தங்களையே குற்றவாளிகளாக நினைத்து குழம்பிக் கொள்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக அவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிவிட்டு ஆளுக்கு ஒரு நிறத்தின் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். அதன்படி ஒருவன் நீலம், மற்றவன் மஞ்சள், அடுத்தவன் ஆரஞ்சு என்று பல்வேறு வர்ணங்களாக தங்களை அடையாளம் சொல்லிக் கொள்கிறார்கள். சுய அடையாளம் அழிந்து, தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒற்றை வர்ணத்தோடு அவர்கள் உருமாற்றம் கொள்வது படத்திற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது.

தொடருகிறது..........................</span>

நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)
Reply
#2
<img src='http://74.52.34.130/kumudamcms/magazine/Theranadi/2006-03-01/imagefolder/pg3-t.jpg' border='0' alt='user posted image'>


கேமராவைப் பயன்படுத்துவதில் குவென்டின் <b>மியுசிக் </b>சேனல்களின் உத்திகளை பயன்படுத்தினார். மியுசிக் சேனல்களின் வருகையால் கேமரா நடனம் ஆடுபவரோடு சேர்ந்து ஆடுவதும், அவர்களைப் பின்தொடர்ந்து செல்வதும் இசையின் தாள கதிக்கு ஏற்ப பல்வேறு நிலைகளில் தாவிச் செல்வதும், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம் தருவதாக இருந்தது. அந்த உத்திகள் யாவையும் குவென்டின் குற்றவாளிகளைப் பற்றிய இந்த திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். குற்றவாளிகள் மிகப் பெரிய வணிக நிறுவனப் பிரதிநிதிகள் போல உடையுடுத்திக் கொண்டு செல்வதும், கேமரா அவர்களை பின்தொடர்ந்து போவதும், குற்ற நிகழ்வுகளின் போது கேமரா அலைந்து திரிவதும், பரஸ்பரம் சந்தேகம் கொள்ளும்போது அவர்கள் முகங்கள் மிக அண்மைக் காட்சிகளாக படமாக்கப் பட்டிருப்பதும், பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக அமைந்தது. இந்தப் படத்தை மிரமாக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. அவர்கள் இப்படத்தை <b>சன்டேன்</b> திரைப்பட விழாவில் பங்கேற்கும்படியாகச் செய்தனர். குவென்டின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரைப்பட விழாவில் பங்கேற்றார். ஆனால் அதில் அவருக்கு விருது கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிய அவர் Pulp Fiction என்ற திரைக்கதையை உருவாக்கினார்.

<b>Pulp Fiction</b> கதைக்கான கரு, அவரது நண்பர் ரோஜர் அவாரியுடையது. அதற்கு முழுமையானதொரு திரைக்கதை வடிவம் தந்திருந்தார் குவென்டின். இந்த திரைக்கதை ஒரு நாவல் போன்று அத்தியாயங்கள் வடிவத்தை கொண்டிருந்தது. 1994இல் வெளியான இப்படம் பெரிய வரவேற்பு பெற்றதோடு, அந்த ஆண்டு நடைபெற்ற <b>கான்ஸ்</b> திரைப்பட விழாவில் சிறந்த சினிமாவிற்கான விருதையும் பெற்றது. கான்ஸ் விருது பெற்றதும் குவென்டின் படங்களுக்கு ஒரு உலகச் சந்தை உருவாகத் துவங்கியது. பிரிட்டனிலும் இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அத்தோடு ஹாலிவுட் சரித்திரத்தில் இல்லாத அளவு, நூறு மில்லியன் டாலர் வசூல் செய்தது. அத்தோடு சிறந்த திரைக்கதைக்கான <b>ஆஸ்கார்</b> விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் பெற்றது. ஹாலிவுட் சினிமாவில் குவென்டின் புதிய அத்தியாயத்தை எழுதத் துவங்கினார். படம் வெளியாகி பத்தாண்டுகள் கடந்துவிட்ட சூழலில் இன்றும்கூட இந்தப் படம் குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டேதானிருக்கின்றன. பல்வேறு நாடுகளில் திரைப்படக் கல்லூரிகளில் இப்படம் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கதையைப் பற்றிய மூன்று கதைகள் என்ற துணைத்தலைப்போடு வெளியான Pulp Fiction ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.The Prologue, Vincent Vega and Marsellus Wallace's wife, The Gold Watch, The Bonnie situation, மற்றும் The Epilogueஆகிய ஐந்து பகுதிகளில் முதலும் கடைசியும் ஒரே நிகழ்வின் இரண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவில் பிரபலமாக உள்ள துப்பறியும் நாவல்களின் வடிவமாகும். நிழல் உலகிலிருந்து வெளியேற விரும்பும் இரண்டு பேர், ஒரு உணவு விடுதியில் சந்தித்து, இனி இந்தத் தொழில் தேவையில்லை என்று விலக விரும்புவது குறித்து உரையாடுவதில் துவங்குகிறது படம். இவர்களின் பேச்சின் ஊடாகவே ஒரு ஆள் கொலை செய்யப்படப் போவதைப் பற்றிய செய்தி விவரிக்கப்படுகிறது.

