Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள்தான் உங்கள் மிகச்சிறந்த ஆசிரியர்
#1
<span style='font-size:22pt;line-height:100%'>
<img src='http://www.kumudam.com/theeranadhi/010106/pg1-t.jpg' border='0' alt='user posted image'>
சந்தோஷ்சிவன், உலக அளவில் மதிக்கப்படும் இந்திய சினிமா சாதனையாளர்களுள் ஒருவர். சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் சினிமாவிற்கு மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தவர். மணிரத்னத்தின் தளபதி படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னத்தின் ரோஜா, இருவர், உயிரே படங்களுக்கு இவர் செய்த ஒளிப்பதிவு, துல்லியமான காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் அழகையும் கொண்டிருந்தது. தமிழுக்கு இது புதியது. இதன் மூலம் தமிழ் சினிமா ஒளிப்பதிவை மேம்படுத்தியதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கியுள்ள மல்லி, டெரரிஸ்ட், நவரஸா திரைப்படங்களும் மிக முக்கியமானவை. எளிமை, நேர்த்தியான சித்திரிப்பு, காட்சிகளில் உறுதியான தன்மை, காத்திரமான மற்றும் தெளிந்த கதை சொல்லும் ஆற்றலுக்காக மெச்சப்பட்டவை இப்படங்கள். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை இப்படங்கள் பெற்றுள்ளன. மல்லி, சிகாகோ சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளிப்பரிசையும், பொலிஷ் திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளையும் பெற்றது. டெரரிஸ்ட் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும் கோல்டன் பிரமிட் சிறப்பு பரிசையும் பெற்றது. நவரஸா பூஸன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மற்றும் பெரும்தச்சன் காலபனி, மோகினியாட்டம், இருவர், உயிரே ஆகிய படங்களுக்குச் செய்த ஒளிப்பதிவுக்காக ஐந்து முறை இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

சென்னை ராமாவரத்திலுள்ள சந்தோஷ்சிவன் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.

தீராநதி : முதலில், படைப்பு மனநிலை உங்களுக்குள் உருவாகக் காரணமாக இருந்த உங்கள் சிறுவயது அனுபவங்கள், குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்..

சந்தோஷ்சிவன்:
ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரைக்கும், எது அவனைப் படைப்பாளியாக ஆக்கியது என்பது, சிறுவயதில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே, அவன் என்ன கற்றுக்கொள்கிறான் என்பதில்தான் இருக்கிறது. பாடத்திட்டங்கள் ஒருவனுக்கு அடிப்படை அறிவைத் தரும். ஆனால், வாழ்க்கையைப் புரிந்து கொள்வதுக்கான படிப்பு, அவனது படைப்பு பலம், பாடத்திட்டங்களுக்கு வெளியே கிடைக்கும் அனுபவத்தில்தான் இருக்கிறது. அந்தவகையில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே கிடைத்த என் சிறுவயது அனுபவங்கள்தான் என்னுள் ஒரு படைப்பாளியை உருவாக்கியவை. திருவனந்தபுரத்தின் தென்பகுதியில்தான் என் இளமைக் காலத்தின் பெரும்பகுதி கழிந்தது. அப்போது நான் ஹாக்கி விளையாடுவேன்.

மைதானத்தில், மதிய நேரங்களில் வானத்தையும் மேகத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன். அக்காலங்களில் சேகரித்தவைகள்தான், பால்யகால நினைவுகள்தான் இன்றைக்கு வரைக்கும் என் காமிரா வழியாக காட்சிகளாக மாறுகிறது. என் படைப்பாளுமை பலமும் அங்கேயிருந்துதான் உதயமாகிறது. குறிப்பாக அந்த வயதில் நான் செய்த பயணங்கள்.
பள்ளிக்கூடத்தில் நான் சிறந்த மாணவன் இல்லை. கல்லூரியிலும் பி.காம் படிக்கும்போது மனம் அக்கவுண்டன்ஸியில் செல்லவில்லை. அக்காலங்களில் அப்பா, வேலை காரணமாக நிறைய பயணம் செய்வார்.

