Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இன அழிப்பு
#1
கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இன அழிப்பு த.உரியன்


Saturday, 08 October 2005



--------------------------------------------------------------------------------
தமிழ் இன அழிப்பானது காலம் காலமாக இலங்கை அரச கூலிப்படையினரால் திட்டமிட்ட முறையில் தமிழர் தாயகம் எங்கும் நடந்து கொண்டுதான் வந்துள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களையும், உடமைகளையும், பல சொத்துகளையும் சூறையாடுவது இலங்கை இராணுவத்தினரின் கை வந்த கலையாகவே காணப்பட்டன.

திட்டமிட்ட முறையில் தாங்கள் நினைத்ததைச் செய்யவும் நினைத்தபடி தமிழ் மக்களைக் கொன்றழிக்கும் முறையில் இலங்கை அரசானது பூரண அதிகாரத்தினை இந்தச் சிங்களக் காடையர்களுக்கு வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.



இதனைக் கையில் எடுத்துக் கொண்ட இராணுவம் மறக்க முடியாத அத்தியாயங்களாக இன்று காணப்படும் திட்டமிட்டபடுகொலைகளைச் செய்து தங்களின் உயிர்க்கொலை வெறியைத் தீர்த்து கொண்ட பல சம்பவங்களில் ஒன்றுதான் கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு சம்பவம் நடந்து முடிந்தது. இச்சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் நீங்காத நினைவலைகளாக இன்றும் ஆழமாகப் பதிந்துள்ளன.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து திரட்டிய தகவல்களைக் கீழே காணலாம்.

1991ம் ஆண்டு ஆனித் திங்கள் 12ம் நாள் மகிழடித்தீவுக் கிராமம் தனது நினைவில் மறக்க முடியாத ஒரு கொடூரமான சம்பவத்துக்குள்ளாகி 132 பேரைப் பலிகொடுத்து 400 வீடுகளையும் தீக்கிரையாக்கி பலகோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளைச் சூறையாடிய சம்பவத்தில் நடந்து முடிந்துள்ளது.

இச்சம்பவத்தில் சிக்குண்டு உயிர்தப்பிய கணபதிப்பிள்ளை, மோட்ச மலர், முத்துலிங்கம் விமலாதேவி, வல்லிபுரம் காரிகாதேவி, கறுவல்தம்பி ஆகியோர் இக்கொலைச் சம்பவத்தை மாறி மாறி இடைவிடாது சொல்லத் தொடங்கினார்.

அன்று சுமார் பி.பகல் ஒரு மணி இருக்கும். காதுகளை அடைப்பது போன்று பெரிய வெடிச்சத்தம். அதனைத் தொடர்ந்து இடைவிடாது சிறிய வெடிச்சத்தமும் கேட்க என் நெஞ்சைப் பிளப்பது போன்ற பயம். அப்ப நான் என் இரண்டு மகனையும் சொன்னேன். ஆமி வெடி சுட்டுக்கொண்டு வாறான் வாங்கோ சனம் எல்லாம் போற பக்கம் போவோம் என்று சொல்லிக் கொண்டு வெளிக்கிடக்க குளக்கட்டால ஆமிசுட்டுக் கொண்டு வந்திட்டான். வரக்குள்ள பிடித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரியான அடி அடிச்சிக் கொண்டு வந்தான்.

வரக்குள்ள வீடுகளையெல்லாம் எரிச்சி எரிச்சி வந்தான். அப்படி வந்தவன் என்னையும் என் தம்பியையும் பிடிச்சு எரிந்து கொண்டிருந்த வீட்டிற்குள் தள்ளிவிட்டான். கையை எடுத்துக் கும்பிட்டும் அந்த பாவிட மனம் இரங்கல. அந்த வீட்டிற்குள் நெல் மூட்டைகள் இருந்ததால என் தம்பி அதன் மேல் ஏறி பின்பக்கமாக குதிச்சான். எரிந்து சாகிறதை விட கால் முறிந்தாலும் பரவாயில்ல என்று நானும் ஏறி குதிச்சி இருவருமாக பின பக்கம் கிடந்த தகரத்தை எடுத்து எங்கள மூடிக் கொண்டோம். வெடிச்சத்தமும் அழுகின்ற சத்தமும் நிற்கல. இனி எங்கேயும் ஓடுறதில்ல. சாகிறது என்றால் இதற்குள்தான் சாகிற என்று இருவரும் இருந்தோம் என்று குரல் தளதளக்க சொல்லி முடித்தார் வல்லிபுரம் காரிகாதேவி.