குவென்டின் டெரான்டினோவின் வசனங்கள், குற்றவாளிகள் ரகசியமாகப் பேசிக் கொள்வது போலன்றி, தேசம் தோறும் உள்ள கலாசார வேறுபாடுகளைப் பற்றியதாக உள்ளது. சிறு குற்றவாளியான ஒருவன் ஐரோப்பாவில் உள்ள விடுதிகளில் போதை மருந்துகள் எப்படி விற்கப்படுகின்றன என்பதைப் பற்றி சொல்கிறான். அடுத்தவன் இத்தாலியில் மீனை எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி விவரிக்கிறான். அவர்கள் பேச்சு குற்றம் தொடர்பானதாக இன்றி, நீண்ட நாட்கள் பழகிய இருவர் பேசிக் கொள்வது போல உள்ளது. பேச்சின் ஊடாகவே அவர்கள் குற்ற உலகின் மீது கொண்டிருக்கும் அதிருப்தி வெளிப்படுகிறது. இங்கிருந்து துவங்கும் கதை, அதன் அடுத்த மூன்று பகுதிகளிலும் குற்றத்தின் தொடர்ச்சி என்ற கண்ணியால் பின்னப்படுகிறது. கடவுள் தீமையை அழிப்பதற்காக சில நேரம் இதுபோன்ற காரியங்களை செய்யத் தூண்டுவதாக ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. இவர்கள் தங்களைக் கொல்ல வரும் எதிராளிகளைக்கூட பிரதர் என்றே அழைக்கிறார்கள். ஹிட்ச்காக்கும், கோடாட்டும், பிரைன் டி பால்மாவும் ஒன்று கலந்தது போன்ற வடிவம் கொண்டிருக்கிறது இப்படம். தோற்றத்தில் இது ஒரு கேங்ஸ்டர் படம் போன்று உருவாக்கப்பட்டிருந்தாலும் படத்தின் ஊடாக அமெரிக்க மக்களின் மனதில் உள்ள குழப்பங்களும் வன்முறையும் தவிர்க்க இயலாதபடி வாழ்வின் பகுதியாகிவிட்டது துல்லியமாக வெளிப்படுகிறது.

திரைக்கதை அமைப்பில், முக்கிய கதாபாத்திரங்களும் அவர்களுக்கு ஏற்படப் போகும் பிரச்னையும் படத்தின் முதல் அங்கத்திலே சொல்லப்பட்டு விடவேண்டும் என்ற விதிகளிருந்தன. ஆனால் குவென்டின் படத்தில் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்களால் அறியப்படுகிறார்கள். படத்தின் முடிவு வரை பிரச்னை புதுப் புது வடிவம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது. வில்வியம்பாக்னரின், தி சவுண்ட் அண்ட் ப்யூரி நாவல் இது போன்று ஒரு வடிவம் கொண்டது. கதையின் முக்கிய சம்பவம் வேறு வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. ஆச்சரியமானதொரு ஒற்றுமை, பாக்னரின் நாவலில் டெரான்டினோ என்ற பெயரில் இருவர் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.

Pulp Fiction படத்தை விமரிசனம் செய்த எரிக் டேவிட், இப்படம் ஷேக்ஸ்பியரின் எழுத்துகளுக்கு நிகரானது என்கிறார். ஷேக்ஸ்பியரின் வசனங்கள் போல நீண்ட தனிமொழியும் கதாபாத்திரங்களின் மனநிலையை விளக்கும் உரையாடல்களும் படத்தில் உள்ளன என்று குறிப்பிடுகிறார். இப்படத்தில் ஒரு கதாபாத்திரம், அற்புதம் என்றால் என்ன? என்று கேட்கும் போது, அது இறைவன் நிகழ்த்தும் செயல் என்கிறான். அதற்கு மற்றவன், நிஜம், நாம் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டு சுடப்படாமல் தப்புகிறோம் இல்லையா; அது அற்புதம் இல்லையா? கடவுள்தான் நம்மை காப்பாற்றியிருக்கிறார். நாம் குடிக்கும் கோக் எப்படி பெப்சியாகியிருக்கிறது; அதுவும் கடவுளின் விருப்பம்தானே என்று அற்புதங்கள் அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி பின்னப்படுவதை விவரிக்கிறான். இதுதான் குவென்டினின் பார்வை.

எனது மதம் சினிமா, எனது தேவாலயம் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் என்று கூறும் குவென்டின், கடந்த பத்தாண்டுகளுக்குள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டவர். தயாரிப்பாளர்களோடு சண்டை, பழைய காதலிகளை மிரட்டினார் என்பது உட்பட எத்தனையோ பரபரப்புக் குற்றச்சாட்டுகள் இவர் மீது வைக்கப்பட்டபோதும், தொடர்ந்து தனது படங்களின் வழியே அதைத் தாண்டிய தனது வலிமையை வெளிப்படுத்தி வருகிறார் குவெண்டின். Sleep With Me, Four Rooms, Jackie Brown என தொடர்ந்து இவரது படங்கள் ஹாலிவுட்டில் புதிய சினிமாவிற்கான சாத்தியங்களை உருவாக்கி வருகிறது.

குவென்டினின் சமீபத்திய படங்களான Kill Bill, Hostel இரண்டுமே மர்மக் கதை படங்கள். ஆனால், இதில் Kill Bill சாமுராய், குங்பூ, பிரெஞ்சு துப்பறியும் படங்கள், அனிமேன் என்று பல்வேறு வகைப்பட்ட சினிமா வகைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்று கூறும் குவென்டின், தான் ஹாம்லெட்டை ஒரு பெண்ணாக மாற்றியிருப்பதாகப் குறிப்பிடுகிறார்.