அவருடன் நானும் செல்வேன். புகைப்படக் கலை மீதான ஆர்வம் அப்போது அப்பாவிடம் இருந்து எனக்குத் தொற்றிக் கொண்டது. லென்ஸ் மூலமாக உலகத்தைப் பார்ப்பதை, அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். கேரளாவின் காடுகளிலும் வெட்டவெளிகளிலும் உள்ள ஒளியமைப்பை, மாறுதலை அப்போது நான் கவனித்துக் கொண்டே வந்தேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு நான் தனியாகவே நிறைய பயணம் செய்தேன். அப்பயணங்களில் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அவை புகைப்படக் கலையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளவும், படைப்பு மனநிலையைச் செழுமைப்படுத்தவும் பெரிதும் உதவின. புனா திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு, இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து கேமராவும் கையுமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டே சுற்றினேன். புனா திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்னுடன் படித்தார்கள். பூனா கல்லூரியில் அடிக்கடி போராட்டங்கள் நடக்கும். எனவே, நிறைய விடுமுறைகள். விடுமுறை சமயங்களில் கேரளாவுக்குத் திரும்பாமல் ஏதாவது ஒரு நண்பனுடன் அவனது ஊருக்குச் செல்வேன். இப்படி இந்தியா முழுக்கப் பயணம் செய்திருக்கிறேன். அவ்வளவு குறைந்த வயதுக்குள் என் அளவுக்கு யாராவது பயணம் செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். புனா திரைப்படக் கல்லூரி, சினிமா குறித்த தொழில்நுட்ப அறிவைத் தந்தது. ஒரு நாளைக்கு மூன்று படங்கள் வீதம் பார்த்தேன். மிக முக்கியமான உலகத் திரைப்படங்களை அங்கே பார்க்க முடிந்தது.

தீராநதி: ஆரம்பத்தில் அதிகமும் எதனை நீங்கள் புகைப்படம் எடுத்தீர்கள்?

சந்தோஷ்சிவன்: சிறுவயதில் பயணம் செய்யும்போது, நான் கவனித்த மிக முக்கியமான ஒரு விஷயம், நமது வீடுகளின் அமைப்பு. நமது வீடுகள் எல்லாப் பக்கமும் நன்றாக அடைக்கப்பட்ட வீடுகள். எனவே இருட்டு வீட்டுக்குள் பலமாக இருக்கும். திறந்திருக்கும் ஜன்னல், வாசல் வழியே வீட்டுக்குள் வரும் வெளிச்சமும் அதே அளவு பலத்துடன், துல்லியத்துடன் இருக்கும். உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கும், இன்றைய அனுபவத்தில் இருந்து பேசுவதானாலும் சரி, உலகின் வேறு எப்பகுதியிலும் இது போல் வெளிச்சம் இருட்டுக்குள் பலத்துடன் வருவதைப் பார்க்கமுடியாது என்றுதான் சொல்வேன். எனக்கு இந்த இருட்டு பிடிக்கும். வெளிச்சம் இருட்டில் இருந்துதானே ஆரம்பிக்கிறது. அந்தக்காலத்தில் அதனையெல்லாம் புகைப்படம் எடுத்தேன்.

தீராநதி: புனா திரைப்படக் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் வாய்ப்புகள் கிடைத்ததா அல்லது தேடி அலைய வேண்டியிருந்ததா?

சந்தோஷ்சிவன்: படிப்பு முடிந்து வெளியே வந்த போது யாரும் என்னைக் கூப்பிட்டு வேலைகள் தரவில்லை. தேடிச் சென்று மற்றவர்களைக் கேட்கவும் எனக்குத் தயக்கமாக இருந்தது. அப்போது விமரிசகர் விஜய் கிருஷ்ணா, மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்து, ஐந்து தினங்களுக்குள் ஒரு திரைப்படத்தை முடிக்கச் சொன்னார். மிகக்குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம். பதினாறு எம்.எம்.ல் அந்தப் படத்தை உருவாக்கினோம்.

அப்படம் நிதியோட கதா. அதனை ப்ளோ அப் செய்ய பம்பாய்க்குச் சென்ற போது, என்னுடைய வேலைகளைக் கவனித்த ஆதித்தா பட்டாச்சார்யா, என்னை ராக் இந்தித் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார்.

தொடர்ந்து மலையாளத்தில் விஜித்தம்பி, அண்ணன் சங்கீத்சிவன், அஜயன், விஜய்கிருஷ்ணா போன்ற முக்கியமான ஏழு புதிய இயக்குநர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன். பெரும்தச்சன் படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம் தளபதியில் ஒளிப்பதிவு செய்யக் கூப்பிட்டார்.
தொடர்ந்து அவருடன் ரோஜா, இருவர், உயிரே போன்ற படங்களுக்கு வேலை செய்தேன். இந்த நான்கு படங்களுமே முக்கியமானவை.

தீராநதி: தொடக்கத்தில் உங்களுக்கு ஆதர்ஷமாக இருந்த ஒளிப்பதிவாளர் யார்?
சந்தோஷ்சிவன் : சுப்ரதோ மித்ரா, சத்யஜித் ரேவின் ஒளிப்பதிவாளர்.

