உலக நடப்பு

2023 இல் புதிய உச்சத்தை தொட்ட இராணுவ ஆயுதங்கள் விற்பனை

3 months 2 weeks ago

கடந்த 2023 இல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளது.

US-4.jpg

அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் இராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையை தவிர, அமெரிக்க அரசே நேரடியாக விற்பனை செய்த $81 பில்லியன் வணிகமும் இதில் அடங்கும்.

இப்பட்டியலில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நோர்வே ($1 ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), அவுஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகியவை அமெரிக்காவிற்கு சாதகமான ஆயுத விற்பனை வர்த்தகத்திற்கு உதவும் நாடுகள் ஆகும்.

இது குறித்து அமெரிக்க அரசு, “பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என தெரிவித்தது.

ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

அமெரிக்க அரசிடம் இருந்து இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் இராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாடிக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம். ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/289891

மோனாலிசா ஓவியம் மீது சூப் வீசிய பெண்கள்

3 months 2 weeks ago
மோனாலிசா ஓவியம் மீது சூப் வீசிய பெண்கள்

16-ம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றியுள்ளனர்.

image_bbb4b10ced.jpg

துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பத்திரமாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் உணவு அக்கறை என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றியுள்ளனர்.

image_6587e2674a.jpg

மேலும், தாக்குதலுக்கு பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு 'ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு' உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்தவுடன் அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடினர்.

ஓவியர் லியோனார்டோ டா வின்சி அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் இதற்கு முன்பாக பலமுறை சேதப்படுத்தப்பட்டதும், ஒருமுறை திருடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மோனா-லிசா-ஓவியம்-மீது-சூப்-வீசிய-பெண்கள்/50-332327

ஜோபைடன் பலவீனமானவர் திறமையற்றவர்; பிரச்சாரங்களில் டிரம்ப்

3 months 2 weeks ago
ஜோபைடன் பலவீனமானவர் திறமையற்றவர்; பிரச்சாரங்களில் டிரம்ப்; அமெரிக்க பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிப்பு

Published By: RAJEEBAN   29 JAN, 2024 | 03:29 PM

image

cnn

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பலவீனமானவர், திறமையற்றவர் என்ற வாதத்தை முன்வைத்துவரும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நிலைமை அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி செல்கின்றது எனவும் தெரிவித்துவருகின்றார்.

அமெரிக்கா தன்னை காப்பாற்றுவதற்கு அவசியமான வலுவான நபராக டிரம்ப் தன்னை முன்னிறுத்திவருகின்றார்.

நெவெஸ்டாவில் ஆற்றிய உரையில் பைடனின் எல்லை கொள்கைகளை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். இதன் காரணமாக எந்நேரத்திலும் தேசிய பாதுகாப்பு பேரழிவொன்று இடம்பெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற விடயங்களால் அமெரிக்காவில் பாரிய பயங்கரவாத தாக்குதலிற்கான ஆபத்துள்ளது பல தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும்  டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்ட விடயத்தையும் முன்னாள் ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றார்.

இதற்கான காரணம் பைடன் என குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் பைடனின் போதிய வலிமையின்மையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் வெள்ளை மாளிகையில் இருந்திருந்தால் தற்போதைய யுத்தங்கள் ஒருபோதும் இடம்பெற்றிருக்காது என குறிப்பிட்டுள்ள அவர் உலகம் முழுவதும் அமைதி நிலவியிருக்கும் ஆனால் தற்போது நாங்கள் மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் நிற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175068

சீனாவில் ரூ.30 லட்சம் கோடி கடனால் 'எவர்கிராண்டே' மூடல் - சீன பொருளாதாரத்திற்கு என்ன அச்சுறுத்தல்?

3 months 2 weeks ago
எவர்கிராண்டே நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

29 ஜனவரி 2024

கடனில் சிக்கித் தவிக்கும் சீன நிறுவனமான எவர்கிராண்டே நிறுவனத்தை கலைக்க ஹாங்காங்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிக்கலில் உள்ள இந்த கட்டுமான நிறுவனம் அதன் கடன்களை அடைப்பதற்கான திட்டத்தை உருவாக்க பலமுறை தவறியதை அடுத்து, நீதிபதி லிண்டா சான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிறுவனம் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் ($325bn - £256bn) அளவுக்கு கடன் உள்ளிட்ட நிதி சார்ந்த நெருக்கடியில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வந்தது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் அதன் பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை ஏறத்தாழ 25 சதவிகிதத்தை பிடித்துள்ளது

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எவர்கிராண்டே கடனில் மூழ்கிய போது அது உலக நிதிச் சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

எவர்கிராண்டே நிறுவனம் என்ன தொழில் செய்கிறது?

தொழிலதிபர் ஹுய் கா யான் 1996 இல் தெற்கு சீனாவின் குவாங்சோவில் ஹெங்டா குழுமம் என்று அழைக்கப்பட்ட எவர்கிராண்டே நிறுவனத்தை நிறுவினார்.

இந்த நிறுவனத்தின் இணையதளத்தில், எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் குழுமம், சீனா முழுவதும் 280க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300க்கும் மேற்பட்ட திட்டங்களை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்த அளவில் செயல்படும் எவர்கிராண்டே, ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொள்கிறது என்றில்லாமல் பிற தொழில்களையும் செய்துவந்தது.

ரியல் எஸ்டேட் தொழிலைத் தவிர, மின்சார கார் உற்பத்தி முதல் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு வரை பல தொழில்களை இந்நிறுவனம் செய்துவந்தது. நாட்டின் மிகப்பெரிய கால்பந்து அணிகளில் ஒன்றான குவாங்சோ எஃப்சியில் கூட இந்நிறுவனம் குறிப்பிடும்படியான ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

ஹுய் ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ($42.5bn -£34.8bn) ரூபாயாக இருந்தது என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. ஆனால் அதன்பின்னர் எவர்கிராண்டேவின் பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பு சரிந்துள்ளது.

 
எவர்கிராண்டே நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சீனாவின் நான்ஜிங் நகரில் எவர்கிராண்டே நிறுவனத்தால் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம்.

எவர்கிராண்டே ஏன் சிக்கலில் சிக்கியது?

எவர்கிராண்டே சுமார் 25 லட்சம் கோடி ($300bn) ரூபாய்க்கும் அதிகமான கடன் வாங்குவதன் மூலம் சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கு தீவிரமாக முயற்சித்தது.

இதற்கிடையே, 2020 ஆம் ஆண்டில், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடன் பெறுவதைக் கட்டுப்படுத்த சீனா புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய விதிகளின் காரணமாக எவர்கிராண்டே தனது சொத்துகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே அந்நிறுவனம் கடன் வாங்கத் திட்டமிட்டிருந்த தொகைகளைப் பெறமுடியாத சூழ்நிலையில், மிகவும் குறைந்த விலைக்கு சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அந்த நிறுவனம் இயங்கத் தொடங்கியது.

இப்போது கடன்களுக்கான வட்டியை அடைக்க முடியாமல் இந்நிறுவனம் திணறி வருகிறது.

இந்த நிச்சயமற்ற தன்மையால் கடந்த மூன்று ஆண்டுகளில் எவர்கிராண்டேயின் பங்குகள் 99% அளவுக்கு மதிப்பை இழந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் நியூயார்க்கில் திவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்தது. கடனாளர்களுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் வேலை செய்ததால், அதன் அமெரிக்க சொத்துகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டது.

 
சீன கட்டுமான நிறுவனத்தின் சொத்துக்களை விற்று கடன்களை அடைக்க நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில், கட்டுமானத் துறை ஏறத்தாழ 25 சதவிகிதம் இடம்பெற்றுள்ளது.

எவர்கிராண்டே வீழ்ச்சியால் சீன பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்பு?

எவர்கிராண்டேவின் பிரச்னைகள் தீவிரமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, கட்டுமானப் பணிகளைத் தெடங்குவதற்கு முன்பே பலர் அந்நிறுவனத்திடம் இருந்து சொத்துகளை வாங்குவதற்காக முன்பதிவு செய்து பெரும் தொகைகளைச் செலுத்தினர். தற்போது இந்நிறுவனம் சிதைந்துவிட்டால், அவர்கள் செலுத்திய வைப்புத்தொகையை இழக்க நேரிடும்.

எவர்கிராண்டேவுடன் வணிகம் செய்யும் நிறுவனங்களும் உள்ளன. எவர்கிராண்டேவின் வீழ்ந்தால், கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் வழங்குபவர்கள் என பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன. இது அந்நிறுவனங்களை திவால் நிலைக்கு தள்ளும்.

மூன்றாவதாக, சீனாவின் நிதி அமைப்பில் ஏற்படக் கூடிய பாதிப்பு: எவர்கிராண்டே சரிந்தால், வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் குறைவாகக் கடன் கொடுக்க நிர்பந்திக்கப்படும் அபாயம் உள்ளது.

குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போராடும் போது, இது கடன் நெருக்கடியாக மாறும்.

கடன் நெருக்கடி என்பது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு மிகவும் மோசமான செய்தியாக இருக்கும். ஏனெனில் கடன் வாங்க முடியாத நிறுவனங்கள் வளர்ச்சியடைவது மிகவும் கடினம். மேலும் சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படலாம்.

இது போன்ற சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யத் தகுந்த நாடு சீனா இல்லை என்று கருதும் நிலைக்குத் தள்ளலாம்.

https://www.bbc.com/tamil/articles/c29k38jr64yo

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல்

3 months 2 weeks ago

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலில் செங்கடல் வழியாகப் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கில் யேமனுக்கும் கிழக்கில் அரபிக்கடலுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் ஆழமான இடமாகக் கருதப்படும் ஏடன் வளைகுடாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் ஆதரவுடன் மேற்குலக நாடுகளால் சந்தேகிக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல் | Marlin Luanda Attacked By Houthi

'மெர்லின் லுவாண்டா' எனப்படும் எண்ணெய்க் கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பணியாளர்கள்

இந்தியா, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் கடற்படைகளின் உதவியுடன் தீயை அணைத்ததாக பிரித்தானியாவில் உள்ள கப்பல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல் | Marlin Luanda Attacked By Houthi

 

இதன்போது 22 இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கப்பல் பாதுகாப்பாக அருகில் உள்ள துறைமுகத்திற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில் உள்ள தங்கள் தளங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இது அமைந்தது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://tamilwin.com/article/marlin-luanda-attacked-by-houthi-1706551918

மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் போரா? ஆதிக்கம் செலுத்தப்போகும் நாடு எது?

3 months 2 weeks ago
கத்தார் - சௌதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருக்கிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோஸ் கார்லோஸ் கியூட்டோ
  • பதவி, பிபிசி உலக செய்திகள்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், காஸா போர், மறுபுறம் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் என ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டிருக்கும்போது, ஜோர்டான் எல்லை அருகே சிரியாவில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர்.