வெடிச்சத்தம் ஊரைச் சுற்றிக் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. நம்மட அக்காவுக்கு குழந்தை பிறந்து பன்ரெண்டு நாள். மற்றவளுக்கு சின்னப்பிள்ளதான். அக்கா சொன்னா கதவப்பூட்டித்து உள்ள இருப்போம் என. நான் சொன்னேன் இல்ல அக்கா எல்லாரும் மில்லுக்குள் போவோம் என்று சொல்லித்து பிள்ளைகளைத் தூக்கித்து போனம். அங்கு நிறையச் சனம். மில் நிறைந்து வழிந்தது. நாங்களும் போய் சனத்தோட சேர்ந்தோம். அப்ப வெடிச்சத்தம் பக்கத்துல கேட்க எல்லாரும் தலையில் கையை வைச்சி அரோகரா அரோகரா என்று கடவுளைக் கூப்பிட்டம். அப்ப மில் வளவுக்குள் ஆமி வந்துத்தான். வந்தவன் ஒன்டையும் பாக்கல. சனத்தை நோக்கிச் சுட்டான். எல்லாருக்கும் வெடிப்பட்டது. தலையில, கழுத்துல, வயித்தில எண்டு குண்டு பட்டு எல்லாரும் விழுந்தனர். நான் வெடிப்பட்ட ஆள் போல படுத்து என்மேல இரத்தத்த பூசினேன்.

மில்லுக்க இருந்த எல்லாரையும் சுட்டு விட்டம் என்று எண்ணி ஆமி மற்றப் பக்கம் போனான். என்னோட அக்காவுடன் சேர்ந்து ஐந்து பேர் மட்டும் உயிர் தப்பினோம். வெடிச்சத்தம் நிண்ட பின் பிள்ள பிள்ள எண்டு என் அம்மா கூப்பிட்ட சத்தம் எனக்குக் கேட்டது. எழும்பிப் பார்த்திட்டு அக்காட குழந்தையையும் தூக்கித்து பக்கத்து வீட்டுக்கு வந்து பார்த்தா கையில்லாமலும், கண் தோண்டின போலவும் தலை இல்லாமலும் சவம் அடுக்கிக் கிடந்தது. ஒரு தாய் குழந்தைக்குப் பால் கொடுத்தாப்ப செத்துக் கிடந்தா. ஒரு குழந்தை சுவரில் ஒட்டிய மாதிரி இருந்தது. மில் வைச்சிருந்த குமாரநாயகம் அவரோட பொஞ்சாதி புவனேஸ்வரி அவங்கிட நாலு பிள்ளைகள் எல்லாரையும் சுட்டு எல்லாச் சவத்தையும் மில்லுக்க போட்டு ஓலைமட்டை, குப்பைகள் எல்லாத்தையும் போட்டு எரித்தான் என்று கண்ணில் கண்ணீர் ததும்ப முத்துலிங்கம் விமலாதேவி கூறினார்.

ஊருக்குள் பிடிச்ச ஆம்பிளையள மடுவுக்குக் கொண்டு போய் மடுவைச் சுத்தி வாடா என்று சுத்தி வர ஒரு வெடிவைத்தான். அப்படியே மடுவுக்குள் தள்ளித் தள்ளி விட்டானுகள். ஒரு பாட்டி சுட்டு வர ஒரு பாட்டி வீட்டையெல்லாம் எரிச்சனுகள். இன்னும் ஒரு பாட்டி வடிவான குமர்ப் பிள்ளைகளை ஒருவன் மாறி ஒருவனாக கெடுத்தானுகள் என்று சொல்ல வந்த வல்லிபுரம் காரிகாதேவி வாயலகூட என்னால இதச் சொல்ல ஏலா என்று அவள் நெஞ்சைப் பொத்திக் கொண்டு கண்களை தனது சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.

அதனைத் தொடர்ந்து கணபதிப்பிள்ளை மோட்சமலர் (முன்பள்ளி ஆசிரியர்) கட கட எனச் சொல்லத் தொடங்கினாள்.

நான் மாவடி முன்மாரிப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பார்த்தன் கண்ணி வெடி வெடித்ததில் ரக்டர் ஒன்று மேலே போய் கீழே வந்து விழுந்தது. எனக்கு வடிவாகத் தெரிந்தது. அதை பார்த்தவுடன் நான் பதட்டப்பட்டு கீழே விழுந்திட்டன். பின் எழுந்து பார்த்தன் ஆமிக்காரன் சுட்டு வாரான். நான் குளத்துக்கால போய் என் பெரியப்பா வீட்டுக்கு ஓடலாம் என்று ஓடியதைக் கண்ட ஆமி என்னை நோக்கி சுட்டான். நான் சிவப்புச் சட்டை போட்டு இருந்ததால் அவனுக்கு வடிவாகத் தெரிந்தது.