தீராநதி: சினிமா ஒளிப்பதிவைப் பொறுத்து, உங்கள் பங்களிப்பு என்று தளபதியில் நீங்கள் அறிமுகம் செய்த worm tone ஐ சொல்கிறார்கள். அசோக்மேத்தாவும் சுப்ரதோ மித்ராவும் கூட worm toneல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தளபதியில் ஏன் இந்த worm toneஐ பயன்படுத்தியிருந்தீர்கள், அதற்குப் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை, குறிப்பாக லென்ஸ்ஐ சொல்ல முடியுமா?

சந்தோஷ்சிவன்: தொழில்நுட்பக் கருவிகள் என்று பெரியதாக ஒன்றும் இல்லை. வழக்கமான தொழில்நுட்பக் கருவிகளும் லென்ஸும்தான். தளபதியில் ரஜினியின் கதாபாத்திரத்தைப் பற்றி மணிரத்னம் சொன்னபோது, worm toneல் அதனை ஒளிப்பதிவு செய்யலாம், அது அந்தக் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாகவும், கதாபாத்திரத்தை மேலும் மெருகூட்டுவதாகவும் இருக்கும் என்று தோன்றியது. எனவே, அதைச் செய்தோம். நான் நினைத்தது போல் அது மிகச் சிறப்பாகவும் வந்தது.
தளபதியில்தான் நான் முதன்முதலாக பாடல்காட்சிகளை ஒளிப்பதிவு செய்தேன். அதற்கு முன்பு நான் ஒளிப்பதிவு செய்தவற்றில் பெரும்பாலானவை கலைப்படங்கள், அல்லது மலையாளப் படங்கள்தான். அவற்றில் பாடல்காட்சிகள் இருக்காது; இருந்தாலும் ஒரு பறவை பறந்து சென்றுகொண்டே இருப்பது, அல்லது அதைப்போல் மெதுவாக கதாநாயகனும் கதாநாயகியும் பேசிக்கொண்டே நடந்து செல்வது போன்ற காட்சிகள்தான். தளபதியில் கும்பலாக ஆடும் போது கிளம்பும் தூசி, துல்லியத்துடன் இறங்கும் வெளிச்சம் இவைகளை worm toneல் பதிவு செய்தோம். படத்துக்கு அது வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுத்தது.

தீராநதி: லைட்டை உபயோகிக்காமல், இயற்கையாக இருக்கும் வெளிச்சத்தில் ஒளிப்பதிவு செய்யும் பாணி இப்போது அதிகரித்து வருகிறது. நீங்களும் இதனைச் செய்திருக்கிறீர்கள்.

சந்தோஷ்சிவன்: லைட்டை உபயோகிக்காமல் என்று சொல்லமுடியாது. அது சாத்தியமும் இல்லை. படம் பார்ப்பவர்களுக்கு லைட் உபயோகிக்காமல், இயற்கையாக இருக்கும் வெளிச்சத்தில் இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது என்று தோன்றும்படி, லைட்டை குறைவாக உபயோகித்து ஒளிப்பதிவு செய்வது என்று சொல்லலாம். யதார்த்தமாக இருக்க இப்படிச் செய்கிறோம். ஆனால், அதுதான் சிறந்தது, அதிகமாக லைட்டை உபயோகித்து எடுக்கப்படுவது சிறந்ததல்ல என்று சொல்லமுடியாது. இரண்டும் இரண்டு பாணிகள், அவ்வளவுதான். காட்சிக்கு, கதைக்கு, கதாபாத்திரத்துக்குத் தக்கபடி, பொருந்தி வரும்படி ஒளிப்பதிவு செய்வதுதான் முக்கியம். ஆங்கிலப் படங்களிலும் உலகத் தரமான கலைப்படங்களிலும் அதிகம் லைட்டை உபயோகித்து எடுக்கப்பட்ட படங்களும் உள்ளன. நமது படங்கள் கதாநாயகனையும் கதாநாயகியையும் மையமாகக் கொண்ட படங்கள். இவர்களது ரசிகர்கள், இவர்கள் இரண்டு பேருக்காகவும்தான் படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு கதாநாயகனும் கதாநாயகியும் பளிச்சென்று வெளிச்சத்தில் இருந்தால்தான் பிடிக்கும். மங்கலான வெளிச்சத்தில் கதாநாயகனைக் காண்பித்தால், அப்புறம் அதில் எங்கே ஹீரோயிஸம் இருக்கிறது. நமது பார்வையாளர்கள், விடியற்காலையில் தூங்கி எழுந்து வரும்போதுகூட கதாநாயகி பளீரென்று அழகாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சினிமா என்பதே மாயைதானே.

