Sign in to follow this  
nunavilan

கவிஞர் காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு

Recommended Posts

கவிஞர் காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு

kasianandan_350.jpg

வாழ்வில் எத்தனையோ நபர்களைத் தினம் தோறும் சந்திக்கிறோம். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

நீ

யாரையோ பார்த்து பிரமிக்கும்

அதே வினாடியில்

யாரோ

உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்

என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வப்போது சந்திக்கும் நபர்களையும், அவர்களுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் வலையேற்றலாமே என்று திடீரென ஒரு சிந்தனை, அந்த சிந்தனையின் விளைவாகத் தான் இந்த முதல் பதிவு.

உங்கள்

அங்கீகாரம் கிடைத்தால் ஆனந்திப்பேன்.

விமர்சனங்கள் கிடைத்தால் வளர்வேன்.

பார்வையில் கூர்மையும், பேச்சில் நேர்மையுமாக புன்னகைக்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். வார்த்தைகளில் வீரியமடிக்கும் சிந்தனைகளுக்குச் சம்பந்தமில்லாத ஒல்லியான தேகம். ஈழப்போரின் நினைவுகள் அவருடைய கண்களில் கவலையையும், கனலையும் ஒருசேர அடித்து விட்டுப் போன சுவடுகள் பேச்சில் தவிர்க்க இயலாமல் தலை காட்டுகின்றன. அவருடைய படத்தை வைத்துத் தான் சிங்கள ராணுவத்தினர் குறிபார்த்துச் சுடும் பயிற்சி செய்வதாகவும், இவருடைய கவிதைகள் ஈழத் தமிழ் போராளிகளிடையே தமிழ் உணர்வை ஊற்றுவதாகவும் கதைகள் கேட்டதுண்டு.

வாழ்வில் சந்திக்கும் நபர்களில் எழுத்துகளுக்கும் பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கின்ற நிரப்பப்படாத பள்ளம் அவருடைய சந்திப்பில் இல்லை. பேசுவதை எழுதுகிறார் எழுதுவது அவருடைய வாழ்க்கை சார்ந்ததாகவோ, அல்லது வேட்கை சார்ந்ததாகவோ இருக்கிறது.

காலையில் தாமதமாக வரும் காய்கறி வியாபாரியிடம் ஏன் காலதாமதமாகி விட்டது என்பதைத் தமிழில் வினவுகையில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் காய்கறி வியாபாரி இருப்பதைக் கவலையுடன் தெரிவிக்கிறார். நான்கைந்து வேறுபட்ட வார்த்தைகளுடன் வினவியும் பதிலில்லாமல் கடைசியில் புரிந்து கொள்டவளாக ‘ஓ.. லேட்டானதை கேக்கறீங்களா சார்’ என்ற அவளுடைய பதில் தமிழின் மீதான அவருடைய ஆர்வத்தின் கால்களை உடைத்ததில் ஆச்சரியமில்லை.

பொங்கல் தினத்தில் பக்கத்து தெருவில் நடந்து சென்றபோது அத்தனை வீடுகளும் ‘ஹேப்பி பொங்கல்’ என்று ஆங்கிலத்திலோ, அல்லது ஆங்கிலத்தைத் தமிழிலோ வாழ்த்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் திடுக்கிடுகையில் நமக்கும் நம் மொழி மீதான ஆர்வத்தின் மீது திகில் படர்கிறது. ஏன் தமிழ் வளர்கிறது வளர்கிறது என்று போலித்தனமான சலுகைப் போர்வைகளைப் போர்த்தி நடக்கிறீர்கள் ? ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய தேசம் முழுவதும் பேசப்பட்டு வந்த மொழியாக தமிழ் இருந்ததற்கான வரலாறுகள் உள்ளன இன்று தமிழ் நாட்டில் மட்டும் பேசுகிறோம் இது வளர்ச்சியா ? இலங்கையில் ஒன்பது மாகாணங்களிலும் இருந்த தமிழ் இன்று இரண்டு மாகாணங்களுக்கு இடம் பெயர்ந்து தினமும் சிங்களத் தோட்டாக்களினால் நெற்றியில் புள்ளியிடப்பட்டு உயிரெழுத்துக்களெல்லாம் மெய்யெழுத்துக்களாகி வருகிறதே இது வளர்ச்சியா ? என்று அவர் பதை பதைப்புடன் வினவுகையில் அவரிடம் போலித்தனம் இல்லை. அரசியல் வாதி ஒருவர் தன்னுடைய இருக்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொல்லிக் கொள்ளும் சால்ஜாப்பு அறிக்கையாக அவருடைய பேச்சு இல்லை. வலிகளுடன் விழுகின்றன வார்த்தைகள். ஒரு சிறிய இடத்தில் துவங்கிய ஆங்கில மொழி உலகெங்கும் பரவியிருப்பதை வளர்ச்சி என்று சொல்லலாம், உலகின் பல இடங்களில் பரவி இருந்த தமிழ் ஒரு இடத்தில் சுருங்கியதை எப்படி வளர்ச்சி என்று கொண்டாடுவது என்று கேட்கையில் மறு பேச்சு பேச முடியவில்லை.