இப்படி பதற்றம் அதிகரித்து வருவது மத்திய கிழக்கு என்று அழைக்கப்படும் மேற்கு ஆசியாவில் பெரிய போருக்கு வழிவகுக்குமோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதில் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்கான தொடக்க அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர இந்த பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெவ்வேறு மோதல்கள் காரணமாக இப்பிராந்தியமே ஆட்டம் கண்டுள்ளது.

அதில், இஸ்ரேல் - லெபனானின் ஹெஸ்புலா குழு மோதல்,மேற்குலகத்திற்கு எதிரான யேமனின் ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல், இராக்,சிரியா, பாகிஸ்தானுக்கு எதிரான இரானின் தாக்குதல், மற்றும் இதர இரான் ஆதரவு குழுக்களால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு

பட மூலாதாரம்,PLANET LABS/AP

படக்குறிப்பு,

தங்களது படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தரப்போவதாக அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

இப்படியொரு சூழலில் அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல், "இரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களால் நடத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் பதிலடி கொடுப்போம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த வன்முறை போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் எழுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் இப்பிராந்தியத்தில் பாரம்பரியமாக அதிகாரம் செலுத்தி வரும் கூட்டணிகளும் மாறலாம் என்ற நிலை எழுந்துள்ளது.

தற்போது மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் பிரச்னைகளை இரண்டாக பிரித்து சொல்ல வேண்டுமெனில், ஒன்று இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் மோதல்போக்கு.

மற்றொன்று இப்பிராந்தியத்தில் தன்னை முன்னணி சக்தியாக கருதிக்கொள்ளும் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சன்னி மற்றும் இரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவினருக்கு இடையே நிலவும் மோதல் ஆகும்.

அதே சமயம் இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள், சமீப காலமாக மதநம்பிக்கை சார்ந்த மோதல்கள் குறைந்துள்ளதாகவும், தற்காலிக அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி சார்ந்த காரணங்களே மோதல்போக்குக்கு அதிக காரணமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"எதிர்ப்பின் அச்சு குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று"

இரான் மற்றும் நாடற்ற ஆயுத குழுக்கள்

ஜனவரி மாதம் 15 முதல் 17 ஆகிய மூன்றே நாட்களில் சிரியா, பாகிஸ்தான் மற்றும் இராக் ஆகிய மூன்று நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் இராக்கில் உள்ள இஸ்ரேலிய உளவு அமைப்பின் தளம் மற்றும் பாகிஸ்தான், சிரியாவில் உள்ள எதிர் இஸ்லாமிய குழுக்கள் ஆகியவற்றின் தளங்கள் என குறிப்பிட்ட தளங்களை குறி வைத்து நடத்தப்பட்டது என்றாலும், தற்போதைய கொந்தளிப்பான சூழலில் தங்களின் பலத்தை காட்டுவதே இரானின் விருப்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து தாங்கள் புதிய மோதல்கள் எதிலும் ஈடுபட விரும்பவில்லை என்று தெஹ்ரான் சொல்லிக்கொண்டாலும், அதன் ஆதரவு பெற்றதாக அறியப்படும் குழுவான “எதிர்ப்பின் அச்சு” (axis of resistance) சமீப வாரங்களாகவே மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவானது லெபனானின் ஹெஸ்புலா, இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஷியா போராளிகள், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இதர போராளி குழுக்கள் மற்றும் யேமனின் ஹூதி குழுக்கள் என அனைவராலும் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகும்.

இந்த குழுவின் சித்தாந்தம் “குறிப்பிடத்தகுந்த அமெரிக்க எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு” என்று விவரிக்கிறது பிபிசியின் பெர்சிய சேவை. இவர்கள் அனைவருமே அக்டோபர் மாதத்தில் காஸாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் விவரித்துள்ள எல்கானோ ராயல் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த மத்திய கிழக்கு நிபுணர் ஹைசம் அமிரா-ஃபெர்னாண்டஸ், “இந்த 'எதிர்ப்பின் அச்சு' குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று என்று” குறிப்பிடுகிறார்.

“1979இல் நடந்த இரான் புரட்சியின் விளைவாக உருவான இந்த கூட்டணி, அதன் அரசியல் கொள்கைகளையும், வடிவத்தையும் பிற நாடுகளுக்கும் பரப்புவதற்காக இயங்கி வருகிறது” என்கிறார் லினா கதீப். இவர் லண்டனை தளமாக கொண்டு இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனராக உள்ளார்.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தன்னை ஒரு நடுநிலை மத்தியஸ்தராக நிலைநிறுத்திக் கொள்ள தெளிவான உத்தியை பின்பற்றி வருகிறது கத்தாரின் அல் தானி அரசு

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த குழுக்கள் தத்தமது நாடுகளில் நிலவி வந்த அரசியல் சூழலினால் உருவானவை. அதை இரான் தனது பிராந்திய செல்வாக்கை விரிவுபடுத்த பயன்படுத்தி கொண்டது.

பிபிசி பெர்சிய சேவையின் செய்தியாளர் கெய்வான் ஹொசைனி, இந்த குழுக்கள் இரானிடமிருந்து “தளவாடம், பொருளாதாரம் மற்றும் சித்தாந்த ரீதியான உதவிகளை” பெற்று வருவதாக, 2020ஆம் ஆண்டு பிபிசி முண்டோவில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதே போல் இந்த பிரச்னையில் மதரீதியான காரணங்கள் இருப்பதையும் ஒதுக்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார் தெற்காசியாவில் இருக்கும் வில்சன் மையத்தின் இயக்குநரான மைக்கேல் ககுல்மேன். இதற்கு உதாரணமாக ஷியா குழுக்களுடன் இரானின் நெருக்கத்தையும், அதற்கு எதிரில் சௌதியின் சன்னி ஆதரவையும் சுட்டுகிறார் அவர்.

ஆனால், அதே சமயம் தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருப்பதையும் குறிப்பிடுகிறார் அவர்.

ஹமாஸ் இயக்கம் இஸ்லாத்தின் சன்னி பிரிவை சேர்ந்ததாக இருந்தாலும் அந்த இயக்கத்துக்கு இரானிய ராணும் ஆதரவளிப்பதை வைத்து இந்த கூற்றை புரிந்து கொள்ளலாம், அல்லது குறிப்பிட்ட மோதலில் ஒரே கூட்டணியை சேர்ந்த குழுக்கள் அந்த பிரச்னையை பொறுத்து இரண்டு பக்கங்களுக்கு ஆதரவளித்ததை எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக , சிரிய போரின்போது ஹமாஸ் மற்றும் ஹெஸ்புலா ஆகிய குழுக்கள் எதிர் எதிர் நிலையை எடுத்தன. ஆனால் இஸ்ரேலுக்கு முடிவு கட்டுவதில் இரண்டும் இணைந்து விட்டன.

சிரியாவின் பஷார் அல் அசாத் ஆட்சியைத் தவிர மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் இரான் வலுவான கூட்டணியில் இல்லாததற்கு இரண்டு முக்கிய காரணிகளை முன் வைக்கின்றனர் நிபுணர்கள்.

இதுகுறித்து நிபுணர் அமிரா- பெர்னாண்டஸ் கூறுகையில், முதல் காரணம் “இஸ்லாமிய புரட்சி வடிவத்தை மற்ற நாடுகளுக்கும் பரப்ப நினைப்பது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகள் மற்றும் இந்த பிராந்தியத்தின் இதர நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது” என்கிறார்.

இரண்டாவது, வரலாற்று ரீதியாகவே தனது நாடு, தங்களது வளங்கள், மக்கள் தொகை மற்றும் பெர்சிய பேரரசின் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் இரான் தன்னை இந்த பிராந்தியத்தின் மேலாதிக்க சக்தியாக கருதி வருகிறது என்கிறார் அவர்.

“இந்த காரணங்களே இதர நாடுகளின், குறிப்பாக சௌதி அரேபியாவின் நோக்கங்களோடு முரண்படுவதாக” அவர் தெரிவிக்கின்றார்.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது.

சௌதி அரேபியா தலைமையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு

அரபு உலகின் தலைமையாக தன்னை நிறுவ சமீப ஆண்டுகளில் சௌதி அரேபியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்த பிராந்தியத்தின் வலிமையான மக்கள்தொகை, அரசியல், கலாச்சாரத்தை கொண்டிருந்த எகிப்து தான் சில தசாப்தங்களுக்கு முன்பு அரபு நாடுகளின் மையமாக பார்க்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது. இந்த நாடுகளில் இருந்த அதிகளவிலான ஆற்றல் வளங்கள் செல்வமாக மாற்றப்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் செல்வாக்காக மாறியது.

சிறிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் அல்லது கத்தார் போன்ற நாடுகள் முதலில் தனித்து நின்றன. ஆனால் பின்னர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதவிக்கு வந்தவுடன், "சௌதி அரேபியா உள்நாட்டளவிலும், உலகளவிலும் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்தது."

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

நிபுணர் அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இதன் வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அதன் செழிப்பான ஹைட்ரோகார்பன் பொருளாதாரம். மற்றொன்றுஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த சமயத்தில் இரானுக்கு எதிரான நடவடிக்கையாக சௌதிக்கு வழங்கிய ஆதரவு.”

பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

“பொதுவாகவே ஒவ்வொரு நாடுகளுக்கும் தனிப்பட்ட லட்சியங்கள் இருந்தாலும் கூட, எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் தங்களை நிலைநிறுத்தி கொண்டும், சௌதி அரேபியா உருவாக்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றியும் வருகின்றன” என்கிறார் கதீப்.

சில நிபுணர்கள் விவரிப்பது போல் “புதிய மத்திய கிழக்கு பனிப்போர்” என்ற மோதல்போக்கை கடந்த 40 ஆண்டுகளாகவே சௌதி அரேபியாவும் இரானும் வெளிப்படையாகவே கடைபிடித்து வந்தன. ஆனால், இது தற்போது இந்த பிராந்தியத்தை சேர்ந்த பலரும் ஈடுபட்டுள்ள மோதலாக மாறி மோசமடைந்து விட்டது.

2015ஆம் ஆண்டிலிருந்தே ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக் குழுவுக்கு எதிரான உள்நாட்டுப்போரில் அரசு படைகளுக்கு ஆதரவளித்து வருகிறது சௌதி அரேபியா.

அதே சமயம் சௌதி மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் இந்த குழுவிற்கு இரான் ஆயுதம் மற்றும் ஆதரவு வழங்குவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது இரான்.