தீராநதி: இந்திய சினிமாவின் ஒளிப்பதிவை மேம்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு என்ன?
சந்தோஷ்சிவன்: அதை எப்படி நான் சொல்லமுடியும். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தங்கள், தங்கள் பங்களிப்புகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஒரு தலைமுறை, தான் தொடர்ந்து செய்யும் வேலைகளில் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறது. அதனை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறது. அந்தத் தலைமுறை அதை மேலும் கொஞ்சம் செழுமைப்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து புதிய தலைமுறை கையில் ஒப்படைக்கிறது. இப்படித்தான் காலம்காலமாக வளர்ச்சி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. சுப்ரதோ மித்ரா ஒளிப்பதிவு செய்யும் போது ஏகப்பட்ட சிக்கல்கள். அவர் தன் பயணத்தில் அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்டார். அவர் கண்டடைந்தது அவரது படங்களாக இன்று நம் முன் இருக்கிறது. அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த தலைமுறை தொடர்கிறது, நான் தொடர்கிறேன். என்னுடைய பங்களிப்புகளும் என் தலைமுறையின் பங்களிப்புகளும் படங்களாக இருக்கின்றன. அதிலிருந்து அடுத்த தலைமுறை தொடரும். இதுதான் இயற்கையின் நியதி.

ஒளிப்பதிவுத் துறையில் தடம் பதித்த என் முன்னோர்களை நான் என்றும் நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் மீது பெரிய மரியாதையும் பாராட்டுணர்வும் கொண்டிருக்கிறேன். அவர்கள் இந்த உலகில் பருவங்களின் ஒளியையும் நிழலையும் அவற்றின் கவித்துவத்துடன் நோக்க நமக்குக் கற்றுத்தந்து வழி அமைத்தவர்கள்.

தீராநதி: இந்திய லேபுகளின் தரம் நீங்கள் உருவாக்க நினைக்கும் ஒளிப்பதிவுத் தரத்துக்குப் போதுமானதாக இருக்கிறதா?

சந்தோஷ்சிவன்: நிச்சயமாக. இந்திய லேபுகளின் தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மை. டெரரிஸ்ட் படத்தை நியூயார்க்கில் திரையிட்ட போது, படத்தைப் பார்த்த சில பெரிய ஒளிப்பதிவாளர்கள், எந்த லேபில் வேலை செய்தீர்கள் என்று கேட்டார்கள். நான் ஜெமினி லேப் என்று சொன்னேன். அந்தப் பெயர் அதுவரை அவர்கள் கேள்விப்படாதது.

நியூயார்க்கில் ஜெமினி என்ற பெயரில் எந்த லேபும் இல்லை. அவர்களில் ஒருவர், நியூயார்க்கில் எங்கே இருக்கிறது அந்த லேப் என்று கேட்டேவிட்டார். நான், சென்னையில் இந்தியாவில் இருக்கிறது என்று சொன்னேன். என்னுடைய படங்களை எல்லாம் நான் இந்திய லேபுகளில்தான் உருவாக்கியுள்ளேன். நவரஸா படம் பிரசாத் லேபில்தான் தயாரானது.

தீராநதி: நீங்கள் கஷ்டப்பட்டு எடுத்த காட்சி எது?

சந்தோஷ்சிவன்: ரோஜாவில் வரும், ருக்குமணி ருக்குமணி பாடல் காட்சி. அருவிக் கரையில் தூறல்களுக்கு நடுவே அந்தக் காட்சியைப் படமாக்கினோம்.

தீராநதி: நீங்கள் ஒளிப்பதிவு செய்தவற்றில் உங்களுக்குப் பிடித்தது?

சந்தோஷ்சிவன்: எல்லாமே பிடித்தவைதான். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், டெரரிஸ்ட் படத்தைச் சொல்லலாம். டெரரிஸ்ட் படத்தில் மையக் கதாபாத்திரத்தின் குளோசப் காட்சிகளை, arri 35 3யோடு இணைந்த zeiss 60 mm t3¨மேக்ரோ லென்ஸைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்தோம்.

இயல்பான ஒளியமைப்பும் காட்சியும் அப்படத்தில் இழையோடியிருக்கும். படத்தில் தண்ணீர், பிரதான கதாபாத்திரத்தின் மனத்தின் ஒரு குறியீடாக இருக்கும். சிறிய துகளில் தொடங்கி துளித்துளியாகி, நீர்த்திவலையாக விரிந்து பரவும். அதனை ஒளிப்பதிவு செய்யும் போதே மிகவும் பரவசமடைந்து செய்தேன். இருவர் படமும் எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது.

தீராநதி: அசோகா திரைப்படத்தின் ஒளிப்பதிவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அதனை ஒளிப்பதிவு செய்த அனுபவத்தைச் சொல்லமுடியுமா?

சந்தோஷ்சிவன் : அசோகா, anamorphic format ல் எடுக்கப்பட்டது. கலைப்படத்தின் கூறுகளையும் வணிகப்படத்தின் கூறுகளையும் ஒருங்கே கொண்ட படமென்று அதனைச் சொல்லலாம். அந்தந்த நேரத்து காற்று, பனி, மேகங்கள், சூரிய உதயம் இவைகளோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயமும் மோகமும் அப்படத்தின் ஒளிப்பதிவில் இருக்கும்.

