Jump to content

சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 16 புதன்கிழமை, மு.ப. 06:35

கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன.   

கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, அவர் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்.   

 கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய உரையாடல்களில் கோட்டாபயவின் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதற்காகவே, ‘வியத்கம’ என்கிற அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனாலும், தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியிடுவது சார்ந்து, கோட்டாபய ஒரு படி பின்னோக்கியே இருந்து வந்திருக்கின்றார். ஆனால், தற்போது, அந்தக் கட்டத்திலிருந்து முன்னோக்கி வந்திருக்கிறார். அதுவும் தன்னுடைய முடிவுக்கு, மஹிந்த, மைத்திரியின் ஆதரவு இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். இது, ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’யின் தோல்வியால் உருவான கட்டம்.   

 மஹிந்தவைப் பொறுத்தளவில், நாமலின் அரசியல் எதிர்காலம் குறித்த கவலையே பிரதானமானது. தன்னுடைய காலத்துக்குப் பின்னர், நாமல் தலைமையில் தன்னுடைய பிள்ளைகள் ஆட்சி அதிகார அரங்கில் கோலோச்ச வேண்டும் என்பதே அவரது எண்ணம். அதற்கான பாதையைச் செப்பனிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, அவர் தன்னுடைய நிலையையும் மீறி, அதிகம் முட்டி மோதுகின்றார்.   

தன்னுடைய ஆட்சிக்காலத்தில், தன்னுடைய சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகளவு இடத்தை மஹிந்த வழங்கியிருந்தார். அதனாலேயே, அவர் தோல்வியடைந்தார் என்கிற உணர்நிலை, தென்இலங்கையில் இன்னமும் இருக்கின்றது. தற்போதும், சகோதரர்களையும் உறவினர்களையும் அவர் விலத்தி வைத்துவிடவில்லை. ஆனால், உடன்பிறப்புகளைவிட, தன்னுடைய பிள்ளைகள் மீதான கரிசனையை அவர் வெளிப்படுத்துகிறார்.   

கடந்த காலத்தில், சகோதரர்களுக்கு நல்லதொரு சகோதரனாக இருந்த அவர், இப்போது, பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக கரிசனை கொள்கிறார். அதுதான், அவரை, தன்னை வீழ்த்திய மைத்திரியோடு இணக்கப்பாட்டுக்குச் செல்லவும் வைத்தது.   

 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னராக, மைத்திரி - மஹிந்தவுக்கு இடையிலான பேச்சுகள் நெருக்கமாக ஆரம்பிக்கப்பட்டாலும், அந்தப் பேச்சுகளில் உரையாடப்பட்ட விடயங்கள் மிகமிக இரகசியமாகவே பேணப்பட்டன.   

இரண்டு தரப்பிலும், வேறு யாருக்கும் விவரங்கள் பகிரப்பட்டிருக்கவில்லை. மைத்திரிக்கு நெருக்கமாக இயங்கிய துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர போன்றோர் கூட, ஒக்டோபர் 26ஆம் திகதி, மஹிந்த பிரதமராக நியமிக்கப்படும் வரையில், அந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை.   

வேண்டாத ஒரு தருணத்தில், தாங்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற தோரணையில், அவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதை, காணொளிகளில் கண்டோம்.   

 ராஜபக்‌ஷக்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதும், ஊழல் மோசடி விசாரணைகளின் வழியில் முற்றாக முடக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும், ரணிலின் அரசியல் கணக்கின் அடிப்படையில், ராஜபக்‌ஷக்கள் மீதான வழக்கு விசாரணைகள் வேகப்படுத்தப்படவில்லை. அத்தோடு, சுதந்திரக் கட்சிக்கு எதிராக ராஜபக்‌ஷக்களை தனித்தரப்பாகக் குறிப்பிட்டளவு வளர்த்து விட வேண்டும் என்பதிலும் அவர் குறியாக இருந்தார். அதனாலும், மைத்திரி- ரணில் இடையிலான இடைவெளி அதிகரிக்கக் காரணமானது. இரண்டு பலவீனமான தரப்புகளைத் தனக்கு எதிராகப் பேண வேண்டும் என்கிற ரணிலின் நினைப்பு சரியானதுதான். ஆனால், அதனைச் சரியான இடைவெளிகளுடன் பேணுவதில் கோட்டை விட்டதன் காரணமாகவே, ஒக்டோபர் சதிப்புரட்சிக்கான வாய்ப்பு உருவானது.   

சதிப்புரட்சியிலிருந்து மீண்டு, ரணில் பிரதமராகிவிட்டாலும், அதிலிருந்து முழுமையான பலாபலனை, அவரால் எடுத்துக்கொள்ள முடியாமால் போய்விட்டது. கூட்டணிக்கட்சிகளினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சதிப்புரட்சிக்கு எதிராக வகிபாகம் என்பது, பாரியளவிலானது.

அது, அவருக்கான ஆதரவு என்கிற ஒற்றைப்புள்ளியில் சாத்தியமான ஒன்றல்ல. மாறாக, ஜனநாயகத்துக்கான காப்பு, எதேச்சதிகாரத்துக்கு எதிரான போர்க்குணத்தின் போக்கில் எழுந்து வந்தவை.   

சதிப்புரட்சியில் மைத்திரி - மஹிந்த தரப்பு வெற்றிபெற்றிருந்தால், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவை முன்னிறுத்தும் காட்சிகள் மீள எழுந்திருக்காது. மாறாக, மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டு, மஹிந்த தன்னுடைய ராஜாங்கத்தை மீண்டும் அமைத்திருப்பார். அது மஹிந்தவுக்கு இருப்பதிலேயே மிகவும் இணக்கமான வழி.   