ஷியா கிளர்ச்சியாளர்கள் அதிக அரசியல் மற்றும் ராணுவ பலம் கொண்டுள்ள லெபனான் மற்றும் இராக்கிலும் இரான் தலையிடுவதாக சௌதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. இதில் சில குழுக்கள் சௌதி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2023 இல், சீனாவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலமாக இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குதல், பாதுகாப்பை புதுப்பித்தல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை புதுப்பித்தல் என சௌதி-இரானிய உறவு ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்தது.

பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள் எச்சரித்தபடியே, மத்திய கிழக்கில் உள்ள அதிகார உறவுகளில் நிலவும் நிலையில்லா தன்மை மற்றும் சிக்கலுக்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

மத்தியஸ்தம் செய்வதன் மூலம் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் கத்தார்

கத்தாரை சௌதி அரேபியாவின் தலைமையிலான குழுவின் பக்கம் உள்ள நாடாக கருதுவதை கதீப் மற்றும் அமிரா-பெர்னாண்டஸ் ஆகிய இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். அதே சமயம் அதை இந்த பிராந்தியத்தில் தனித்துவமாக காட்டும் அதன் மத்தியஸ்தர் பாத்திரத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

தற்போதைய சூழலில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

பணக்கார வளைகுடா நாடான கத்தார் பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் அல்லது இரான் போன்ற நாடுகளுடன் நல்லுறவை பேணி வருகிறது. மேலும், அதன் அரசியல் குழுக்களுக்கான ஆதரவு , அதன் அண்டை நாடுகளை விட முற்றிலும் மாறானதாக இருக்கிறது.

குறிப்பாக பெரும்பாலும் சௌதியின் பழைய எதிராளிகளான ஹமாஸ் அல்லது சன்னி ஆதரவு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு(muslim brotherhood) உள்ளிட்ட இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது கத்தார்.

கத்தாரின் இது போன்ற அணுகுமுறைகள் அதன் அண்டை நாடுகளால் வரவேற்கப்படவில்லை.

இதுகுறித்து நினைவுகூர்ந்த கதீப், "2017இல் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதாக கூறி சௌதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஏமன், லிபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தால் கத்தார் தடை செய்யப்பட்டதாக” தெரிவிக்கிறார்.

கத்தார் ஒரு மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்தாலும் கூட, அது சிறிய நாடாகும். எனவே அந்நாட்டை அபாய நிலைக்கு தள்ளும் காரணியாக அதுவே அமைந்துள்ளது. 'கத்தார் : சிறிய நாடு, பெரிய அரசியல்' என்ற தனது புத்தகத்தில் அரசியல் ஆய்வாளர் மெஹ்ரான் கம்ரவா கூறியுள்ளது போல், தனது "பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர அந்தஸ்தை உயர்த்தி கொள்ள” அந்நாடு பல மற்றும் மாறுபட்ட கூட்டணிகளை அடைய வேண்டும்.

2021இல் கத்தார் மீதான தடைகள் நீக்கப்பட்டன. அதன் பிறகு அண்டை நாடுகள், குறிப்பாக சௌதி அரேபியாவுடன் அதன் உறவுநிலை நட்பு அடிப்படையில் நீடித்து வருகிறது.

கண்டிப்பாக கத்தார் “இன்னமும் தன்னை மேலும் சிறந்த மத்தியஸ்தம் மற்றும் சமரசம் செய்யும் நாடாக” நிலைநிறுத்த விரும்புவதாக அழுத்தி கூறுகிறார் கதீப்.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேல் இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது.

மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன?

இஸ்ரேலின் பிரச்னையை இந்த பிராந்தியத்தின் கூட்டணியில் “அசாதரணமான” ஒன்றாக வரையறுக்கிறார் அமிரா-பெர்னாண்டஸ். மேலும் கதீப்போ, இஸ்ரேல் எந்த நாட்டின் கூட்டணியையும் சேராதது போல் நடந்து கொள்வதாக கூறுகிறார்.

இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது இஸ்ரேல், அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது. அங்கெல்லாம் மோதல் வெளிப்படையான அல்லது முழுமையான நிலையை எட்டாமல் சிறிய அளவிலான புகைச்சல் நீடித்து கொண்டே இருக்கிறது.

மேலும் இஸ்ரேலுக்கு அரபு அண்டை நாடுகளுடனும் நல்லுறவு இல்லை.

ஒரு நாடாக மிகக் குறைந்த அங்கீகாரமே பெற்றுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், துருக்கி மற்றும் இரான் மட்டுமே அரபு அல்லாத நாடுகளாகும்.

அரபு நாடுகளில் 1979லிருந்து எகிப்தும், 1994லிருந்து ஜோர்டானும், 2020லிருந்து ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலை நாடாக அங்கீகரித்து வருகின்றனர்.

அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இஸ்ரேலின் அரபு-முஸ்லீம் அண்டை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, பாலத்தீனத்துடனான மோதல் போக்கால் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக தெரிவதே” இதற்கு முக்கிய காரணமாகும்.

கடந்த அக்டோபர் 7 இல் போர் ஆரம்பிப்பதற்கு சிறிது காலம் முன்பு கூட, சௌதி அரேபியாவுடனான உறவை இயல்பாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது இஸ்ரேல். அது வெற்றியடைந்திருந்தால் யூத அரசிற்கு பெரும் முன்னேற்றமாக இருந்திருக்கும்.

ஆனால், தாக்குதல் குறித்த தகவல் வந்த உடனேயே இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்காவிடம் சொல்லி விட்டனர் சௌதி அதிகாரிகள்.

பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, பாலத்தீனத்துடனான மோதல் போக்கை கைவிடும் வரை, இஸ்ரேலுடனான கூட்டணி நாடுகள் மற்றும் உறவுகளில் நிலவும் அசாதாரணத்தன்மை முடிவுக்கு வர வாய்ப்பில்லை.

https://www.bbc.com/tamil/articles/c6pq69vgn9do

உக்ரைனில் 40 மில்லியன் டொலர்கள் ஆயுத ஊழல் மோசடி !!

3 months 2 weeks ago
Ukraine.jpg?resize=698,368&ssl=1 உக்ரைனில் 40 மில்லியன் டொலர்கள் ஆயுத ஊழல் மோசடி !!

ரஷ்யாவுடனான போருக்காக 100,000 மோட்டார் குண்டுகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள அதேநேரம் உக்ரேனிய எல்லையை கடக்க முயன்ற ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அவர்களுக்கு எதிரான குறித்த மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2024/1367451

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

3 months 2 weeks ago

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

நேற்று ஜோர்தான் சிரியா எல்லையில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் இராணுவம் மீது அப்பகுதியில் இயங்கிவரும் ஈரானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பொன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 30 பேர்வரையில் காயப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் ஐஸிஸ் பயங்கரவாத அமைப்பிற்கெதிராகவும், போதைவஸ்த்து நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானினால் வழங்கப்பட்ட தற்கொலை ட்ரோன் வகையினைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று அமெரிக்கப் படையினரின் பிரதான தங்குமிடப் பகுதியில் தரையிறங்கி வெடித்துச் சிதறியதாகவும் இதனாலேயே இவ்விழப்புக்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஐப்பசி 7 ஆம் திகதி நடத்திய பயங்கவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நேரடியாக யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களை விடவும் மேலும் அமெரிக்க சீல் விசேட படைகளின் இரு உறுப்பினர்கள் மத்திய கிழக்கில் கடல் விபத்தொன்றில் அண்மையில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினை காசாவிற்குள் மட்டுப்படுத்திவிட அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்வாறான தாக்குதல்கள் பரந்த மத்திய கிழக்குப் போராக மாற்றிவிடக் கூடியன என்று கருதப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து ஈரான் மீது நேரடியான தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் அமெரிக்க செனட்டர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

கோல்டன் விசாவுக்குப் பதிலாக இனி 'திறன்மிகு தொழிலாளர் விசா' - ஆஸ்திரேலியா முடிவால் யாருக்கு லாபம்?

3 months 2 weeks ago
கோல்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தனிஷா சவுகான்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 27 ஜனவரி 2024
    புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்

சமீபத்தில் ஆஸ்திரேலியா அரசு கோல்டன் விசா வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இருந்த இந்த விசாவால் அந்நாட்டிற்கு எந்தவொரு பொருளாதார நன்மைகளும் இல்லை என்பதை அதன் அரசாங்கம் கண்டறிந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியதைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்தன.

ஆனால் இந்த கோல்டன் விசா என்றால் என்ன, பணக்காரர்கள் ஏன் இந்த விசாவிற்காக மற்ற நாடுகளில் கோடிகளில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள், இந்த விசாக்கள் ஏன் இப்போது ரத்து செய்யப்படுகின்றன போன்றவற்றை இக்கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

கோல்டன் விசா என்றால் என்ன?
சஞ்செய் தத்

பட மூலாதாரம்,SANJAY DUTT/TWITTER

இந்த விசாக்கள் அந்தந்த நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன, இதனால், முதலீட்டாளர்கள் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற அதிக அளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த விசா வழங்குவதில் ஒவ்வொரு நாட்டிலும் தனி விதிகள் இருக்கின்றன.

'இன்வெஸ்டோபீடியா' இணையதளத்தின்படி, கோல்டன் விசா என்பது முதலீட்டாளர் ஒரு நாட்டில் அதிக முதலீடு செய்வதன் மூலம் தனது குடும்பத்துடன் குடியுரிமை அல்லது நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழிவகுக்கும் ஒரு வகையான முதலீட்டுத் திட்டமாகும்.

கோல்டன் விசாவின் கீழ், பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெருமளவு வரி விலக்கும் கூட பெறுவார்கள். இருப்பினும், ஒவ்வொரு நாட்டிலும் மூதலீட்டிற்காக சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

கோல்டன் விசாவின் கீழ் பல்வேறு 'முதலீட்டு திட்டங்கள்' இருக்கிறது, அதற்காக ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.

ஹென்லி & பார்ட்னர்ஸின் கருத்துகளின் படி , பொதுவாக கோல்டன் விசா திட்டத்தின் கீழ் விசாவைப் பெற குறைந்தது 12 மாதங்கள் வரை ஆகலாம்.

 
கோல்டன் விசாவுக்கு பதிலாக இனி 'திறன்மிகு தொழிலாளர் விசா'
கோல்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிட்னியைச் சேர்ந்த பிபிசி பத்திரிகையாளர் ஹன்னா ரிச்சியின் அறிக்கையின்படி, இந்த விசா கொள்கையானது ஆஸ்திரேலியாவால் வெளிநாட்டு வணிகர்களுக்காகவே தொடங்கப்பட்டது. ஆனால் அதனால், பலன்கள் சரியாக இல்லாததால், குடியேற்றக் கொள்கையில் திருத்தங்களுக்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே இந்தக் கொள்கையை, சட்டவிரோத பணப்புழக்கம் செய்யும் ஊழல்வாதிகள் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் கூறினார்கள்.

