Archived

This topic is now archived and is closed to further replies.

akootha

ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை

Recommended Posts

akootha    1,057

ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சூடான கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விரைவில் விவாதத்துக்கு வரப்போகிறது. வாக்கெடுப்பும் நடக்கப் போகிறது.

இந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது.

இந்த எதிர்பார்ப்பு இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் தான் உருவாகியுள்ளது. காரணம் இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவுக்குப் போயுள்ளது. அதைவிட, இதன் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

இலங்கை அரசு இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க எந்தளவுக்கு முயற்சிக்கிறதோ அமெரிக்காகவும் அதேயளவுக்கு தீர்மானத்தை வெற்றிபெற வைக்க முனைகிறது.

பாகிஸ்தான்இ கியூபா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் அல்லது அதனை பலவீனப்படுத்தியாவது விடவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

ஆனால் தீர்மானத்தை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அரசதரப்பின் கருத்துகளில் இருந்து உணரமுடிகிறது. என்றாலும், அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. கிட்டத்தட்ட மேற்குலகிற்கு எதிரான ஒரு போரை நடத்தும் தோரணையில் அரசாங்கம் செயற்படுகிறது.

இது கருத்து ரீதியான மோதலுக்கும் அப்பால் குரோதமான போக்கையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. பிரதி வெளிவகார அமைச்சர் நியோமல் பெரேரா பங்கேற்ற- அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இது அரசாங்கம் எந்தளவுக்கு இராஜதந்திர ரீதியாக குழப்பமடைந்துள்ளது என்பதற்கு சாட்சியாகும்.

ஈரான், சிரியா, வடகொரியா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் இது போன்று நடந்திருந்தால் ஆச்சரியமில்லை. ஆனால் இலங்கையில் நடந்திருப்பது ஆச்சரியமான விடயம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் மேற்சொன்ன நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்த்து விடக் கூடிய நிலையை உருவாக்கி விடக்கூடும்.

ஜெனீவா களத்தில் நடக்கும் இராஜதந்திரப் போரை, கோலியாத்தும் சிறுவன் தாவீதும் மோதும் போர்க்களம் என்று கொழும்பு ஊடகங்கள் ஒப்பிடுகின்றன. அது உண்மை தான்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளை இலங்கை அரசு முரண்பட்டு மோதிக்கொள்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொடுக்கும் துணிவு தான் இந்தளவுக்கு இலங்கை நின்று பிடிப்பதற்குக் காரணம்.

புவிசார் அரசியல் சூழலை நன்றாக கவனித்து இலங்கை அதற்குள் புகுந்து விளையாட முனைந்தது. அதாவது சீனாவையும் ரஷ்யாவையும் இந்தியாவையும் மிகத்தந்திரமாகக் கையாள்வதன் மூலம் தனக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை உடைத்து விடலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது போல இந்தியாவின் முடிவு அமைந்து விட்டது.

ஜெனீவா தீர்மான விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா நழுவல் போக்கில் தான் இருந்தது. எதையும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தே வந்தது.

ஒரு கட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்திய நாடாளுமன்றத்தில் கூறிய கருத்து மிகவும் விந்தையாகவே இருந்தது. அமெரிக்காவின் தீர்மான வரைபு எல்லா நாடுகளுக்கு வழங்கப்பட்டு பல நாட்களுக்குப் பின்னர் இவர்கள் தீர்மான வரைபை இந்தியா படிக்கவில்லை என்று கூறியது வேடிக்கை.

இந்தியா இந்த விடயத்தில் எந்தளவுக்கு நழுவ முடியும் என்றே பார்த்தது. ஆனால் மாநிலக் கட்சிகளின் கையில் மத்திய அரசின் குடுமி இப்போது வலுவாகச் சிக்கியுள்ளதால் வேறு வழியிருக்கவில்லை. அதிலும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது தான் மிகப்பெரிய சோகம்.

அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தமது நம்பகத்தை காத்துக் கொள்ளாது போனால் தமிழ்நாட்டில் தமது இருப்பு பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் தோன்றத் தொடங்கி விட்டது.

எப்படியோ மன்மோகன்சிங் அரசு அழுத்தங்களுக்கு நின்று பிடிக்க முடியாமல் தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவிக்க இலங்கை அரசுக்கு அது இடியான செய்தியாகவே அமைந்தது. அதைவிட ஆபிரிக்க நாடுகளும் கூட எதிர்பார்த்தளவுக்கு கைகொடுக்கத் தயாராக இல்லை.

குறிப்பாக இந்தமாதத் தொடக்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பயணம் மேற்கொண்ட நைஜீரியா, கமரூன் போன்ற நாடுகளே தீர்மானத்துக்கு ஆதரவாக நிற்கின்றன. இவையெல்லாம் ஜெனிவாவில் இலங்கையின் நிலையைப் பலவீனப்படுத்தியுள்ளது.

இதனால் வாக்கெடுப்பு முடிவு பெரும்பாலும் இலங்கைக்குச் சாதகமாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. முடிவு எப்படி அமைந்தாலும், அரசாங்கம் கவலைப்படாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி கூறியதாக அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

தீர்மானம் தமக்குச் சாதமாக அமையாது என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டு விட்டதையே இது வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதையடுத்து பல தொடர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியரங்கிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால இனமோதல்கள் வெடிக்கும் என்ற தொனியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டிருந்தார். அந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துகள் விரும்பத்தகாத விளைவுகளைத் தான் தரும்.

இன்னொரு இனமோதலுக்கு நாடு தயாராக இல்லை என்றாலும், அதனைத் தூண்டும் வகையில் அரசிலுள்ளவர்களே கருத்துகளை வெளியிடுவதை சர்வதேசம் உன்னிப்பாகவே கவனிக்கும். இதுபோன்ற எச்சரிக்கைகள் மக்களிடையே பீதியை ஏற்றுபடுத்தவே செய்கின்றன.

அதேவேளை இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பிடித்து உள்ளே போட வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன. இவையெல்லாம் கோபத்தை தமிழர்கள் மீது தீர்ப்பதற்கான இன்னொரு முயற்சியாகவே தெரிகிறது.

ஜெனிவா தீர்மான விடயத்தில் தமிழர்கள் மீது கோபத்தைத் தீர்ப்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்தத் தீர்மானம் தமிழர்களால் கொண்டு வரப்பட்டதும் இல்லை. இது தமிழர்களுக்கு முற்றிலும் சாதகமானதும் இல்லை.

ஆனாலும் இந்த விவகாரத்தை தமிழருக்கு எதிராக திருப்பி விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது நல்லிணக்க முயற்சிகள எந்தக் கட்டத்தில் உள்ளன என்பதற்குப் போதிய ஆதாரமாகியுள்ளது.

அதேவேளை, ஜெனிவா தீர்மானம் இலங்கைக்குப் பாதகமாக அமைந்தால் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையும் வெளிநாடுகளுடனான உறவுகளும் கடும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன.

தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் அரசியல், இராஜதந்திர மட்டங்களிலும் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உள்ளன. எது நடந்தாலும், அரசாங்கம் அடுத்த ஆண்டுக்குள் நல்லிணக்கம் தொடர்பான உறுதியான நகர்வுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஏனென்றால் தீர்மான வரைபின்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

அந்த அறிக்கை பாதகமாக அமைந்து விட்டால், அடுத்து இன்னும் பல பாதகமான தீர்மானங்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே ஜெனீவா களத்தில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி அசட்டையாக இருக்க முடியாது.

இலங்கை வெற்றிபெற்றால் இன்னும் வலுவான பொறியொன்றை வைக்க மேற்குலகம் முனையும். தோல்வியடைந்தால், அடுத்த கட்டம் குறித்த தீர்மானிக்க நாள் குறிக்கும்.

எது எப்படியிருந்தாலும், நல்லிணக்க முயற்சிகள், பொறுப்புக்கூறுல், அரசியல்தீர்வு என்பன இனிமேல் இலங்கைத் தீவின் எல்லைகளுக்குள் மட்டும் முடங்கிப் போகும் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

http://www.tamilmirr...1-19-22-03.html

Share this post


Link to post
Share on other sites