உலக நடப்பு

அவுஸ்திரேலியா செல்ல விரும்பும் மாணவர்களுக்கான அறிவிப்பு!

1 week 5 days ago
01-3.jpg

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய ‘சேமிப்புத் தொகையை’ அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல், சர்வதேச மாணவர் ஒருவர் அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் அவுஸ்திரேலிய டொலர்கள் 29,710 இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த ஒக்டோபரில், இந்தத் தொகை 21,041 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டது.

சர்வதேச மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவது அவுஸ்திரேலியாவின் முன்னணி வருமானமாக அமைந்திருக்கிறது.

இதற்கமைய 2022/23 ஆம் ஆண்டில் 36.4 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வருமானமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/301138

ரஷ்யா: 5வது முறை அதிபரான புதின் - அடுத்த ஜோசப் ஸ்டாலின் ஆகிறாரா? மக்கள் சொல்வது என்ன?

1 week 5 days ago
ஐந்தாவது முறை ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,SPUTNIK/SERGEI BOBYLEV/KREMLIN VIA REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பர்க்
  • பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபர் பதவியேற்பதற்கு விளாதிமிர் புதின் கிரெம்ளின் அரண்மனை வழியாக செயின்ட் ஆண்ட்ரூ சிம்மாசன மண்டபத்திற்கு நடந்து சென்றார். அவர் அந்தப் பாதையில் கண்களைக் கட்டிக்கொண்டே நடந்திருக்கலாம்.

அங்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றார்.

"நாம் ஒன்றுபட்ட, சிறந்த மக்கள். ஒன்றாக நாம் அனைத்து தடைகளையும் சமாளிப்போம். நமது திட்டங்களை நிறைவேற்றுவோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்," என்று அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் கூட்டத்தில் அதிபர் புதின் கூறினார்.

சிவப்புக் கம்பளப் பாதை அவருக்கு நன்கு தெரிந்திருக்கலாம். ஆனால் 2000ஆம் ஆண்டு மே மாதம் புதினின் முதல் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு நிறைய மாறிவிட்டது. அப்போது, அதிபர் புதின், "ஜனநாயகத்தைப் பாதுகாத்து வளர்ப்பதாகவும் ரஷ்யாவைக் கவனித்துக் கொள்வதாகவும்" உறுதியளித்தார்.

அதற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, புதின் இன்று யுக்ரேனுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறார். இதில் ரஷ்யா பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. உள்நாட்டில், ஜனநாயகத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, அதிபர் புதின் அதைக் குறைத்து வருகிறார். விமர்சகர்களை சிறையில் அடைக்கிறார், அவரது அதிகாரத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குகிறார்.

 
‘தன்னை நவயுக மன்னர் என நினைக்கிறார் புதின்’
ஐந்தாவது முறை ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,GAVRIIL GRIGOROV/POOL/AFP

படக்குறிப்பு,ஏறக்குறைய கால் நூற்றாண்டு ரஷ்யாவை இயக்கிய பிறகு, புதின் நிச்சயமாகத் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

"புதின் இப்போது தன்னை ‘விளாதிமிர் தி கிரேட்’ என்ற ரஷ்ய மன்னர் என நினைத்துக்கொள்கிறார்," என்கிறார் வெள்ளை மாளிகையின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஃபியோனா ஹில்.

"புதினின் முதல் இரண்டு அதிபர் பதவிக் காலங்களை மதிப்பிட்டால், அவர் ரஷ்யாவை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்ய பொருளாதாரம் அதன் வரலாற்றில் எந்த முந்தைய காலகட்டத்தை விடவும் சிறப்பாகச் செயல்பட்டது,” என்கிட்றார் அவர்.

"பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிரைமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்ததில் இருந்து தற்போதைய யுக்ரேன் வரையான சம்பவங்கள், அந்தச் சாதனைகளை வியத்தகு முறையில் மாற்றியுள்ளன. அவர் ஒரு நடைமுறைவாதியாக இல்லாமல் தன்னை ஒரு ஏகாதிபத்தியவாதியாக மாற்றிக்கொண்டார்," என்கிறார்.

விளாதிமிர் புதின் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமெரிக்கா ஐந்து வெவ்வேறு அதிபர்களையும், பிரிட்டன் ஏழு பிரதமர்களையும் பெற்றுள்ளது.

ஏறக்குறைய கால் நூற்றாண்டு ரஷ்யாவை இயக்கிய பிறகு, புதின் நிச்சயமாகத் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். ரஷ்ய மக்கள் தங்கள் கடந்த அதிபர்களைப் பற்றி ‘ப்ரெஷ்நேவிசம்’, ‘கோர்பச்செவிசம்’ அல்லது ‘யெல்ட்சினிசம்’ பற்றி அரிதாகவே பேசினர்.

ஆனால் ‘புதினிசம்’ ரஷ்யாவின் எல்லா இடங்களிலும் உள்ளது.

"எங்கள் வரலாற்றில் இன்னும் ஒரு-இசம் உள்ளது, அது ஸ்டாலினிசம்," என்கிறார் கார்னகி யூரேசியா ரஷ்யா மையத்தின் மூத்த ஆய்வாளர் ஆண்ட்ரி கோல்ஸ்னிகோவ். அவர் ரஷ்யாவின் முன்னாள் சர்வாதிகாரியான ஜோசஃப் ஸ்டாலினை பற்றிக் கூறுகிறார். ஜோசப் ஸ்டாலினது ஆட்சியில் நாட்டுக்கும் அவருக்கும் எதிரானவர்கள் என்று கருதப்பட்ட பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

"புதினிசம் என்பது ஸ்டாலினிசத்தின் மற்றோர் அவதாரம் என்று நான் கூறுவேன். அவர் ஸ்டாலினை போலவே நடந்துகொள்கிறார். அவருடைய அதிகாரம் ஸ்டாலினின் காலத்தைப் போலவே தனிநபர் மயமாக்கப்பட்டது. அவர் நிறைய அரசியல் அடக்குமுறைகளைப் பயன்படுத்த விரும்புகிறார். மேலும் ஸ்டாலினை போலவே அவர் தன்னை அதிகாரத்தில் வைத்திருக்கத் தயாராக இருக்கிறார். அவர் தனது இறுதிநாள் வரை அதிகாரத்தில் இருப்பார்," என்கிறார் கார்னகி யூரேசியா.

 
மேற்கு நாடுகளுக்கு புதின் விடுக்கும் சவால்
ஐந்தாவது முறை ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின்
படக்குறிப்பு,காஷிரா நகரில் ஒரு பிரமாண்டமான புதின் உருவப்படச் சுவரோவியம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு முழு பக்கத்தையும் நிரப்பியிருக்கிறது

அதீதமாகச் சர்வாதிகார முறையில் செயல்படும் ரஷ்ய தலைவரை, ரஷ்யாவின் மகத்துவமாகத் தாம் கருதுவதை மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ள அந்தத் தலைவரை, அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு நவீன மன்னரை எவ்வாறு கையாள்வது என்பதுதான் மேற்கு நாடுகளுக்கு முன்னிருக்கும் மிகப்பெரும் சவால்.

"அணு ஆயுதம் குறித்த பிரச்னையில், நாம் நிறைய செய்யக்கூடும்," என்கிறார் ஃபியோனா ஹில். “யுக்ரேனில் அணு ஆயுங்கள் பயன்படுத்துவதாக மிரட்டி, புதின் பின்வாங்கியபோது, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற சில நாடுகள் பதற்றமடைந்தன. இந்த வரைமுறையற்ற அணு ஆயுத ஊகப்பேச்சைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சர்வதேச கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், ரஷ்யா மீது கட்டுப்பாட்டை அமல்படுத்த முடியும்,” என்கிறார் அவர்.

"ஒருவேளை, விளாதிமிர் புதினை நாம் எவ்வாறு கையாள்வது என்பதற்கு இதுவொரு முன்மாதிரியாக இருக்கலாம். அவர் பல விஷயங்களில் ஒரு முரட்டுத்தனமான தலைவராக இருக்கிறார். அவர் மேற்கொள்ள விரும்பும் செயல்களை அனுமதிக்காத, கட்டுப்பாடான சூழலை நாம் உருவாக்க வேண்டும்," என்றார் அவர்.

சென்ற மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வமாக விளாதிமிர் புதின் 87%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இருப்பினும், இத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடக்கவில்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. புதினுக்கு இந்தத் தேர்தலில் வலுவான எதிரியும் இல்லை.

 
‘புதின் இல்லையெனில் வேறு யார்?’
ஐந்தாவது முறை ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின்
படக்குறிப்பு,"எனக்கு புதினை பிடிக்கும்," என்கிறார் சாலையோரம் பூக்கள் விற்கும் ஓய்வூதியதாரர் வாலண்டினா.

ஜோசஃப் ஸ்டாலினுக்கு அடுத்து ரஷ்யாவை நீண்டகாலம் ஆண்டு வரும் புதினை ரஷ்ய மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர்.

அதை அறிந்துகொள்ள மாஸ்கோவில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள காஷிரா நகருக்குச் சென்றோம். அங்கே ஒரு பிரமாண்டமான புதின் உருவப்படச் சுவரோவியம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு முழு பக்கத்தையும் நிரப்பியிருக்கிறது.

காஷிராவில் புதின் உங்களைப் கவனித்துக்கொண்டிருக்கிறார். "எனக்கு அவரைப் பிடிக்கும்," என்கிறார் சாலையோரம் பூக்கள் விற்கும் ஓய்வூதியதாரர் வாலன்டினா.

"புதின் நல்ல சிந்தனைகள் உள்ளவர். மக்களுக்காக நிறைய செய்கிறார். எங்கள் ஓய்வூதியம் பெரிதாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவரால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சரிசெய்ய முடியாது," என்கிறார் அவர்.

"அவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்," என்று நான் சுட்டிக்காட்டினேன். "ஆனால் புதின் இல்லையென்றால் அடுத்து யார் வருவார்கள் என்று தெரியாது," என்று வாலன்டினா பதிலளித்தார்.

புதின் சுவரோவியத்தைக் கடந்து செல்லும் விக்டோரியா என்ற பெண்மணி, "ரஷ்யாவில் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்கிறார்.

"புதினுக்கு எதிராக நான் ஏதாவது சொன்னால் என் கணவர் 'நீ புதினை மீண்டும் விமர்சித்தால், நான் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்!' என்று கூறுவார். அவர் புதின்மீது வெறித்தனமாகப் பற்று கொண்டுள்ளார். புதின் இல்லாவிட்டால், 1990களில் இருந்ததைப் போல இங்கே வாழ்க்கை கடினமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்,” என்கிறார் விக்டோரியா.

மற்றொரு வழிப்போக்கரான அலெக்சாண்டரிடம், அதிபரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று நான் கேட்டபோது, அவர், "இப்போது எனது கருத்தை வெளிப்படுத்துவது ஆபத்தானது. எதுவும் சொல்ல விரும்பவில்லை,” என்றார்.

நான் பேசிய மக்களில் பெரும்பாலானவர்கள் புதினின் உருவப்படத்தை இப்போது கவனிக்காமல் கடந்து செல்வதாகக் கூறுகிறார்கள். அதற்கு அவர்கள் பழகிவிட்டார்கள்.

ரஷ்யாவை இயக்கும் ஒரு தனிமனிதனுக்கும், ரஷ்ய அரசாங்கத்தில் இனி எந்த உடனடி மாற்றத்திற்கும் வாய்ப்பு இல்லை என்ற நிதர்சனத்துக்கு அவர்கள் பழகிவிட்டதைப் போலவே அவர்கள் புதினின் அந்தப் பெரிய உருவப்படத்துக்கும் பழகிவிட்டார்கள்.

https://www.bbc.com/tamil/articles/c51nevkgl53o

யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் வட கொரிய ஆயுதங்கள் - உலகிற்கு என்ன அச்சுறுத்தல்?