உடனே எனக்கு இலக்குப் பார்த்துச் சுட்டான் பாவி. ஒரு வெடி எனது முழங்காலில் பட்டது. அடுத்த வெடி மற்றக் கால் எலும்பை முறித்து விட்டது. நான் அப்படியே விழுந்து விட்டேன். ஆமிக்காரனைக் கண்ட சனங்கள் எல்லாம் நினைச்சாங்க நான் செத்துத்தன் என்று. அன்று இரவு வரையும் எவரும் என்னைக் கவனிக்கவேயில்லை. நான் தண்ணீ, தண்ணீ என்று அனுகிய சத்தம் என் பெரியப்பாவுக்குக் கேட்டது. அவர்தான் என்னை வண்டியில் ஏத்தித்து போனார்.

நாநூறு வீடுகளையும் எரிச்சானுகள். எல்லா வீட்டிலயும் நெல் இருந்தது. அதோட ஆக்களையும் போட்டு புண்ணியமூர்த்தி (ஜீ.எஸ்.) வீட்டுக்குப் போய் எல்லாரும் இருந்தாங்க. அங்கேயும் வந்து சேர்ந்தான் ஆமிச் சிங்களவன். அங்கு இருந்த பொம்பிளப் புள்ளையள பிடிச்சி சட்டையல்லாம், கிழிச்சு, உதைச்சி, மிதிச்சி ஒருவர் மாறி ஒருவராக கெடுத்தானுகள். பள்ளிச் ரீச்சர் மாரையும் பிடிச்சி சிலர் சீலையை எடுத்து சட்டையை பிச்சி கொடுமைப்படுத்தினான். இப்பவும் அந்தப் பொம்பிளப் பிள்ளைகள் எல்லாம் வாழா வெட்டியாக இருக்குது. நடந்த சம்பவத்தைச் சொல்லுங்க என்று கேட்டா தானாக மயங்கி விழுதுகள்.

அப்படித்தான் ஒரு நல்ல வடிவான பெண் பிள்ளையை பிடிச்சி தாய்க்கு முன்னால் வைச்சி ஒருவன் மாறி ஒருவன் கெடுத்தான். இதனைக் கண்ட தாய் தனது காப்பு, மாலை, கொடி எல்லாம் கழட்டிக் கொடுத்து என் மகளை விடுடா என்று கெஞ்சிக் கேட்டா, பின்னர் மறைப்புக்குக் கொண்டுபோய் இன்னும் இன்னும் பலர் கெடுத்தானுகள். பின்னர் செத்து விட்டாள் என்று நினைச்சுத்தான் விட்டானுகள். அந்தப் பிள்ளட உடம்பில கடிச்சி காயம் இல்லாத இடமேயில்லை. அன்று அந்தப் புள்ள மகிழடித்தீவை விட்டுப் போனவள் போனவள்தான். இன்னும் ஊருக்கு வரவேயில்லை என்று கண்ணீரும் கம்பளையுமாக கூறினார்கள்.

ஒரு பாட்டி மகிழடித்தீவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இன்னொரு பாட்டி சிங்கப்படைகள் முதலைக்குடாவை நோக்கி வந்தானுகள். வெடிச் சுட்டபடி அங்கு வந்தான். வெடிச்சத்தம் கேட்டபோது பொது மக்கள் ஆணும், பெண்ணுமாக முதலைக்குடா மகா வித்தியாலயப் பாடசாலைக்கு ஒன்று கூடினோம். அங்க போய்கொஞ்ச நேரத்தில் அங்கேயும் ஆமிக்காரன் வந்தான். வெடிச்சத்தம் கேட்ட போது பிள்ளையள் ரீச்சர்மார் எல்லோரும் மேசைக்கு கீழே ஒழிச்சி இருந்ததைக் கண்டவன் அவர்கள அவண்ட சப்பாத்துக் காலால் மிதிச்சி எழும்புங்க. என்று அதடி ஏசினான். பின் பெரிய பெண் பிள்ளைகளுக்கு அவண்ட துவக்கால் அடித்தான். துவக்க நீட்டிச் சுடவும் வந்தான். மேலே நோக்கி ஓட்டுக்கு கடகடவெண்டு சுட்டான். உடைஞ்ச ஓடு பிள்ளைகளின் தலையில் விழுந்து காயப்பட்டது. பொது மக்கள் சேர்ந்து இருந்த மண்டபத்துக்குள் போய் அவண்ட கண்ணுக்கு தைச்ச ஆம்புள்ளையள வெளியால போடா என்று சொல்லி தெரிஞ்சு எடுத்தான். நானும் என்மகனும் அதற்குள்ளதான் இருந்தோம். என்மகன எனது சீலையால் மூடி என் முதுகுடன் அணைச்சிட்டான். நல்லவேளை என்மகன் அவன் காணல் அதனால் என்மகன் உயிர் தப்பினான் என்றார் அந்தத்தாய்.

