கருணா குழுவை தெரியாதென்கிறது அரசு அவர்களை சந்திக்க வழிகாட்டியது இராணுவம்
<b>இதுதான் இன்றைய நிலையென்கிறது கண்காணிப்புக்குழு</b>
இலங்கை அரசாங்கம் கருணா குழுவென்ற ஒன்று இருப்பது தனக்குத் தெரியாது அதனுடன் தொடர்பு எதுவுமில்லை என தெரிவித்தது. எனினும் கிழக்கு மாகாணத்திற்கு சென்று கருணாவை எங்கு சந்திக்கலாம் என கேட்ட போது அதற்கு இராணுவமே வழிகாட்டியது.
இதன் மூலம் இராணுவத்திற்கு கருணா எங்கிருக்கின்றார் என்பது தெரிந்திருப்பது புலனாகிறது என இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் ஹெலண் ஒல்வஸ்பெற்ரியர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு இவ்வாறான ஆயுத குழுவின் பிரசன்னம் குறித்து தெரிந்துள்ள போதிலும் அதற்கு தீர்வு காண முயற்சிகளை அது மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக எமது பணிகள் கடினமாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில வார பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட,கிழக்கில் தொடரும் வன்முறைகள் மத்தியில் யுத்த நிறுத்த உடன்படிக்கை எவ்வாறு தொடர்கின்றது என்பது குறித்து நாங்களும் கவலை கொண்டுள்ளோம்.
பணிகளை கைவிடாமலிருப்பது மாத்திரமே நாங்கள் செய்யக்கூடியது. இருதரப்பும் எங்களை போகுமாறு கூறும்வரை நாங்கள் இங்கிருப்போம்.
யுத்த நிறுத்த உடன்படிக்கை எம்மால் அல்ல இரு தரப்பாலுமே முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். பாதுகாப்பு நிலைவரம் எங்களது பணிகளை செய்வதற்கு அனுமதிக்கும் வரை நாங்கள் எங்கள் பணிகளை செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து நாடுகளும் தங்களுடைய பணியாளர்கள் எவரும் பணியின் போது உயிரிழப்பதை அனுமதிக்காது எனவும் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
வட,கிழக்கில் வன்முறைகள் ஆபத்தான விதத்தில் அதிகரித்துள்ளன. நாங்கள் இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் யுத்தம் சாத்தியமென எச்சரித்திருந்தோம். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது.
திருகோணமலை தற்போது பதட்டமாகவுள்ளது. பதட்டம் மிகுந்த பகுதிகள் அடிக்கடி மாறுகின்றன. கடந்த வருடம் மட்டக்களப்பு பதட்டமாக காணப்பட்டது. தற்போது திருகோணமலையும் யாழ்ப்பாணமும் பதட்டமாக காணப்படுகின்றன.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை யார் அதிகமாக மீறியுள்ளனர் என்ற கேள்விக்கு என்னிடமிருந்து விடுதலைப் புலிகள் என்ற விடைகிடைக்கும் என்றே அனைவரும் எதிர் பார்ப்பார்கள்.
எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் விடுதலைப் புலிகள் தான் யுத்த நிறுத்தத்தை அதிகளவு மீறியுள்ளனர்.
எனினும், உண்மை நிலை இதனை விட ஆழமானது. தற்போதைய நெருக்கடி தரையின் ஆழத்திலிருந்து உருவாகின்றது.
பல ஆயுத குழுக்கள் செயற்படுகின்றன. இவற்றில் சிலவற்றின் முகாம்களை நாங்கள் பார்வையிட்டுள்ளோம். மேலும் இந்த முகாம்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளதால் இராணுவத்திற்கு இது குறித்து தெரிந்திருக்கும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னர் உண்டான கொலைகள் குழப்பநிலையை உருவாக்கியுள்ளதுடன் இந்த சூழ்நிலையை பல சக்திகள் பயன்படுத்துவதற்கான வெற்றிடமும் உருவாகியுள்ளது.
கடந்த வருடம் இன மோதல் தொடர்பான கொலைகளில் பலர் பலியாகியுள்ள போதிலும் இந்த கொலைகளுடன் தொடர்புபட்டவர்களை இராணுவத்தாலோ பொலிஸாலோ கண்காணிப்பு குழுவினாலோ இன்னமும் இனம் காணமுடியவில்லை. யுத்த நிறுத்த உடன்படிக்கை காலத்தில் இது வழமையானதல்ல.
இந்த படுகொலைகள் இரண்டு தரப்பிற்கும் இடையில் நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளதுடன், பேச்சுவார்த்தை மேசைகளுக்கு இரு தரப்பும் வருவதற்கான சாத்தியக் கூறுகளை இல்லாமல் செய்துவிட்டது.
இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காணும் வரை கொலைகள் நிற்கப் போவதில்லை.
ஆயுதக் குழுகளிடமிருந்து, ஆயுதங்களை களைய வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கத்திற்கு கடந்த வருடம் எடுத்துக் கூறினோம். அவர்களுடைய செயற்பாட்டிற்காக காத்திருந்தோம்.
அரசாங்கம் தனக்கும் இந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும்.இவ்வாறான அமைப்பின் இருப்பே தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தது.
கிழக்கிற்கு சென்று கருணாவை எங்கு பார்க்கலாம் என இலங்கை இராணுவத்தை கேட்டபோது அவர்கள் எங்களை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு கேட்டனர்.
இதன் மூலம் அவர்களுக்கு இது குறித்து தெரிந்திருப்பது புலனாகிறது.
இவர்களுடைய ஆயுதங்களை களைய வேண்டுமென அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளோம்.
அரசாங்கம் இந்த குழுவிற்கு ஆதரவு வழங்குவதற்கான நேரடி தடயங்கள் இல்லாத போதிலும், அரசாங்கத்திற்கு இவ்வாறான அமைப்பு உள்ளது என்பது தெரியும். எனினும் இதற்கு ஒழுங்கான தீர்வை காண அரசாங்கம் முயலவில்லை.
இது எமது கண்காணிப்பு பணிகளை கடினமாக்கியுள்ளது.
யுத்த நிறுத்த உடன்படிக்கை நல்ல ஆவணம். எனினும் இதனை வடிவமைத்தவர்கள் இவ்வாறான நெருக்கடியை எதிர்பார்க்கவில்லை.
யுத்த நிறுத்த உடன்படிக்கை முன்னர் எப்போதையும் விட தற்போது பலவீனமானதாகவுள்ளது. நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை.
எமது பணி அரசாங்கத்தினாலும் இராணுவத்தினாலும் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் உள்ளன. எனினும், பொதுவாக இரு தரப்புடனும் நல்லுறவுள்ளது.
நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கம் எப்போதோ எங்களை வெளியேற்றியிருக்கும்.
யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவுடன் பிரச்சினையுள்ளவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் இது குறித்து பேச வேண்டும். அவர்களே நாங்கள் இங்கு தங்கியிருப்பதற்கு பொறுப்பு
கண்காணிப்பு குழுவில் ஐந்து நாடுகளை சேர்ந்தவர்களும் பணியாற்றுகின்றனர். அவர்கள் பல்வேறுபட்ட தொழில்துறையை சேர்ந்தவர்கள். முன்னர் எப்போதும் இலங்கைக்கு வராதவர்கள் அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்கள். எனினும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் ஆர்வம் கொண்டவர்கள். குடும்பங்களை விட்டு நீண்ட காலம் இங்கு தங்கியிருப்பது பெருமகிழ்ச்சிக்குரியதல்ல மாறாக கடினமானது.
விமர்சனங்கள் என்பது ஆரோக்கியமானவை, எனினும், பலர் என்ன நடைபெறுகின்றது என்பதை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கிறார்கள்.
http://www.thinakural.com/New%20web%20site...y/16/news-2.htm