தீராநதி: மல்லி, டெரரிஸ்ட், நவரஸா போன்ற நீங்கள் இயக்கிய படங்களின் ஒளிப்பதிவுடன், மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு நீங்கள் செய்த ஒளிப்பதிவை ஒப்பிட்டால், உங்கள் இயக்கத்தில் வந்தவற்றில்தான் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

சந்தோஷ்சிவன்: இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. டெரரிஸ்ட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் பாராட்டைப் பெற்றது இருவர் படத்தின் ஒளிப்பதிவுதான். அதன்பிறகு உயிரே. ஆனால் நானே இயக்கும் படங்களில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. நான் விரும்பியவற்றை அதில் செய்யலாம், அவ்வளவுதான்.
தீராநதி: இப்போதுள்ளவர்களில், உங்களுக்குப் பிடித்த இந்திய இயக்குநர் யார்?
சந்தோஷ்சிவன்: நிறைய பேரைச் சொல்லமுடியும். ஆனால், மணிரத்னத்துடன் வேலை பார்ப்பதைத்தான் எப்போதும் நான் விரும்புகிறேன். அவருடன் வேலை செய்தது எனக்கு மன நிறைவைத் தந்தது.

தீராநதி: ஒளிப்பதிவில் இருந்து திடீரென்று இயக்கத்துக்குள் வந்தீர்கள். ஏன்?

சந்தோஷ்சிவன்: புனா திரைப்படக் கல்லூரியில் இருக்கும்போதே நான் இயக்கியிருக்கிறேன். டிம்புலுவின் கதை (the story of timblu) என்ற என் முதல் படம் அப்போது என் இயக்கத்தில் உருவானதுதான். அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் இயக்குநர் சந்தோஷ்சிவனுக்கு வேலைகள் இல்லாமல் இருந்தது. இப்போது வாய்ப்புகள் உள்ளன, எனவே, நானே இயக்கத்தை மீண்டும் தொடங்கிவிட்டேன்.

தீராநதி: டிம்புலுவின் கதை எப்படி உருவானது?

சந்தோஷ்சிவன்: புனா திரைப்படக் கல்லூரியில், என்னுடன் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் படித்தான். அவனுடன் அருணாசலப்பிரதேசம் முழுக்க சுற்றினேன். அங்கேயிருந்த மக்கள் இயற்கையை மட்டுமே அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு வானொலி தெரியாது, தொலைக்காட்சி தெரியாது. அவர்கள் உயரமான கட்டடங்களை அறிந்திருக்கவில்லை. பொதுவாக நான் எங்கு சென்றாலும் கையில் ஒரு காமிராவுடன் செல்வேன். ஒரு திட்டமில்லாமல் அவர்களைப் பதிவு செய்தேன். அதன்பிறகு அதிலிருந்து டிம்புலுவின் கதை உருவானது. அது ஒரு மணி நேரப் படம். அருணாசலப் பிரதேசம் முழுக்க சுற்றி அதனைப் படமாக்கினேன். இயற்கைக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அப்படம் சித்தரிக்கிறது. டிம்புலுவின் கதைக்கு 1988_ல் குறும்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

தீராநதி: சமீபத்தில் எப்பவாவது டிம்புலுவின் கதை எடுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றீர்களா?

சந்தோஷ்சிவன்: ஆமாம். இப்போது அங்கே எல்லோருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி வந்துவிட்டது. அவர்கள் ராக் இசை கேட்கிறார்கள். அவர்களிடம் முன்பு இருந்த குழந்தைத்தனம் இப்போது இல்லை.
தீராநதி: பல படங்களை இயக்கியிருந்தாலும் சர்வதேச அளவில் உங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கித் தந்த படம் டெரரிஸ்ட்தான். புலிட்ஸ்டர் பரிசு பெற்ற திரைப்பட விமர்சகர் ரோஜர் எபர்ட், டெரரிஸ்ட்டை உலகின் சிறந்த நூறு படங்களில் ஒன்றாகக் கூறியுள்ளார். இதனைத் தயாரிக்கும் திட்டம் எப்படி உருவானது?