டெரான்டினோவின் படங்கள் உணர்ச்சிபூர்வமாக கதைகளை சொல்வதில்லை. பின்நவீனத்துவ நாவல்களைப் போல கதையை சொல்லும் முறையும் கதையின் மையப் பாத்திரங்களை சிதறடிக்கும் உத்தியும் இவரிடம் காணப்படுகிறது. இன்று குவென்டின் வகைப் படங்கள் என்று வகைப்படுத்துமளவு இவரது பாதிப்பில் உருவான படங்கள் ஏராளமாக உள்ளன. சமீபத்திய ஒரு பேட்டியில் அவரிடம், பைபிளை படம் எடுப்பதாக இருந்தால் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்லகுவான்டின் சிரித்தபடியே, என்னை மிகவும் கவர்ந்த பகுதி பாம்பு ஏவாளை மயக்கி அறிவுக்கனியை தின்பதற்குத் தூண்டும் பகுதிதான்; அந்தப் பாம்பு இதுவரை நான் வாசித்த கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் விடவும் மிகவும் தனித்துவமானது என்கிறார். யாரை நடிப்பதற்கு தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதும், உமா தர்ண்டனை ஏவாளாக நடிக்க வைப்பேன் என்றபடி நானே பாம்பாக நடித்துவிடுவேன் என்றார். இதுதான் குவென்டின்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக அவரது படங்கள் சீனாவில் திரையிடப்பட்டபோது, அதைக் காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தார்கள். குவென்டின் இதன் காரணமாகவே தனது அடுத்த படத்தை சீனாவில் உருவாக்கினார். தொலைக்காட்சிக்கான சிறு தொடர்கள், டாகுமெண்டரி திரைப்படங்கள் என்று, தொடர்ந்து இயங்கி வரும் குவென்டின் டெரான்டினோ, சமகால அமெரிக்க சினிமாவின் மையப் புள்ளியாக இருந்து வருகிறார். குவென்டின் திரைப்படங்கள், இந்திய சினிமாவில் மலினமான ரீதியில் நகலெடுக்கப்பட்டிருக்கின்றன.

தொடரும்............

நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)
Reply
#3
<img src='http://74.52.34.130/kumudamcms/magazine/Theranadi/2006-04-01/imagefolder/pg3.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:red'>\"மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு காகிதமும் பென்சிலும்
எப்படி எளிதாகக் கிடைக்கிறதோ,
அதுபோல சினிமா என்று சாத்தியமாகிறதோ,
அந்த நாளில்தான் அது சாமான்ய மனிதனின் கலை வடிவமாக அங்கீகரிக்கப்படும்.\"
-பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ழான் காக்தூ.

இன்றைய ஹாலிவுட் படங்கள், தயாரிக்க திட்டமிடும்போதே, அது ஆசிய நாடுகளில் வசூல் செய்யப்போகும் தொகையும் அந்த ரசிகர்களின் மனப்போக்கை ஊக்குவிக்கும் கேளிக்கை முறைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பன்னாட்டு வர்த்தக சினிமாவின் புதிய சந்தைகளாக சீனாவும் இந்தியாவுமே கவனம் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, மார்ஷல் ஆர்ட்ஸ் எனப்படும் சாகசக்கலையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ஆசிய நாடுகளில் உள்ள வரவேற்பு, அதை ஒரு தனித்த வணிகப் பொருளாக வளர்த்து எடுத்து கொண்டு விட்டது. <b>புருஸ்லீ துவங்கி ஜாக்கி ஜான் </b>வரை பலரும் இந்த வரிசையில் பிரதான கதாநாயகர்களாக உருப்பெற்றவர்களே. அதிலும் <b>குரோச்சிங் டைகர் அண்ட் கிடன் டிராகன் </b>திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்க வணிகச் சந்தையில் முக்கியத்துவம் பெற்றதிலிருந்து, மார்ஷல் ஆர்ட்ஸ் திரைப்படங்கள் அமெரிக்க வர்த்தகச் சந்தையில் முக்கியத்துவம் பெறத் துவங்கிவிட்டன.

மார்ஷல் ஆர்ட்ஸ் படங்களின் துவக்கப்புள்ளியாக ஹாங்காங் சினிமாவைக் குறிப்பிடலாம். இங்கிருந்துதான் இந்த வகை சாகசப்படங்கள் திரையுலகிற்குள் நுழையத் துவங்கின. அதிலும் குறிப்பாக புருஸ்லீயின் வெற்றி, ஹாங்காங் சினிமாவிற்குப் புதியதொரு கதவைத் திறந்துவிட்டது. ஜான் வூ போன்ற சாகசப்பட இயக்குநர்கள் உருவானார்கள். இன்றும் உலக நாடுகளில் திரைப்படம் தயாரிப்பதில் ஹாலிவுட் மற்றும் இந்தியாவிற்கு அடுத்த நிலையில் உள்ளது, ஹாங்காங்தான். ஹாங்காங் ஒரு பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த காரணத்தால், அங்கு திரைப்பட உருவாக்கம் முழுவதும் தனிநபர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது. ஹாங்காங்கில் குடியிருப்பவர்களில் பெரும்பான்மையினர் சீனர்கள் என்பதால், சீனாவின் அரசியல் மாற்றங்களும் பல்வேறு சீன நிலப்பரப்பிலிருந்து இடம் மாறி ஹாங்காங்கில் குடியேற்றப்பட்ட சீனர்களின் கலாசார விருப்பங்களும் இந்தத் திரைப்பட உருவாக்கத்தில் முக்கிய பிரச்னையாக இருந்தன. சீனாவின் பிரதான திரைப்பட வளர்ச்சியேகூட ஹாங்காங்கில் இருந்துதான் துவங்கியது என்றுகூட சொல்லலாம்.