அந்த அறிக்கையின்படி, இதற்குப் பதிலாக 'திறன்மிகு தொழிலாளர் விசா' (திறமையான தொழிலாளர்களுக்கான விசா) கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலிய கோல்டன் விசாவின் கீழ், முதலீட்டாளர்கள் குறைந்தது 3.3 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 27 கோடியே 44 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

பல விசாரணைகளுக்குப் பிறகு, இந்தக் கொள்கையால் அதன் இலக்கை நிறைவேற்ற முடியாது என்பதை ஆஸ்திரேலிய அரசாங்கம் புரிந்துகொண்டது.

இந்த விசாவை ரத்து செய்வதன் மூலம், தங்கள் நாட்டிற்கு வந்து, ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் திறமையானவர்களுக்கான விசாக்களை கொண்டு வருவார்கள் என்று அரசாங்கம் கூறியது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த விசா நமது பொருளாதார எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தெளிவாகிறது' என்றார்.

 
கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு என்ன வசதிகள் கிடைக்கும்?
கோல்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

குடியுரிமை அல்லது நிரந்தர குடியுரிமை ஆகியவற்றை கோல்டன் விசாவை வைத்து ஒருவர் அவரது குடும்பத்துடன் அந்த நாட்டில் வசிக்கவும் பணி புரியவும் அனுமதிக்கிறது.

சில சூழ்நிலைகளில், ஒருவர் நிரந்தர குடியுரிமை அல்லது அந்த நாட்டின் குடியுரிமையையும் பெறலாம். முன்னதாக இதற்கு ஸ்பான்சர் தேவைப்பட்டது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றோர்களும் நிதியுதவி செய்யலாம்.

பயணம் - ஒரு நாட்டின் கோல்டன் விசாவைப் பெற்றால், ஒருவர் அந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாகச் செல்லலாம். சில ஐரோப்பிய நாடுகளின் கோல்டன் விசா வைத்திருப்பவர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எங்கு வேண்டுமென்றாலும் பயணிக்க அனுமதிக்கின்றது.

கல்வி மற்றும் சுகாதாரம் - பல்வெறு நாடுகளில் கோல்டன் விசாவுடன் ஒருவர் அந்த நாட்டின் உள்ளூர் கல்வி முறை மற்றும் சுகாதார அமைப்பின் வசதிகளையும் பெறலாம்.

வரி - பல்வெறு நாடுகளில் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சில அல்லது முழு வரி விலக்கும் அளிக்கின்றன.

 
எந்த நாடுகளில் எல்லாம் கோல்டன் விசா சர்ச்சை இருக்கிறது?
கோல்டன் விசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோல்டன் விசா கொள்கையை ஒரு நாடு ரத்து செய்வது இது முதல் முறை அல்ல, இதற்கு முன், 2022 ஆம் ஆண்டில் பிரிட்டனும் இந்தக் கொள்கையை ரத்து செய்தது.

மிகவும் பணக்கார 'ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள்' அங்கு குடியுரிமை பெறத் தொடங்கிய போது ஐரோப்பிய நாடுகளான மால்டாவிலும் இந்த விசா பற்றிய கவலைகள் எழுந்தன.

பண மோசடி, வரி செலுத்தாமல் இருப்பது மற்றும் ஊழல் வழக்குகள் அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது.

பிபிசி செய்தியின் அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில், ஐரோப்பிய நாடுகளை 'கோல்டன் விசா' மூலம் தங்கள் நாட்டில் குடியுரிமை பெறும் முதலீட்டாளர்களிடம் கவனமாக இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கேட்டுக் கொண்டது.

ஊடகத்தில் வெளிவந்த அறிக்கைகளின்படி, பாலிவுட் நடிகர்கள் உட்பட இந்தியாவின் பல பிரபலங்கள் துபாயில் கோல்டன் விசா பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அங்கு தங்கி பல வசதிகளை பெற முடியும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் போர்ச்சுகல் நாட்டின் கோல்டன் விசாவைப் பெறும் நபர்களின் பட்டியலில் இந்திய குடிமக்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது, அதாவது இந்த விசாவைப் பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை நான்காவது அதிகமாக இருந்தது.

 
மற்ற நாடுகளில் கோல்டன் விசா பெற எவ்வளவு செலவாகும்?

அமெரிக்கா - 5 மில்லியன் டாலர்கள்

ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ் - ஒரு லட்சம் டாலர்கள்

சைப்ரஸ் - இரண்டு மில்லியன் யூரோக்கள்

அயர்லாந்து குடியரசு - ஒரு மில்லியன் யூரோக்கள்

செயின்ட் கிட்ஸ் - 1,50,000 டாலர்கள்

வனுவாட்டு - 1,60,000 டாலர்கள்

https://www.bbc.com/tamil/articles/c1917kj9v4wo

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

3 months 2 weeks ago

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

large.Whiteflagpalasteniansshotdead.png.ae115bd63caf6cf22d06834f92f627a8.png

காசாவில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் நடத்திவரும் திட்டமிட்ட இனக்கொலையில் மிக அண்மையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த , யுத்தத்தில் எவ்விதத்திலும் பங்கேற்றிருக்கத பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். 

தீவிரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போரில் அகப்பட்டு கடுமையான அவலங்களைச் சந்தித்துவரும் பாலஸ்த்தீன மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள முடிந்தவகையில் இப்பகுதியிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். அவ்வாறான ஒரு முயற்சியில் தனது பேரக்குழந்தையின் கைகளைப் பிடித்தவாறு சுமார் 15 முதல் 20 வரையான பெண்கள் சிறுவர்கள் கொண்ட மக்கள் கூட்டமொன்றை இஸ்ரேலின் முன்னரங்கு நோக்கி கைகளில் வெள்ளைக்கொடியினை ஏந்தியவாறு வந்த வயோதிபப் பெண்னொருவரை சுமார் 200 மீட்டர்கள் தூரத்தில் நின்ற இராணுவத் தாங்கியிலிருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். 

இன்னொருவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமது சகோதரரைப் பார்வையிட இன்னும் மூவரை அழைத்துக்கொண்டு இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியொன்றினுள் வெள்ளைக்கொடியுடன் சென்ற நபரை வெகு அருகில் இருந்து இஸ்ரேலியத் தாங்கி சுட்டுக் கொல்கிறது. அவரது வெள்ளைக்கொடி அவரது குருதியில் முற்றாகத் தோய்ந்திருக்கிறது. 

இன்னொரு சம்பவத்தில் உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெள்ளைக்கொடியுடன் வெளியே வாருங்கள் என்று இஸ்ரேலிய இராணுவத்தால் அழைக்கப்பட்டபோது, அதனை உண்மையென்று நம்பி வெள்ளைக்கொடியுடன் வெளியே வந்தவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்திக் கொல்கிறது. 

இத்தாக்குதல்களின் ஒளிப்படங்கள் சி.என்.என் தொலைக்காட்சியில் விலாவாரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்ட மக்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேலிய மிருகங்களின் தாங்கிகளும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவற்றைப் பார்க்கும் போது 2009 இல் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தபோது கொல்லப்பட்ட பலநூற்றுக்கணக்கான புலிகளின் அரசியல்த் துறைப்போராளிகளும், பொதுமக்களும் நினைவிற்கு வருகின்றனர். அன்று நடந்தது அப்பட்டமான போர்க்குற்றமும் இனவழிப்பும் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று இஸ்ரேலின் இனவழிப்பைச் சரியென்று வாதிடும் குரூரர்களுக்கு இது சமர்ப்பணம். 

https://edition.cnn.com/2024/01/26/middleeast/hala-khreis-white-flag-shooting-gaza-cmd-intl/index.html#:~:text=The IDF has repeatedly claimed,raising questions about those efforts.

பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!

3 months 2 weeks ago
பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!
adminJanuary 27, 2024
donald.jpg?fit=780%2C400&ssl=1

பெண் எழுத்தாளர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், தனது சமூக வலைதளத்தில் ஜீன் கரோலை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.

இந்நிலையில் டிரம்புக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த ஜீன் கரோல், தனக்கு 10 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிரம்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.

இதன்படி, எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டொனால்டு டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதை விட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னதாகவே நீதிமன்றில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “இது அமெரிக்கா இல்லை” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

https://globaltamilnews.net/2024/200144/

இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'

3 months 2 weeks ago
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹோலோகாஸ்ட்டின் அழியா சுவடுகள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹோலோகாஸ்ட்(இனப்படுகொலை) என்பது இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945), கோடிக்கணக்கான யூதர்கள் அவர்கள் யூதர்கள் என்பதற்காகவே கொல்லப்பட்ட வரலாற்றின் கொடூரமான சம்பவம்.

இந்தப் படுகொலைகள் ஜெர்மனியின் நாஜி கட்சியால் அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. இதில் யூத மக்களே நாஜிக்களின் இலக்காக இருந்தனர். அவர்களே அதிக எண்ணிக்கையில் கொல்லவும் பட்டனர். கிட்டத்தட்ட ஐரோப்பாவை சேர்ந்த ஒவ்வொரு 10 யூதர்களில் 7 பேர் அவர்களின் இன அடையாளத்திற்காகவே என்பதற்காகவே கொல்லப்பட்டனர்.

அவர்களை மட்டுமின்றி ரோமா(ஜிப்ஸிக்கள்) மற்றும் மாற்றுத் திறனாளிகளையும் கொன்று குவித்தனர் நாஜிக்கள். மேலும் அவர்களது எதிர் குழுக்கள் மற்றும் பால் புதுமையினர் உள்ளிட்ட மக்களின் உரிமைகளையும்கூட அவர்கள் பறித்தனர். இவர்களில் பலர் சித்ரவதை செய்யப்பட்டு இறந்து போயினர்.

இந்த ஹோலோகாஸ்ட்தான் இனப்படுகொலைக்கு எடுத்துக்காட்டு. இனப்படுகொலை என்பது உள்நோக்கத்தோடு குறிப்பிட்ட நாடு, இனம் மற்றும் மதத்தைச் சார்ந்த மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதாகும்.

 
யார் இந்த நாஜிக்கள்?
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1920இல் பெர்லினில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் நிலை

நாஜி(Nazi) என்பது ஜெர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சி(NSDAP) என்பதன் சுருக்கம். இது 1919ஆம் ஆண்டில் முதல் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி.

