Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சூழ்ச்சிகளுக்கு பலியாகும் அநுராவின் பரிதாப நிலை..
#1

<b>சூழ்ச்சிகளுக்கு பலியாகும் அநுராவின் பரிதாப நிலை.. </b>

<b>-உப்புள் ஜோசப் பர்னாந்து (லங்காதீப)-
-தமிழில் வடிவேல்-</b>

1959 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிலர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரசியலை கைவிட வேண்டும் என கோஷமெழுப்பினர். இவர்கள் வேறு யாருமல்ல பண்டார நாயக்கவின் பணத்தினால் 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தி போட்டியிட்டவர்களும் அவரது பணத்தினாலேயே தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டி கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து பாராளுமன்றுக்குத் தெரிவானவர்களுமவர்.

அதே போன்றே இப்போதும் சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற அநுராபண்டார நாயக்கவின் உதவி தேவையில்லை என்றும் அவருடன் ஒப்பந்தம் செய்யத் தேவையில்லை எனக்கூறும் கட்சி ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் கட்சிக்குள் இருக்கின்றனர்.

எனவே இதனை தகப்பனுக்கு செய்தது போன்ற துரோகம் என்று நினைக்க முடியுமா? அதனை இப்போது கூறமுடியாது. ஆனால் அநுராவை அரசியலுக்கு மட்டுமன்றி றோஸ்மீட் இல்லத்திற்கு அழைத்து வந்த அமைச்சர்களிடமும் உறுப்பினர்களிடமும் பிரதமர் பதவியை அவர் கெஞ்சிக் கேட்கவேண்டிய அவசியம் கிடையாது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்தெடுக்க பண்டாரநாயக்க, அநுராவுக்குரிய சொத்துகளை விற்று பணத்தை செலவு செய்தார். அவ்வாறு இல்லையெனில் பெரும் சொத்துக்கள் அநுராவை வந்தடைந்திருக்கும். தற்போது அவருக்குரியதாகவுள்ள ஹொரகொல்ல வளவு அவரது பாட்டனார் வழங்கியதாகும்.அநுராவுக்கு பண்டாரநாயக்க கொடுத்துவிட்டுச் சென்றது மக்கள் சேவை ஒன்றே. அதற்கு உதாரணமாக அவர் அனுராவின் நினைவுப் புத்தகத்தில் ''ஒரு மனிதனின் பிரதான கடமை இன்னுமொருவனுக்கு சேவை செய்வதே'' என்ற வாசகத்தை எழுதியமையாகும்.அதற்காக அவர் கொடுத்துவிட்டுச் சென்ற சொத்து ''சிறிலங்கா சுதந்திரக்கட்சி'' என்பதாகும். அதேபோல அநுராவும் கட்சியை தனது சொத்தாகவே பேணிவருகிறார்.அதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணம் செய்கிறார். எனினும் அதே கட்சி அவருக்கு துரோகி என்ற பட்டத்தை சூட்டுகிறது. அவர் கட்சிக்காக செய்யும் தியாகம் ஒரு காசுக்குக் கூட மதிக்கப்படுவதில்லை.

1980 ஆம் ஆண்டு சிறிமாவோவின் குடியுரிமை பறிக்கப்பட்ட பின்னர் அத்தனகல்ல தொகுதிக்கு போட்டியிட வேண்டிய அவருக்கு தொம்பே என்ற தேர்தல் தொகுதியே வழங்கப்பட்டது. அதேபோன்று 1988 ஆம் ஆண்டு கிடைக்கவேண்டிய சனாதிபதி வேட்பாளர் நியமனமும் மறுக்கப்பட்டது. எனினும் அவர் கட்சிக்காகப் பாடுபட்டார். 1977 முதல் 1989 வரை எதிர்க்கட்சியில் அதாவது சுதந்திரக்கட்சியில் விரல்விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்களே இருந்தனர். அப்போதைய ஆளும் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தது. பிரேமதாசா, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி ரொனிடிமெல் போன்ற பிரபலமானவர்கள் மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மௌனிகளாக செயற்படவேண்டியேற்பட்டது. எனினும் அநுரா பயமின்றி எதிர்க்கட்சி சார்பில் குரல் எழுப்பினார். அத்துடன் மேற்கூறப்பட்ட பிரபலங்களுக்கிடையே கருத்து மோதலை உருவாக்கி மீண்டும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செல்வாக்கை உயர்த்தினார். அப்போதும் அவர் தனக்கு சனாதிபதிப் பதவியையோ பிரதமர் பதவியையோ எதிர்பார்க்காமல் கட்சியின் வெற்றிக்குப் பாடுபட்டார். சனாதிபதி வேட்பாளரும் தனது தாயாருமான சிறிமாவுக்கு வெற்றி வேண்டி ஜே.வி.பியுடன் சமரசம் செய்ய முயன்றார். அது தோல்வியுற்று ஐ.தே.கட்சியை ஜே.வி.பி ஊழலான கட்சி என வர்ணித்தது போன்று தமது கட்சியை விமர்சித்தபோதும் அவர் அஞ்சவில்லை. அத்துடன் வடக்கு கிழக்கிற்கு சென்று தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தனது உயிரையும் துச்சம் என நினைத்து விடுதலைப்புலிகளிடம் சென்று பேசினார்.

