Archived

This topic is now archived and is closed to further replies.

akootha

'விடுதலைக்கு விலங்கு’ - அவர்கள் காட்டியது தனு அல்ல.. அனுஜா!

Recommended Posts

'விடுதலைக்கு விலங்கு’ - அவர்கள் காட்டியது தனு அல்ல.. அனுஜா!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், 'விடுதலைக்கு விலங்கு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதிர​வைக்கும் தகவல்கள் இருக்கும் அந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கே!

நான் ராபர்ட் பயஸ்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பிணைக்கப்பட்டு... இன்ற​ளவும் 'ஏன், எதற்கு, எப்படி?’ என்று பல விதமான கேள்விகளோடு நாட்களை நகர்த்திவரும் ஆயுள் தண்டனைக் கைதி!

இலங்கை வந்த இந்திய அமைதிப்​ படையால் எனது வீடு தாக்கப்பட்டது. அதில் எனது குழந்தையை பறிகொடுத்தேன். இந்த நிலையில் 20. 09.1990 அன்று நானும் ஓர் அகதியாக, எம் உதிரத்தோடு உறவுடைய ஆறு கோடித் தமிழர்கள் வாழும் தமிழகத்தின் இராமேசுவரம் கடற்கரையில் காலடி வைத்தேன். இராசீவ் கொலை வழக்கில் நான் பிணைக்கப்பட்டதற்குக் காரணமாக அவர்கள் சொன்னது, உள்நோக்க சம்பவமாக அடையாளம் காட்டியது, இந்திய அமைதிப் படையால் கொலை செய்யப்பட்ட என் குழந்தையின் மரணத்தைத்தான்.

10. 06. 1991. இந்த நாளை என்னால் உயிர் உள்ளவரை மறக்க இயலாது. நான் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டு, சென்னைப் போரூரில் வாடகைக்கு எடுத்துக் குடியிருந்த வீட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருந்தேன். அருகில் இருந்த மளிகைக் கடைக்காரர் பாண்டியன் என்பவர், என்வீட்டிற்கு காவல் துறையினர் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார்.

நான் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால், அக்கணமே தப்பித்து ஓடி இருக்க முடியும். ஆனால், எதையுமே எதிர்பார்க்காமல், எதிர்வரும் கேடுகளை அறியாமல், என் வீட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு என்னையும், என் மனைவியையும், எனக்கு இரண்டாவதாகப் பிறந்த 3 மாத குழந்தையையும், என் உடன் பிறந்த சகோதரியையும், விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவதாக 'மல்லிகை’ அலுவலகத்துக்கு சி.பி.ஐ. ஆய்வாளர்கள் அழைத்துச் சென்றார்கள். தாங்கள் சொல்வதை, சில சமயங்களில் அவர்கள் நினைப்பதைக்கூட உண்மை என நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எழுதிக் கொண்டார்கள்.

புலனாய்வுத் துறையினர் தங்களது வலுவான சாட்சியாக, பொட்டு அம்மானுக்கு சிவராசன் அனுப்பியதாகக் கூறப்படும் ஒயர்லெசு செய்தியைச் சொல்கிறார்கள். அதில், 'இராசீவ் காந்தி கொலை குறித்த திட்டம் மூவருக்கு (அதாவது சிவராசன், சுபா, தனு) மட்டுமே தெரியும்’ என திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. எனவே, இந்த ஒயர்லெசு செய்தியைவைத்து நாம் பார்க்கும்போது, சதி திட்டம் குறித்து சிவராசன், சுபா, தனு இம்மூன்று நபர்களைத் தவிர எவருக்கும் தெரியாது என மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால், அக்கால கட்டத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட எங்களது எந்த ஒரு செயலையும் இராசீவ் காந்தி கொலைக்குக் காரணமான சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்த்திருக்கக் கூடாது.

எனக்கு எதிரான இவ்வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி 195 ஆக விசாரிக்கப்பட்ட பெர்னாண்டசு மிக முக்கியமானவர். இவர் ஒரு பல் மருத்துவர். அவரது மருத்துவமனைக்கு நான் முருகனை அழைத்துச் சென்று, முருகனுக்கு பல் பிடுங்கியதாகவும், என் மகனே அவரது மருத்துவமனையில்தான் பிறந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். பல் மருத்துவர் பிரசவம் பார்த்த கதையைப் புலனாய்வுத் துறை ஜோடித்தது. என் மகன் மேற்கண்ட மருத்துவமனையில் பிறக்கவில்லை. சேத்துப்பட்டில் உள்ள மேத்தா நர்ஸிங் ஹோமில்தான் பிறந்தான் என்பதற்கான பிறப்புச் சான்றை நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்.

தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்போது இந்த பல் மருத்துவரைக் குறுக்கு விசாரணை செய்தபோது, முருகனுக்கு ஏதாவது பல் பிடுங்கப்பட்டு இருக்கிறதா? என்ற கேள்விக்கு இவர் இல்லை எனப் பதில் அளித்தார்.

இந்த மருத்துவர்தான் இராசீவ் காந்தி கொலையான மறுநாளில் நான் இனிப்பு வழங்கி, வெடி வெடித்துக் கொண்டாடியதாக சாட்சியம் அளித்துள்ளார்.

ஓர் இரகசிய அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்து, அந்த அமைப்பின் இரகசியக் கட்டளை ஒன்றினை நிறைவேற்றும் எவரும் இப்படிப்பட்ட வெளிப்படையான வேடிக்கையான காரியங்களில் ஈடுபடுவார்களா? இதுபோன்ற வலுவற்ற பொய் சாட்சியங்களை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது என்பது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்த நிகழ்வாகும்.

இந்த வழக்கில் இராசீவ் காந்தியைக் கொன்றதாகக் கூறப்படும் தனுவினை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்று காட்ட புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் மிகக் கவனமாக ஆராயத்தக்கவையாகும். அரசுத் தரப்பில், தனுவின் முந்தைய புகைப்படமாக காட்டப்பட்ட படத்தில் உள்ள ஒரு பெண் புலிக் கொடி ஏந்தி வருவதுபோன்ற தோற்றத்தில் காட்சி அளிப்பது தனுதான் என அரசுத் தரப்பு தெரிவித்தது. அரசுத் தரப்பு தாக்கல் செய்த புகைப்படத்தில் இருக்கும் பெண் தனு அல்ல அனுஜா என்ற போராளி எனப் பல தகவல்கள் வெளியாயின.

நான் ஓட்டுநர் உரிமம் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்பட்ட மகேசுவரன் என்ற கீர்த்தி பெங்களூரில் சிவராசனைப் பிடிக்கக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தபோது சிவராசனோடு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது ஆனால், மேற்கண்ட மகேசுவரன் இச்சம்பவத்துக்குப் பிறகும் ஈழத்தில் உயிரோடு இருந்ததாகத் தகவல்கள் வெளியாயின. இதுபோன்ற பல காரணிகளைப் புலனாய்வுத் துறையினர் அக்கறை எடுத்து விசாரிக்கவில்லை.''

- இவ்வாறு ராபர்ட் பயஸ் தனது புத்தகத்தில் எழுதி உள்ளார்!

மூலம்: ஜூனியர் விகடன் - ஆவணி 17, 2011

Share this post


Link to post
Share on other sites