முதல் உலகப்போரில் ஏற்பட்ட பின்னடைவால் ஜெர்மனி போராடிக் கொண்டிருந்த நேரத்தில் 1920 காலகட்டங்களில் இந்தக் கட்சி பிரபலமடைந்தது. அந்தப் போரில் ஜெர்மனி தோற்றதால், போரில் வெற்றி பெற்ற நாடுகளுக்குப் பெரும் தொகை கொடுக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் மக்கள் பலரும் ஏழைகளாகவும், அந்த நேரத்தில் தேவையான அளவு வேலைவாய்ப்புகள் இல்லாமலும் இருந்தது. மேலும், ஜெர்மானியர்கள் நாஜிக்களை நோக்கி வந்ததற்கான காரணம் மாற்றம் குறித்து நாஜி கட்சி கொடுத்த நம்பிக்கை.

நாஜிக்கள் இனவெறியர்களாகவும், தங்களது இனம் என்று அழைக்கப்படும் ஆரிய இனத்தைத் தவிர வேறு எதுவும் மேலானது இல்லை என்று நம்புபவர்களாகவும் இருந்தனர். ஜெர்மானியர்களாக இருப்பவர்களே ஆரியர்கள் என்று கூறினர் நாஜிக்கள். மேலும் யூதர்கள், ரோமா (ஜிப்ஸிக்கள்), கறுப்பினத்தவர்கள் மற்றும் இதர இனங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஆரியர்களுக்குக் கீழானவர்கள் என்றும் நம்பினார்கள்.

ஜெர்மனி மற்ற நாடுகளைவிடச் சிறந்த நாடு என்றும், தங்கள் மக்களின் உயர்ந்த தன்மை மூலம் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த முடியும், எனவே அவர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் நம்பினர். இதுவே இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் பிற நாடுகளை ஜெர்மனி கைப்பற்ற வழிவகுத்தது.

 
யார் இந்த அடால்ஃப் ஹிட்லர்?
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அடால்ஃப் ஹிட்லர்

அடால்ஃப் ஹிட்லர் என்ற பெயர் கொண்ட நபர் 1921ஆம் ஆண்டு நாஜி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு 1933ஆம் ஆண்டு ஜனவரியில், நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றதால் நாஜிக்கள் ஆட்சியமைக்க அழைக்கப்பட்டனர்.

தனது கட்சி அதிகாரத்திற்கு வந்த தருணத்தில் இருந்து, ஜெர்மானியர்களின் வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் நாஜி கொள்கைகளை புகுத்தத் தொடங்கினார் அடால்ஃப் ஹிட்லர். மேலும் பயம் மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி அவர்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தார்.

ஜெர்மனியின் அதிபர் ஹிண்டன்பர்க் 1934இல் இறந்தபோது, ஹிட்லர் தன்னைத் தானே தலைவர்(Fuhrer) அல்லது 'ஜெர்மனியின் உச்சபட்ச தலைவர்' (supreme leader of Germany) என்று அறிவித்துக்கொண்டார். (தற்போது, Fuhrer என்ற சொல்லுக்கு மக்கள் மீது மிருகத்தனமான ஆட்சியைத் திணிக்கும் இரக்கமற்ற தலைவர் என்ற எதிர்மறையான அர்த்தம் உள்ளது.)

ஹிட்லருக்கும் நாஜிகளுக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள்:

  • ஆரிய இனத்தின் புனிதம்
  • ஜெர்மனியின் மகத்துவம்
  • அடால்ஃப் ஹிட்லரை உச்சமாகக் கருதுவது

இவற்றை மக்களைப் பின்பற்றச் செய்ய நாஜி கட்சி பல்வேறு பிரசாரங்களைச் செய்தது. அதற்காகப் பெரும் பேரணிகள், பெரிய ஸ்பீக்கர்கள் அமைத்து பொதுக்கூட்டங்களில் நாஜிக்கள் குறித்த தகவல்களைப் பரப்புவது போன்ற பணிகளைச் செய்தனர்.

ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

ஹோலோகாஸ்ட் என்பது யூத மக்களை ஒடுக்குவதில் தொடங்கி, இறுதியாக அவர்களின் இன அடையாளத்திற்காகவே மில்லியன் கணக்கான யூத மக்களை கொன்று குவித்ததில் முடிந்த துயர சம்பவம். இது காலப்போக்கில் கொடூரமானதாக மாறிய ஒரு செயல்பாடு.

நாஜிக்களின் கொடுமைகள்

நாஜிக்கள் 1933இல் அதிகாரத்திற்கு வந்தது முதல், "சமூகத்தில் வாழத் தகுதியான அங்கத்தினர்" என்று தாங்கள் நினைக்காத மக்களை, குறிப்பாக யூத மக்களைத் துன்புறுத்தினார்கள்.

அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தினர். இதனால் யூதர்கள் சில இடங்களில் அனுமதிக்கப்படவில்லை மற்றும் சில வேலைகளைச் செய்யத் தடை விதிக்கப்பட்டது.

"அரசின் எதிரிகள்" என்று அவர்கள் நினைக்கும் மக்களை சிறையில் அடைத்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கக்கூடிய வதை முகாம்களையும் அமைக்கத் தொடங்கினர். இதில் யூத மக்களும் நாஜிக்களை ஆதரிக்காத பிற மக்களும் அடங்குவர்.

அதுபோன்ற டச்சாவ் என்று அழைக்கப்படும் முதல் முகாம் மார்ச் 1933இல் முனிச்சிற்கு வெளியே திறக்கப்பட்டது. 1933 மற்றும் 1945 ஆண்டுகளுக்கு இடையில், நாஜிக்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 40,000க்கும் மேற்பட்ட முகாம்களை உருவாக்கினர்.

அதில் சில வேலை செய்வதற்கான முகாம்கள், சில கைதிகளை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான முகாம்கள், மற்றவை வதை முகாம்கள். அப்படி 1941இல் முதலில் வதை முகாம்கள் தொடங்கப்பட்டன. இங்குதான் நாஜிக்கள் அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொல்வார்கள்.

இங்கு எந்தக் காரணமும் இல்லாமல் பலர் முகாம் காவலர்களால் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அவர்களின் மோசமான நிலைமைகளின் காரணமாக இறந்தனர்.

 
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1934ஆம் ஆண்டில், தீங்கிழைக்கும் வதந்திகள் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாஜிக்கள் அனைவரின் வாழ்க்கையையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தொடங்கினார்கள். 1934ஆம் ஆண்டில், தீங்கிழைக்கும் வதந்திகள் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாஜிக்களுக்கு எதிரான நகைச்சுவை சொல்வதை குற்றமாகக் கருதும் சட்டம்.

ஜாஸ் இசை தடை செய்யப்பட்டது, பாடப் புத்தகங்கள் நாஜிக் கருத்துகளை உள்ளடக்கியதாக மாற்றி எழுதப்பட்டன, ஹிட்லரின் படங்கள் எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டன, நாஜிக்களுக்கு பிடித்தது போல் எழுதப்படாத புத்தகங்கள் அழிக்கப்பட்டன.

கடந்த 1935இல், 1,600 செய்தித்தாள்கள் மூடப்பட்டன, மீதமுள்ள செய்தித்தாள்கள் நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுரைகளை மட்டுமே அச்சிட அனுமதிக்கப்பட்டன.

ஹிட்லர் யூத் (ஆண்கள்) மற்றும் பிடிஎம் (பெண்கள்) என்ற இளைஞர்களுக்கான கட்டாயக் குழுக்களை அமைத்தனர் நாஜிக்கள். இதன் மூலம் அவர்கள் வளரும்போது ஹிட்லரை வணங்கும் இளம் நாஜிக்களாக மாறுவார்கள் என்று நம்பினார்கள். சிறுவர்களுக்கு நாஜிக்களின் விழுமியங்கள்(Values) கற்பிக்கப்பட்டன மற்றும் அவர்கள் போருக்குத் தயார்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு சமையல் மற்றும் தையல் போன்ற திறன்கள் கற்பிக்கப்பட்டன.

 
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிஸ்டல்நாக்ட்(Kristallnacht) மற்றும் கோடிக்கணக்கானோரின் கொலை

கடந்த 1938ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி மிகவும் முக்கியமானது. அன்றுதான் யூத மக்களுக்கு எதிராக பயங்கரமான வன்முறை நடந்தது. இது கிரிஸ்டல்நாக்ட் - 'உடைந்த கண்ணாடியின் இரவு' என்று அறியப்படுகிறது.

அன்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் ரெய்டு செய்யப்பட்ட கடைகளில் இருந்து உடைந்து தெருக்களில் கிடந்த கண்ணாடிகளின் காரணமாக இந்தப் பெயர் வந்தது.

இதில் 91 யூதர்கள் கொல்லப்பட்டனர். 30,000 பேர் கைது செய்யப்பட்டு வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 267 ஜெப ஆலயங்கள் அழிக்கப்பட்டன.

செப்டம்பர் 1, 1939இல், ஜெர்மனி போலந்தில் படையெடுத்தது. இதுவே இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

போலந்தில் உள்ள யூத மக்கள் கெட்டோக்கள் என்று அழைக்கப்படும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வாழ கட்டாயப் படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர் மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.

அங்கு நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் பலரும் நோய் மற்றும் பட்டினியால் இறந்து போயினர்.

 
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1941ஆம் ஆண்டின் இறுதியில், போலந்தில் செல்ம்னோ என்று அழைக்கப்படும் முதல் வதை முகாம் அமைக்கப்பட்டது.

நாஜிக்கள் 1940களின் முற்பகுதியில், மிக குறுகிய காலத்தில் ஐரோப்பாவின் யூத மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்வதற்கான வழியைத் தேடினர்.

அப்போதுதான் ஏராளமான மக்களைக் கொல்லக்கூடிய வதை முகாம்களின் யோசனையைக் கொண்டு வந்தனர். இதைத்தான் அவர்கள் 'இறுதி தீர்வு' என்று அழைத்தனர். 1941ஆம் ஆண்டின் இறுதியில், போலந்தில் செல்ம்னோ என்று அழைக்கப்படும் முதல் வதை முகாம் அமைக்கப்பட்டது.

நாஜிக்களால் கட்டுப்படுத்தப்பட்ட போலந்தின் பகுதிகளில் மொத்தம் ஆறு வதை முகாம்கள் இருந்தன: ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் (மிகப் பெரியது), பெல்செக், செல்ம்னோ, மஜ்டானெக், சோபிபோர் மற்றும் ட்ரெப்ளிங்கா.

போலந்துக்கு வெளியே (பெலாரஸ், செர்பியா, யுக்ரேன் மற்றும் குரோஷியாவில்) நாஜிக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் முகாம்கள் தொடங்கப்பட்டன. அங்கு பல நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

உலகம் இதுவரை கண்டிராத அளவில் 1941 மற்றும் 1945ஆம் ஆண்டுக்கு இடையில், மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு ரயில் மூலம் அனுப்பட்டனர். அங்கு அவர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.