1 week 6 days ago
ரஷ்யா யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜீன் மெக்கன்சி
  • பதவி, சியோல் செய்தியாளர்
  • 45 நிமிடங்களுக்கு முன்னர்

இளம் யுக்ரேனிய ஆயுத ஆய்வாளரான கிறிஸ்டினா கிமாச்சுக்கு ஜனவரி 2 ஆம் தேதி, கார்கிவ் நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது வழக்கத்திற்கு மாறான தோற்றமுள்ள ஏவுகணை ஒன்று மோதியுள்ளதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக யுக்ரேனிய ராணுவத்தில் இருக்கும் தனது நண்பர்களைத் தொடர்பு கொண்ட அவருக்கு, அடுத்த ஒரு வாரத்திற்குள் தலைநகர் கீவில் ஒரு பாதுகாப்பான இடத்தில் அந்த ஏவுகணையின் எஞ்சிய பகுதிகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய விரல் நகத்தை விட சிறிய கணினி சில்லுகள் உட்பட அனைத்தையும் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவருக்கு, அது ரஷ்ய ஏவுகணை இல்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. ஆனால், அதை நிரூபிப்பது தான் அவருக்கு சவாலாக இருந்தது.

அங்கு குவிந்துக் கிடந்த ஏவுகணை குப்பைகளுக்கு மத்தியில் கொரிய எழுத்துகள் சிலவற்றை கண்டறிந்திருக்கிறார் க்றிஸ்டினா. அதோடு கூடுதல் விவரங்களும் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பாகங்களில் 112 என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தது.

வட கொரியா

பட மூலாதாரம்,CONFLICT ARMAMENT RESEARCH

வட கொரிய நாட்காட்டியின்படி அந்த எண் 2023 என்பதை குறிக்கும். அப்போதுதான் அவருக்கு தனது நாட்டை தாக்க வடகொரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்பது புரிந்துள்ளது.

கீவில் இருந்து என்னுடன் தொலைபேசி மூலம் அவர் பேசுகையில், “ரஷ்யாவிற்கு அவர்கள் ஆயுதங்களை வழங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், முதல்முறையாக இதுவரை யாரும் கண்டுபிடித்திராத ஆதாரத்தை என்னால் பார்க்க முடிகிறது, தொட முடிகிறது, ஆய்வு செய்ய முடிகிறது” என்று உற்சாகம் பொங்க கூறினார்.

அதிலிருந்து டஜன்கணக்கான வடகொரிய ஏவுகணைகள் ரஷ்யாவால் தங்களது எல்லைக்குள் வீசப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் இறந்துள்ளதாகவும், 70க்கும் மேற்பட்டோர் காயம் பட்டுள்ளதாகவும் கூறுகிறது யுக்ரேன்.

 
வட கொரியா
படக்குறிப்பு,கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன் ஒரு அணு ஆயுதப் போரைத் தொடங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று சமீபத்தில் பரவி வரும் விவாதங்களுக்கு மத்தியில், தற்போது நடந்து வரும் போர்களை மேலும் தூண்டும் வகையில் நடந்துக் கொள்ளுதல் மற்றும் உலகளாவிய நிலையற்ற தன்மையை ஊக்குவிக்கும் வட கொரியாவின் திறன் இப்போது உலகின் உடனடி அச்சுறுத்தலாகும்.

க்றிஸ்டினா போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்டெடுக்கும் ஒரு அமைப்பான கான்ஃபிளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச் (CAR) இல் பணியாற்றுகிறார்.

அந்த ஏவுகணையின் சிதைந்த பாகங்களை அவர் புகைப்படம் எடுத்த பின், அதன் நூற்றுக்கணக்கான கூறுகளை அவரது குழுவினர் ஆய்வு செய்த பிறகே அதுகுறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியே வந்துள்ளது.

இந்த ஏவுகணையில் பல்வேறு நாடுகளின் புதிய தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான பாகங்கள் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை ஆகும். அதுவும் மார்ச் 2023இல் தயாரிக்கப்பட்ட அமெரிக்க தொழில்நுட்பமும் கூட அதில் இடம்பெற்றிருந்தது.

இதன் பொருள் என்னவென்றால், வடகொரியா இந்த தொழில்நுட்ப பாகங்களை சட்டவிரோதமாக வாங்கி, அவற்றை தங்களது நாட்டில் ஒன்றாக இணைத்து ஏவுகணையாக தயாரித்து, அந்த ஏவுகணைகளை எப்படியோ ரஷ்யாவுக்கு வழங்கியிருக்கிறது. இவை எல்லாம் ஒரு சில மாதங்களில் நடந்துள்ளது.

"இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், கடந்த 20 ஆண்டுகளாக வட கொரியா மீது பல்வேறு தடைகள் இருந்தாலும் கூட, எப்படியாவது ஆயுதம் தயாரிக்க தேவையான பொருட்களை வேகமாக பெற ஏற்பாடுகளை கொண்டுள்ளது அந்நாடு " என்கிறார் கான்ஃபிளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச் அமைப்பின் துணை இயக்குனர் டேமியன் ஸ்ப்ளீட்டர்ஸ்.

லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (RUSI) என்ற பாதுகாப்பு குழுவின் வட கொரிய நிபுணரான ஜோசப் பைர்னேவும் இதுகுறித்து வியப்புக்குள்ளானார்.

"ஐரோப்பிய மக்களைக் கொல்ல வட கொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை," என்று கூறினார் அவர்.

அவரும் அவரது அமைப்பும், கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவில் கிம் மற்றும் விளாடிமிர் புதினுக்கு இடையில் நடந்த சந்தேகத்திற்குரிய ஆயுத ஒப்பந்தத்திற்கு பிறகு, வட கொரிய ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதைக் கண்காணித்து வருகின்றனர்.

செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, வட கொரியாவிற்கும் ரஷ்ய இராணுவத் துறைமுகத்திற்கும் இடையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களைக் கொண்டு செல்லும் நான்கு ரஷ்ய சரக்குக் கப்பல்கள் முன்னும் பின்னுமாகச் செல்வதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

அந்த அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் நிரம்பிய7,000 கண்டெய்னர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 
வட கொரியா
படக்குறிப்பு,வட கொரியாவிற்கும் ரஷ்ய இராணுவத் துறைமுகத்திற்கும் இடையில் கண்டெய்னர்களைக் கொண்டு செல்லும் நான்கு ரஷ்ய சரக்குக் கப்பல்கள் செல்வதை RUSI அமைப்பால் கண்டுபிடிக்க முடிந்தது.

இதனை ரஷ்யாவும் வட கொரியாவும் மறுத்தாலும் கூட , இந்த அமைப்பின் தரவுகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறைகள் வழியாக திரட்டப்பட்டவையாகும்.

"இன்றைய தேதியில் உலகமே இந்த குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வாங்குவதற்காக தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எந்த மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்துவது என்று தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரஷ்யாவோ இதே ஆயுதத்தைக் கொண்டு யுக்ரேன் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது” என்று ஜோசப் கூறினார்.

ஆயுதம் வாங்குதல் மற்றும் தாக்குதல்

ஆனால், போரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் பயன்பாடு ஜோசப் மற்றும் அவரது சகாக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது,

1980 களில் இருந்து வட கொரியா தனது ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. அவற்றில் பெரும்பாலும் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான லிபியா, சிரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

இந்த ஆயுதங்கள் அனைத்தும் பழைய, சோவியத் பாணியிலான ஏவுகணைகள் என்ற பெயரைக் கொண்டுள்ளன. கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கூட பியோங்யாங்கின் பழைய தொழில்நுட்பத்தில் தயாரான கையெறி குண்டுகள் சிலவற்றை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.

ஆனால் ஜனவரி 2 ஆம் தேதி ஏவப்பட்ட மற்றும் க்றிஸ்டினா பார்த்த ஏவுகணையானது, பியோங்யாங்கின் அதிநவீன குறுகிய தூர ஏவுகணை ஹ்வாசோங் 11 ஆகும். இது 700 கிமீ வரை தாக்கும் திறன் கொண்டது.

"யுக்ரேனியர்கள் அதன் துல்லியத்தை குறைத்து மதிப்பிட்டிருந்தாலும், ரஷ்ய ஏவுகணைகளை விட மோசமானதாக இல்லை" என்று வட கொரிய ஆயுதங்கள் மற்றும் பரவல் தடுப்பு நிபுணரான டாக்டர் ஜெஃப்ரி லூயிஸ், கூறுகிறார். இவர் மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் பணிபுரிகிறார்.

“இந்த ஏவுகணைகளின் நன்மை என்னவென்றால், அவை மிகவும் மலிவானவை. எனவே, நீங்கள் அதிகமாக வாங்கலாம் மற்றும் அதிக அளவில் தாக்கலாம். ரஷ்யா இதையே செய்கிறது” என்று அவர் கூறுகிறார்.

 
வட கொரியா
படக்குறிப்பு,பியோங்யாங் ஆயுதத் தொழிற்சாலைகள் முழு வீச்சில் இயங்கி வருவதாகவும், அவற்றால் பெரும் அளவிலான ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும் டாக்டர் லூயிஸ் தெரிவிக்கிறார்.

இது வட கொரியர்கள் இது போன்ற எவ்வளவு ஏவுகணைகளை தயாரிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது. வடகொரியா 6,700 கண்டெய்னர் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு அனுப்பியிருப்பதாக சமீபத்தில் தென் கொரிய அரசாங்கம் சமீபத்தில் கூறியது.

பியோங்யாங் ஆயுதத் தொழிற்சாலைகள் முழு வீச்சில் இயங்கி வருவதாகவும், ஆண்டுக்கு சில நூறு என்ற அளவில் அவற்றால் பெரும் அளவிலான ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து வரும் டாக்டர் லூயிஸ் தெரிவிக்கிறார்.

வட கொரியாவிற்கு உதிரிபாகங்களை விற்பதில் இருந்து நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் கூட, இது எப்படி சாத்தியம் என்பதை அறிய , டேமியன் மற்றும் அவரது குழுவினரும் முயற்சிக்கின்றனர்.

நவீன ஆயுதங்களை இயக்கி, அவற்றின் இலக்குகளை அடையச் செய்யும் அதே கணினி சில்லுகள் தான் , நமது அன்றாட பயன்பாடுகளான போன், கார், வாஷிங் மெஷின் போன்ற இயந்திரங்களையும் இயக்குகின்றன என்கிறார் டேமியன்.

இவை உலகம் முழுவதும் பெருமளவிலான எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. இவற்றை பில்லியன்கணக்கில் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்களுக்கே, இது எங்கு போய் சேர்கிறது என்று பல நேரங்களில் தெரியாது.

அப்படியிருந்தும், இந்த ஏவுகணையில் இடம்பெற்றிருக்கும் எத்தனை பாகங்கள் மேற்கில் இருந்து வந்தவை என்பதை அறிந்து டேமியன் விரக்தி அடைவதில் இருந்து தவிர்க்க முடியவில்லை.

வட கொரியாவின் கொள்முதல் வலையமைப்பானது, அவற்றை விசாரித்து வரும் டேமியன் அறிந்ததை விட மிகவும் திறன் மிக்கது மற்றும் பரந்து விரிந்தது.

அவரது அனுபவத்தின் படி, வெளிநாடுகளில் உள்ள வட கொரியர்கள், பெரும்பாலும் கள்ளப் பணத்தைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்காக ஹாங்காங் அல்லது பிற மத்திய ஆசிய நாடுகளில் போலி நிறுவனங்களை நிறுவுவார்கள்.