இலக்கியத்தின் பக்கமாக மெல்ல பேச்சைத் திருப்பினால் கண்கள் மின்னலடிக்க பேசுகிறார். அவருடைய பார்வையில் கவிதைகளை சிந்தல், நறுக்குகள், பாக்கள் என மூன்றாகப் பிரித்து பேசுகிறார். சாரலடிக்கும் மழையைப் போல, அல்லது அருவியில் விழும் நீரின் சாரல் போல மனதை தொட்டு சிலிர்க்க வைப்பது சிந்தனை. நறுக்கென்று தலையில் குட்டுவது போல, ஒரு வீச்சுடன் வந்து விழும் அருவி நீர் போல என்பது நறுக்கு. பா என்பது இசையுடன் கலந்தது என்று பிரித்துப் பேசி உதாரணங்கள் அடுக்குகையில் மனம் அவருடைய வாதத்தை, அவருடைய கவிதை பாணியை அங்கீகரிக்கிறது.

தமிழா / ஆடாய் மாடாய் ஆனாயடா / என்றேன் / கை தட்டினான் - என்பன போன்ற எழுத்துக்களை கவிதைகள் என்றால் மறுப்பதற்குத் தயாராக ஒரு கூட்டம் இருக்கலாம். ஆனால் நறுக்குகள் எனும் போது யாரும் வெறுக்க மாட்டார்கள் என்பதே கவிஞருக்கு ஒருவிதமான பொது அங்கீகாரம் கிடைப்பதற்கு ஏதுவாகிறது. தனிப்பட்ட முறையில் நறுக்குகளின் தீவிர ரசிகன் நான் என்பேன். அவற்றை வீரியமிக்க வாள் வீச்சுகளாய் பாவிக்கிறேன், அதையே கவிஞரும் விரும்புகிறான் என்றால் கவிஞரின் பார்வையில் வாசகனின் வாசிப்பு இயங்குவது ஒரு சமதளக் கண்ணோட்டமல்லவா.

தன்னிடமிருந்த கவிதைகளை ஈழத்தில், கண்ணீரின் ஈரத்தில் தொலைத்ததை ஒருவித சோகத்துடன் நினைவு கூர்கிறார். குருதியின் வாசனையோடு கவிதைகளும் மடிந்து போன சம்பவங்களை நினைவு கூர்கையில் அவருடைய முகம் குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தாயைப் போல பரிதவிக்கிறது. தூரத்தில் குரைக்கும் நாயோசை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் ஈழத்தின் இரவுகளை நினைவு கூர்ந்தார். நாய் குரைக்கும் ஓசை நெருங்க நெருங்க விளக்குகளை அணைத்துவிட்டு துடிக்கும் இதயத்தின் ஓசையையும் கைகளால் தடுத்துக் கொண்டு, நாயோசையைத் தொடரும் காலடி ஓசைகள் தன் வீட்டு வாசலில் நின்று விடக் கூடாதே எனும் உயிர்ப்படபடப்பில் மரணத்தின் வாசனையை இரவுகளின் சுவாசித்துக் கழியும் தமிழர்களின் வாழ்க்கையை அவர் சொல்கையில் குரல் தழுதழுக்கிறது. சற்று நேரம் நிறுத்தி விட்டு, இலங்கை முழுவதும் தமிழர்களுக்குப் பதில் மலையாளிகளோ, தெலுங்கர்களோ இருந்திருந்தால் இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு நீதி வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா என்று இதுவரை யோசித்திராத கோணத்தில் ஒரு கேள்வியையும் வைக்கிறார்.

பேச்சு மீண்டும் மீண்டும் தமிழ் மொழியின் மீதே திரும்பியது அவருக்கு தமிழ்மீதாக இருக்கும் தாகத்தை மெய்ப்பிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு சில கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்.