 
ஹோலோகாஸ்டில் கொல்லப்பட்டவர்கள் அல்லது துன்புறுத்தப்பட்டவர்கள் யார்?
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த முகாம்களை அழிப்பதன் மூலம் தங்கள் குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க முயன்றனர் நாஜிக்கள்.

பாதிக்கப்பட்டவர்கள்

  • யூதர்கள்
  • ரோமா மற்றும் சிந்திக்கள் ('ஜிப்சிகள்')
  • ஸ்லாவிக் மக்கள், குறிப்பாக சோவியத் யூனியன், போலந்து மற்றும் யூகோஸ்லாவியாவை சேர்ந்தவர்கள்.
  • மாற்றுத் திறனாளிகள்
  • பால் புதுமையினர்
  • கருப்பின மக்கள்
  • யெகோவாவின் சாட்சிகள்
  • அரசியல் எதிரிகள்
ஹோலோகாஸ்ட் எப்படி முடிவுக்கு வந்தது?

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்ட பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் அவர்களது நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஐரோப்பாவின் பகுதிகள் வழியாகச் செல்லும்போது, இந்த வதை முகாம்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.

நாஜிக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது முன்பே தெளிவாகத் தெரிந்ததால், அவர்கள் இந்த முகாம்களை அழிப்பதன் மூலம் தங்கள் குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க முயன்றனர்.

அவர்கள் போலந்தில் மீதமிருந்த கைதிகளை ஜெர்மனியில் உள்ள முகாம்களுக்குத் திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர். இந்தக் கடினமான பயணத்தில் பல கைதிகள் உயிரிழந்தனர்.

நாஜிக்களால் தாங்கள் செய்ததை மறைக்க முடியவில்லை. அதேநேரம் இந்த இனப்படுகொலையின் கொடூரம் எவ்வளவு ஆழமானது என்பதை உலகம் அறிந்துகொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை.

 
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பலர் முகாமில் நடந்த சித்திரவதையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு விடுதலைக்குப் பின் இறந்து போயினர்.

மஜ்தானெக் தான் 1944 கோடைக்காலத்தில் விடுவிக்கப்பட்ட முதல் முகாம். முகாம்களில் இருந்தவர்களை விடுவிக்கச் சென்ற மக்கள், அங்கு தாங்கள் எதிர்கொண்ட கொடூரமான காட்சிகளைப் பற்றிப் பேசியுள்ளனர்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பலர் முகாமில் நடந்த சித்திரவதையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு விடுதலைக்குப் பின் இறந்து போயினர்.

அவர்களுக்கு யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது.

தப்பிப் பிழைத்தவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் வேறு யாரோ வசிப்பதைக் கண்டனர். மேலும் வாழ்வதற்கான வேறு இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான அகதிகளை ஏற்றுக்கொள்ள பிற நாடுகளும் விரும்பவில்லை.

 
ஹோலோகாஸ்ட் குற்றத்திற்காக நாஜிக்கள் தண்டிக்கப்பட்டனரா?
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

போர் முடிவதற்குள் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதால் அவரை நீதியின் முன் நிறுத்த முடியவில்லை.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1946ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையை குற்றம் என்று தீர்ப்பளித்தது.

போர் முடிவதற்குள் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதால் அவரை நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த ஆண்டுகளில், நாஜிக்களின் மீது அவர்கள் செய்த குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது.

சமீபத்தில் ஜூலை 2015இல் கூட, ஆஷ்விட்ஸில் காவலராகப் பணிபுரிந்த 94 வயதான ஆஸ்கர் க்ரோனிங்கிற்கு அவரது குற்றங்களுக்காக தண்டனை வழங்கியது ஜெர்மன் நீதிமன்றம். ஆனால் அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவது சாத்தியமாகவில்லை.

பல நாஜிக்கள் போருக்குப் பிறகு தலைமறைவாகினர். அதற்குப் பின் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அவர்களின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டனர்.

 
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?

பட மூலாதாரம்,VIEW PICTURES

படக்குறிப்பு,

ஜனவரி 27 அன்று இங்கிலாந்தில் உள்ள மக்கள் ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தைக் கடைபிடிக்கின்றனர்.

இனப்படுகொலையை நினைவில் கொள்வது எப்படி?

தற்போது, இந்த இனப்படுகொலையின் தீவிரம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும் இனப்படுகொலையின் கொடூரங்களுக்கும், சில நடத்தைகள் எப்படி வழிநடத்தக்கூடும் என்பதற்கும் இதுவோர் எடுத்துக்காட்டு.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது ஒன்றும் இனப்படுகொலை வரலாற்றில் நடந்த ஒரே இனப்படுகொலை அல்ல. கம்போடியா, ருவாண்டா, போஸ்னியா மற்றும் டார்பூர் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் இன அடையாளத்திற்காகவே கொல்லப்பட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 27 அன்று, பிரிட்டனில் உள்ள மக்கள் ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தைக் கடைபிடிக்கின்றனர். 1945இல் சோவியத் ராணுவத்தின் வீரர்களால் மிகப்பெரிய நாஜி வதை முகாமான ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் விடுதலை செய்யப்பட்ட நாளில் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஹோலோகாஸ்ட் நினைவு நாள் என்பது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கானவர்களை நினைவுகூர்வது மட்டுமின்றி, உலகெங்கிலும் நடத்தப்பட்டுள்ள இதர இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் தினமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் மற்றவர்களின் நம்பிக்கைகள் மற்றும் வேறுபாடுகளை சகித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், மக்களை ஒதுக்கி வைப்பதோ அல்லது வெறுப்பு செய்தியைப் பரப்புவதோ தவறு என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

இது ஹோலோகாஸ்டில் நடந்தவற்றை ஒருபோதும் மக்கள் மறக்காமல் இருக்கவும், மீண்டும் இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் நடக்காமல் தடுக்கவும் உதவுகிறது.

இந்த நாள் எப்படி ஒரு "பாதுகாப்பான, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நாள்" என்பதை விளக்குகிறது ஹோலோகாஸ்ட் நினைவு நாள் அறக்கட்டளை.

https://www.bbc.com/tamil/articles/c87nj5843mvo

ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN   27 JAN, 2024 | 08:31 AM

image
 

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவான்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என  கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

ship_houthi1.jpg

காயங்கள் குறித்த தகவல்கள் எதுவுமில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர்க்கப்பல்கள் அந்த கப்பலை நோக்கி சென்றன மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என பிரிட்டனின் கடல்சார்வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏனைய கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கவேண்டும் சந்தேகத்திற்கு இடமான விடயங்களை அவதானித்தால் அறிவிக்கவேண்டும் என பிரிட்டன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை மார்லின் லுவான்டா கப்பலை இலக்குவைத்ததை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பல பொருத்தமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/174888

போலி சிகரெட்டுக்கள் தொடர்பில் சூத்திரதாரியாக செயல்படுபவர் யார் ?

3 months 2 weeks ago
24 JAN, 2024 | 07:40 PM
image

உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுத்துள்ளபடி, 'சட்டவிரோத சிகரெட் வர்த்தகம்' என்பது சிகரெட்டுகளின் உற்பத்தி,  ஏற்றுமதி, இறக்குமதி, உடைமை, விநியோகம், விற்பனை, கொள்முதல் மற்றும் எளிதாக்குதல் போன்ற சட்டவிரோத முயற்சிகளை குறிக்கிறது. சட்டவிரோத வர்த்தகம் மூன்று தயாரிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. கடத்தல் (smuggled), போலித் தயாரிப்புகள் (counterfeits) மற்றும் மலிவான / சட்டவிரோத சிகரட்டுக்கள் (வெள்ளை சிகரட்டுகள் cheap / elicits white) போன்றவையாகும்.

புதிய ஆதாரங்களுடன், புகையிலை நிறுவனங்கள் சிகரெட் கடத்தலில் சிக்கலாக ஈடுபட்டுள்ளன என்பதும் இது உலக அளவில் புகையிலை நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு விரிவான உத்தி (தந்திரோபாயம்) என்பதும் இனியும் ஒரு ரகசியம் அல்ல. 

உலக சுகாதார அமைப்பு மற்றும் பாத் பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளின்படி, புகையிலை நிறுவனங்களின் உள் ஆவணங்கள் 1990களின் முற்பகுதியில், சிகரெட் கடத்தல் தொழில்துறையின் வணிக உத்தியின் மிக முக்கியமான பகுதியாக இருந்தது. 

1990களின் பிற்பகுதியிலும் 2000 ஆண்டுகளின் முற்பகுதியிலும் இந்த தந்திரோபாயங்கள் அம்பலமானது. குறிப்பாக விசாரணைகள்,  புகைபொருள் உற்பத்திக்கு எதிரான வழக்குகள் போன்றன புகையிலை நிறுவனங்களுக்கு மிகவும் எதிர்மறையான விளம்பரத்துக்கு வழிவகுத்தது. பாரிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, புகையிலை நிறுவனங்கள் தாங்கள் சிகரெட் கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் அல்ல என்பதை தெளிவுபடுத்தியது. ஆனால் தற்போதைய சான்றுகள், சட்டவிரோத சிகரெட் வர்த்தகத்தில் புகையிலை நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க, தொடர்ச்சியான குறுக்கீடுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன என்பதை காட்டுகிறது.

பல தசாப்தங்களாக பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் தங்கள் சொந்த தயாரிப்புகளை கடத்துகின்றன. அதன் மூலம் அவர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்கின்றன. புகையிலை நிறுவனங்கள் பின்வரும் நன்மைகளைப் பெற தங்கள் தயாரிப்புகளை கடத்துகின்றனர். 

சிகரெட் பொருட்கள் மீதான வரி அல்லது விலை உயர்வை கட்டுப்படுத்துதல்.

அவர்களின் தயாரிப்புகள் சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதை பொருட்படுத்தாமல் அதன் மூலம் லாபம் ஈட்டுதல்.

புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக வாதிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்தல்.

குறிப்பாக சிகரட் மீது ஏற்படுத்தும் ஒவ்வொரு கொள்கையும் சிகரெட் கடத்தலை அதிகரிக்க வழிவகுக்கிறது.

கடத்தலின் விளைவாக குறையும் சாதாரண பொதுச் சந்தை விலைகள் புகையிலை தொழிலை நிறுத்துவதை தடுக்கின்றது மற்றும் மொத்த விற்பனையை அதிகரிக்கிறது.

புகையிலை நிறுவனங்கள் ஏன் தங்கள் சொந்த தயாரிப்புகளை கடத்துகின்றன?

சட்டவிரோத விற்பனையானது தற்போதுள்ள புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை (பேக்கேஜிங் சட்டங்கள், விற்பனையின் வயது வரம்புகள்) பலவீனப்படுத்துகிறது.