பின்னர் அங்கிருந்து பொருட்களை வடகொரியாவிற்கு அனுப்புவார்கள். அதிலும் வழக்கமாக சீன எல்லையில் இது நடைபெறும். அப்படி ஒரு போலி நிறுவனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனே அதன் இடத்தில் வேறு ஒரு நிறுவனம் உருவாக்கப்படும்.

நாடுகள் விதித்துள்ள தடைகள் நீண்ட காலமாக இந்த வலையமைப்புகளை ஒழிப்பதற்கான சிறந்த கருவியாகக் கருதப்படுகிறது. ஆனால் அவை உண்மையாகவே திறனோடு செயல்பட தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 2017 முதல் வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்க ரஷ்யாவும் சீனாவும் மறுத்து வருகின்றன.

பியோங்யாங்கின் ஆயுதங்களை வாங்குவதன் மூலம், மாஸ்கோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அது வாக்களித்த கட்டுப்பாடுகளையே தற்போது அப்பட்டமாக மீறுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், விதிமீறல்களைக் கண்காணிக்கும் ஐ.நா குழு ஒன்றை ஆய்வைத் தவிர்க்கும் பொருட்டு ரஷ்யா லாவகமாக கலைத்தது.

"வட கொரியாவிற்கு எதிரான ஐ.நாவின் பல பொருளாதாரத் தடைகள் சிதைந்து வருவதை நேரடியாகவே நாங்கள் பார்க்க முடிகிறது. இது பியோங்யாங்கிற்கு எளிமையான வழிகளை ஏற்படுத்தி தரும்", என்று ஜோசப் கூறினார்.

இவை அனைத்தும் யுக்ரேன் போருக்கு அப்பாற்பட்ட தாக்கங்களையும் கொண்டுள்ளன.

"இங்கே உண்மையில் வட கொரியர்கள் தான் வெற்றியாளர்கள்", என்று கூறுகிறார் ஜோசப்.

"அவர்கள் ரஷ்யர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வழியில் உதவியுள்ளனர், மேலும் இது அவர்களுக்கு ஏராளமான அந்நியச் செலாவணியை வழங்கியுள்ளது".

மார்ச் மாதத்தில், ரயில் பெட்டிகளில் அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து வட கொரியாவிற்கு அதிக அளவு எண்ணெய் அனுப்பப்பட்டதை RUSI அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது,

 
வட கொரியா
படக்குறிப்பு,வடகொரியா தனது ஏவுகணைகளை உண்மையான போர்க்களத்தில் சோதனை செய்து பார்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இது.

நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையதாக கருதப்படும் இந்த ஒப்பந்தம், பியோங்யாங்கின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அதன் இராணுவத்தையும் உயர்த்தும்.

ரஷ்யாவால் தொடர்ந்து இந்த ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும், அல்லது போர் விமானங்கள் போன்ற இராணுவ உபகரணங்களையும், மேலும் அணு ஆயுதங்களை மேம்படுத்துவதற்கான கூறுகளையும் கூட வடகொரியாவுக்கு அனுப்ப முடியும்.

வடகொரியா தனது ஏவுகணைகளை உண்மையான போர்க்களத்தில் சோதனை செய்து பார்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இது. இந்த தரவுகளைக் கொண்டு, அந்த ஆயுதங்களை அந்நாடு மேலும் மேம்படுத்தும்.

ஏவுகணை வர்த்தகம்

இதில் மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தப் போர் வட கொரியாவுக்கு உலகின் பிற பகுதிகளுக்கும் ஆயுதம் விற்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இப்போது பியாங்யாங் இந்த ஆயுதங்களை பெருமளவில் உற்பத்தி செய்து வருவதால், அவற்றை பல நாடுகளுக்கு விற்க விரும்புகிறது, இந்த ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு சரியானதாக இருந்தால், மற்றவர்களுக்கும் அவை பொருத்தமானதாக இருக்கும் என்று டாக்டர் லூயிஸ் கூறுகிறார்.

அதிலும் குறிப்பாக தடைகளை மீறுவது ஒன்றும் குற்றமில்லை என்ற உதாரணத்தை வேறு ரஷ்யா ஏற்படுத்தி வைத்துள்ளது.

சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணியில் உள்ள நாடுகளுக்கு ஏவுகணைகளை வழங்கும் பெரிய நாடாக வடகொரியா மாறும் என்று டாக்டர் லூயிஸ் கணித்துள்ளார்.

இந்த மாதம் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வட கொரியா இரானுடன் அதன் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஆயுதத் திட்டங்களில் இணைந்து செயல்படலாம் என்பது "நம்ப முடியாத அளவிற்கு கவலையளிக்கும்" விஷயம் என அமெரிக்கா கூறியது.

"இந்தப் பிரச்னையைப் குறித்து பேசும்போது நிறைய இருண்ட முகங்களை நான் காண்கிறேன்" என்று கூறுகிறார் டேமியன்.

"ஆனால் இதில் நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை எவ்வளவு சார்ந்திருக்கிறார்கள் என்பது இப்போது நமக்குத் தெரியும், அதில் நம்மால் ஏதாவது செய்ய முடியும்." என்கிறார் அவர்.

 
வட கொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வடகொரியாவை கட்டுப்படுத்துவதில் மேற்குலகம் தோற்று விட்டதாக டாக்டர் லூயிஸ் கருதுகிறார்.

உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வட கொரியாவின் விநியோகச் சங்கிலிகளைத் துண்டிக்க முடியும் என்று டேமியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரு முக்கியமான வர்த்தகம் முடிவதற்கு முன்பே அந்த வலையமைப்பை கண்டறிந்து இவரது குழு அதை முழுமையாக மூடியுள்ளது.

ஆனாலும், இவை குறித்து டாக்டர் லூயிசுக்கு பெரிய திருப்தி இல்லை.

"நாம் இந்த வர்த்தகத்தை கடினமாக்கலாம், செலவை அதிகரிக்கலாம், ஆனால் இவை எதுவும் வட கொரியா இந்த ஆயுதங்களை தயாரிப்பதில் இருந்து தடுக்கப் போவதில்லை," என்று அவர் கூறுகிறார்.

வட கொரியாவை கட்டுப்படுத்துவதில் மேற்குலகம் தோற்று விட்டதாக அவர் கருதுகிறார்.

தற்போது அந்நாட்டின் ஏவுகணைகள் அரசியல் மற்றும் கௌரவத்தின் ஆதாரமாக மட்டுமின்றி, பணம் உருவாக்கும் விஷயமாகவும் மாறிவிட்ட நிலையில், அதை ஏன் கிம் ஜாங் உன் விட்டுக்கொடுக்க போகிறார் என்ற கேள்வியை முன்வைக்கிறார் டாக்டர் லூயிஸ்.

https://www.bbc.com/tamil/articles/cjk478p7mxro

42 நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் கைதிகள் பரிமாற்றம் - யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக்கொண்டது ஹமாஸ் - இஸ்ரேல் மறுப்பு

2 weeks ago

Published By: RAJEEBAN   07 MAY, 2024 | 11:04 AM

image
 

ஹமாஸ் அமைப்பு  மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

கத்தார் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் யோசனைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள நேசநாடுகளுடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

gaza_children1.jpg

முதல்கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்ற யோசனையை ஏற்றுக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தால் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இஸ்ரேல் காசாவிலிருந்து அரைவாசிக்கும் மேற்பட்ட படையினரை விலக்கிக்கொள்ளவேண்டும் தென்காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கவேண்டும் என்ற யோசனையையும் ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தத்தின் பின்னர் காசவில் நீடிக்ககூடிய அமைதியை உருவாக்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்தாகும்.

மேலும் காசாவிலிருந்து இஸ்ரேலிய படையினர் முற்றாக விலக்கிக்கொள்ளப்படுவார்கள் - இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தால் ஹமாஸ் தன்னிடம் பணயக்கைதிகயாக உள்ள இஸ்ரேலிய படையினரை விடுதலை செய்யும்.

https://www.virakesari.lk/article/182867

ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

2 weeks ago
06 MAY, 2024 | 11:35 AM
image

ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது  இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்களின் பாதுகாப்பிற்காக  சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182788

எண்ணற்ற விசிறிகள் மூலம் கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

2 weeks ago
கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

பட மூலாதாரம்,CLIMEWORKS

படக்குறிப்பு,குளிரூட்டிகள் போல தோற்றமளிக்கும் இந்த மாபெரும் மின்விசிறிகள் மூலம், க்ளைம்வொர்க் ஆண்டுக்கு 4,000 டன் கார்பனீராக்சைடை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகிறது.
4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்யவிக்குக்கு வெளியே இந்த இடம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திடப்படுத்தப்பட்ட எரிமலைக் குழம்பின் மேல், கப்பல் கன்டெய்னர்கள் அளவிலான பல பெரிய குளிரூட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் காணலாம்.

இந்த விசித்திரமான இடம், வேற்று கிரக வாசிகளின் இடம்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் செயல்பாட்டிற்கும் இந்த இடம் தனித்துவமானது. சுற்றுச்சூழலில் இருந்து கார்பனீராக்சைடை (கார்பன்-டைஆக்சைடு - CO2) எடுத்து அதை நிலத்தடியில் அடைத்து வைக்கும் உலகின் முதல் சாத்தியமான அமைப்பு இதுவாகும்.

"உலகளாவிய நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளின் இலக்கை உண்மையிலேயே அடைய, காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றுவதற்கான தீர்வுகள் தேவை" என்ற யோசனையுடன் ஸ்விஸ் நிறுவனமான க்ளைம்வொர்க்ஸ் நிறுவனத்தால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இது இன்று செயல்பாட்டில் உள்ளது.

பிபிசி நிருபர் அட்ரியன் முர்ரே, ஐஸ்லாந்தின் ஹெலிஷெய்டியில் உள்ள ஓர்கா எனப்படும் ஆலையைப் பார்வையிட்டார். இந்த ஆலை தற்போது ஆண்டுக்கு 4,000 டன்கள் கார்பனீராக்சைடை நீக்குகிறது, அதாவது 900 பெட்ரோல் கார்களின் கார்பனீராக்சைடு உமிழ்வுக்கு சமமான அளவு.

 
கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை
படக்குறிப்பு,பிபிசி நிருபர் அட்ரியன் முர்ரே, காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றும் முதல் ஆலைக்கு விஜயம் செய்தார்.
ஒரு பெரிய போராட்டத்திற்கான கருவி

ராட்சத குளிரூட்டிகள் போல தோன்றும் இந்த இயந்திரங்கள் உண்மையில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி, ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எண்ணற்ற மின்விசிறிகள் ஆகும். அவை சுற்றுச்சூழலில் இருந்து காற்றை எடுத்து, உள்ளே இருக்கும் வடிகட்டிகள் மூலம் காற்றில் உள்ள கார்பனீராக்சைடை பிரித்தெடுக்கின்றன.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு முக்கியமான கருவியாக இருக்கும். ஆனால் க்ளைம்வொர்க்ஸ் நிறுவன பிரதிநிதி பிரைண்டிஸ் நீல்சன் பிபிசியிடம் கூறியது போல், காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றும் இந்த முறை கார்பனீராக்சைடு உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்றில்லை.

"தொழில்துறை புரட்சி தொடங்கியதில் இருந்து மனிதர்கள் வளிமண்டலத்திற்கு செய்து வரும் தீங்குகளை சரிசெய்வதில் நாம் அதிகம் செலுத்த வேண்டும், அதே சமயத்தில் கார்பனீராக்சைடு உமிழ்வு குறைப்புகளுக்கு மாற்றாக இதை நாங்கள் கொண்டு வரவில்லை" என்று நீல்சன் விளக்குகிறார்.