அப்போதும் அவர் பதவியை எதிர் பார்க்கவில்லை. 1988 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவரை எதிர்கால பிரதமர் எனக் கோஷமிட்டபோதும் அவர் சுதந்திரக்கட்சி தனது குடும்பத்துக்கு மட்டும் சொந்தமல்ல. வேறு சிரேஷ்ட உறுப்பினர்களும் பிரதமராக வரலாம் என்று கூறினார.

எனினும் கட்சி தோல்வியுற்றது. அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூடக் கிடைக்கவில்லை. அதன்பின்னர் சிறிமாவோவின் உடல் நலக்குறைவாலும் கட்சி தோல்வியைச் சந்தித்ததாலும் கட்சித் தலைமையை பொறுப் பெடுக்குமாறு சிலர் தெரிவித்தபோது சிறிமாவோ இருக்கும் வரை தான் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். ஆனால் அடுத்துவரும் பொதுத் தேர்தலிலாவது வெற்றிபெற வேண்டுமெனக் கருதி கட்சியை மறுசீரமைக்குமாறு கோரினார். எனினும் சிலர் அதை ஏற்க மறுத்தனர். அத்துடன் சிறிமாவோவுக்கு எதிராக செயற்படுவதாகவும் கூறினர். அதன்மூலம் அநுராவை மௌனமாக்கி சந்திரிகாவை தலைமையேற்குமாறும் கூறினர். அப்போதும் அநுரா கட்சிக்கு எதிராக செயற்படவில்லை. இதனை வாய்ப்பாகக் கருதிய பிரேமதாசா அநுராவுக்கு பிரதமர் பதவி வழங்குவதாகவும் தனது கட்சியில் இணையுமாறும் அழைத்தார். எனினும் இதற்கும் அநுரா மயங்கிவிடவில்லை.

இவ்வளவு செய்தும் கட்சி அவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு அவர் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருந்த வேளை கட்சியினர் சிறிமாவோவுக்கும் தெரியாமல் சந்திரிகாவை சனாதிபதி வேட்பாளராக நியமித்தனர். இதனை அநுரா ஆட்சே பிப்பார் என்று அஞ்சிய கட்சியினர் சிறிமா வோவைக் கொண்டே அவரது கட்சி அங்கத்துவத்தை நீக்கிவிட்டனர்.

இதனால் செய்வதறியாத நிலையிலிருந்த அனுரா ஐ.தே.கட்சியில் இணைந்தார் என்று கூறுவதைவிட சுதந்திரக்கட்சியே இணைய வைத்தது என்று கூறலாம். அதன்பின்னர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் பட்டியல் எம்.பியாக பாராளுமன்றுக்கு தெரிவானார். அப்போதும் சபாநாயகராக வர தமக்கு வாக்களிக்குமாறு சுதந்திரக்கட்சியை அநுரா கேட்டபோது கட்சி மறுத்தது.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய அநுராவை சபாநாயகராக நியமிக்குமாறு சுதந்திரக்கட்சி கோரியதற்கு காரணம் அதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையாகும். ஆயினும் ஐ.தே.கட்சியின் ஆதரவில் அநுரா சபாநாயகராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சுதந்திரக்கட்சி கொண்டுவந்து அதனை விவாதத்துக்கு எடுப்பதா இல்லையா என்று சபாநாயகரான அநுராவிடம் கேட்டபோதுஇ அவர் சுதந்திரக்கட்சிக்கு சார்பாக அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபையில் விவாதிக்க அனுமதியளித்தார். இதன்விளைவு அநுரா ஐ.தே.கட்சியிலிருந்து நீங்கினார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட அநுரா கட்சி தோல்வியைச் சந்தித்ததால் எதிர்க்கட்சித் தலைவராக வரும் சந்தர்ப்பம் இருந்தது. எனினும் அது மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது. அதனையும் அநுரா பொறுத்துக் கொண்டார். ஆயினும் அவர் இரவுபகலாக ஐ.தே.கட்சியை தோல்வி காணச் செய்யவே இப்போதும் பாடுபடுகிறார். அவர் ஜே.வி.பி யுடன் கூட்டணி அமைக்க முழுக்காரண கர்த்தாவாக இருந்தார். எனினும் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த அக்கட்சி அநுராவை மறந்துவிட்டு மகிந்தவை பிரதமராக்கியது.