சந்தோஷ்சிவன்: ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் நிகழ்ந்த பந்த்தில், நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த நான், ஒருநாள் முழுக்க அந்த காருக்குள்ளேயே நகரமுடியாமல் இருக்கவேண்டியிருந்தது. அப்போதிருந்தச் சூழலும் அசை போடலும்தான், டெரரிஸ்ட்டின் ஆரம்ப விதை. அந்தப் படுகொலைக்குப் பிறகுதான் தற்கொலைப் படை பற்றிய அறிதல் எனக்குக் கிடைத்தது. ஒரு லட்சியத்துக்காக தங்களையே அழித்துக் கொள்வது சாதாரணமான ஒன்றல்ல. அதனை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எனக்குள் சிந்தனையைத் தூண்டிவிட்டது. அதனை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அப்படித்தான் டெரரிஸ்ட் உருவானது. வன்முறையைப் பிரதானப்படுத்தாமல், உயர்ந்த லட்சியத்தைக் கொண்டுள்ள ஒரு பெண், எப்படி தன் வாழ்வை அழித்துக் கொள்கிறாள் என்பதை அப்படத்தில் காண்பித்தோம். ஒரு தலைவருக்காக தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் பதின்வயது இளைஞர்கள் அதில் வருகிறார்கள். மிகக் குறைவான நாட்களில் அப்படத்தை முடித்தோம். அது ஒரு வினோதமான அனுபவம்.

தீராநிதி: வன்முறை, தொடர் குண்டுவெடிப்புகள் என்று பதட்டமான ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். இப்போதுள்ள சூழலுக்கு மாற்றாக எதனை முன்வைப்பீர்கள்?

சந்தோஷ்சிவன்: தனிமனிதர்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தை மாற்றுவது எப்படி என்பதைவிட, தனிமனிதர்களுக்குள் சிந்தனையைத் தூண்டி விடுவதைத்தான் முக்கியம் என்று கருதுகிறேன்.

தீராநதி: சமீபத்தில் வெளிவந்துள்ள நவரஸா மூன்றாவது பாலினமான அரவாணிகளைப் பற்றியது. இதனை இயக்க வேண்டும் என்ற உந்துதல் எப்படி உருவானது?

சந்தோஷ்சிவன் : மகாபாரதத்தில், அர்ஜூனனுக்கும் நாககன்னிகாவுக்கும் பிறந்தவன் அரவாண். குருஷேத்திர யுத்தத்தில் காளிக்காக பலியிட அவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவனின் கடைசி ஆசை ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது. அதற்கு எந்தப் பெண்ணும் முன்வரவில்லை. எனவே கிருஷ்ணன், மோகினி அவதாரம் எடுத்து அரவாணைத் திருமணம் செய்து கொள்கிறான். அதன்பிறகு யுத்தத்தில் அரவாண் களப்பலி இடப்படுகிறான். விதவையான மோகினிக்கு வெள்ளைப் புடவையுடுத்தி வளையல்களை உடைத்து சடங்குகளைச் செய்கிறார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. இந்தச் சடங்குதான் வருடாவருடம் கூவாகத்தில் நடைபெறுகிறது. சுமார் மூன்று லட்சம் பேர் அப்போது கூவாகத்தில் கூடுகிறார்கள். அங்கே வரும் அரவாணிகள் தங்களை கிருஷ்ணனின் அவதாரமாக நினைக்கிறார்கள்.

கூவாகம் திருவிழா பற்றிக் கேள்விப்பட்டு, அங்கே சென்று, திருவிழாவைப் பதிவு செய்து திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம். ஆஷாபாரதி பல்வேறு உதவிகளைச் செய்தார். படத்துக்கான ஆராய்ச்சி வேலைகளை ராஜாசந்திரசேகர் செய்தார். படத்தின் வேலைகளைத் தொடங்கியபோது மிகக் குறைவான திட்டம்தான் எங்கள் கையில் இருந்தது. திரைக்கதை முழுமையடையாமல் இருந்தது. வசனம் எழுதப்படவில்லை. படத்தின் பிரதான அரவாண் பாத்திரமான கௌதமி பாத்திரத்துக்கு, அங்கே சென்றுதான் வந்திருந்த ஒருவரைத் தேர்வு செய்தோம். திருவிழாவில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நடுவே, அங்கு ஒரு படம் தயாராகிறது என்பது அவர்களுக்குத் தெரியாமலேயே நாங்கள் இயங்கிக் கொண்டிருந்தோம். பதினைந்து பேர் வீடியோ கவரேஜ் செய்வதுபோல் எடுத்தோம். எனது பெரும்பாலான படங்கள் இதுபோல் பெரிய முன் தயாரிப்புகள், திட்டங்கள் எதுவும் இல்லாமல்தான் உருவாகின. மிகச் சிறந்த உதாரணம், டிம்புலுவின் கதை. அருணாசலப்பிரதேசத்தைச் சுற்றிப் பார்க்கும்போது அது உருவானது.