காலநிலை மாற்றத்தின் அபாயங்களைத் தீர்க்க இந்தத் தொழில்நுட்பம் மட்டும் போதாததற்கு முக்கியக் காரணம் ஓர்கா போன்ற ஒரு ஆலையின் திறன்.

ஓர் ஆலை மட்டுமே ஆண்டுக்கு 4,000 டன் கார்பனீராக்சைடை உறிஞ்சும் திறன் கொண்டது என்பது கேட்க சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், உலகளாவிய கார்பனீராக்சைடு உமிழ்வு 2023இல் 37.4 ஜிகாடன்களை (37 பில்லியன் டன்) என்ற அளவை எட்டியுள்ளது.

"நாங்கள் 2050 க்குள் ஜிகாடன் அளவிலான கார்பனீராக்சைடை கைப்பற்ற வேண்டும், அந்த இலக்கை அடைய, நாம் இப்போதே தொடங்க வேண்டும்," என்கிறார் நீல்சன்.

அதனால்தான் இந்த நிறுவனத்தின் மம்மத் என்ற அடுத்த திட்டம் ஓர்காவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு பெரியதாக இருக்கப் போகிறது.

 
கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐஸ்லாந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்?

புகழ்பெற்ற அறிவியல் புனைகதை புத்தகமான ‘எ ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த்’ (A Journey to the Center of the Earth) 1864இல் வெளியானது. இந்த புத்தகத்தை எழுதிய ஜூல்ஸ் வெர்னின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் இது. இன்றும் அறிவியல் புனைகதைகளின் தந்தை என்று பலரால் போற்றப்படுகிறார் ஜூல்ஸ் வெர்ன்.

அந்தக் கதையில், ஐஸ்லாந்தின் ஆபத்தான எரிமலைகளில் டாக்டர் ஓட்டோ லிடன்ப்ராக் மற்றும் அவரது குழு மேற்கொள்ளும் ஒரு நம்பமுடியாத பயணம் குறித்து சொல்லப்படும்.

அமெரிக்க மற்றும் யூரேசிய கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் கிளைம்வொர்க்ஸ் தனது ஆலைகளை அமைக்க இந்த தீவிர எரிமலைச் செயல்பாடுதான் முக்கிய காரணம்.

பசுங்குடில் வாயு உமிழ்வுகள் இல்லாமல் சுத்தமான புவிவெப்ப ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாது, இந்த எரிமலை செயல்பாடு என்பதன் அர்த்தம் ஐஸ்லாந்தின் மண் பாசால்ட்கள், நுண்துளை எரிமலை பாறைகளால் ஆனது. அவை வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கார்பனீராக்சைடுக்கான சரியான கொள்கலன் ஆகும்.

சுற்றுச்சூழலில் இருந்து விசிறிகள் சேகரிக்கும் கார்பனீராக்சைடு வாயுவை தண்ணீரில் கலந்து குழாய்கள் மூலம் மேற்பரப்பில் இருந்து நீண்டு செல்லும் ஒரு வகையான குவிமாடத்திற்கு அனுப்பப்படுகிறது.

இது மற்றொரு நிறுவனமான கார்ப்ஃபிக்ஸ் (CarbFix) மூலம் இயக்கப்படுகிறது. இங்கே அது 2 கிமீ ஆழத்தில் நிலத்தடியில் அழுத்தத்தின் கீழ் செலுத்தப்படுகிறது, அங்கு பாசால்ட்களுடன் வினைபுரிந்து கார்பனீராக்சைடை திடமாக்குகிறது.

 
கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாசால்ட் என்பது நுண்துளை எரிமலை பாறைகள் ஆகும், அவை எரிமலைக்குழம்பு குளிர்ச்சியடையும் போது அதில் சிக்கியிருக்கும் வாயுக்களால் இவ்வாறு மாறுகின்றன.
கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

பட மூலாதாரம்,CARBFIX

படக்குறிப்பு,‘மம்மத்’ தலைமையகத்தில் உள்ள கார்ப்ஃபிக்ஸ் குவிமாடங்களில் ஒன்று.
வணிக ரீதியாக சாத்தியமான முறை

கார்ப்ஃபிக்ஸ் பிரதிநிதி எடா அராடோட்டிர் பிபிசியிடம் கூறுகையில், “உலகின் மிகப்பெரிய கார்பனீராக்சைடு உமிழும் தொழிற்சாலைகள், ஐஸ்லாந்தில் அந்த உமிழ்வுகளை டெபாசிட் செய்ய இந்நிறுவனத்தின் சேவைகளை வாடகைக்கு எடுப்பார்கள் என்பது தான் எங்கள் திட்டம்”

"இதன் மூலம் கிகா டன்கள் அளவிலான கார்பனீராக்சைடை நம்மால் வளிமண்டத்திலிருந்து அகற்ற முடியும். நாம் ஒரே வளிமண்டலத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதால், எல்லைகள் கடந்து உலகம் முழுவதுற்குமான ஒத்துழைப்பை அவசியமாக்குகிறது" என்று அராடோட்டிர் விளக்கினார்.

க்ளைம்வொர்க்ஸ் பிரதிநிதி பிரைண்டிஸ் நீல்சன் இதுகுறித்து பேசுகையில், "ஒரு கருத்தை நிரூபிக்க தான் ஓர்கா போன்ற ஒரு ஆலை இங்கே உள்ளது, மேலும் இது போன்ற ஒரு ஆலை வணிக ரீதியாகவும் சாத்தியமானது" என்று கூறினார்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் பல சிரமங்கள் உள்ளன. அதிக கார்பனீராக்சைடு உமிழும் நாடுகள், அந்த உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ஐஸ்லாந்தைத் தங்கள் உமிழ்வு டெபாசிட் இடமாக பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற அபாயமும் உள்ளது.

அராடோட்டிரைப் பொறுத்தவரை, ஓர்கா போன்ற திட்டங்களின் நோக்கம், ஆற்றல் நுகர்வு மூலம் கார்பனீராக்சைடை வெளியிடும் தொழில்துறைகள் அல்ல. உலோகம் மற்றும் சிமெண்ட் போன்ற தயாரிப்புகளின் தவிர்க்க முடியாத கழிவுகளாக கார்பனீராக்சைடை வெளியிடும் தொழில்துறைகள் தான்.

காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு கார்பனீராக்சைடு உமிழ்வை நீக்குவது போதுமானதாக இருக்காது என ஐஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அரோரா அர்னாடோட்டிர் பிபிசியிடம் கூறினார், "இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவதோடு மட்டுமல்லாது, நம்மால் முடிந்தவரை கார்பனீராக்சைடு உமிழ்வை குறைக்க வேண்டும்”

"ஆனால் நாம இன்னும் அந்த நிலையை அடையவில்லை," என அவர் ஒப்புக்கொள்கிறார்.

புதிய கிளைம்வொர்க்ஸ் ஆலையான ‘மம்மத்’ சுற்றுச்சூழலில் இருந்து ஆண்டுக்கு சுமார் 36,000 டன் கார்பனீராக்சைடை பிரித்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/crgyl9074y2o

இஸ்ரேலில் அல்ஜசீராவுக்கு தடை !

2 weeks ago
02-1-651x375.jpg இஸ்ரேலில் அல்ஜசீராவுக்கு தடை !

இஸ்ரேலில், அல்ஜசீராவின் ஊடக பணிகளுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான அல்ஜசீராவின், ஊடக செயற்பாடுகளை, இஸ்ரேலில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தின் படி அல்ஜசீராவின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்களில் ஜெரூசலேத்தின் அம்பாசடர் ஹோட்டலிலுள்ள அல்ஜசீரா அலுவலகத்திற்கு சென்ற இஸ்ரேலிய பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், ஒளிபரப்பு உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து, அந்நாட்டின் செய்தி விவகாரங்கள் துறை அமைச்சர் ஷ்லோமோ கார்ஹி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

”இஸ்ரேல் அரசுக்கு எதிராகத் தூண்டும் பதிவுகளைப் பரப்பும் எவரும் இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பு செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டால், அமைச்சரவை மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை தடை செய்ய அதிகாரமளிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1381204

மொத்தமாக அழியபோகும் பூமி! மனிதர்களை பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்

2 weeks 1 day ago

பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

டெல்லி மெயில் அறிக்கையின்படி, இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும்.

அதுமட்டுமன்றி வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி, பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மனிதர்கள் இறந்துப்போகும் சூழல்

அவ்வாறு நிகழும்போது அது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். அதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள்.

அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மொத்தமாக அழியபோகும் பூமி! மனிதர்களை பதற வைக்கும் அதிர்ச்சி தகவல் | Earth Will Be Totally Destroyed

அந்த நேரத்தில் உலகில் கார்பன்டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் உருவாகும்.

பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும், அது பாங்கேயா அல்டிமா என்று அழைக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

விரைவில் அழிவு

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும்.

மொத்தமாக அழியபோகும் பூமி! மனிதர்களை பதற வைக்கும் அதிர்ச்சி தகவல் | Earth Will Be Totally Destroyed

 

அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது. அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும்.

பூமியில் நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

https://tamilwin.com/article/earth-will-be-totally-destroyed-1714959998

ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம்

2 weeks 1 day ago

கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது.

1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். 

இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது  இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள்

பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒரு தமிழர் அல்லது அவரின் குடும்பத்தை அறிந்திருக்கிறார்கள் - அவர்கள் வாழ்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது ஒரு தமிழருடன் வேலை செய்கிறார்கள்.

இருப்பினும், இங்கு ஏன் இவ்வளவு தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள், என்பதற்கான உண்மையான காரணங்கள் பலருக்குத் தெரியாது என்று சித்சபேசன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம் | Ray Of Hope Documentary By Radhika Chitsabesan

எங்கள் மூதாதையர் தாயகமான தமிழ் ஈழம், ஏராளமான விளை நிலங்களையும், ஏராளமான கடற்கரைகளையும் கொண்ட அழகிய மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது. 

எவ்வாறாயினும்,  இலங்கை அரசாங்கத்தின் வேண்டுமென்றே, திட்டமிட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையால், பல தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உலகின் பல பகுதிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர், அந்த வகையில் கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

இந்தநிலையில் ரதிகா சித்சபேசன் தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரியான் சிங்குடன் இணைந்து 11 வருடங்களாக இந்த படத்துக்காக பணியாற்றி வருகிறார். 

ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம் | Ray Of Hope Documentary By Radhika Chitsabesan

தமிழ் இனப்படுகொலை

புதிய ஆவணப்படம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

“இனப்படுகொலையில் இருந்து உயிர் பிழைத்தவளாக தமக்கு கிடைத்திருக்கும் மகத்தான பாக்கியம், தமது கல்வி நிலைகள், தமது தளம் மற்றும் வலையமைப்பு, அத்துடன் எனது உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கனேடியனாக, தமது பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தப் படத்தை உருவாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

வரலாற்று உண்மைகளாக, தப்பித்தல், உயிர்வாழ்வது, பின்னடைவு போன்ற பலரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கனடாவில் தமிழர்கள் எவ்வாறு செழித்து வருகிறார்கள் என்பதைக் இந்த ஆவணப்படத்தில் காண்பிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம். 

ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம் | Ray Of Hope Documentary By Radhika Chitsabesan

படத்தின் தயாரிப்பின் போது, காணாமல் போன, அல்லது கொலைசெய்யப்பட்ட தங்கள் மகன்கள் மற்றும் கணவர்களைத் தேடும் போது, போராட்டத்தின் மூலம்  இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தைரியமாக தொடர்ந்து போராடும் தாய்மார்களுடன் உரையாடல்களை நடத்தினோம். 

காசாவில் இடம்பெறும் மோதல்

இந்த திரைப்படம்,  இலங்கை மோதல் மற்றும் காசாவில் தற்போதைய மோதலுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. 

