Jump to content

சிறகொடிக்கப்பட்ட ஜனநாயகம்


Recommended Posts

சிறகொடிக்கப்பட்ட ஜனநாயகம்

கே.ஜி.பி.

அருகில் கிடத்தப்பட்டிருந்த கணவரின் சடலத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்த அம்மாவின் கைவிரல்களைத் தன் பிஞ்சுக் கரங்களால் பற்றிக் கொண்டு சிரித்துக் கொண்ருந்தது அந்த இரண்டு வயது பெண் குழந்தை .

-ஆண்டு : 1947

புற்றுநோயால் தாம் இறக்கும் முன்பு ஒரே ஒரு முறை தன் மனைவியைப் பார்க்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது அவளுடைய கணவருக்கு!

-ஆண்டு : 1999

34 வயது அலெக்ஸாண்டர், 30 வயது கிம்-இரண்டு மகன்களும் அயல்நாட்டில்; அவளோ வீட்டுச்சிறையில்!

- ஆகஸ்ட் : 2007

அந்தப் பெண்தான் ஆவ்ங்-ஸான்-ஸூ-க்யி-டாவ் ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் பர்மிய வீராங்கனை.

1945 ஜூன் 19 அன்று பிறந்த ஸூ-க்யிவின் தந்தையார் ஆவ்ங்-ஸான்-யூ பர்மிய தேசியத் தலைவர். 1936-38ல் அனைத்து பர்மா மாணவர் சங்கத்தின் (ABSU) தலைவர், 1938-40ல் தேசிய இயக்கமான, `தொபாமா ஆசியாயோன்' செயலாளர், 1939-40ல் பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், 1942-ல் பா-மா ஆட்சியில் அமைச்சர், 1944ல் பாசிஸ எதிர்ப்பு மக்கள் விடுதலை லீக் நிறுவனர் என்று பல பொறுப்புகளை வகித்தவர். 1948ல் விடுதலையாகவிருந்த பர்மாவின் முதல் பிரதமராக வாய்ப்பு கிடைத்திருக்கும் வேளையில் 19 ஜூலை 1947-ல் படுகொலை செய்யப்பட்ட ஆவ்ங்-ஸான்-யூ தனது அரசியல் வாரிசை (ஸூ-க்யி) விட்டுச் சென்றிருக்கிறார்.

ரங்கூனில் பள்ளிப் படிப்பு முடித்த ஸூ-க்யி கல்லூரிப் படிப்புக்காக தில்லியில் லேடி ஸ்ரீராம் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அவரது தாயார் அப்போது இந்தியாவின் பர்மியத்தூதராக இருந்ததுதான்! 1946ல் கல்லூரி முடித்தபின் ஆக்ஸ்ஃபர்டு செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் BA (தத்துவம் / அரசியல் / பொருளாதாரம்) பட்டப்படிப்பை முடித்துவிட்டு நியூயார்க்கில் மேற்கொண்டு கல்விப்பயணத்தைத் தொடர்ந்தார்.

பூட்டானில் திபெத்தியக் கலாச்சாரத்தில் தத்துவ ஆய்வாளரான டாக்டர் மைக்கேல் ஆரிஸ் (க்யூபாவில் பிறந்தவர்!) அவர் மனதைக் கவர்ந்தார். 1972ல் திருமணம். ஆரிஸ் பிரிட்டிஷ் குடிமகன். லண்டனுக்குக் குடிபெயர்ந்தவுடன் 1973ல் முதல் மகன் அலெக்ஸாண்டர் பிறந்தான். 1977ல் இரண்டாவது மகன் கிம் பிறந்தான்.

தாயரின் உடல்நலம் மோசமானதைக் கேள்விப்பட்டு 1988ல் பர்மாவுக்கு ஸூ-க்யி சென்றார். பர்மிய ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அப்போது வெடித்த நேரம். கடுமையாக அடக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் கொதித்து எழுந்தார் ஸூ-க்யி. 8.8.88, ரத்த ஆறு ஓட வைத்த கொடிய ராணுவத்தின் தாக்குதல் நடந்த தினம். 27 செப்டம்பர் 1988ல் தேசிய ஜனநாயகம் லீக் (National League for Democracy) கட்சியைத் தோற்றுவித்து அதன் பொதுச் செயலாளரானார் ஸூ-க்யி. கட்சி, இயக்கமாக விஸ்வரூபமெடுப்பதை உணர்த்த ராணுவ ஆட்சி 20 ஜூலை 1989 - ல் அவரை வீட்டுக்காவலில் வைத்தது.