போதைமருந்து கடத்தல், கூக் கொலையாளிகள், காசினோ போன்ற சூதாட்டரங்கப் பிரச்னைகள், குங்பூ சாகசக் கதைகள் என்று நாலைந்து விதமான கருப்பொருட்களுக்குள்ளாகப் பெரும்பான்மை ஹாங்காங் சினிமாகள் அடங்கி விடுகின்றன. இந்த வகைப்பாட்டிற்கு வெளியே ஒன்றிரண்டு காதல்கதைகளும் விஞ்ஞான படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. மக்களுக்கான மலினமான கேளிக்கை மட்டுமே ஹாங்காங் சினிமாவின் பிரதான நோக்கமாகயிருக்கிறது. ஆனால், நீண்ட காலமாகவே ஹாங்காங்கின் கலாசார அடையாளம் மற்றும் தனிநபரின் உளச்சிக்கல் உள்ளுக்குள்ளாகவே புகைத்து கொண்டிருந்ததால், அது கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலும் பிரதிபலிக்கத் துவங்கியது. குறிப்பாக, சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைப்பது தொடர்பான அரசியல் நிலைப்பாட்டினை விரும்பாத கலைஞர்கள் அதற்கு எதிராக தங்களது கலைப்படைப்புகளை வெளிப்படுத்தத் துவங்கினர். ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வின் பிரதிபலிப்பை வாய்னே வாங் இயக்கிய <b>சைனீஸ் பாக்ஸ்</b> என்ற திரைப்படத்தில் துல்லியமாகக் காணமுடிகிறது. இந்தப் படத்திற்கு உலகப் பிரசித்தி பெற்ற திரைக்கதை ஆசிரியரான ழான் கிளாடே கேரியர் திரைக்கதை எழுதியிருக்கிறார். இப்படத்தில், ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது தவறு என்பதற்காக, ஒரு இளைஞன் புத்தாண்டு கொண்டாட்டம் ஒன்றில், அதை எதிர்த்து தற்கொலை செய்து கொள்கிறான். அங்கிருந்த பார்வையாளர்களிடம், அந்த மரணம் ஏற்படுத்தும் ஆழ்ந்த பாதிப்பை விவரிக்கிறது இத்திரைப்படம்.

தொடர்ந்து ஹாங்காங்கின் இளம் தலைமுறையினர் கான்டோனிஸ், மாண்ட்ரின் போன்ற ஹாங்காங்கின் வழக்கு மொழியில் தங்களது படங்களை உருவாக்கத் துவங்கினர். இது, உள்ளூர் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. இதில் ட்சூயி கார்க் மற்றும் வாங்ஜிங் இருவரும் முக்கியமான இயக்குநர்கள். 1980 களுக்குப் பிறகு, ஹாங்காங் திரைப்படங்களில் அதன் புதிய அலை திரைப்படங்கள் உருவாகத் துவங்கின. ஸ்டன்லி க்வா, பேட்ரிக் டாம் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். வொங் கர்_வாய் இந்தப் புதிய அலையில் உருவாகியவர். இவர் பேட்ரிக் டாமின் திரைப்படங்களுக்கு கதையாசிரியராகப் பணியாற்றத் துவங்கி தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்தார். அதன் பிறகு, கடந்த பதினைந்து வருடங்களுக்குள், <b>'As Tears Go By, Days of Being Wild, Chungking Express, Ashes of Time, Fallen Angels Happy Together, In the Mood for Love 2046</b>, என எட்டு முக்கிய திரைப்படங்களை உருவாக்கி, தனக்கெனத் தனியான திரைமொழியை ஏற்படுத்தினார்.

_______________________

<b>'In the Mood for Love'</b> திரைப்படத்தை 2002 ல் ஒரு திரைப்பட விழாவில் முதன் முறையாகப் பார்த்தபோது, படம் முடிந்து பத்து நிமிடங்களுக்கு மேலாக பார்வையாளர்கள் தொடர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தபடியே இருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு திரைப்படம் பார்வையாளர்களை முற்றாக தனது இருப்பிற்குள்ளாக கவ்விக் கொண்ட அரிய நிகழ்வாகயிருந்தது அது. அநேகமாக, அன்றிலிருந்து சமீபத்திய நாட்கள் வரை அந்தப் படத்தை ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அது ஒரு விசித்திர கனவிற்குள் நுழைந்து வருவதைப் போன்ற பரவசத்தையே ஏற்படுத்துகிறது. வொங் கர்_வாயின் படங்களை அதன் பிறகு, தேடிப் பார்க்க துவங்கினேன். வொங் கர்_வாயின் சினிமா வெகு தனித்துவமானது. அது கதையை விவரிப்பதற்கான ஊடகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ரெனாரின் ஓவியம் தரும் சந்தோஷம் போலவோ, பீத்தோவனின் இசைக்கோர்வையைக் கேட்கும் போது ஏற்படும் சிலிர்ப்பைப் போலவோ ஒரு கவித்துவ அனுபவ நிலையை உருவாக்குகிறது. இசையின் தாள லயங்களுக்கு ஏற்ப காட்சிகள் மாறுகின்றதா அல்லது காட்சிகளின் கரைதலுக்கு ஏற்ப இசை தன்னைப் பொருத்திக் கொண்டிருக்கிறதா என்று பிரித்து அறிய முடியாததொரு தனித்த அனுபவம் அது.