காசாவில் இன்று பாலஸ்தீனியர்கள் வெகுஜன மற்றும் கண்மூடித்தனமான அழிக்கப்படுகின்றனர். இதுவே 2009 மே மாதம்  இலங்கைத் தீவு நாட்டில் தமிழர்களுக்கு நடந்தது. 

ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம் | Ray Of Hope Documentary By Radhika Chitsabesan

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இரண்டு கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் வளைக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன.

காசா பகுதி 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது, பாலஸ்தீனியர்கள் இந்த மேற்குக் கரையுடன் பல ஆண்டுகளாகத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் படுகொலை இன்று நடக்கிறது எனினும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம் | Ray Of Hope Documentary By Radhika Chitsabesan

இந்தநிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் தமிழர்கள் இருவருமே தத்தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எப்போதும் விரும்புகின்றனர். அவர்கள் இருவருமே அரசால் இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். 

எனவே எங்கள் உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ரதிகா சித்சபேசன் தெரிவித்துள்ளார்.

காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவருக்கு பிரான்ஸுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு

2 weeks 1 day ago

Published By: RAJEEBAN

05 MAY, 2024 | 01:45 PM
image

காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

லண்டனிலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டி கோல் விமானநிலையத்திற்கு சென்ற  மருத்துவர் கசான் அபு சிட்டாவிடம் அவர் ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கு ஜேர்மனி தடைவிதித்துள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்பிரலில் மருத்துவர் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு ஜேர்மனியின் அதிகாரிகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜேர்மனியின் இந்த நடவடிக்கை காரணமாக மருத்துவர் ஷெங்கன் நாடுகளிற்கு பயணம் செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளது.

நான் பிரான்ஸ் செனெட்டில் உரையாற்றவேண்டும் ஆனால் என்னை பிரான்சிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182737

அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி- பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்

2 weeks 1 day ago

Published By: RAJEEBAN

05 MAY, 2024 | 11:33 AM
image

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தின் வாகனத்தரிப்பிடமொன்றில் நபர் ஒருவரை தாக்கிய பதின்மவயது இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமூகத்திற்கு இந்த சம்பவத்தினால் பாதிப்பு இல்லை அந்த இளைஞன் தனித்து செயற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை ஆராய்ந்துள்ள வேளை இது பயங்கரவாத சம்பவத்திற்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மேற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொஜர் குக் 16 வயது இளைஞன் இணையம் மூலம் தீவிரவாத மயப்படுத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கத்திக்குத்திற்கு இலக்கான 18 வயது இளைஞனின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் வன்முறையில் ஈடுபடப்போகின்றோம் என காவல்துறையினரை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தெரிவித்தார். இதன் பின்னர் வாகனத்தரிப்பிடமொன்றில் கத்தியுடன் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கின்றார் என தகவல் வந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலில் 16 வயது இளைஞன் மீது டேசர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் அந்த இளைஞன் வாளுடன் தொடர்ந்தும் முன்னோக்கி சென்றதால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182725

அமெரிக்காவில் லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்?

2 weeks 2 days ago
அமெரிக்காவில் புற்றுநோயாளிக்கு லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்?
லாட்டரியில் பத்தாயிரம் கோடி வென்ற புற்றுநோயாளி :  வாழ்நாளை விலைக்கு வாங்க முடியுமா?

பட மூலாதாரம்,OREGON LOTTERY

37 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் குடியேறிய புற்றுநோயாளி ஒருவர் லாட்டரியில் பெரிய பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். இது அமெரிக்க வரலாற்றில் நான்காவது பெரிய லாட்டரி தொகை ஆகும்.

லாவோஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட செங் சைஃபன், பவர்பால் லாட்டரியில் 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றார். இந்திய மதிப்பில் இந்த தொகை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.

பல இரவுகள், தலையணைக்கு அடியில் லாட்டரி காகிதங்களை வைத்துக்கொண்டு தூங்கியதாக செங் சைஃபன் கூறுகிறார். பவர்பால் லாட்டரியை வெல்வதற்கான கணக்கீடுகள் கொண்ட காகித தாள்கள் அவரின் தலையணையின் கீழ் வாரக்கணக்கில் இருந்தன.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்டில் வசிக்கும் சைஃபன் தனது வாழ்க்கையில் கடினமான நாட்களை நினைவு கூர்ந்தார், "நான் கடவுளிடம் உதவிக்காக கெஞ்சினேன். என் பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள். அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். ஆனால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். என் உடல்நிலை சரியில்லை" என்று வேண்டியதாக அவர் கூறினார்.

சைஃபனின் லாட்டரி சீட்டில் இருந்த எண் வரிசைக்கு ஏப்ரல் 7ம் தேதி 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகை உறுதியானது. கடந்த திங்கள்கிழமை சைஃபனுக்கு லாட்டரி அமைப்பாளர்கள் பரிசுத் தொகையை வழங்கினர். இந்த லாட்டரி மூலம், சைஃபனின் மனைவி மட்டுமின்றி நண்பர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

 

சைஃபன் வழக்கமாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குவார். அவ்வாறு வாங்கிய ஒரு சீட்டு இம்முறை அவருக்கு பெரும் பரிசுத்தொகையை பெற்றுத் தந்துள்ளது. இதனால் தான் லாட்டரி பணத்தில் 25 சதவீதத்தை தனது மனைவி டுவான்பெனுக்கும், 50 சதவீதத்தை தனது தோழி லைசா சோவுக்கும் தருவதாக கூறியுள்ளார்.

புற்றுநோயால் அவதிப்படும் சைஃபன் கடந்த எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார்.

'எனக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்று தெரியவில்லை'

"என் வாழ்க்கை மாறிவிட்டது. நான் கடவுளிடம் மட்டும் தான் உதவி கேட்டேன். அதன் பின்னர் எல்லாம் நடந்தது. இப்போது நான் என் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். எனக்கு ஒரு நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற முடியும். லாட்டரி பரிசுத் தொகையில் இருந்து கொஞ்சம் பணத்தை செலவழித்து வீடு வாங்க விரும்புகிறேன். " என்று சிபிஎஸ் ஊடகத்திடம் சைஃபன் கூறினார்.

 
லாட்டரியில் பத்தாயிரம் கோடி வென்ற புற்றுநோயாளி :  வாழ்நாளை விலைக்கு வாங்க முடியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

லாட்டரி பரிசுத் தொகைக்கான காசோலையை பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சைஃபன், "இந்தப் பணத்தை செலவழிக்க இன்னும் எத்தனை காலத்துக்கு என் உடல் நலம் ஒத்துழைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் வாழ்வேன் என்பது கூட எனக்குத் தெரியாது" என்றார்.

தனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தது தெரிந்ததும், சைஃபன் அதை தன் மனைவி மற்றும் தோழியிடம் சொல்ல மிகவும் உற்சாகமாக இருந்தார்.

"என் மனைவியிடம் எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன். நான் வேலைக்குப் போகிறேன் என்று பதிலளித்தாள். இனி வேலைக்குப் போகத் தேவையில்லை என்றேன்'' என்றார் சைஃபன்.

அமெரிக்காவின் மிகப் பெரிய லாட்டரி பரிசுத் தொகை 2.04 பில்லியன் டாலர்கள்

அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளில் தரப்படும் பரிசுத் தொகை வெகுவாக அதிகரித்துவிட்டது. ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் பரிசுத் தொகை பெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. 2022 ல் ஒருவர் 2.04 பில்லியன் டாலர்களை (சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்) வென்றார். இன்றுவரை இந்த தொகை தான் அதிகபட்ச பரிசுத்தொகை.

லாட்டரி வெல்லும் வாய்ப்பை மேலும் கடுமையாக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் $292.2 மில்லியன் டாலர் பரிசை வெல்வதற்கான வாய்ப்புகள் குறைந்தன.

தொடர்ந்து லாட்டரி சீட்டை வாங்குவேன் என்று கூறும் சைஃபன், "நான் மீண்டும் லாட்டரியை வெல்லக்கூடும், நான் மீண்டும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் நம்பிக்கையுடன்.

https://www.bbc.com/tamil/articles/c97zq0r9pr7o

அளவுக்கு அதிகமான இன்சுலின்… நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை

2 weeks 2 days ago
world-news.jpg

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயதுடைய முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக செவிலியர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் வந்திருக்கின்றனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் செவிலியர் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்தும் மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக செவிலியர்களை சந்தேகப்பட வைத்தது. எனவே செவிலியர் ஹீதர் பிரஸ்டீவை பிடித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, இவர் நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக கூறியிருக்கிறார். இதனால் இவர் இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்திருக்கின்றனர். மேலும் செவிலியர் ஹீதர் பிரஸ்டீ மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் எப்போதும் கோபமாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார்.

இவர் பல நோயாளிகளை கடுமையாக காயப்படுத்தியதாகவும், இரவு நேர ஷிப்டுகளின் போது நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த செவிலியர் ஹீதர் பிரஸ்டீ கடந்த பிப்ரவரி மாத விசாரணையின் போது, தனது வழக்கறிஞர்களிடம் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.

எனவே பிட்ஸ்பர்க்கிலிருந்து வடக்கே உள்ள பட்லர் நகர நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் நீதிமன்றத்தின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டு மேற்கு பென்சில்வேனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது செவிலியர் பணியை தொடங்கிய ஹீதர் பிரஸ்டீ, 2022 முதல் மே 2023 க்கு இடையில் தனது அம்மாவிற்கு பல கடிதங்களை அனுப்பினார், அதில் அவர் பல்வேறு நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களுடன் தனது மகிழ்ச்சியற்ற தன்மையைப் பற்றி விவாதித்துள்ளார், மேலும் தான் மிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

நன்றி – விகடன்

https://thinakkural.lk/article/300874

கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?

2 weeks 2 days ago
கனடாவில் சீக்கிய தலைவர்  கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது

பட மூலாதாரம்,SIKH PA

படக்குறிப்பு,ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெசிகா மர்பி
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 47 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். வான்கூவர் புறநகர்ப் பகுதியில் ஒரு பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை டெல்லி திட்டவட்டமாக மறுத்தது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைக் கைது செய்ததாக கனடாவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் மன்தீப் முகர் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். மேலும் கைதான மூன்று நபர்களின் பெயர்களையும் அறிவித்தார் - கரன் ப்ரார் (22), கமல் ப்ரீத் சிங் (22), மற்றும் கரண் ப்ரீத் சிங் (28) என்று கூறினார்.

 
கனடாவில் சீக்கிய தலைவர்  கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைது செய்யப்பட்ட மூவரும் ஆல்பர்ட்டா என்னும் பகுதியில் எட்மன்டனில் வசித்து வந்ததாக அவர் கூறினார். அவர்கள் மீது கொலை மற்றும் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மூவரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கில் "இந்திய அரசாங்கத்துக்கு தொடர்புகள்" உள்ளனவா என்பது உட்படப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து உதவி ஆணையர் டேவிட் டெபுல் கூறுகையில், "இந்த வழக்கில் கைதானவர்களிடம் தனித்தனியாக மற்றும் பிரத்யேக விசாரணைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நிச்சயமாக இன்று கைது செய்யப்பட்டவர்களின் ஈடுபாடு மட்டுமின்றி அவர்களைத் தாண்டியும் விசாரணை நடத்தப்படும்,” என்று கூறினார்.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள கனடா புலனாய்வு அதிகாரிகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கொஞ்சம் கடினமானதாகவும் சவாலாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சீக்கிய பிரிவினைவாதத் தலைவரான நிஜ்ஜார், காலிஸ்தானுக்காக பகிரங்கமாக, இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் ஒரு சுதந்திர சீக்கிய தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.