ஸூ-க்யிவை நாட்டிலிருந்து துரத்திவிடத் திட்டமிட்டது அரசு. வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது. ஒரே நிபந்தனை – ‘ஒரேயடியாக பர்மாவை விட்டுச்சென்று விட வேண்டும்! ஸான் -யூவின் ரத்த உறவு ஆயிற்றே, பர்மாவுடனான தொப்புள் கொடி உறவை அறுத்து விடுமா என்ன? முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார் ஸூ-க்யி.

1990-ல் பர்மியப் பொதுத் தேர்தல், 392 இடங்களில் வெற்றி பெற்றது ஸூ-க்யின் NLP கட்சி, ராணுவத்தின் ஸூ-க்யி NUP கட்சிக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஸூ-க்யி பிரதமராவதை எப்படிப் பொறுத்துக் கொள்ளும் ராணுவ சர்வாதிகாரம்? அதிகாரம் ஒப்படைக்கப்படவில்லை.

ராணுவம் அவரை சிறையில் தள்ளியது. ஜூலை 1995ல் சிறையிலிருந்து விடுவித்தது. வெளிநாடு சென்றால் மீண்டும் வரக்கூடாது என்று அச்சுறுத்தியது. இந்நேரத்தில்தான் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆரிஸ், பர்மா அரசிடம் விஸாவுக்கு விண்ணப்பித்தார். விஸா கிடைக்காத நிலையில் மார்ச் 1999ல் லண்டனில் மறைந்தார். பர்மாவை விட்டகலாது கணவரையும் பார்க்கவியலாது, குழந்தைகளையும் காண முடியாது தனிமைச் சிறையில் உழலும் ஸூ-க்யின் முதுகுத் தண்டுவடம் தேய்ந்துவிட்டது. 106 பவுண்டிலிருந்து 90 பவுண்டுகளாக மெலிந்துவிட்டது தேகம்.

செப்டம்பர் 2000 முதல் மீண்டும் சிறை. 6 மே 2006ல் ஐ.நா. சபை வற்புறுத்தல் காரணமாக விடுவிக்கப்பட்டார்.

30 மே 2003ல் அவரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டியது ராணுவ அரசு. தெபாயின் கிராமத்துக்கு வண்டிக் கட்டிச் சென்ற அவரைத் தாக்க படுகொலையாளர்களை அனுப்பியது. அவரது உதவியாளர்கள் கொல்லப்பட்டனர். தப்பிக்க முயன்ற அவரை ரங்கூன் - இன்சென் சிறையிலடைத்தது. கருப்பை நீக்கப்பட்ட சிகிச்சை காரணமாக செப்டம்பர் 2003 முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

மார்ச் 2004-ல் ஐ.நா. சிறப்புத்தூதர் ரஸாலி இஸ்மாயில் இவரைச் சிறையில் சந்தித்தார். மீண்டும் இவர் ஸூ-க்யிவைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் 2005ல் தனது ஐ.நா. பதவியையே ராஜினாமா செய்தார்.

ஐ.நா. 28 மே 2004ல், 1948 மனித உரிமை மீறல் பிரபஞ்ச அறிக்கைப்படி (தீர்மான எண் 9/2004) தனிமனித சுதந்திரத்துக்கு விரோதமான இவரது சிறைவாசத்தை ரத்து செய்ய வலியுறுத்தியது. ஆனால் 28/1/2005ல் அவரது சிறைவாசம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்ப்டடது.

20 மே 2006ல் ஐ.நா. அரசியல் விவகார துணைப் பொதுச் செயலாளர் இப்ராஹிம் கம்பாரி ஸூ-க்யிவைச் சந்தித்தார். வீட்டுச்சிறைவாசம் முடிந்துவிடும் என்று கருதப்பட்ட நேரத்தில் ராணுவ ஆட்சி மேலும் ஓராண்டு காவலை நீட்டித்தது. ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அனான் அறைகூவலைச் செவிசாய்க்காத அரசு என்ன சொன்னது தெரியுமா? -1975 பர்மிய அரசு பாதுகாப்புச் சட்டம், பிரிவு 10-b யின் படி, விசாரணையின்றி ஐந்தாண்டுவரை இவரைச் சிறையிலடைக்க முடியும் என்று விதண்டாவாதம் செய்தது.