அதிலும் பொறுமையை கடைபிடித்த அநுரா இறுதியாக சந்திரிகா அரசியலமைப்பை மாற்ற முடியாதுவிட்டால் தனக்கு சனாதிபதி வேட்பாளர் நியமனம் கிடைக்கும் என நினைத்தார். அதுவும் மகிந்தவுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அவருக்கு தற்போது பிரதமர் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அநுரா அதற்காக கவலைப்படாது தனக்கு அடுத்தபடியாக இருக்கும் தன்னை மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்த்த மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு தற்போது தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

இதேவேளை தற்போது கட்சியினர் மகிந்தவுக்கு ஆதரவாக ஜே.வி.பி யை இணைத்துக்கொண்டு அநுராவுக்கு கிடைத்துள்ள பிரதமர் வேட்பாளர் நியமனத்தை பறித்து ஜே.வி.பியினருக்கு வழங்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. அதாவது மகிந்தவுக்கும் அநுராவுக்குமிடையில் மோதலை உருவாக்கி பிளவை ஏற்படுத்துவதே அந்த சூழ்ச்சியாகப்படுகிறது.

இந்த சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு கவலையடைந்த நிலையிலேயே அநுரா வெளிநாடு பயணமானார். எனினும் தனது கவலையை மாற்றிக்கொண்டு மீண்டும் நாடு திரும்பிய அநுராவுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மகிந்தவுக்கு ஆதரவாக அநுரா மேடைகளில் பேசுவதாயின் அநுரா மகிந்தவிடம் தான் பிரதமராக நியமனம் பெற்றதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுள்ளார் என்ற வதந்தி பரவியமையாகும். இது மகிந்தவிடமிருந்து அநுராவைப் பிரிக்கும் ஒரு சதியாகும். அது உண்மையானால் அநுரா தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள மாட்டார். அவ்வாறு அவர் கலந்து கொள்ளாதுவிட்டால் இரண்டு விளைவுகள் கிடைக்கும். ஒன்று மகிந்த வென்றால் அநுராவுக்கு பிரதமர் வேட்பாளர் பதவி கிடைக்காமல் போகும். இரண்டாவது மகிந்த தோல்வியுற்றால் மகிந்தவையும் அநுராவையும் துரத்திவிட்டு ஜே.வி.பி எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்றுக் கொள்வதாகும்.

தற்போதைய சனாதிபதித் தேர்தலில் மகிந்த தோல்வியுற்று பொதுத் தேர்தல் நடைபெறுமாயின் அதில் சந்திரிகா போட்டியிடாவிட்டால் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட இருப்பது அநுரா மட்டுமே. ஆனால் அவரையும் கட்சியினர் முடித்துவிட்டால் கட்சிக்கு தலைவர் ஒருவர் இல்லாமல்போய்விடும்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிலரின் இந்த நடவடிக்கைகளை தோல்வியுறச் செய்ய அநுராவுக்கு திறமையிருக்கின்றதா என்பது இப்போது கூறமுடியாது. அவ்வாறு அதில் அநுரா வெற்றி பெறுவாரெனில் அன்று பண்டாரநாயக்கவுக்கு செய்தமாதிரி அவரது புதல்வருக்குச் செய்வது முடியாத ஒன்றாகும்.


<b>நன்றி:</b> ஈழநாதம் (17 -10 - 2005)
<b>கணனித் தட்டச்சு:</b> திருமகள் (ரஷ்யா)
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)