 
அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் சீக்கிய தலைவர்  கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

சீக்கியர்கள் 1970களில் இந்தியாவில் ஒரு பிரிவினைவாத கிளர்ச்சியைத் தொடங்கினர். பிரிவினை கோரிக்கை உச்சத்தில் இருந்தது. இதனால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்னை தணிக்கப்படுவதற்கு முன்னரே, அடுத்த பத்து ஆண்டுகளில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, இந்த இயக்கம் பெரும்பாலும் சீக்கிய மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் மட்டுமே இயங்கி வருகிறது.

இந்தியா கடந்த காலங்களில் நிஜ்ஜாரை ஒரு போர்க்குணமிக்க பிரிவினைவாத குழுவிற்குத் தலைமை தாங்கிய பயங்கரவாதி என்று குறிப்பிட்டது. "அவரது ஆதரவாளர்கள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவரது செயல்பாட்டின் காரணமாக கடந்த காலங்களில் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக அவர்கள் கூறுவது ஆதாரமற்றது" என இந்தியா தரப்பில் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி வான்கூவருக்கு கிழக்கே 30 கிமீ (18 மைல்) தொலைவில் உள்ள சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் "ஹிட் லிஸ்ட்டில்" இருப்பதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் இறப்பதற்கு முன்பு கனடாவின் உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

பிரிட்டிஷ் கொலம்பியா குருத்வாராஸ் கவுன்சிலின் உறுப்பினரான மொனிந்தர் சிங், நிஜ்ஜாருடன் 15 ஆண்டுகளாக நட்பு கொண்டிருந்தவர், ``விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சீக்கிய சமூகம் நன்றியுடன் இருக்கும். இருப்பினும்,கொஞ்சம் பொதுப் பாதுகாப்பு பற்றிய கவலையும் நிறைய பதற்றமும் உள்ளது. இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. அனைத்தையும் தாண்டி வழக்கு நியாயமாக விசாரிக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது,” என அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

நிஜ்ஜார் கொல்லப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, கனடாவின் நாடாளுமன்றத்தில் (House of Commons) உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, ”இந்திய அரசை நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புபடுத்தும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறதா என கனடா கவனித்து வருகிறது,” என்று கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டை இந்திய அதிகாரிகள் கடுமையாக மறுத்தனர். கனடா "காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு" அடைக்கலம் அளித்ததாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு டெல்லி ஒட்டாவாவிடம் கோரியது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டும் ட்ரூடோ, தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்குவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c51nvzjezywo

ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு

2 weeks 3 days ago

Published By: DIGITAL DESK 3

03 MAY, 2024 | 09:42 PM
image
 

வியட்நாமில் வெப்ப அலை வீசுவதால் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து இலட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

வியட்நாமில் டோங்னாய் மாகாணத்தில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள சாங் மே நீர்த்தேக்கத்தில் இறந்த மீன்கள் சூழ்ந்து காணப்படுகிறுது.

அதாவது, கடந்த சில நாட்களில் குறைந்தது 200 தொன் மீன்கள் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே வியட்நாமும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை  பொழிவும் குறைந்து காணப்படுகின்றது.

மீன்களின் இறப்பிற்கு அதிகரித்த வெப்பநிலை மற்றும் முறையற்ற பாராமரிப்பே காரணம் என உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த சில வாரங்களாக நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்த்தேக்கத்தை முகாமைத்துவம் செய்யும் நிர்வாகம்  விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு நீரை வெளியேற்றியது. இன்று அவர்களின் அந்த முயற்சி பாழாகிவிட்டது.

2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  மீன்களுக்காக நீர்த்தேக்கத்தில் மேலதிக நீரை வெளியேற்றி சேறு மற்றும் குப்பைகளை அகற்றி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்த நிர்வாகம்  தீர்மானித்தது.

இந்நிலையில், வெப்பம் தொடர்ந்து அதிகரித்தமையினால் வெளியேற்றப்பட்ட நீரை மீண்டும் நீர்த்தேக்கத்திற்கு விடுவிக்காமல்  கீழுள்ள பகுதிக்கு வெளியிட நிறுவனம் முடிவு செய்தது. இதுவே  நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவடைய வழிவகுத்தது. மீன்கள் மொத்தமாக செத்து மடிந்தன என அந்நாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

"கடந்த 10 நாட்களாக துர்நாற்றம் வீசுவதால் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது" என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டோங்னாய் மாகாணத்தில் 40 செல்சியசுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெப்ப அலை வீசுகிறது.

ஆசியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மிகவும் கொடூரமான காணப்படுகிறது. இது உலக காலநிலை வரலாற்றில் மிகவும் தீவிரமான நிகழ்வு" என  வானிலை வரலாற்றாசிரியர் மாக்சிமிலியானோ ஹெர்ரேரா தெரிவித்துள்ளார்.

வியட்நாமின் அயல் நாடான கம்போடியாவிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. அங்கு வெந்நிலை 43C ஐ அடையவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை தடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க தூண்டியது.

தாய்லாந்தில், உடோன் தானி மாகாணத்தில் வெப்பநிலை 44C க்கும் அதிகமாக அதிகரித்தமையினால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் அணையில் நீர் மட்டம் குறைந்ததால் நீரில் மூழ்கிய 300 ஆண்டுகள் பழமையான நகரத்தின் எச்சங்கள் தென்படுகின்றன.

பங்களாதேஷில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.  பிலிப்பைன்ஸில் கல்வி நடவடிக்கை இணையவழி முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவில் வெப்பம் பக்கவாதம் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளன.

2024 ஆம் ஆண்டு வெப்பத்தின் தாக்கம் கொடூரமாக இருக்கும் எனவும், கடந்த ஆண்டை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/182594

கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்

2 weeks 3 days ago
கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம்,BRITISH MUSEUM

படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி
  • பதவி, பிபிசி நியூஸ், குமாசி
  • 3 மே 2024

பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்ற 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவை கானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 32 கலைப் பொருட்களைக் காண கானா மக்கள் அங்கு பெருங்கூட்டமாகத் திரண்டனர்.

"இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது," என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு கூறினார்.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை.

அசான்டே அரசர், அல்லது அசான்டேஹேன் (Asantehene) என்னும் பதவி பாரம்பரிய அதிகாரத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடத்தில் அவரது முன்னோடிகளின் ஆன்ம பலம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவரது ராஜ்ஜியம் தற்போது கானாவின் நவீன ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

ஓய்வுபெற்ற காவல்துறை ஆணையரும், பெருமைக்குரிய அசான்டேவாசியுமான ஹென்றி அமங்க்வாடியா, ஆரவாரமான பறை ஓசைக்கு மத்தியில், “எங்கள் கெளரவம் மீட்டெடுக்கப்பட்டது,” என்று பிபிசியிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.

 
'கறை படிந்த வரலாறு'
கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம்,BRITISH MUSEUM

படக்குறிப்பு,தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது), தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள்

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது) வழங்கப்பட்டது. ஆனால் தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள்.

விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 17 கலைப் பொருட்களை கானாவுக்கு கடனாக வழங்கியுள்ளது, மீதமுள்ள 15 கலைப் பொருட்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை. கானா தேசத்திற்குள் கலைப் பொருட்கள் மீண்டும் வந்திருக்கும் அதே நேரம் அசான்டேஹேனின் வெள்ளி விழா கொண்டாட்டமும் நடக்கிறது.

"கானாவின் `அரச குடும்ப நகைகள்' என விவரிக்கப்படும் சில கலைப் பொருட்கள், 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அசான்டே போர்களின்போது கொள்ளையடிக்கப்பட்டன, இதில் 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்கெண்டி போரும் அடங்கும். மேலும் தங்க வீணை (சாங்குவோ) போன்ற பிற கலைப் பொருட்கள் 1817இல் ஒரு பிரிட்டிஷ் தூதருக்கு விருப்பத்துடன் வழங்கப்பட்டது.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம்,AFP

"இந்தக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தயிருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றபோதிலும், இதைச் சுற்றியுள்ள வரலாறு மிகவும் வேதனையான ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஏகாதிபத்திய மோதல் மற்றும் காலனித்துவம் கொடுத்த காயங்களின் வடுக்களைச் சுமந்திருக்கும் கறை படிந்த வரலாறு அது" என்று இந்த விழாவிற்காக குமாசி வந்திருந்த விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் டிரிஸ்டம் ஹன்ட் கூறினார்.

கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கலைப் பொருட்களில் அரச வாள், தங்க அமைதிக் கோல் மற்றும் அரசரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தப் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அணியும் தங்கப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும்.

"இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளன. மேலும் அவை குமாசிக்கு கொண்டு வரப்பட்டது கலாசார பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது நல்லிணக்கத்தின் சான்று," என்று டாக்டர் ஹன்ட் கூறினார்.

 
தீராத சர்ச்சை
கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாரம்பரிய உடையில் கானா பெண்கள்

கானா கொண்டுவரப்பட்டுள்ள கலைப் பொருட்களில் "இம்போம்போம்சுவோ (mpompomsuo)" என்று அழைக்கப்படும் வாள், அசான்டே மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள், அரசருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாள்.

அரச வரலாற்றாசிரியர் ஓசெய் - போன்சு சஃபோ-கண்டங்கா பிபிசியிடம் பேசுகையில், அசான்டேவில் இருந்து கலைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி, எங்கள் உணர்வு, எங்கள் முழு இருப்பு ஆகியவற்றை இழந்ததாக உணர்ந்தோம்,” என்றார்.

கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்

கலைப் பொருட்கள் மீண்டும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சர்ச்சைக்குரியதும்கூட.

பிரிட்டன் சட்டத்தின்கீழ், விக்டோரியா & ஆல்பர்ட், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற தேசிய அருங்காட்சியகங்கள் தங்களுடைய சேகரிப்பில் உள்ள அபகரிக்கப்பட்ட பொருட்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய கடன் ஒப்பந்தங்கள், கலைப் பொருட்கள் அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பிரச்னைக்குரிய கலைப் பொருட்கள் மீது உரிமை கோரும் சில நாடுகள், இதுபோன்ற கடன்கள் பிரிட்டனின் உரிமையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர். கானா மக்களில் பலர் இந்தக் கலைப் பொருட்கள் நிரந்தரமாக நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இருப்பினும், இந்தப் புதிய கலைப் பொருட்களைக் கடனாக வழங்கும் செயல்பாடு, பிரிட்டிஷ் சட்டக் கட்டுப்பாடுகளைக் கடக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற வரலாற்று கலைப் பொருட்கள் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருமாறு ஆப்பிரிக்க நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன.

'இருண்ட காலனித்துவ வரலாற்றை' கையாள்வதில் இது ஒரு படி என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cp4gnpnv2gpo

2024 உலக பத்திரிகை சுதந்திர விருது பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு -யுனெஸ்கோ

2 weeks 3 days ago
03 MAY, 2024 | 05:18 PM
image
 

காசா மோதல் குறித்த செய்திகளை செய்தியறிக்கையிடுவதில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்திவரும் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பிற்காக 2024 உலக பத்திரிகை சுதந்திர விருதிற்கு பாலஸ்தீன பத்திரிகையாளர்களை யுனெஸ்கோ தெரிவு செய்துள்ளது.

பெரும் ஆபத்து காணப்படுகின்ற போதிலும்தொடர்ந்து செய்தியறிக்கையிடலில்  ஈடுபட்டுள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு ஆதரைவையும் அங்கீகாரத்தையும்; வழங்குவதற்காக இந்த விருது அவர்களிற்கு வழங்கப்படுகின்றது என விருது தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடினமான ஆபத்தான சூழ்நிலைகளின் மத்தியில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தும் துணிவை யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம்  ஆட்ரிஅசோலே பாராடடியுள்ளார்.