ஜூன் 2006ல் ஸூ-க்யி கடும் வயிற்றுப்போக்குக்கு ஆளானபோதும் கூட உறுதியாக இருந்தது அரசு. ஐ.நா. வின் மனித உரிமை மீறல் எச்சரிக்கையைக் காலில் போட்டு மிதித்தது.

புதிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் எச்சரிக்கையையும் கேட்டுக் கொள்ளவில்லை. 40 அரசியல் கைதிகள் உள்ளிட்டு 2831 கைதிகள் 2007 புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்பட்டனர் - ஸூ-க்யி தவிர!

16 மே 2007ல் 50 உலகநாடுகள் இவரை விடுவிக்கக் கோரி அறிக்கை விடுத்தன. 25/5/2007ல் மேலும் ஓராண்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டது! பிலிப்பைன்ஸ் அரசு தலைமையில் ASEAN நாடுகள் மே 30, 2007ல் கோரிக்கை விடுத்தன. ஜூன் 17, 2007ல் ஸூ-க்யிக்கு 62 வது பிறந்த தினம்!

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஸூ-க்யி விடுதலை ஆகிய கோரிக்கைகளை வைத்துப் போராடி வருகின்றனர் பர்மிய நாட்டின் ஜனநாயக விரும்பிகள். இதில் மாணவர்கள் இயக்கம் சளைக்காமல் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். காலம்ஒருநாள் மாறும்; ஜனநாயகம் தன் கணக்கைத் தீர்க்கும்.........

பர்மா (மியான்மர்) : 16, 17 நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ், போர்ச்சுகீசியர், டச்சு வணிகர்கள் பர்மாவுக்கு வந்தனர். 18வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட நவீன பர்மாவை 1885ல் கபளீகரம் செய்தது. பிரிட்டிஷ் ஆட்சி. பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கம் அப்போது. 1935 அரசியல் சட்டப்படி பர்மா பிரிட்டிஷ்-இந்தியாவிலிருந்து பிரிந்தது. இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் பர்மாவை ஆக்கிரமித்தது. 1948 ஜனவரி 4-ஆம்நாள் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை அடைந்தது பர்மா. 1989ல் ம்யான்மர் என்று பெயர் மாற்றப்பட்டது. 1992 ஏப்ரல் 23 முதல் ராணுவ ஜெனரல் தான் ஷ்வே-யின் தலைமையில் ராணுவ ஆட்சி இயங்கி வருகிறது. 23 ஆகஸ்டு 2003 முதல் பொம்மை பிரதமர் ஜெனரல் நின்-நியுந்த் பெயரளவுக்கு மட்டுமே பதவியிலுள்ளார். முழு அதிகாரமும் "அரசு சமாதான வளர்ச்சி கவுன்சில்" என்ற பெயரிலான ராணுவ ஆட்சியிடம்தான். பர்மிய இயற்கை வளம் ராணுவ ஆட்சியினால் வீணாக்கப்படுகின்றது

நோபல் பரிசு

1991-ல் நோபல் சமாதானப் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டபோது அவரது சார்பாக இவரது பிள்ளைகள் அதைப் பெற்றுக் கொண்டனர். 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறும் இப்பரிசுத் தொகையை பர்மிய மக்களின் மருத்துவம், கல்வி வசதிக்கு உதவும்பொருட்டு ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்கினார்! New Light of Myanmar என்ற ராணுவத்தின் ஊதுகுழல் அமைப்பு, வரிஏய்ப்பு செய்யும் பொருட்டு இத்தொகையை வெளிநாட்டில் இவர் செலவழித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது! 1980ல் ராப்தோ விருது, 1991ல் சகாரோவ் விடுதலைச் சிந்தனை விருது ஆகிய விருதுகளுக்குப் பின்புலத்தில் இவரை வேறு தளத்திற்கு ஆதரவாக மாற்ற ஏகாதிபத்திய நாடுகள் முயல்கின்றன.

இந்தியாவில் சுமார் 2 லட்சம் பர்மியர்கள் உள்ளனர். பர்மா பற்றிய ஆராய்ச்சியை 15 வருடங்கள் செய்தவன் நான். ஒரு தலைமுறையே கல்வியறிவு உள்பட எந்த முன்னேற்றமும் இல்லாது வளர்வதைப் பார்த்தேன். பர்மியர்கள் சொந்த நாட்டு அகதிகள். பளு தூக்கி மனிதர்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். ஜனநாயக உரிமை பற்றி பேசியதற்காக 10 மதக் குருமார்கள் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.