தீராநதி: வெகுஜன மக்கள் மத்தியில் அரவாணிகளை கேலிக்குரியவர்களாகப் பார்க்கும் பார்வைதான் இன்றைக்கும் இருக்கிறது. ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் அந்தப் பார்வையை அதிகப்படுத்துவது போல்தான் அரவாணிகள் சித்தரிக்கப் படுகிறார்கள். ஒரே விதிவிலக்கு மணிரத்னத்தின் பம்பாய். நவரஸா வெகுஜன பார்வையிலிருந்து விலகி இருப்பதுடன், அதனை விமரிசிக்கவும் செய்கிறது. திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?

சந்தோஷ்சிவன் : ஓஸியானிக் ஏஸியன் திரைப்பட விழாவில் திரையிட்டபோது, பார்த்தவர்கள், அதுவரை அரவாணிகள் பற்றித் தாங்கள் கொண்டிருந்த கருத்தை நவரஸா மாற்றியுள்ளது என்று கூறினர். அதுதான் அப்படத்தின் வெற்றி. தமிழ் மக்கள் மத்தியில் இப்படம் பரவலாகப் பார்க்கப்பட வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தது. இப்போது அது பெருமளவு நிறைவேறி உள்ளது. சென்னையில் தொடர்ந்து பத்துத் தினங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான படங்களை இயக்குவதற்கு தொலைக்காட்சி மிகச்சிறந்த ஒரு ஊடகம்.

தீராநதி: சமீபத்தில் உங்கள் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்துள்ள அனந்தபத்தரம் பற்றிச் சொல்லமுடியுமா?

சந்தோஷ்சிவன்: மலையாளப் படங்களை இயக்கவேண்டும் என்ற ஆசை எப்போதும் எனக்குள் இருந்து வந்துள்ளது. Mistress of spices படத்தின் தயாரிப்புக்காக லண்டன் சென்ற போது அங்குள்ளவர்கள் என் திரைப்பட உத்திகளை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். கதகளி, மோகினியாட்டம் போன்ற கேரளாவுக்கேயுரிய கலைகளின் கூறுகள் உங்கள் படங்களில் உள்ளது. நீங்கள் ஏன் மலையாளத்தில் படங்களை இயக்கக்கூடாது என்று அவர்கள் கேட்டார்கள். அப்போது மலையாளத்தில் படம் பண்ணவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

சுனில் பரமேஸ்வரன் என்ற மலையாள எழுத்தாளரின் அனந்தபத்தரம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அந்த நாவல், பால்ய காலத்தில் எங்கள் பாட்டி எனக்குக் கூறிய கதைகளை நினைவுபடுத்தியது. இருட்டு, பிசாசுகள் போன்ற நாட்டுப்புறக் கதைகளின் புதிர்த் தன்மை அதில் இருந்தது. அதனைத் திரைப்படமாக எடுப்பது என்று முடிவு செய்தேன். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஒரு போராட்டம்தான் அப்படத்தின் மையம். தெய்யம், கதகளி போன்ற தொன்ம வடிவங்களை அதில் நான் பயன்படுத்தினேன். இப்படத்தின் காட்சிகளில் பல என் சிறு வயது அனுபவங்களில் தங்கியிருக்கிறது. நாற்பத்து நான்கு நாட்களில் இப்படம் எடுக்கப்பட்டது.

தீராநதி: நீங்கள் இயக்கிய படங்களில் நடித்த நடிகர்களுக்கும் உங்களுக்குமான புரிதல் எப்படியிருந்தது?

சந்தோஷ்சிவன்: மல்லி, ஹாலோ, டெரரிஸ்ட், நவரஸா இவைகளில், நடிப்பைத் தொழிலாக கொள்ளாதவர்களைத்தான் அதிகமும் பயன்படுத்தியிருக்கிறேன். அவர்களுக்கு நடிப்பு பற்றிய எந்தப் பின்புலமும் இல்லை. அப்படிப்பட்டவர்களிடம் இருந்துதான் நிறைய விஷயங்களை வெளியே கொண்டுவர முடியும். அவர்களிடத்தில் காமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் செய்துவிட்டால் போதும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையான நடிப்பை இயல்பாகவே அவர்களிடம் இருந்து பெறமுடியும்.

தீராநதி: திரைப்படங்களைவிட அதிகமாக விவரணப்படங்கள் (documentry) எடுத்திருக்கிறீர்கள். திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது விவரணப்படங்களில் கிடைக்கும் வருமானம் குறைவாகத்தான் இருக்க முடியும். ஆனாலும் நீங்கள் விவரணப்படங்களை அதிகம் செய்திருக்கிறீர்கள். ஏன்?