ஒக்டோபரில் மோதல் ஆரம்பித்த பின்னர் 97 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/182601

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.

2 weeks 3 days ago
03-747x375.jpg இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.

இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனானஅனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்கின்றன.

மேலும், இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது.

இஸ்ரேலிய அரசாங்கம் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி போதுமான அளவில் வழங்க அனுமதிக்கும் வரை இந்த புதிய நடவடிக்கைகளை அரசு செயற்படுத்தும் என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், காசாவின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ள இஸ்ரேல், தற்போது தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் உட்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1380939

உலக பத்திரிகை சுதந்திர தினம்

2 weeks 3 days ago
உலக பத்திரிகை சுதந்திர தினம்: அச்சுறுத்தல்களால் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறிய 310 பிபிசி செய்தியாளர்கள் கூறுவது என்ன?
உலக பத்திரிகை சுதந்திர தினம்
படக்குறிப்பு,ஷாஜியா ஹயா செய்தியாளராக ஆப்கானிஸ்தான் முழுவதும் பயணித்துள்ளார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸ்டீபனி ஹெகார்டி
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

நாடுகளுக்கு வெளியே இருந்து செயல்படும் பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்கள் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த எண்ணிக்கை ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவில் நீடிக்கும் அடக்குமுறைகளை பிரதிபலிக்கின்றன.

இரான் உட்பட பிற நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பலர் சிறை தண்டனை, மரண அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் எதிர்கொள்கின்றனர்.

பிபிசி உலக சேவையின் இயக்குனர் லிலியன் லாண்டோர் கூறுகையில், "அவர்கள் செய்தியாளராக பணியைத் தொடர ஒரே வழி, தங்கள் நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே. நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய கவலையை அதிகரிக்கிறது." என்றார்.

 

ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோது, பிபிசி அதன் பெரும்பாலான பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டியிருந்தது. அதன்பிறகு பெண் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை, அதே சமயம் ஆண் ஊழியர்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர்.

மியான்மர் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலும் செய்தியாளர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களால் சுதந்திரமாக செய்தி சேகரிக்கவோ பதிவிடவோ முடியவில்லை.

 
உலக பத்திரிகை சுதந்திர தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நூற்றுக்கணக்கான பிபிசி செய்தியாளர்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பணியாற்றி வருகின்றனர்.

"நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார் பிபிசி பாரசீக செய்தியாளர் ஜியார் கோல். அவர் செய்தி சேகரிக்க எங்கு சென்றாலும், எந்த அறைக்குள் நுழைந்தாலும், முதலில் தப்பிக்கும் வழி உள்ளதா என்பதையே தேடுகிறார்.

"எனது வீட்டில் நிறைய பாதுகாப்பு கேமராக்கள் உள்ளன, என் மகளின் பள்ளியை மாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நான் எச்சரிக்கப்பட்டேன்" என்கிறார்.

2007 இல் இருந்து ஜியார் இரானுக்குச் செல்லவில்லை. அவரது தாயார் இறந்த போது கூட, இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாயின் கல்லறையைப் பார்க்க எல்லை அருகே பதுங்கி இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி புற்றுநோயால் இறந்ததில் இருந்து ஜியார் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்.

"எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், என் மகள் என்ன ஆவாள் என்பது மட்டும் தான் எப்போதும் என் மனதில் இருக்கும் ஒன்று" என்று அவர் கூறுகிறார்.

"இரானிய ஆட்சி அபாரமாக வளர்ந்துள்ளது. அவர்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றனர். இரான் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதால் சர்வதேச அரங்கில் இரான் பற்றி என்ன நினைக்கிறது என்பதை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை."

 
உலக பத்திரிகை சுதந்திர தினம்
படக்குறிப்பு,நினா நசரோவா தனது கணவர் மற்றும் 16 மாத குழந்தையுடன் 2022 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவைச் சேர்ந்த ஜோடி கின்ஸ்பர்க் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளில் நாடுகளை விட்டு வெளியேறும் பத்திரிகையாளர்களுக்கு நாங்கள் நிதி மற்றும் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவது 225% அதிகரித்துள்ளது” என்றார்.

மேலும் பேசிய அவர் "சிறையில் உள்ள செய்தியாளர்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு நாங்கள் சரியாக கணித்து விட்டோம். செய்தியாளர்கள் கொல்லப்படுவது 2015 க்குப் பிறகு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ரஷ்யா, இரான் மற்றும் செளதி அரேபியா போன்ற ராஜ்யங்கள், தங்கள் நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பதிவாகும் செய்தி அறிக்கைகளை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்கின்றன ” என்றார்.

யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து பிபிசி ரஷ்யன் செய்தியாளர் நினா நசரோவா தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. நினாவின் கணவரும் செய்தியாளர் தான். மாஸ்கோவில் இருந்து விமானம் புறப்பட்டதும், தனது கணவரை உற்று நோக்கினார். அவர் அழுது கொண்டிருந்ததை நினாவால் உணர முடிந்தது.

"நான் உணர்வற்றுப் போனேன்," என்கிறார் நினா.

புதிய தணிக்கை சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். "நான் போர் வரப்போகிறது என்று எச்சரித்தேன். இதற்காக நான் சிறையில் அடைக்கப்படலாம்” என்றார்.

நினா தங்கள் 16 மாத மகன், இரண்டு சூட்கேஸ்கள் மற்றும் ஒரு டிராலியை எடுத்துக்கொண்டு ரஷ்யாவிலிருந்து துருக்கிக்கு மலிவான டிக்கெட்டை முன்பதிவு செய்து புறப்பட்டார். அங்கு ஒரு வாரம் கடந்தது, பின்னர் அவர்கள் துபாயில் நாட்களை கழித்தனர்,

அவர்கள் போர் மூள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விடுமுறையை திட்டமிட்டு பணம் செலுத்தி ஏற்பாடு செய்தனர். பின்னர் அவர்கள் மாண்டினீக்ரோவிற்கு குடிபெயர்ந்தனர். அதன் பிறகு, லாட்வியன் தலைநகரான ரிகாவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு பிபிசி நாட்டைவிட்டு வெளியேறிய ரஷ்ய ஊழியர்களுக்காக ஓர் அலுவலகத்தை அமைத்திருந்தது.

இந்த ஆண்டு ஏப்ரலில், நினாவின் சக ஊழியரும், பிபிசி ரஷ்ய செய்தியாளருமான இலியா பரபனோவ், "வெளிநாட்டு உளவாளி" என்று முத்திரை குத்தப்பட்டார். "தவறான தகவல்களை பரப்பினார்" மற்றும் போரை எதிர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். இதை இலியாவும் பிபிசியும் நிராகரித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடரலாம். மார்ச் மாதம் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான 'இரான் இன்டர்நேஷனல்’ தொகுப்பாளர் தனது லண்டன் வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டார். மர்ம நபர்கள் அவரது காலில் கத்தியால் குத்தினர். சமீபத்தில் பிரிட்டிஷ் தீவிரவாத எதிர்ப்பு போலீசார் பிரிட்டனில் வசிக்கும் பிபிசி பாரசீக ஊழியர்களுக்கு அதிக அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்தனர்.

 
உலக பத்திரிகை சுதந்திர தினம்
படக்குறிப்பு,பிபிசி பாரசீக தொகுப்பாளர்கள் ஃபர்னாஸ் காசிசாதே (இடது) மற்றும் ரானா ரஹிம்பூர் (வலது) இருவரும் இரானை விட்டு வெளியேறினர்.

2022 ஆம் ஆண்டில் பிபிசி பாரசீக தொகுப்பாளர் ராணா ரஹிம்பூரின் கார் உடைக்கப்பட்டிருந்தது, ஒட்டு கேட்கும் சிறிய மைக் போன்ற சாதனம் உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகித்தார்.

அவர் நினைத்தது போலவே அவர் தனது தாயுடன் நடத்திய உரையாடல் பதிவு செய்யப்பட்டு இரானிய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த உரையாடலில் ஆட்சியை ஆதரித்து பேசுவது போல் எடிட் செய்யப்பட்டது.

இதனால் போட்டி ஊடகங்கள் அவரை இழிவு படுத்த இந்த சம்பவத்தை பயன்படுத்தியபோது, ராணா ஊடகத் துறையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.

"இந்த அரசு தரப்பு அதன் மிகவும் நுட்பமாக தந்திரமாக செயல்படுகிறது. எங்களை இழிவு படுத்தவும், மிரட்டவும் மற்றும் இறுதியில் எங்களை அமைதிப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். எனக்கு நடந்திருப்பது அது தான்" என்று ராணா கூறுகிறார்.

இது அவரது நண்பர்களையும் சக ஊழியர்களையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

பிபிசி பாரசீகத்தின் மற்றொரு தொகுப்பாளரான ஃபர்னாஸ் காசிசாதே கூறுகையில், "இரானில் உள்ள எனது அம்மாவை நான் அலைப்பேசியில் அழைக்கும் ஒவ்வொரு முறையும், யாரோ நாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது பயமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் எங்களை அழிக்க எளிதில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியும்." என்றார்.

அவர் 21 ஆண்டுகளாக இரானுக்கு திரும்பவில்லை. மேலும் அவரும் அவரின் ஒன்பது சக ஊழியர்களும் நாட்டில் இல்லாத போது தங்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சமீபத்தில் கண்டுபிடித்தனர். இரானிய நீதித்துறையில் இருந்து ஹேக்கர்கள் இந்த தகவல்களை கசியவிட்டனர்.

முன்னதாக, இரானிய வெளியுறவு அமைச்சகம் பிபிசி பாரசீக ஊழியர்கள் மீது வன்முறை, வெறுப்பு பேச்சு மற்றும் மனித உரிமை மீறல்களை தூண்டுவதாக குற்றம் சாட்டியது.

ஃபர்னாஸின் கணவர் வலைப்பதிவில் எழுதியதற்காக 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஃபர்னாஸும் அவரது கணவரும் தங்கள் ஆறு மாத மகனுடன் நாட்டை விட்டு வெளியேறினர்.

 
உலக பத்திரிகை சுதந்திர தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நாடுகளை விட்டு வெளியேறிய பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஃபர்னாஸின் தந்தை இரானின் பாதுகாப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார், அவருக்கு மிரட்டல் விடுத்தனர், அவர் தனது மகளை திரும்பி வரச் சொல்லும்படி அவரை வற்புறுத்தினர், மேலும் அவரது பேரக்குழந்தைகள் எங்கு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியும் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில், ஃபர்னாஸின் சகோதரர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் . அவரது வயதான பெற்றோர்கள் அவரைப் பார்த்து கொள்ள முடியாமல் போராடினர். ஆறு வாரங்களுக்குப் பிறகு அவருடைய சகோதரர் இறந்துவிட்டார். அடுத்த ஆறு மாதங்களில் அவருடைய தந்தையும் இறந்துவிட்டார்.

"இந்த இழப்புகளில் இருந்து என்னால் முழுமையாக மீள முடியவில்லை. நான் உண்மையில் என் குடும்பத்திற்காக என் அம்மாவுக்காக அங்கு இருக்க விரும்பினேன். என்னால் முடியவில்லை" என்றார் ஃபர்னாஸ்.

"நான் இனி இந்த செய்திகளை, இந்த கொலை மிரட்டல்களை இனி கண்டுகொள்ள மாட்டேன். எனக்கு வரும் குறுந்தகவல்களை இனி திறக்க மாட்டேன். சில சமயங்களில் பாலியல் ரீதியாகவும் அசிங்கமாகவும் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்" என்கிறார் ஃபர்னாஸ்.