வொங் கர்_வாயின் அப்பா ஒரு மாலுமியாக இருந்தவர். சிறுவயதில் வொங் கர்_வாய், ஷாங்காய் நகரில் ஆரம்ப கல்வி கற்றிருக்கிறார். அன்றைய சீனக் குடும்பங்களைப் போலவே அவர்களும் ஹாங்காங்கிற்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். ஹாங்காங்கிற்குள் நுழைந்ததும் தனக்கு ஏற்பட்ட முதல் அனுபவம், அங்கு சதா பெருகியோடிக் கொண்டிருக்கும் இசைதான் என்றும் ஹாங்காங்கின் இசை ஒரு விநோத கலவையானது என்றும் ஒரு நேர்முகத்தில் வொங் கர்_வாய் குறிப்பிடுகிறார். ஹாங்காங்கின் பாலிடெக்னிக்கில் கிராபிக்ஸ் தொடர்பான படிப்பை முடித்த வொங் கர்_வாய் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றத் துவங்கினார். அங்கு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, திரைக்கதையை எழுதும் சந்தர்ப்பங்கள் உருவாகின. வழக்கமான ஹாங்காங் திரைப்படங்களைப் போலவே அவரது ஆரம்ப கால முயற்சிகளும் கடத்தல் மற்றும் வன்முறை சார்ந்த திரைப்படமாகவே இருந்தது. ஆனால், இவரது <b>'சுங்கிங் எக்ஸ்பிரஸ்' </b>என்ற திரைப்படம் ஹாங்காங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் இளம் தலைமுறையின் முக்கிய இயக்குநராக உருவாகினார்.

<b>சுங்கிங் எக்ஸ்பிரஸ்</b> திரைப்படம் இரண்டு போலீஸ்காரர்களின் வாழ்க்கையைப் பற்றியது. கதை சொல்லும் முறையில் பல புதுமைகளைக் கொண்டிருந்தது. 223 என்ற எண்ணுள்ள ஒரு போலீஸ்காரன், 663 என்ற எண்ணுள்ள ஒரு போலீஸ்காரன், இருவரது கதையும் ஒன்றுக்குள் ஒன்றாக கலந்திருப்பது போன்று கதை சொல்லும் முறை உருவாக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டு போலீஸ்காரர்களும் காதல் தோல்வியடைந்தவர்கள். அவர்கள் காதலித்த பெண்களைப் பிரிந்து வெறுமையில் உழன்று கொண்டிருப்பவர்கள். இருவரது வாழ்விலும் புதிதாக ஒரு பெண் நுழைகிறாள். அந்த உறவு எப்படியிருக்கிறது என்பதையே இப்படம் விவரிக்கிறது.

223 எண்ணுள்ள போலீஸ்காரன், படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு கிரிமினலைத் துரத்திக்கொண்டு ஓடிவருகிறான். ஹாங்காங்கின் இரவுக் காட்சிகள் துரித வேகத்தில் கரைந்து மறைகின்றன. கைதியை மடக்கிப் பிடிக்கும்போது அழகான இளம்பெண் ஒருத்தி அந்த போலீஸ்காரனைக் கடந்து போகிறாள். வாய்ஸ் ஓவரில் கதை துவங்குகிறது. போலீஸ்காரன், கடந்து போன அழகியின் மீது பார்த்த நிமிசத்திலே காதல் கொள்கிறான். அந்தப் பெண்ணோ ஒரு போதை மருந்துக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவள். அவளை சில இந்தியர்கள் ஏமாற்றி விடுகிறார்கள். அவள், அவர்களைத் தேடி நகரெங்கும் அலைந்து கொண்டிருக்கிறாள்.

போலீஸ்காரன் தனது காதலியை விட்டுப் பிரிந்து சில மாதங்களாகின்றது. என்றாலும் அவன் தினமும் அவளது செல்பேசிக்கு ஒரு தகவல் அனுப்புகிறான். அவளிடமிருந்து பதிலே இல்லை. காதல் பிரிவு ஏற்படுத்திய துயரத்தில் அவன் ஒரு பாரில் மித மிஞ்சிக் குடிக்கிறான். அங்கே தற்செயலாக காலையில் பார்த்த போதை மருந்துக் கடத்தல்காரியைச் சந்திக்கிறான். இருவரும் ஒன்றாகக் குடிக்கிறார்கள். அவனது அறைக்கு அந்தப் பெண்ணை அழைத்துப் போகிறான். அறையில் அந்தப் பெண்ணோடு உடலுறவு கொள்வதற்கு பதிலாக அவளது காலணிகளைச் சுத்தமாகத் துடைத்து வைத்து விட்டு அவன் உறங்கிவிடுகிறான். அந்தப் பெண்ணால் போலீஸ்காரனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மறுநாள் அவளும் அவனைப் பிரிந்து போய்விடுகிறாள்.