புகையிலை நிறுவனங்கள் சந்தையில் நுழைவதற்கும் ஒரு உத்தியாகவும் கடத்தலைப் பயன்படுத்துகின்றன.

சிகரட் மீதான வரி அதிகரிப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்படும்போது அல்லது இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பது போல் சிறந்த வரிக் கொள்கைகள் இருக்கும்போது நாட்டில் சட்ட விரோதமான சிகரெட் வர்த்தகத்தின் அளவையும் தீவிரத்தையும் பெரிதுபடுத்துவது புகையிலை நிறுவனங்களினால் பயன்படுத்தப்படும் பொதுவான உத்தியாகும்.

இச்சந்தர்ப்பத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கிய பொதுவான வாதங்கள் பின்வருமாறு:

சிகரெட் வரி அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத புகையிலை பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும்.

ஒரு சட்டவிரோத சிகரெட் சந்தையின் இருப்பு வரி அதிகரிப்புக்குப் பிறகு அரசாங்க வருவாய் குறைவதற்கு வழிவகுக்கிறது.

ஜூலை 2023இல் சிகரெட் பொருட்களுக்கான வரி 20% மற்றும் 01 ஜனவரி 2024இல் 14%ஆக அதிகரிக்கப்பட்டதன் மூலம் மேற்கண்ட வாதங்கள் ஊடகங்களில் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. இது சட்டவிரோத புகையிலை வர்த்தகம் பற்றிய உச்சகட்ட பேச்சுக்கு வழிவகுத்தது.

இது சம்பந்தமாக, இலங்கையில் சில ஆய்வு அறிக்கைகளின் உள்ளடக்கங்களை கவனம் செலுத்தும்போது, ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் சிகரெட் வரி அதிகரிப்பு தொடர்பான உண்மைகளை முன்வைக்கின்றன.

மேலும் ஆய்வுகள் வாசகரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. அவை தெளிவாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய மற்றும் தவறாக வழிநடத்தும் புகையிலை நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட வாதங்கள்.

சிகரெட் மீதான வரி அதிகரிப்பால் நுகர்வோர் மீண்டும் மலிவு விலையில் மாற்று வழிகளுக்கு திரும்புவார்கள். இது சட்டவிரோத சிகரெட் வர்த்தகம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.  இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வரி உயர்த்தப்பட்டாலும், அரசின் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும், இலங்கையில் சிகரெட் உற்பத்திப் பொருட்களின் கடத்தல் 20%க்கும் அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால் இந்த தரவுகள் புகையிலை நிறுவனம் மற்றும் சந்தை ஆதாரங்களால் உருவாக்கப்பட்ட தரவு என்பதுடன் தெளிவற்ற ஆதாரங்கள் இருப்பதனால் இந்த புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, புகைபொருள் உற்பத்திக்கு சாதகமான தரவை முன்வைக்கும் போக்குடன், அத்தகைய ஆதாரங்களை நம்புவதில் சிக்கல் உள்ளது. 

குறிப்பிட்ட இந்த ஆய்வுகளுக்கு யார் நிதியுதவி அளித்துள்ளனர் என்பதும் சந்தேகமாக உள்ளது.

மாறாக, உத்தியோகபூர்வ சுங்கப் புள்ளிவிபரங்கள் கடத்தப்பட்ட சிகரெட்டுகளில் 1%க்கும் குறைவானவை கைப்பற்றப்பட்டதாக வெளிப்படுத்துகின்றன. கடத்தல் சம்பவங்கள் மேலே குறிப்பிடப்பட்ட 20%ஆக இருந்தால், சட்டவிரோத சிகரெட் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதையும் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேவையை இது முன்வைக்கிறது.

கிடைக்கக்கூடிய பிற தரவு மற்றும் தகவல்களுக்கு இணங்க, வரி மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் சிகரெட் பொருட்களின் கடத்தலுக்குப் பின்னால் ஒரே ஒரு காரணியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பது சிகரெட் பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரித்தபோது அதனுடன் இணைத்து ஊடகங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சட்டவிரோத சிகரட் உற்பத்தியை பெரிதுபடுத்துதல், விளம்பரம் செய்தல் தெளிவாகிறது. இந்த காரணிகளில் பல்வேறு நாடுகளுக்கு இடையே சட்டபூர்வ சிகரெட் பொருட்களின் விலையில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் சிகரெட் கடத்தலுக்கான போதுமான அபராதம் ஆகியவை அடங்கும். 

எனவே, சிகரெட் பொருட்களின் கடத்தலுடன் தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை குறைக்க தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

மேற்கூறியவற்றுக்கு மேலதிகமாக, சிகரெட் / புகையிலை பொருட்கள் மீதான சட்ட விரோத வர்த்தகத்தை ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் 8 பெப்ரவரி 2016 அன்று இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இதன் விளைவாக, அனைத்து ஆட்கடத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க செயலூக்கமான நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும். 

அதன்படி, சட்டவிரோத சிகரெட் / புகையிலை பொருட்களை அகற்றவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு என்பதை வலியுறுத்துகிறோம்.

தகவல் : மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC)

https://www.virakesari.lk/article/174739

வடகொரியா: கிம் ஜாங் உன் போருக்கு தயாராவதாக நம்பும் நிபுணர்கள்

3 months 2 weeks ago
கிம் - புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரான்சிஸ் மாவோ
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

வடகொரியா குறித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வர்களும், அதனை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்களும் இயல்பாகவே, பதற்றத்தை உருவாக்கும் கருத்துகளை எளிதில் கூறாதவர்கள்.

ஆனால் அண்மையில், அவர்களில் இரண்டு பேர் வழக்கத்துக்கு மாறாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளனர். வட கொரிய நாட்டின் தலைவர் போருக்குத் தயாராகி வருகிறார் என்று தாங்கள் நம்புவதாக ஒரு குண்டு வீசியுள்ளனர்.

கிம் ஜாங்-உன் தென் கொரியாவுடன் இணங்குவது, மீண்டும் இணைவது என்ற வட கொரியாவின் அடிப்படை இலக்கை கைவிட்டுவிட்டதாக அவர்கள் கூறினர். அதற்கு பதிலாக, போரில் உள்ள இரண்டு சுதந்திர நாடுகளாக வட கொரியாவையும் தென்கொரியாவையும் பார்க்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

 

"1950ஆம் ஆண்டில் தனது தாத்தா செய்ததை போலவே, கிம் ஜாங்-உன் போருக்குச் செல்ல ஒரு மூலோபாய முடிவை எடுத்துள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று முன்னாள் சிஐஏ பகுப்பாளர் ராபர்ட் எல். கார்லின் மற்றும் பலமுறை வடக்கு கொரியாவுக்குச் சென்றிருக்கும் அணு விஞ்ஞானி சீக்ஃபிரீட் எஸ். ஹெக்கர் ஆகியோர் 38 நார்த் என்ற நிபுணர் தளத்தில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளனர்.

இத்தகைய அறிவிப்பு வாஷிங்டன் மற்றும் சியோலில் எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்தது, வடக்கு கொரியாவைக் கவனிக்கும் வட்டங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியது.

எனினும், பெரும்பாலான பகுப்பாளர்கள் போருக்கான வாய்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. பிபிசி ஆசியா, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவிலிருந்து ஏழு நிபுணர்களுடன் பேசியது - அவர்களில் யாரும் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

"கொடிய மோதலின் சாத்தியக்கூறுகள் நிறைந்த ஒரு போரில் தனது ஆட்சியையே பணயம் வைப்பது வட கொரியர்களின் இயல்பல்ல," என்று நெதர்லாந்தில் இருந்து க்ரைசிஸ் குழுவின் கொரியா கண்காணிப்பாளர் கிறிஸ்டோபர் கிரீன் கூறுகிறார்.

அவரும் மற்றவர்களும், வட கொரியா மேற்கத்திய சக்திகளை உரையாடலுக்கு அழைக்க விரும்புகிறது என்றும், உள்நாட்டில் அரசியல் அழுத்தங்களும் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் கிம்மிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கண்ணைமூடி கடந்து போக முடியாது என்பதிலும், அவரது ஆட்சி மேலும் ஆபத்தானதாக மாறிவிட்டதிலும் அவர்கள் உடன்படுகிறார்கள்.

போர் இன்னும் நடக்க வாய்ப்பில்லை என்று பெரும்பாலானோர் வாதிட்டாலும், சிலர் ஒரு சிறிய அளவிலான தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சுகிறார்கள்.

 
போருக்கு தயாராகுதா வட கொரியா

பட மூலாதாரம்,KCNA

இதற்கு என்ன காரணம்?

வடக்கு கொரியாவின் கிம் ஜாங்-உனை நெருக்கமாகக் கவனிக்கும் மக்கள் அவரது அணு அச்சுறுத்தல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள், ஆனால் பியாங்யாங்கிலிருந்து வரும் சமீபத்திய செய்திகள் வேறு விதமானவை என்று சிலர் கூறுகிறார்கள்.

புத்தாண்டு தினத்தன்று "கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் வெடிப்பதை தவிர்க்க முடியாது" என்று அறிவித்த ஆறு நாட்களுக்குப் பிறகு, அவரது ராணுவம் எல்லையில் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது.

வடக்கு கொரியா ஜனவரி தொடக்கத்திலிருந்து புதிய திட-எரிபொருள் ஏவுகணைகளின் சோதனையையும், அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடியதாகக் கூறப்படும் நீர்மூழ்கி தாக்குதல் ட்ரோன்களையும் சோதனை செய்ததாகக் கூறுகிறது.

ஐக்கிய நாடுகளின் தடைகளை வெளிப்படையாக மீறி இரண்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட மாதந்தோறும் ஏவுகணைகளை ஏவுவதையும், ஆயுதங்களை உருவாக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறது.

இருப்பினும், கடந்த வாரம், தென் கொரியா உடனான இணைப்பு என்ற இலக்கை அதிகாரபூர்வமாக கைவிடுவதாக அவர் அறிவித்ததால் பலரின் புருவங்கள் சுருங்கின.

தெற்கு கொரியாவுடன் மீண்டும் இணைவது என்பது வடக்கு கொரியா உருவானது முதலே அதன் சித்தாந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. தற்போது அது யதார்த்தமாக கருதப்படுவதில்லை.

 
போருக்கு தயாராகுதா வட கொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது மிகப்பெரிய விஷயம். ஆட்சியின் அடிப்படை சித்தாந்தக் கோட்பாடுகளில் ஒன்று மாறுகிறது. " என்று சியோலில் உள்ள குக்மின் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளர் பீட்டர் வார்ட் கூறுகிறார்.