முதலாவது, தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப் படுவது என்பது தமிழை இழிவு படுத்துவது போல, தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வியே எல்லா பள்ளிகளிலும் நிகழ்த்தப்பட வேண்டும். அது தான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலும். வேண்டுமானால் ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாக்கலாம். இன்றைக்கு தமிழை இந்தி அழித்துக் கொண்டிருப்பதாக எழும்புவது அரசியல் கடலில் அடிக்கும் மாய அலை. உண்மையில் ஆங்கிலச் சுனாமியில் சிக்கி தமிழ் தன்னுடைய முகத்தை சிதைத்துக் கொண்டிருப்பது தான் நிஜம்.

இரண்டாவது, தமிழ் நாட்டில் தமிழில் எழுதப்படும் எல்லா பெயர்ப்பலகைகளும் தூய தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிக் கலப்பு என்பது அறவே கூடாது. பிரான்ஸ் நாட்டில் ஒரு குழுவே இருக்கிறது. பிரான்ஸ் மொழியில் ஆங்கிலம் கலந்து எழுதினால் பிரஞ்ச் மொழியை அவமானப்படுத்துவதாக வழக்கிடும் உரிமை கூட உள்ளது. ஆனால் நமது நாட்டில் தான் தமிழுக்காகப் பாடுபட்ட மறை மலை அடிகளார் பாலத்தைக் கூட ‘மறைமலை அடிகள் பிரிட்ஜ்’ என்று எழுதிப் பழகுகிறோம்.

ஊடகங்களில் தமிழ் மொழி செம்மைப்படுத்தப் படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்றைக்கு தமிழில் படமெடுத்தால் கூட அதை ஆங்கிலப் பெயருள்ள தொலைக்காட்சியில் தான் திரையிட வேண்டியிருக்கிறது என்று ஒருவர் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டிப் பேசுகிறார். தமிழ் மீதான ஆர்வம் எந்த அளவுக்கு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதை அவருடைய பேச்சு தெளிவாக்குகிறது. நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானங்கள் உண்மையில் தமிழின் வளர்ச்சியின் மீது தடைக்கல்லாகத் தான் அமரும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

பேச்சு தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதைப் பற்றித் திரும்புகிறது. பேச்சு கலகலப்பாகிறது. பாருங்கள் தமிழ்ப் படத்துக்கு தமிழில் பெயர் வைப்பதற்குக் கூட வரிச்சலுகை கொடுக்க வேண்டி இருக்கிறது. கூடவே தமிழ் அல்லாத பிற மொழிகளில் பெயர்வைத்தால் ஐம்பது சதவீதம் அதிக வரி என்று விதித்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தையும் வைக்கிறார்.

இருபத்து ஒன்பது ஆண்டுகாலம் காதலித்துத் திருமணம் செய்த அவருடைய நேசத்துக்குரிய மனைவி தேனீர் பரிமாற, அதை சுவைத்துக் கொண்டே தன்னுடைய இலக்கிய உலகின் அடுத்த எதிர்பார்ப்புகளையும், படைப்பு சார்ந்த விருப்பங்களையும், எழுதிக் கொண்டிருக்கும் பணிகளைப் பற்றியும் பேசுகிறார். இன்னும் சில காலம் தொடர்ந்து எழுதுமளவுக்கு அவரிடம் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன சிந்தனைகள் என்பது மட்டும் தெளிவாகிறது. ‘வன்ன மயில் இப்போது கூத்தாடுமா இல்லை போராடுமா ?’ என்ற ஒரு நாட்டியப் பாடலை எழுதி முடித்த கதையை விவரிக்கிறார். வன்னி மயில்கள் நிறைந்த பகுதி, இப்போதைய போர் சூழலில் சூழ்ந்திருக்கும் கரும் புகைகளினால், நீரைக் குடித்து நிமிராமல், உயிர்களைக் குடித்து நிறைந்திருக்கும் போர் மேகங்களினால் இந்த மயில்கள் தோகை விரித்தாடுமா இல்லை ஆயுதம் எடுத்து போராடுமா என்னும் கற்பனையை கவிஞர் விவரிக்கையில் சிலிர்த்துப் போய் பார்த்திருப்பதைத் தவிர வேறேதும் செய்யவில்லை நான்.

கடைசியில் என்னுடைய அடுத்த நூலுக்கான முன்னுரைக்காக கொண்டுசென்றிருந்த கவிதைக் காகிதங்களை அவரிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகையில் ஒரு முகமூடி அணியாத கவிஞரைச் சந்தித்துத் திரும்பிய மகிழ்ச்சி மனசெங்கும்.

http://xaivi.wordpress.com/2006/09/11/kasianandan

Share this post


Link to post
Share on other sites

தமிழ் தாய் , தமிழ் ஈழத்துக்காக பெற்றெடுத்து தந்தது தான் கவிஞர் காசி ஆனந்தன் .

பதிவிற்கு நன்றி நுணாவிலான் .

Share this post


Link to post
Share on other sites

பதிவுக்கு நன்றிகள் நுனாவிலான்.....

Share this post


Link to post
Share on other sites

நான் மட்டக்களப்பில் இருந்தபோது பலதடைவைகள் இவரது மேடைப்பேச்சுக்களை பர்த்து ரசித்திருக்கின்றேன்.

மிகவும் நகைச்சுவையாகவும் சிந்திக்க வைக்கத்தக்கதாகவும் பேசக்கூடியவர்.

இணைப்பிற்கு நன்றி நுணாவில் :lol:

Share this post


Link to post
Share on other sites

உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன்

சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைகளை அறுத்தெறிய தானும் தோள்கொடுத்து மக்களையும் அணிதிரட்ட கவிதை என்னும் ஆயுதத்தை கையிலெடுத்து தென்தமிழீழத் திருநாட்டின் தேனாடெனப்படும் மட்டக்களப்பிலிருந்து ஒலித்தது ஓர் குரல். தன் மொழிவளத்தால் அனைவரையும் ஒன்றுபடவைத்தான் உணர்ச்சிக் கவிஞனொருவன். உணர்ச்சிக் கவிஞர் என்றாலே அனைவர் மனதிலும் தோன்றும் உருவம் கவிஞர் காசியானந்தன். அந்தவகையில் இந்தவாரம் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் பற்றிய அறிமுகம் ஒன்றை தாயகப்பறவைகள் காவி வருகின்றது.

மட்டக்களப்பின் நாவற்குடா என்னும் சிற்றூர் ஒன்றிலே 1938ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி ( apirl. 4, 1938) காத்தமுத்து அழகம்மா தம்பதியரிற்கு சிவானந்தன் என்னும் பெயருடன் மகவாக வந்துதித்தார். காலப் போக்கிலே தன் தந்தையின் பெயரின் முதலெழுத்தான 'கா' இனைத் தன் பெயருடன் இணைத்து காசி ஆனந்தன் என்று எழுத ஆரம்பித்து பின்னர் அது காசியானந்தன் என்றாகி விட்டது.

சிறுவயதிலேயே சிந்தனைத்திறன் சேர்ந்திருந்த கவிஞர் தன் முதற்கவிதையை பன்னிரண்டாவது வயதிலே பாடியிருந்தார். பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் எழுத்துக்களிலே பெரிதும் விருப்புக் கொண்டவராவார். கவிஞரின் பேனாக்கு மட்டும் ஏதும் தாள்கிடைப்பின் அவை கவிதைக் காகிதமாக மாற்றும் சக்தி இருந்தது. தமிழன் வாழ்வு தமிழின் வாழ்வு என்று தன்னால் முடிந்த போதெல்லாம் தமிழ் பற்றியே கவிஞன் மூச்சு.

இலங்கையில் தமிழின அழிப்பை தடுப்பதற்கான போராட்டங்களிலெல்லாம் காசியானந்தனின் பங்களிப்பும் இருந்தே வந்துள்ளது. 1957ம் ஆண்டிலே வாகனங்களின் இலக்கத்தகடுகளில் சிங்கள 'சிறி' எழுத்துத்தினை இடவேண்டும் என்ற சிங்களக் கடும்போக்காளர்கள் கட்டாயப்படுத்தினர். அவ்வேளையில் அதனை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி போர்க்கொடி தூக்கியது; போராட்டங்கள் நடத்தியது. அவ்வேளையில் மட்டக்களப்பு காவல் நிலையத்திற்குள் சென்ற காசியானந்தன் அவர்கள் அங்கிருந்த பெயர்ப்பலகையில் காணப்பட்ட சிங்களச் 'சிறி' எழுத்தினை மைபூசி அழித்தார். அதனால் காவலர்களால் தாக்கப்பட்டு காச நோயாளியாக வீடடைந்தார் கவிஞர்.

1959ம் ஆண்டு முதல் 1963ம்; ஆண்டு வரை பட்டப்படிப்புக்காகத் தமிழ்நாட்டில் தங்கியிருந்த கவிஞரிற்கு பல கல்வியாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. இக்காலகட்டத்திலேயே பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தொடர்பும் காசியானந்தனிற்குக் கிடைத்தது.

வெறியோடும் சிங்களர் படைவீரா! இதுகேள்!

விடுதலை வீரரைத் தொடுதலை நிறுத்து!

பொறிகக்கும் விழியோடு புலிகள்யாம் நின்றோம்!

பொன்னீழம் உயிரென்றோம் .போராடுகின்றோம்!

சிறிதடா நின்பாய்ச்சல்! பெரி தெங்கள் மூச்சு!

செந்தமிழ் வீரரை என்செய வந்தாய்!

அறிக! இங்கோர் புயல் விரைவில் வெடிக்கும்!

அந்நாள் உன் சிங்களம் பாடம் படிக்கும்!

என்று சிறையிலிருந்த போதும் உணர்ச்சி பொங்கக் கவிவடித்த கவிஞனிற்கு 'நாம் தமிழர் இயக்கத்தின்' தந்தை சி.பா. ஆதித்தனார் 'உணர்ச்சிக் கவிஞர்' என்னும் பட்டத்தினை அணிவித்து மகிழ்ந்தார். அத்துடன் "உறுமி மேளத்தின் முழக்கத்தைக் காசியானந்தனின் ஒவ்வொரு பாடலிலும் கேட்கிறேன்" எனக் கவிஞரைப் புகழ்ந்தார்.

தமிழகத்தில் பட்டப்படிப்பை முடித்த கவிஞர் சிலகாலம் இலங்கையில் அரச மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 1972ம் ஆண்டு அரச வேலையில் இருந்த போது தமிழர்களை அடிமைகளாக்கிய புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து இலங்கையை குடியரசாக்கியபோது கைமேல் அதிக வருவாயைத் தந்துகொண்டிருந்த அரச வேலையை தூக்கியெறிந்து வெளியேறினார். அதன் பின் தொடங்கியது அவரது துயர் நிறைந்த வாழ்வுப்பயணம்.

எங்கெல்லாம் சிங்களத்தின் அடக்குமுறையை வெளிச்சம் போட்டுக்காட்ட முடியுமோ அங்கெல்லாம் அவரின் பேனா முனைகள் சென்றன. 1978ம் ஆண்டு கியூபா நாட்டிலே நிடைபெற்ற அனைத்துலக இளைஞர் விழாவில் கலந்துகொண்ட கவிஞர் கீழ்வரும் கவிமூலம் சிங்களத்தை எச்சரித்தார்.

ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!

ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!

வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!

வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!

தமிழ் ஈழம் யாம் பெறுவது மெய்யே!

தகர்ந்து சிதறும் எதிரிகள் கையே!

தமிழர் நெஞ்சில் எரிவது நெருப்பே!

தமிழ் வீரம் தமிழர்கை இருப்பே!

வாய்ச்சொல்லில் வீரராக இல்லாது கவிஞர் செயல் வீரராகவும் இருந்தார். இதனால் அவர் பட்ட வேதனைகள் பலப்பல. தான் மட்டுமன்றி தன் சோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட அவர்களை ஊக்கிவித்தார். அவருடைய இரண்டு தம்பிகளும் சிறையில் இருந்தபோது அவர்களிற்கு உற்சாகமூட்ட கவிஞர்

பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்!

போர்க்களம் எமக்கென்ன புதிதோ?

குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்!

கூத்தாடுவோம்! இது பொன்னாள்!

என்று தம்பியரிற்கு ஆறுதல் கூறுகிறார்.

சும்மா வருமோ சுதந்திரம்? எங்கள் தோள்கள் தூங்கினால் துயரம் நீங்குமோ? என்று துயரத்தை தன் தோள் மீதில் சுமந்து நடந்த காசியானந்தன் அவர்கள் காலத்தின் கட்டாயத்தால் புலம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் தமிழ்நாட்டிற்கு சென்றார். அங்கிருந்தும் ஈழவிடியலிற்கு உரம் சேர்க்கும் வகையில் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட உரத்த குரலெடுத்து கவிபாடி வருகிறார்.

தமிழை அழிக்கவெண்டு வந்த மாற்றானிற்கு தாய்த்தமிழைத் தமிழனைக் காட்டிக்கொடுப்போரை கவிஞர் சினங்கொண்டு

மாற்றார்க்கு அழைப்பு விடுத்தான்! - வீட்டில்

மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்!!

சோற்றுப் பதவிகள் ஏற்றான் - மானம்

தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!

எனக் காட்டமாக வைகின்றார்.

காலமாற்றத்தில் கவியோடு மட்டுமல்ல விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பல பாடல்களையும் கவிஞர் சமைத்துள்ளார். தமிழன் தன் உணர்வை உணர வைக்கும் பல பாடல்கள் காசியானந்தன் அவர்களில் வரிகளில் வெளிவந்துள்ளன. அவரது பட்டத்திற்கு ஏற்ப பாடல்களும் உணர்ச்சி ததும்புபனவாகவே வெளிவருகின்றன.

ஆக்கம்-சுடர்

நன்றி: தாயகப்பறவைகள்

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this