இன்னொரு பக்கம் 663 எண்ணுள்ள போலீஸ்காரன் ஒரு விமானப் பயணத்தில் சந்தித்த விமான பணிப்பெண்ணைக் காதலிக்கிறான். அவள் வேறு ஒரு ஆளோடு பிரிந்து போய்விட்டதால், மனம் வெறுத்துப் போய் தற்போது நகரில் உள்ள சீன உணவகம் ஒன்றில் வந்து தினமும் உணவு அருந்துகிறான். அவனுக்கு நகரம் அலுப்பூட்டுவதாகயிருக்கிறது. அந்தக் கடையில் வேலை செய்யும் அப்பாவி இளம்பெண் ஒருத்தி 663ஐ காதலிக்கிறாள். அவள் தினமும் அவனுக்குத் தெரியாமல் அவனது அறைக்குச் சென்று அறையைச் சுத்தம் செய்து வைக்கிறாள். அவனுக்குத் தன்னைக் காதலிப்பது யார் என்று தெரியாதபடி அவனோடு பழகுகிறாள். முடிவில் அவனுக்கு அந்தக் காதலி தெரிய வரும்போது எதிர்பாராத விதமாக அந்த உணவகத்தில் ஒரு பிரச்னை ஏற்பட்டு அந்தப் பெண் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள்.

இரண்டு காதல்கதைகள் என்ற மெலிதான கதை அமைப்பிற்குள்ளாகவே வொங் கர்_வாய் இந்த படத்தில் ஹாங்காங்கின் துரித உணவுக் கலாசாரத்தையும், மாநகர நெருக்கடியில் ஒவ்வொருவரும் யாராவது தன்னைக் காதலிக்க மாட்டார்களா என்று ஏங்குபவர்களாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தின் கதை சொல்லும் முறை லத்தீன் அமெரிக்க நாவல்களை நினைவூட்டக் கூடியது. குறிப்பாக, மானுவல் ப்யுக்கின் நாவல்களின் கதை கூறும் முறைக்கு அருகில் இருக்கிறது. அத்தோடு, இதில் பயன்படுத்தப்பட்ட இசை மற்றும் படத்தொகுப்பு முறையும் மிகவும் குறிப்பிடத்தக்கது. கேமிரா சம்பிரதாயமான ஒளிப்பதிவு முறையை விட்டு விலகி பார்வையாளனுக்கு காட்சியோடு மிகுந்த நெருக்கம் உண்டாகும் வகையில் அலைந்து திரிகிறது. அதிலும், ஹாங்காங்கின் இரவு வாழ்க்கையைப் படம் பிடித்துள்ள விதம் மிகக் கவித்துவமானது. ஒருவகையில் சொல்வதாயின் வொங் கர்_வாயின் எல்லாப் படங்களும் மனித உறவுகள் குறித்த ஆழ்ந்த பரிசோதனையை மேற்கொள்பவை எனலாம். குறிப்பாக அதிவேக வாழ்க்கையில் மக்கள் எப்படி அன்பிற்காக ஏங்குகிறார்கள் என்பதை அவர் ஆராய்கிறார். இன்னொரு பக்கம் அந்நியமாதல் எப்படி வாழ்வின் பகுதியாகி விட்டது என்பதையும் இப்படங்கள் விவரிக்கின்றன. குடும்பம் என்ற அமைப்பு மெல்ல சிதைந்து வருவதையும் ஆண், பெண் யாவரும் சதா கேளிக்கைகளிலும் பால் உணர்வு சார்ந்த நாட்டங்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதையும் இவரது படங்கள் துல்லியமாகச் சித்திரிக்கின்றன.

சுங்கிங் எக்ஸ்பிரஸ்ஸின் வெற்றி 'வொங்க்' கர்_வாயின் பரிசோதனை திரைப்படங்களுக்கு வழி வகுக்கத் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, இவர் உருவாக்கிய <b>'ஹேப்பி டு கெதர்.'</b> அர்ஜென்டினாவில் வாழும் இரண்டு ஹாங்காங்காரர்களைப் பற்றியது. ஓரினச்சேர்க்கை பற்றிய படம் என்ற சர்ச்சையைக் கிளப்பிய இத்திரைப்படம் இரண்டு நண்பர்களைப் பற்றியது. அவர்களுக்குள் உடல்ரீதியாகவும் உறவிருக்கிறது. ஆனால், ஒருவரையருவர் எப்படிப் புரிந்துகொண்டிருந்தார்கள், எப்படிப் பாதித்து கொண்டார்கள் என்பதை மையம் கொண்டே விவரிக்கும் இத்திரைப்படம் வொங் கர்_வாங்க்கு கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்று தந்தது.

இந்தப் படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்த <b>In the Mood for Love</b> கதையும் ஒரு காதல்கதைதான். ஆனால், சம்பிரதாயமான காதல்கதையல்ல. டி.ஹெச். லாரன்சின் <b>லேடி சார்ட்டர் லவ்வர் </b>மற்றும் நபகோவின் <b>லோலிதா</b> வகை காதல் படம் என்று இதை சொல்லலாம். காரணம், இதன் கதையமைப்பு அல்ல, மாறாக லாரன்ஸ் சொல்வது போல ரத்த வேகம்தான் காதலைத் தீர்மானிக்கிறது என்ற காரணத்தாலும், காதல் எண்ணிக்கையற்ற ரகசிய குமிழ்கள் கொண்டது எனும் நபகோவின் வாக்கியங்களுக்கு நெருக்கமாக இருப்பதாலும்தான்.

1962ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றிற்கு புதிதாக குடி வருகிறான் சௌ மாங் வான். இவன் ஒரு பத்திரிகையாளர். இவனது மனைவி ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக வேலை செய்கிறாள். அதனால், அவளது வேலை ஷிப்ட் முறையில் பகல்_இரவு என்று மாறக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் புதுவீட்டிற்கு, குடியேறும் அதே நாளில், எதிர்வீட்டிற்கு ஒரு குடும்பம் குடி வருகிறது. அது, சூ சென் என்ற பெண்ணும் அவளது கணவனும். சூ சென்னின் கணவன் சதா வியாபார விசயமாகப் பயணத்திலேயே இருக்கிறான். பகல் நேரத்தை எப்படிக் கழிப்பது என்று தெரியாத வெறுமையில் திளைக்கிறாள் சூசென். அவளது தனிமை பொங்கி வழிந்தபடியே உள்ளது. இந்தச் சூழலில் சௌ மாங் வான்னும் சூ சென்னும் பகலில் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். சூ சென் தினமும் தன் வீட்டின் அருகாமையில் உள்ள சீன உணவகம் ஒன்றிற்குச் சென்று நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுகிறாள். சிலநேரம் அவள் படிப்பதற்காக பத்திரிகைகள் வாங்கிப் போகிறாள். அந்த நேரங்களில், தற்செயலாக இருவரும் படிகளில் ஏறும்போது ஒருவரையருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். மெதுவாக, அவர்களுக்குள் ஒரு நட்பு உருவாகிறது.

ஒரு நாள், சௌ மாங் வான் தனது மனைவிக்கும் சூ சென்னின் கணவனுக்கும் இடையே கள்ள உறவு இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். இந்தச் செய்தி சூ சென்னிற்கும் தெரிய வருகிறது. இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இதை எப்படிச் சமாளிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், இருவரும் அந்தச் சம்பவத்தைக் காரணமாகக் கொண்டு தீவிரமாகப் பழகத் துவங்குகிறார்கள். அவர்களுக்குள் ஒரு ரகசிய உறவு ஏற்பட்டுவிடுமோ எனும் அளவு, அந்தப் பழக்கம் நீடிக்கிறது. என்ன வகையான உறவு இது என்று பெயரிடப்படாத அந்த நெருக்கம், இருவருக்குள்ளும் ஒரு நெருப்பைப் போல பற்றி எரிகிறது. அண்டை வீட்டார்களும் தெருவாசிகளும் இதனை கவனிக்கிறார்கள் என்றபோதும் அதை அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை. ஆனால், ஒரு நாளில் அவர்கள் இருவரும் தாங்கள் பிரிவது என்று முடிவு செய்துகொள்கிறார்கள். தங்கள் கணவனோ, மனைவியோ செய்த தவற்றை தாங்களும் செய்ய வேண்டியதில்லை என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

காலம் மாறுகிறது. சௌ மாங் வான் தனது அலுவலக வேலை விசயமாக கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட்டிற்குச் செல்கிறான். அங்குள்ள சிதைந்த கோவிலின் உள்ளே ஒரு கற்துவாரத்தில், தன் மனதில் இத்தனை நாட்களாக உறுத்திக்கொண்டேயிருந்த, அவர்களுக்குள்ளிருந்த ரகசிய உறவு பற்றிய அத்தனை விசயங்களையும், சொல்லிவிடுகிறான். அவனது மனது இப்போது லகுவாகிறது. அவன் பிரம்மாண்டமான அந்தக் கோவிலை விட்டு வெளியே வருகிறான். இப்போது அந்த ரகசியம் சிதைவுண்டு போயுள்ள அங்கோர்வாட்டின் பகுதியாக உறைந்து போய்விடுகிறது. பகலும் இரவும் மாறிக் கொண்டிருக்கின்றன. சௌமாங் வான் அங்கோர்ட்வாட்டை விட்டுப் பிரிந்து செல்கிறான்.

கதை என்ற அளவில் இந்தப் படம் விசித்திரமானதொரு காதல் கதையை விவரிக்கிறது. காதலிப்பவர்கள் இருவரும் திருமணமானவர்கள் என்பதோடு, தனிமையும் நகரின் வெறுமை அவர்களுக்குள் காதலை ஏற்படுத்துகிறது என்ற நிஜமும் படத்தில் வெளியாகிறது. சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பது, இந்தப் படத்தில் நூறு சதவீதம் உறுதி செய்யப்படுகிறது. கேமிரா இந்தத் திரைப்படத்தில் காட்சியை மட்டுமின்றி, இசையின் தாளகதியையும் ஒருங்கிணைக்கும் அரிய பணியை மேற்கொண்டுள்ளது.

இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் கிறிஸ்டோபர் டாயல். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், வொங் கர்_வாயின் ஐந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரது ஒளியமைப்பு விட்டோரியா ஸ்டெரெராவின் ஒளியமைப்பு பாணியைச் சேர்ந்தது என்று குறிப்பிடலாம். ஒளிப்பதிவிற்கு செழுமை ஊட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது கலை இயக்கம். குறிப்பாக, சூ சென்னின் உடைகள் முழுவதும் சீனாவின் பாரம்பரிய பாணியில் அமைந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அத்தோடு, சுவரில் வரையப்பட்டிருந்த பூ சித்திரங்கள் மற்றும் மீன்தொட்டிகள் யாவும் மிக நுட்பமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படத்திற்கு கலை இயக்கமும் படத்தொகுப்பும் செய்தவர் ஒருவரே என்பதால், அவரது கவனம் காட்சியை உருவாக்குவதிலும் தொகுப்பதிலும் ஒருங்கே குவிந்திருந்ததைப் படம் முழுவதிலும் காணமுடிகிறது.

இந்தக் காட்சியமைப்பிற்கு வலுசேர்க்கும் விதத்தில் வெவ்வேறு வகையான இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஹாங்காங்கில் 1962ஆம் ஆண்டில் ரேடியோ கேட்பது பலருக்கும் பிரதான பொழுது போக்காக இருந்தது. அத்தோடு, இரவு விடுதிகளில் லத்தீன் இசைக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. அந்தக் காலத்தை மறுஉருவாக்கம் செய்யும்போது அந்த இசைக்கும் திரும்ப உயிர் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, செல்லோவும் வயலினும் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இசைக்கோர்வைகள் மயக்க மூட்டுபவை. படத்தின் பிரதான இசையமைப்பாளராக பணியாற்றியவர் உலகப்பிரசித்தி பெற்ற இசையமைப்பாளர் மைக்கல் கலாசோ. இவரது இசைத்தட்டு ஒன்றிலிருந்து சிறு பகுதியை வொங் கர்_வாய் முன்னதாக தனது <b>சுங்கிங் எக்ஸ்பிரஸ்</b> படத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்கென மைக்கேல் கலாசோ முற்றிலுமாக புதியதொரு இசைமொழியை உருவாக்கியிருக்கிறார். அதிலும் காதல் காட்சிகளில் இசை அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கத்தையும் நெகிழ்வையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. ஜப்பானியரான உமெபயாஸி செகெறா அங்கோர்வாட் இசைப்பகுதியை உருவாக்கித் தந்திருக்கிறார். இப்படத்தின் பின்ணணி இசைக்கோர்வை மட்டும் தனியாக வெளியாகி, அதுவே விற்பனையில் பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படம், கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் சிறந்த இயக்குநருக்குமான விருதும் உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றது. அதே ஆண்டு ஹாங்காங் திரைப்பட விழாவில் ஏழு முக்கிய விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சி என்பது போல கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, <b>2046 </b>என்ற படத்தை இயக்கினார் வொங் கர் _ வாய். இது, அதே சௌ மாங் வான் கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் பல வருடங்களுக்குப் பிறகு நடந்த சில சம்பவங்களை விவரிக்கிறது.

வொங் கர்_வாய் தனது திரைப்படங்களுக்கான கதையை யாரிடமும் விவாதிப்பதோ எழுதிக் கொள்வதோயில்லை. அவர் காட்சிகளை அவ்வப்போது உருவாக்குகிறார். கதாபாத்திரங்கள் யார் யார், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நடிகர்களுக்கு சிறிய அறிமுகம் தந்துவிடுவதோடு, நடிகர்களை ஒவ்வொரு நாளும் புதிதாக தான் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இதன் காரணமாக, பல நாட்கள் ஒரே காட்சி திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டிருக்கிறது. இது தன்னுடைய பாணி என்று கூறும் வொங் கர்_வாய் தன்னால் ஒரு திரைக்கதையை படம் துவங்கும் முன்பாக, ஒரு போதும் எழுதி முடிக்க முடியாது என்று கூறுகிறார். இதைக் கேலி செய்யும் விதமாக, அவரது நடிகர்களில் ஒருவர், படம் வெளியான பிறகும் எது திரைக்கதை என்று கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை என்று கூறியதும் நடந்தேறியிருக்கிறது.

வொங் கர்_வாயின் திரைப்படங்களை பின்நவீனத்துவ திரைப்படங்கள் என்று வகைப்படுத்தலாம். குறிப்பாக, பின்நவீனத்துவ கூறுகளான அடக்கப்பட்ட வன்முறை மற்றும் பால்உறவு சிக்கல்கள், மாநகரங்களில் தனிநபரின் இருப்பு மற்றும் அடையாளமின்மை, கதை சொல்லுதலில் நேர்க்கோட்டு தன்மையை விட்டுவிலகிய புதிய உத்திகள், அரசியல் மற்றும் கலாசார அடக்குமுறைகளுக்கான எதிர்வினை போன்ற காரணிகள் இதை பின்நவீனத்துவ சினிமாவாக அடையாளம் காட்டுகின்றன. அவ்வகையில், வொங் கர்_வாயின் சினிமா ஹாங்காங்கின் சரித்திரத்தை, அதன் தினசரி வாழ்வை என்றும் அழிவற்றதாக உருமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

2006ஆம் ஆண்டிற்கான கான்ஸ் திரைப்பட விழாவிற்காக நடுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வொங் கர்_வாய் தற்போது நிகோல் கிட்மனை வைத்து <b>'Lady From Shanghai' </b> என்ற ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.</span>

தொடரும்

நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)