கிம் ஜாங்-உன் இப்போது அந்த பாரம்பரியத்தை சோதித்துப் பார்க்கவுள்ளார். ராஜதந்திர பரிமாற்றங்கள் மற்றும் எல்லை கடந்த வானொலி ஒலிபரப்புகளை மூடுவதாகவும், பியாங்யாங்கின் புறநகரில் உள்ள ஒன்பது மாடி மறு இணைப்பு (இரண்டு கொரிய நாடுகளும் இணைவது) நினைவுச்சின்னத்தை இடிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

2001-ம் ஆண்டில், மறு இணைப்பு என்ற இலக்கை நோக்கிய தனது தந்தை மற்றும் தாத்தாவின் முயற்சிகளைக் குறிக்கும் வகையில், பாரம்பரிய கொரிய உடையில் இருக்கும் இரு பெண்கள் ஒருவரையொருவர் நோக்கி கைகளை விரிக்கும் வகையில் அந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.

1950ல் போருக்குச் சென்றவர் கிம் இல்-சுங் தான், ஆனால் வட கொரியர்கள் எப்போதாவது தங்கள் தெற்கு உறவினர்களுடன் மீண்டும் இணைவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியவரும் அவரே.

ஆனால் அவரது பேரன் இப்போது தென் கொரியர்களை முற்றிலும் வேறுபட்ட மக்கள் என்று வரையறுத்துள்ளார் - ஒருவேளை அவர்களை ராணுவ இலக்காக நியாயப்படுத்துவதற்காகவும் இது இருக்கலாம்.

முன்னாள் சிஐஏ ஆய்வாளர் ராபர்ட் எல். கார்லின் மற்றும் அணு விஞ்ஞானி சீக்ஃபிரீட் எஸ். ஹெக்கர் ஆகியோர் கிம் ஜாங்-உன் போரைத் தொடங்குவதற்கான திட்டமிட்ட நகர்வுகளை பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதில் உடன்படவில்லை.

அமெரிக்க-சீன உறவுகளுக்கான ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் அறக்கட்டளையின் சியோங்-ஹியோன் லீ, அடுத்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வட கொரியா மீண்டும் அனுமதிக்கவுள்ளதாகவும் போருக்காக ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் விற்பதையும் சுட்டிக்காட்டுகிறார். போர்களத்துக்குத் தயாராகினால் இவற்றை செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார்.

 

எவ்வாறிருந்தாலும், வட கொரியா தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவங்கள் மிகவும் பலமானதாக இருக்கிறது என்பது தான் வட கொரியாவை தடுக்கும் முக்கிய அம்சமாகும்.

"ஒரு பொதுவான போர் தென் கொரியாவில் ஏராளமானோரை கொல்லக்கூடும், ஆனால் அது கிம் ஜாங்-உன்னுக்கும் அவரது ஆட்சிக்கும் முடிவு கட்டுவதாகவும் அமைந்துவிடும்," என்று கூக்மின் பல்கலைக்கழகத்தின் வார்ட் கூறுகிறார்.

அதற்கு பதிலாக, சிறிய அளவிலான தாக்குதலுக்கான சூழல் உருவாகி வருகிறது என்று அவரும் மற்றவர்களும் எச்சரிக்கின்றனர்.

"தென் கொரியா மீதான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெறும் என்பதே என் கவலை. அத்தகைய தாக்குதல் தென் கொரிய பிரதேசம் அல்லது ராணுவப் படைகளை இலக்காகக் கொண்டு, ஒரு எல்லைக்குள் இருக்கும்," என்று கார்னெகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் நிபுணர் அன்கித் பாண்டா கூறுகிறார்.

இது எல்லைக் கோட்டில் இருந்து மேற்கே உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளை குண்டு வீசித் தாக்குவது அல்லது ஆக்கிரமிப்பு முயற்சியாகவும் இருக்கலாம். 2010-ம் ஆண்டில், வட கொரியா யியோன்பியோங் தீவைத் தாக்கி நான்கு தென் கொரிய ராணுவ வீரர்களைக் கொன்றது. இது தென் கொரியாவுக்கு ஆத்திரமூட்டியது.

தென் கொரியாவை சோதித்து பார்க்க, அதே போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிற நிபுணர்கள், போர் குறித்த அச்சங்களை கிம்மின் செயல்பாட்டு முறைகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

 
போருக்கு தயாராகுதா வட கொரியா

"வட கொரியாவின் வரலாற்றைப் பார்த்தால், வேறு நாடுகளின் கவனத்தை ஈர்க்க விரும்பும்போது, அது பல நேரங்களில் மற்றவரை சீண்டிப் பார்க்கும். " என்று லீ சியோங்-ஹியோன் கூறுகிறார்.

இந்த ஆட்சி பொருளாதாரத் தடைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் 2024 ஆம் ஆண்டு அதன் எதிரிகளுக்கு தேர்தல் ஆண்டு - அமெரிக்க அதிபர் வாக்குப்பதிவு மற்றும் தென் கொரிய சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

இதனால் வட கொரியா தனது சீண்டலை நடத்த எல்லா காரணங்களையும் தருகிறது என்று டாக்டர் லீ கூறுகிறார்.

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய அமெரிக்க நிர்வாகம் - உக்ரேனுடனும் காஸாவுடனும் இணைந்துள்ளது. வட கொரியாவைக் கவனிக்கவில்லை, மேலும் பியோங்யாங் பொதுவாக குடியரசுக் கட்சி நிர்வாகங்களுடன் அதிக ஈடுபாட்டைக் கொண்டிருந்தது.

2019 ஆம் ஆண்டில் அணு ஆயுத நீக்க பேச்சுவார்த்தைகள் கசப்பதற்கு முன் கிம் ஜாங் உன்னும் டொனால்ட் டிரம்பும் பிரபலமாக நண்பர்களாக இருந்தனர். வட கொரிய தலைவர் முன்னாள் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்காகக் காத்திருக்கலாம். அப்போது அமெரிக்காவுடனான தென் கொரியாவின் நட்பு பலவீனமாகக் கூடும். மீண்டும் கிம்முடன் உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

ரஷ்யாவுடனான வட கொரியாவின் நெருங்கிய நட்பு மற்றும் கடந்த ஆண்டு சீனாவிலிருந்து தொடர்ந்து வரும் பொருளாதார ஆதரவு அதன் துணிச்சலை அதிகரித்திருக்கலாம் என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். ரஷ்யாவிலிருந்து தனது உளவு செயற்கைக்கோள்களை ஏவுவது என்ற நீண்டகால இலக்கை அடைய தொழில்நுட்ப உதவியைப் பெற்றுள்ளது, மேலும் கடந்த ஆண்டு தலைவர்கள் உச்சிமாநாடு உட்பட பல உயர் மட்ட கூட்டங்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன.

வட கொரியா அதன் ராணுவ திறன்கள் மற்றும் ரஷ்யா, சீனா ஆதரவு காரணமாக அதிக நம்பிக்கையுடன் செயல்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

போருக்கு தயாராகுதா வட கொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சில நிபுணர்கள் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகள் அனைத்தும் தனது ஆட்சியை நிலைநிறுத்துவதையே குறிக்கிறது என்று கூறுகின்றனர்.

"இது ஆட்சி தப்புவதற்கான ஒரு சித்தாந்த சரிசெய்தல் என்று தோன்றுகிறது," என்று சியோலில் உள்ள எஹ்வா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லைஃப்-எரிக் எஸ்லி வாதிடுகிறார். "வட கொரியர்கள் தங்கள் கம்யூனிஸ்ட் நாட்டின் தோல்விகளை அதிகளவில் அறிந்திருக்கிறார்கள்."

கடினமான காலக்கட்டத்தில், கிம்மின் ஏவுகணை செலவுகளை நியாயப்படுத்தவே, எதிரியை வரையறுப்பதில் கவனம் செலுத்தும் கொள்கையை அவர் பரிந்துரைக்கிறார். நாடு முழுவதும் பஞ்சம் இருப்பதாக தகவல்கள் உள்ளன.

"இப்போது, நாடு மற்றும் அதன் கலாச்சாரம் வெறுமனே தீயவை என்று முத்திரை குத்தப்பட்டு, தென் கொரிய கலாச்சாரத்தை தொடர்ந்து ஒடுக்குவதற்கு இது காரணமாகிறது." என்று அவர் கூறுகிறார்.

"போர் எனும் மிகப்பெரிய சூதாட்டத்தை அவர் உண்மையில் விரும்பவில்லை . அதில் அவர் எதையும் பெற முடியாது, எல்லாவற்றையும் இழக்க நேரிடும்," என்று வட கொரிய அகதிகளுக்கு உதவும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான லிபர்ட்டி இன் நார்த் கொரியாவைச் சேர்ந்த ஷோகீல் பார்க் கூறுகிறார்.

 
போருக்கு தயாராகுதா வட கொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

உள்நாட்டு இலக்குகள்

அவரது அச்சுறுத்தல்கள் தனது நாட்டில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, என்று அவர் கூறுகிறார்.

கடுமையான சூழ்நிலைக்கு தென் கொரியா, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் தயாராக இருப்பது முக்கியமாகும். எனினும் வட கொரியாவின் உள்நாட்டு சூழ்நிலையையும் பரந்த புவிசார் அரசியலையும் முழுமையாக ஆராய்வது அவசியம் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இறுதியில், வட கொரிய தலைவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள, அவருடன் உரையாடுவதே சிறந்த வழி என்று டாக்டர் லீ வாதிடுகிறார்.

"சர்வதேச சமூகம் கிம் ஜாங் உன்னுடன் பேசுவதை கிம் ஜாங் உன்னின் அச்சுறுத்தல்களுக்கு சரணடைவதாக கருதுவதில்லை. அது ஒரு இலக்கை அடைவதற்கான அவசியமான வழிமுறையாக பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

"தேவைப்பட்டால், தவறான கணிப்புகளை குறைப்பதற்கும் போரைத் தடுப்பதற்கும் எதிரி நாட்டின் தலைவரை சந்திப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்." என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c51089lz66jo

70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.

3 months 3 weeks ago
Alcohol.png?resize=710,375&ssl=1 70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.

சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை விதித்தார்.

ஜெட்டாவில் தனது மகன்களில் ஒருவரான இளவரசர் மிஷாரி, பிரித்தானிய துணைத் தூதர் சிரில் ஒஸ்மானை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு அவர் அந்த முடிவை எடுத்திருந்தார்.

எனினும் நேற்று (24) சவூதி அரேபியாவின் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வர்த்தக ஸ்தலமாக மாற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானின் வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த மதுபானக் கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

https://athavannews.com/2024/1367230

மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் பலி

3 months 3 weeks ago

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே கூறும்போது, இந்த விபத்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த கைவினைஞர் சுரங்கத்துறையை அரசு ஒழுங்குப்படுத்தும் என்றார்.

ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/289344

Checked
Thu, 05/16/2024 - 14:54
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe