Jump to content

நாளொன்றுக்கு ஐந்து பேர்: இலங்கை தாங்குமா?.


Recommended Posts

நாளொன்றுக்கு ஐந்து பேர்: இலங்கை தாங்குமா?.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஐந்து பேர் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக மூன்று மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் நாளொன்றுக்கு குறைந்தது இருவர் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர்.

மக்கள் கண்காணிப்புக் குழு, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில், 662 படுகொலைச் சம்பவங்களும், 540 கடத்தல் சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எட்டு மாத காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களில் 554 பேர் தமிழர்கள்: இது கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையின் 83.73 வீதம் ஆகும். இதிலும், யாழ்ப்பாணத்திலேயே அதிகளவானவர்கள் (178) கொல்லப்பட்டுள்ளனர். காணாமல்போகச்செய்யப்பட்ட 540 பேரில் 426 பேர் தமிழர்கள். இந்த கணக்கெடுப்புக்களுக்குள் அடங்காமல், வெளியுலகம் அறியாமலும் பலர் தொடர்ந்தும் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டுக் காணாமல்போகச் செய்யப்படுகின்றமையும் நாம் அறிந்ததே.

கடத்தப்பட்டவர்களில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிவருகிறார். இந்தக் கூற்றை ஒத்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் எஸ்.டபிள்யூ. பிரதாபசிங்க, காணாமல்போனவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பியிருப்பதாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

எனினும், இந்தக் கருத்தை மறுத்துரைத்துள்ள மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேஷன், கடத்தப்பட்டுக் காணாலமல்போகச் செய்யப்பட்டோர் யாரும் வீடு திரும்பியிருந்தால் அவர்களின் பெயர் விபரங்களைப் பொலிஸார் பகிரங்கப்படுத்தவேண்டும் எனக் கோரியிருக்கின்றார்.

இலங்கையில் இடம்பெறுகின்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள்; மற்றும் படுகொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ண தலைமையில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும், கடத்தல்கள் குறைந்துள்ளதாகவே கூறுகின்றது.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான படுகொலைகள், காணாமல்போகச் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டியது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கடமையாகும். அதைவிடுத்து, இதுதொடர்பில் பொறுப்பற்ற விதமான கருத்துக்கள் வெளியிடப்படுவது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்றதொரு நடவடிக்கையாகும்.

இலங்கைக்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார், இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், இதனால், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை இலங்கையில் அமைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கவில்லை. தமது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விடுத்த கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

இதனிடையே, படுகொலைகள், காணாமல்போதல் சம்பவங்களுக்கு மேலதிகமாக, இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சித்திரவதைகளுக்கு எதிரான பிரதிநிதி மர்வெஃரட் நொவாக் கூறியிருக்கிறார். இந்தக் கருத்தை பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வரவேற்றுள்ளன.

இவ்வாறு, இலங்கையில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகத்தினதும், மனித உரிமை அமைப்புக்களினதும் அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையிலும், இலங்கை அரசாங்கம் இது குறித்து அலட்டிக்கொள்ளாமல் இருப்பதானது, இந்த அழுத்தங்களின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுகிறது.

இருக்கின்ற நிலைமையைப் பார்க்கும்போது, நாளை படுகொலை செய்யப்படக்கூடிய, அல்லது காணாமல்போகக்கூடிய அந்த ஐந்து பேருக்காக அனுதாபப்படுவதைத் தவிர இப்போதைக்கு எம்மால் எதுவும் செய்ய முடியாது. சிலவேளை அந்த ஐந்து பேரில் நாமும் ஒருவராக இருக்கலாம்!!!

http://maruthamuraan.blogspot.com/2007/11/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.