சந்தோஷ்சிவன்: விவரணப்படங்கள் எடுப்பதைத்தான் அதிகமும் நான் விரும்புகிறேன். விவரணப் படங்கள் எடுக்கும் போதுதான் என்னை நான் அதில் கரைத்துக் கொள்கிறேன். அவற்றில்தான் என்னால் முழுமையாக ஈடுபடவும் வெளிப்படவும் முடிகிறது. நான் உண்மையாக உணர்வதும் இவற்றில்தான். அதுபோல் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களும் எனக்கு அலாதியான ஒரு திருப்தியையும் மனநிறைவையும் தருகின்றன. அவற்றில்தான் நாம் பரிசோதனைகளைச் செய்து பார்க்கமுடியும். வணிகப்படங்களை வருமானத்துக்கான ஒன்றாகச் செய்துகொண்டே, அதிலிருந்து வரும் பணத்தில் குறைந்த முதலீட்டில் எனக்கு ஆத்மார்த்தமான திருப்தியைத் தரும் படங்களைச் செய்கிறேன். டிம்புலுவின் கதை, மல்லி, டெரரிஸ்ட், நவரஸா இவைகள் அனைத்தும் மிகக்குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள்.

தீராநிதி: பெரிய முதலீட்டில் தயாராகும் படங்களில் வேலை பார்த்துவிட்டு, உடனே குறைந்த முதலீடு படங்களில் வேலை பார்ப்பது ஒரு முரணாக இல்லையா?

சந்தோஷ்சிவன்: உண்மைதான். பெரிய முரண்தான். ஆனால், அந்த முரண் எனக்குப் பிடித்திருக்கிறது. அதை நான் விரும்பி அனுபவிக்கிறேன்.
தீராநதி: இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனைகள் என்ன?

சந்தோஷ்சிவன்: தண்ணீருக்குள் குதித்தால்தான் நீந்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளமுடியும். வெளியே நின்றுகொண்டு நீச்சல் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது. எனவே முதலில் குதித்து விடுங்கள். புகைப்படக் கலையின் நீட்சிதான் திரைப்பட ஒளிப்பதிவு. இரண்டுக்கும் இடையே அடிப்படைக் கூறுகளும் ஒன்றுதான். ஒரு புகைப்படக் கலைஞன் எந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்காமலேயே சிறந்த ஒளிப்பதிவாளராக ஆகமுடியும். எனவே புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெறுங்கள். அதன் பிறகு அனுபவ ஞானம். புத்தகங்களிலும் கல்லூரியிலும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளமுடியும். ஆனால் ஒருவருக்குத் தீராத கலை பற்றிய தேடல் அவரது அனுபவத்தில் இருந்துதான் வர இயலும். குறிப்பாக நம்மைச் சுற்றியுள்ளவை பற்றிய காட்சி ரீதியான நுட்பமான அவதானிப்பு மிக முக்கியம். சிறந்த எழுத்தாளர்களைப் படிப்பது, ஓவியங்களைப் பார்ப்பது இந்த வகையில் பெரிய உதவியைச் செய்யும். நீங்களும் உங்கள் அனுபவங்களும் அவதானிப்புகளும்தான் உங்களை வழி நடத்திச் செல்லமுடியும். மற்ற ஒளிப்பதிவாளர்களைப் பின்பற்றாமல், உங்களுக்கு சுயமான ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அது கஷ்டமான காரியம் இல்லை. உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே சுலபமாக அது நிகழும். காட்சியே தனக்கான விஷயங்களைத் தகவமைத்துக் கொள்ளும். மற்ற அனைவரையும்விட, நீங்கள்தான் உங்களின் மிகச்சிறந்த ஆசிரியர்.

சந்திப்பு : தளவாய் சுந்தரம்

நன்றி: தீராநதி</span>
Reply
#2
-பயனுடய தகவல்
அஜீவன் அண்ணா நன்றி.....

"தீராநதி" எல்லாம் இப்ப வாசிக்க கிடைப்பதும் இல்லை;நேரமும் இல்லை...
ஆனால்,
உங்கள் மூலம் சந்தோஷ் சிவனைப்
படம் பிடித்துக் காட்டியமை மகிழ்ச்சி.....
நல்ல தலைப்பும்....

கண் முன்
"சாம்ராட் அசோகா" நிழலாடுகிறது..
."பணப்" பெறுமதியில் அது
இடம்பிடிக்க முடியாமல் போனது "வலிக்கிறது"....
"
"
Reply
#3
<b>நன்றி அஜிவன் இணைப்பிற்கு</b>

தீராநதியின் கேள்விகளும சந்தோஷ்சிவனின் பதில்களும் எந்தவித அலட்டல்களுமில்லாமல் அழகாக அமைந்திருந்தன.
Reply
#4
நன்றி அஜிவன் அண்ணா இணைப்பிற்கு
<b> .. .. !!</b>
Reply
#5
நன்றி இனைப்பிற்கு அஐிவன்

Reply
#6
தவறுதலாக தகவலை இங்கே இணைத்துவிட்டேன். தவறிற்கு மனம் வருந்துகின்றேன்.

புரிதலுக்கு நன்றி
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)