இப்படித் தெரிஞ்ச ஆக்கள மடு இருக்கும் இடத்திற்கு கூட்டிப்போய் மடுவச் சுத்தி வாங்கடா என்று அணியாக வர ஒருவர் ஒருவராக சுட்டுச் சுட்டு மடுவுக்குள் போட்டுவிட்டானுகள். மடு நிரம்பியதால் இனி போடமுடியாது என்று எண்ணி நித்தாட்டிவிட்டான் போல என்று கணவனை இழந்த அந்தப் பெண் கூறினாள்.

காயப்பட்டுக் கிடந்தவளுக்கு வைத்தியம் செய்ய வசதியே இல்ல. அதால எண்ட மகள பொலநறுவ வைத்தியசாலைக்குக் கொண்டு போக தமிழர் எண்டு வைத்தியம் செய்ய மறுத்திட்டாங்க. பிள்ள ஆபத்தான நிலைக்கு வந்த போது திரும்ப அங்கு இருந்து கொழும்புக்குக் கொண்டு போனாங்க. அங்கு இருந்து ஆறுமாதம் கழிச்சுத்தான் கூட்டி வந்தன். நாசமாகப் போனவனுகள் அன்றைக்குச் செய்த கொடுமைகள சொல்லேலாது மகன். மில்லுக்குள் கருக்கிப் போன சவங்களப்பாக்க ஏலாது. தாயில பால் குடிச்சமாதிரி தாயும் பிள்ளையும் இன்னும் சிறிய குழந்தைகள் மூன்று கருகிக் கிடந்தன. புருசன் எங்க புள்ள எங்க எண்டு அடையாளம் தெரியாது கருகிய சவத்தை புரட்டிப்பாத்துப் பாத்து அழுகின்ற காட்சியை நான் ஆரிட்ட தம்பி போய் சொல்ற என்று கண்ணீர் சொட்டச் சொட்ட மோட்சமலரின் அம்மா திருமதி கணபதிப்பிள்ளை சொல்லிக் கலங்கினாள்.

அருட் தந்தை ஜோசப் மேரியினதும் ஜோசப் பரராசசிங்கம் எம்.பியினதும் முயற்சியால் மாமனிதர் குமார் பொன்னம்பலம், ஏ.எம்.எம்.சகாதீபன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு இப்படுகொலை பற்றி விசாரணை செய்து வெளியுலகுக்குக் கொண்டுவர முற்பட்ட போது சிங்களப் பேரினவாதம் புதைகுழிகள் போலவே மூடி மறைத்தது. அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரக்கதைகளை மட்டுநகர் மண்ணில் தொடர்ந்து மகிழடித்தீவு, இறால்; பண்ணையில், மில்லுக் கட்டிடத்தில் முடிந்துபோன அத்தியாயமாகவே அடிக்கடி பத்திரிகைகளின் கொக்கட்டிச்சோலைப் படுகொலை என கட்டம் கட்டப்பட்ட செய்தியை கண்டமே தவிர இவற்றுக்கான நீதியோ, நியாயமோ எமது தமிழ் இனத்துக்குக் கிடைக்கவில்லை.

இச்சம்பவங்களை யாரிடத்தில் சொல்வது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. அப்படியாகக் கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகள், சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டு கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு தமிழினம் முற்றாகவே ஒழிக்கப்பட வேண்டும் என சிங்கள அரசும், இராணுவமும் தீட்டிய திட்டங்களே அன்று எம் மக்கள் மத்தியில் கட்டவிழ்க்கப்பட்ட கொலை வெறியாட்டச் சம்பவங்கள் என்பது தமிழ் தாயக மக்கள் அனைவரும் இன்று தலை நிமிர்ந்து சிந்திக்க வேண்டிய ஓர் உண்மையாகும்.

த.உரியன்
Reply
#2
எத்தனை தமிழ் கிராமங்கள் இலங்கை இராணவத்தால் அழிக்கப்பட்டன என்பதை அறியத்தர முடியுமா?
Reply
#3
http://www.tamilcanadian.com/eelam/hrights.../page.php?CAT=3
http://www.tchr.net/history.html
http://www.nesohr.org/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)