பிபிசி பாஷ்டோவைச் சேர்ந்த ஷாஜியா ஹயாவிற்கு, நாட்டை வருத்தமாக இருந்தாலும் கூடவே குற்ற உணர்வும் இருந்தது.

2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டை முழுவதுமாக கைப்பற்றிய போது, அவரது பெற்றோரையும் சகோதரரையும் காபூலில் விட்டுவிட்டு அவர் தனியாக பிரிட்டனுக்கு வெளியேற்றப்பட்டார்.

"இரவு 02:00 மணியளவில் நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த சமயத்தில் என்னால் என் தம்பியை கட்டிப்பிடித்து விடை கொடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளித்தது.

நான் இங்கே சுதந்திரமாக இருக்கிறேன், ஆனால் அவர்கள் ஒரு வகையான சிறையில் இருக்கிறார்கள். தலிபான்கள் என் வேலையை காரணம் காட்டி என் குடும்பத்தினரை தண்டிப்பார்களோ என்று கவலையாக உள்ளது, அதனால் என் குடும்பத்தினரிடம் யாராவது என்னை பற்றி கேட்டால் அதை மறுக்கும்படி கூறியிருக்கிறேன்” என்றார்.

ஷாஜியாவுக்கு நாட்டை விட்டு வெளியேற பின்னரும், இணையத்தில் இடைவிடாத தொல்லை உள்ளது.

 
உலக பத்திரிகை சுதந்திர தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஷாஜியா உள்ளிட்ட பல பிபிசி பத்திரிகையாளர்களுக்கு இணையம் வழியாக மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது.

ஒரு உலக சேவை பத்திரிகையாளர், தன் சொந்த நாட்டில் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தன் அடையாளத்தை மறைத்து சில தகவல்களை பகிர்ந்தார். அவருக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பயம் என்னவென்றால், அவரது அரசாங்கம் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்துவிடுமோ என்பது தான்,

அப்படி பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்டால் நாடற்றவர்கள் ஆகிவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். மேலும் தொலைதூரத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பற்றி செய்தி வாசிப்பது கடினமாக இருப்பதாகவும் கருதுகின்றனர்.

ஷாஜியா ஆப்கானிஸ்தானைச் சுற்றிப் பயணித்து, மக்களிடம், குறிப்பாக பெண்களிடம், அவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசி வருகிறார். அப்படி பேட்டி அளித்தால் எந்த ஆபத்தும் வராது என மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இரானில் சாதாரண மக்கள் பிபிசியுடன் பேச அஞ்சுகின்றனர். பேட்டி அளிக்க கூடாது என அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

நினா தனது வேலை மிகவும் கடினமானது என்று கூறுகிறார். எங்குமே பயணிக்க முடியாமல், மேசையில் அமர்ந்து வேலை செய்தல், தன் திறமையை பறித்துவிடும் என்று அவர் கவலைப்படுகிறார்.

முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில் கூட நினாவால் கலந்து கொள்ள முடியவில்லை. தன் மகனை அனைவரும் பாராட்டுவதை கண்டு ரசிக்க முடியவில்லை.

"காதல் இருக்கிறது, ஆனால் சற்று தொலை தூரமாகி விட்டது" என்கிறார் நினா.

புலம்பெயர்ந்து வாழ்வதும் வேலை செய்வதும் ஒரு வகையான `பாதி வாழ்க்கை’ என்று தன் சூழலை விளக்குகிறார் ஃபர்னாஸ்.

"நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன், நான் இப்போது பிரிட்டிஷ் நாட்டின் குடிமகன் ஆகிவிட்டேன் என்று அவ்வளவு சுலபமாக நம்மால் வாழ முடியாது. இந்த சூழலில் என் வாழ்க்கையை உண்மையில் முழுமையாக வாழ முடியாது. நாங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறோம், ஆனால் எங்கள் மனம் இன்னும் எங்கள் நாட்டில் தான் வசிக்கிறது” என்கிறார் ஃபர்னாஸ்.

https://www.bbc.com/tamil/articles/ceq3z06yp84o

சீனா ராணுவத்தில் பெரிய மாற்றம்: நவீன போர்களில் வெற்றிபெற உதவப் போகும் புதிய சிறப்புப் பிரிவு

2 weeks 4 days ago
சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

46 நிமிடங்களுக்கு முன்னர்

நவீன யுத்தத்தின் சவால்களைக் கருத்தில் கொண்டு சீனா தனது ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது.

பிபிசி மானிட்டரிங் செய்திப் பிரிவின்படி, ஏப்ரல் 19 அன்று சீனா ஒரு புதிய ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அறிவித்தது. சீனாவின் அரசாங்க செய்தி முகமை ஷின்ஹுவாவின் கூற்றுப்படி, இந்தப் புதிய ராணுவப் பிரிவுக்கு தகவல் ஆதரவுப் படை (Information Support Force) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு ராணுவப் பிரிவு ஒரு நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டதாக, அச்செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஷி ஜின்பிங்குடன் மத்திய ராணுவ ஆணையத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் உள்ளார். இந்தச் சிறப்புப் பிரிவு ராணுவத்தின் ஒரு மூலோபாயப் பிரிவாக இருக்கும் என்றும், தகவல் அமைப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதே அதன் பணியாக இருக்கும் என்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

கட்சியின் கட்டளைகளை உறுதியாகக் கேட்டு, ராணுவத்தின் முழுமையான தலைமையின் கொள்கை மற்றும் அமைப்பைச் செயல்படுத்தி, அப்பிரிவு விசுவாசமாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்படி ஷி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.

 
சீனாவின் நான்கு படைப் பிரிவுகள்
சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

செய்தி முகமை ஷின்ஹுவாவின் அறிக்கைப்படி, டிசம்பர் 31, 2015 அன்று உருவாக்கப்பட்ட மூலோபாய ஆதரவுப் படை கலைக்கப்பட்டதுதான், ராணுவத்தில் கடைசியாக செய்யப்பட்ட பெரிய சீர்திருத்தம். இதன்கீழ், விண்வெளி மற்றும் சைபர் பிரிவுகள் தகவல் ஆதரவுப் படைக்கு இணையாகச் செயல்படுகின்றன.

புதிய பிரிவு உருவாக்கம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், மக்கள் விடுதலை ராணுவம் இப்போது ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் ராக்கெட் படை என நான்கு சேவைகளைக் கொண்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் வூ கியான் கூறினார்.

இந்த நான்கு சேவைகளைத் தவிர, பிஎல்ஏ (மக்கள் விடுதலை ராணுவம்) நான்கு படைப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. அவற்றில், விண்வெளி படை, சைபர் படை, தகவல் ஆதரவுப் படை மற்றும் கூட்டுத் தளவாடங்கள் ஆதரவுப் படை ஆகியவை அடங்கும்.

"விண்வெளி படையின் உதவியுடன் சீனா விண்வெளியில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும், சைபர் தாக்குதல்களில் இருந்து சைபர் படை நாட்டைப் பாதுகாக்கும், தரவுகளைப் பாதுகாப்பதற்கும் உதவும்" என்று செய்தித் தொடர்பாளர் வூ கியான் கூறினார்.

இருப்பினும், புதிய பிரிவு குறித்து அவர் அதிக தகவல்களைத் தெரிவிக்கவில்லை. ராணுவத்தின் செய்தித்தாளான பிஎல்ஏ டெய்லி, நவீன போர்களில் வெற்றி என்பது தகவல்களைப் பொறுத்தது, அத்தகைய சூழ்நிலையில் சிறந்த தகவல்களைக் கொண்டவர்களே போரில் வெற்றி பெறுவர் எனத் தெரிவித்துள்ளது.

 
மூலோபாயப் படையில் பணிபுரிந்தவர்களுக்கு புதிய பொறுப்பு
சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஷி ஜின்பிங்

சீன ஊடகங்களைப் போலன்றி, ஹாங்காங் ஊடகங்கள் இந்தப் புதிய பிரிவை யார் வழிநடத்துவார்கள் என்பதில் ஆர்வமாக உள்ளன.

புதிய பிரிவின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி யி (Bi Yi) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவர் மூலோபாய ஆதரவுப் படையின் துணைத் தளபதியாக இருந்தார்.

ஹாங்காங்கின் சுயாதீன செய்தித்தாள் மிங் பாவோவின் கூற்றுப்படி, மூலோபாய ஆதரவுப் படையின் அரசியல் ஆணையராக இருந்த ஜெனரல் லி வெய், புதிய பிரிவின் அரசியல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வியூக ஆதரவுப் படையின் முன்னாள் தளபதியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினருமான சூ கியான்ஷெங், புதிய பிரிவை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என ட்சிங் டாவ் டெய்லி (Tsing Tao Daily) எழுதியுள்ளது.

இதனால் அவர் ராணுவ ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன.

தற்செயலாக, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு, 2016இல் மூலோபாய ஆதரவுப் படையின் துணைத் தளபதியாக இருந்தார்.

 
கடலில் சீனாவின் ஏற்பாடுகள்
சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கிடையில், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மேற்கு பசிபிசிக் கடற்படை நிகழ்ச்சியின் 19வது நிகழ்வு சீனாவின் செங்டுவில் ஏப்ரல் 21 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மையத்தில் கடல்சார் பாதுகாப்பில் சீனாவின் எதிர்கால ஏற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டது. சீன ஊடகங்கள் இந்த நிகழ்வைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் அதன் அமைதியான நோக்கங்களை ஊக்குவிக்கின்றன.

அதே நேரத்தில், சீன ஊடகங்களும் அமெரிக்கா பிராந்தியத்தைச் சீர்குலைப்பதாக விமர்சித்துள்ளன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணுவ நிபுணர் ஜாங் ஜுன்ஷே கூறுகையில், இந்தக் கூட்டத்தை சீனா நடத்துவது, 'சர்வதேச கடல்சார் வணிகத்தில் சீனாவின் பங்கை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது' என்பதற்கான அறிகுறி என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 23ஆம் தேதி சீன ராணுவ நாளிதழில் வெளியான செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் ஆதரவு செய்தித்தாளான 'குளோபல் டைம்ஸ்' அதன் தலையங்கத்தில், 'மேற்கு பசிபிக் கடற்படை திட்டத்தில் சீன கடற்படையின் அர்ப்பணிப்பு வெளிப்பட்டதாக' தலைப்பிட்டிருந்தது.

 
சீனாவின் ராணுவ பலம்
சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அமைதி என்ற வார்த்தை இந்த ஆண்டுக்கான கூட்டத்தின் முக்கிய வார்த்தையாக இருந்தது. மேலும், இது பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது," என்று அந்த தலையங்கம் கூறியது.

"பிராந்தியத்திற்கு வெளியே சில நாடுகள் அடிக்கடி ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சூழ்நிலைகளில் இது நடைபெற்றுள்ளதாக" தலையங்கம் கூறியது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் பொறுப்பல்ல, அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவை.

இந்த நிகழ்வில் பிலிப்பைன்ஸ் பங்கேற்காதது குறித்தும் ஊடகங்கள் விவாதித்தன. ஏப்ரல் 22 அன்று 'குளோபல் டைம்ஸ்' உடன் பேசிய ஜாங் ஜுன்ஷே, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் திட்டத்தில் பிலிப்பைன்ஸ் இல்லாதது, திட்டத்திற்கு சிரமங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார்.

இதுதவிர, ஸ்வீடன் நாட்டு சிந்தனைக் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பத்து ஆண்டுகளில் கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு செலவு செய்யப்பட்டுள்ளது என்று, ஏப்ரல் 22 அன்று ஹாங்காங்கின் 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' கூறியது.

சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ பலத்தைக் கருத்தில் கொண்டு, அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்கள் ராணுவ வரவு செலவுகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/ck7lk07mykgo

Checked
Tue, 05/21/2024 - 04:08
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe