Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பராக்! பராக்! மகாசனங்களே… எழுந்திருங்கள்
#1
பராக்! பராக்! மகாசனங்களே… எழுந்திருங்கள்… இதோ வருகிறார்… எங்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா.…இவர் பெற்றுள்ள பெருமைகள் ஒன்று இரண்டல்ல.


இவரது பெற்றோர்கள் இருவரும் பிரதமர்கள்… எனவே பிரதமர்களையே தாய், தந்தையாகக் கொண்ட உலகின் ஒரேயொரு ஆண் மகன் இவரே. அத்தோடு இவரது சகோதரி இந் நாட்டின் தற்போதைய தலைவி…

இத்தகைய பெருமைகள் தாங்கிய 56வயதுடைய பிரமச்சாரிய மகோன்மணி இதோ வருகிறார்… பராக்! பராக்!!

என்ற அறிவித்தல் இல்லாமல் சத்தம் சந்தடியின்றி வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் அநுரா பண்டாரநாயக்கா.



கதிர்காமரை தன்னால் இயன்றளவு வெறுத்து ஒதுக்கிய ஒரு சிங்கள ஆண் மகன் என்று பெருமைப்படக்கூடிய அநுரா பண்டாரநாயக்கா, கதிர்காமரின் அமைச்சுப் பொறுப்பையே ஏற்பது அரசியல் விந்தை.

1977ம் ஆண்டு பாராளுமன்றப் பிரவேசத்தை நிகழ்த்திய அனுரா பண்டாரநாயக்கா இடையே தனது சகோதரியுடனான முறுகலினால் இடையே சில ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தார். அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், வெளிவிவகார ஆலோசகராகவும் பதவி வகித்ததோடல்லாமல் அக் கட்சியின் சார்பாக பாராளுமன்றில் சபாநாயகராகவும் இருந்தவர்.

அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, கதிர்காமரைக் கிள்ளுக்கீரையாக ஒரு பிடிபிடித்து அவர் ஒரு அரசியல்வாதியே இல்லை, சுயநலத்திற்காக சிறீலங்காவின் அரசியலைப் பயன்படுத்துகிறார் எனப் பல தடவைகள் குற்றஞ்சாட்டியதோடு, கதிர்காமரிற்குச் சவாலொன்றையும் விட்டிருந்தார்.

தனது சகோதரி சந்திரிகாவின் சேலைத் தலைப்பில் தொங்கும் ஒரு நபரே கதிர்காமர் என்று தெரிவித்த அநுரா பண்டாரநாயக்கா, மலினமான பாராட்டுதல்களுக்கும், பிரச்சாரத்திற்கும் அலையும் ஒரு நபரே கதிர்காமர் என்றும் குறிப்பிட்டதோடு,

“கதிர்காமர் தேர்தலில் நின்று பத்து வாக்குக்களை வென்று காட்டட்டும், கொழும்பிலோ அல்லது வட பகுதியிலோ போட்டியிட்டு, ஐந்து தமிழர்களின் வாக்குக்களையாவது பெற்றுக்காட்டட்டும். இதனை அடுத்த தேர்தலில் அவர் செய்து காட்டுவரா? இதனை நான் அவருக்குச் சவாலாக விடுக்கிறேன்” என பாராளுமன்றில் கேட்டிருந்தார் அநுரா பண்டாரநாயக்கா.

அது மட்டுமல்ல, சிறீலங்கா வரலாற்றில் இதுவரை கண்டிராத மோசமான வெளிவிவகார அமைச்சராகக் கதிர்காமரை வர்ணித்ததோடு, கதிர்காமரால் வெள்ளவத்தைக்குப் போக முடியுமா இல்லை, அநுராதபுரத்திற்கு அப்பால் போகமுடியுமா? அல்லது தமிழர்களின் வேதனைகளைத் தான் அவரால் அறியமுடியுமா எனவும் கேட்டிருந்தார் அநுரா பண்டாரநாயக்கா.

காலத்தின் கோலமாக, கதிர்காமர் யாராலோ கொல்லப்பட, அவரது பதவியை ஏற்றிருக்கிறார் அநுரா பண்டாரநாயக்கா. அடுத்த அரச தலைவருக்கான வேட்பாளராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த பிரதமாராகும் வாய்ப்பைக் கொண்டுள்ள அநுராவிற்கு இன்னொரு தகுதி வழங்கும் வாய்ப்பாகவும் இது இருக்கலாம்.

ஏனெனில் எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் சந்திரிகா என்கிற பெயர் சிறீலங்கா அரசியலில் இருந்து மெலிதாக நீங்கிவிடும். எனவே அதன் பிறகும் தங்கள் குடும்ப அரசியலின் பிரகாசம் மங்கிவிடக் கூடாதென்ற விருப்பால் அநுராவைத் தூக்கிவிட்டேயாக வேண்டிய கட்டாயம் சந்திரிகாவிற்கு.

ஆனால் இப்படியான அநுராவிற்கு பலம் அவரது பலவீனமே. யாரையும் எந்நேரத்திலும் எதிர்த்துவிட்டுப் போகும் ஒரு தன்மையுடையவர். தரக்குறைவாக விமர்ச்சிக்கும் தன்மையுடையவர். அதனையே அவர் தனது பலமாகக் கருதுபவர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோது, தனது சகோதரியைக்கூட ஒரு கை பார்த்தவர்.

ஒரு உதாரணத்திற்கு, தனதும் சந்திரிகாவினதும் வீடுகள் அருகருகே என்றும் பிரேமதாசா இறந்த போது சந்திரிகா பால்புக்கை பொங்கியும், விருந்தளித்தும் மகிழ்ந்ததாகத் தெரிவித்து தனது குடும்ப விவகாரத்தையே செய்தியாக்கியிருந்தார்.

இவ்வாறான பலவீனங்களைக் கொண்டுள்ள அநுரா, தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக சிங்களத்தின் இருபெரும் கட்சிகளும் ஒரே முடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை விருப்பாகக் கொண்டுள்ளதாகக் கடந்த காலத்தில் தெரிவித்திருந்தார். அநுரா, அரசியற் குடும்ப வாரிசு என்ற காரணத்தினால் இராஜதந்திர கையாளுகை அவருக்குப் புதிதல்ல. எனினும் அதனை அவர் கையாளப் போகும் முறையையே நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஏனெனில் தமிழர்கள் சம்பந்தமாக விவகாரத்தில், கடந்த காலப் பரப்புரையை மேற்கொள்ள முடியாதபடி உண்மைகளை அனைத்துலகும் உணர்ந்துள்ளன. சுனாமி மீளமைப்புக் கட்டமைப்பிற்கான அவற்றின் ஆதரவு இதற்கான இன்றியமையாத உதாரணம். எனவே உண்மைகளைத் தவிர்த்து கடந்த காலத்தைப் போன்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் அநுராவிடம் இந்தப் பொறுப்புப் போய்ச் சேர்ந்துள்ளது.

மறுபுறமாகத் தமிழர் தரப்புத் தொடர்பாக பலவாறான கருத்துக்களை இவர் கடந்த காலத்தில் தெரிவித்து வந்தாலும், கருணாவை உல்லாசத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவே சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார் என்ற செய்தியை ஊடகங்கள் பிரசுரித்திருந்த போது, அது தொடர்பாக ஊடகவியலாளர்களைச் சந்தித்த அநுரா தெரிவித்த கருத்துக்கள் தமிழர் தரப்பிடம் அவர் கொண்டுள்ள “மரியாதை”யை எடுத்துக் காட்டியது.

…நான் கருணா என்ற நபரை எனது வாழ்வில் எப்போதுமே சந்தித்ததில்லை. எனக்கு அவ்வாறான தேவையுமில்லை. யாரையுமே நான் வேறு நாடுகளிற்கு கூட்டிச் செல்லவுமில்லை. இது என் மீதான ஒரு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தச் செய்தியை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு கருதுவாரே என்பதே எனது கேள்வியாகவுள்ளது…

மகாசனங்களே! பராக்... பராக்… இதோ அநுரா வருகிறார்
நன்றி puthinam
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)