ஏனெனில், தன்னையோ, தன்னுடைய மகனையோ தவிர்ந்த இன்னொரு ராஜபக்‌ஷவை அரியணையில் ஏற்றிவிட்டு, அதனை மீளப்பெறுவது என்பது அவ்வளவுக்கு இலகுவான ஒன்றல்ல என்பது அவருக்குத் தெரியும். அப்படியான சூழலில்தான், ரணிலுக்கு எப்படி வெற்றிபெறுவதற்கும் ஆட்சி நடத்துவதற்கும் பொம்மையாக மைத்திரி தேவைப்பட்டாரோ, அதேபோன்றதொரு காரணத்துக்காக மஹிந்தவுக்கும் மைத்திரி தேவைப்பாட்டார். அதற்காகவே, சதிப்புரட்சிக்கான கட்டத்துக்கு மஹிந்த இணங்கினார்.   

ஆனால், சதிப்புரட்சியில் வெற்றிபெறவோ, ஆட்சியைத் தக்கவைக்கவோ முடியவில்லை. அது, முடியாமல் போனாலும், எப்படியாவது தேர்தலொன்றுக்குச் சென்றுவிட வேண்டும் என்கிற அவர்களின் நினைப்பிலும், உயர்நீதிமன்றம் தீயை வைத்துவிட்டது. அவ்வாறான கட்டங்கள், மஹிந்த மீதான மதிப்பைத் தென் இலங்கையில் பெருமளவு குறைத்துவிட்டது.   

மைத்திரி மீதான எதிர்பார்ப்பு, மதிப்பு என்பன ஏற்கெனவே படுபாதாளத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், சதிப்புரட்சிக்குப் பின்னரான அவரை, நாட்டு மக்கள் கவனத்திலேயே கொள்வதில்லை.

கிட்டத்தட்ட கோமாளியாகக் காணும் கட்டத்துக்கு வந்துவிட்டார். அப்படியான ஒருவரை முன்னிறுத்திக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதற்கு மஹிந்தவோ, அவரது அணியினரோ தற்போது தயாராக இல்லை.   

அதனால்தான், சதிப்புரட்சிக் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை முன்னிறுத்துவது சார்ந்து ஓரளவுக்கு தலையாட்டிய, பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள், அந்தத் தோல்வியின் பின்னர், அவரை முற்றுமுழுதாக வெட்டிவிடத் துணிந்துவிட்டார்கள்.   

அப்படியான கட்டத்தில்தான், தவிர்க்க முடியாமல் கோட்டாபயவை முன்னிறுத்த வேண்டியும் ஏற்பட்டிருக்கின்றது. என்றைக்கும் இல்லாத அளவுக்கு பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள், கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது சார்ந்து, தற்போது பேசத்தொடங்கிவிட்டார்கள். அது, மஹிந்தவின் மீதான அழுத்தமொன்றை விடுக்கும் அளவுக்கும் உருவாகியிருக்கின்றது.   

இந்த இடத்தில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது குறித்து கோட்டாபய வெளிப்படையாக அறிவிக்கும் கட்டத்துக்கு வந்திருப்பது சார்ந்து இன்னொரு விடயத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அதாவது, இன்றுவரை அமெரிக்கக் குடியுரிமையோடு இருக்கும் அவர், அதிலிருந்து விடுபட்டாலே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.   

அப்படியானால், அவர் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடும் கட்டத்துக்கு வந்துவிட்டாரா? அந்த முடிவை எடுப்பதற்கு, ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் நிச்சயமாக வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு வர வேண்டும். இல்லையென்றால், எதிர்காலத்தில் அவர் சர்வதேச ரீதியில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி ஏற்படலாம்.   

இன்று வரையிலும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து கோட்டாபயவை பாதுகாத்து வரும் காரணிகளில் அமெரிக்கக் குடியுரிமை பிரதானமானது. ஏனெனில், மனித உரிமை மீறல் குற்றங்களுக்காகத் தன்னுடைய பிரஜை ஒருவரை, சர்வதேச ரீதியில் தண்டிப்பதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதித்தது இல்லை. அதனால்தான், கோட்டாபய வெளிநாடுகளுக்குப் பயமின்றிச் சென்றுவர முடிகின்றது. 

அப்படியான கட்டத்தில், அவர் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுவாராக இருந்தால், அமெரிக்கா என்கிற பெரும் பாதுகாப்பை அவர் இழங்க வேண்டி ஏற்படும். அத்தோடு, தன்னுடைய பிரஜை அல்லாத ஒருவரைத் தண்டிப்பது சார்ந்து, அமெரிக்கா இன்னும் இன்னும் கரிசனையை வெளிப்படுத்தும். 

அப்படியான கட்டத்தில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் மாத்திரமே, அவருக்கு நாட்டின் தலைவர் என்கிற ரீதியில் சர்வதேச தண்டனைச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பு (immunity) கிடைக்கும்.   

அவ்வாறானதொரு நிலையில், தென் இலங்கையின் வாக்குகளை மாத்திரம் கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவிடலாம் என்கிற கட்டத்துக்கு கோட்டாபய எவ்வாறு வந்தார் என்கிற கேள்வி எழுகின்றது.   

வீழ்ச்சிப் பாதையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி, சதிப்புரட்சிக்குப் பின்னர் குறிப்பிட்டளவு மக்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.   

அத்தோடு, சஜித்துக்கு என்றைக்கும் இல்லாதளவுக்கு அந்தக் கட்சிக்குள் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ரணிலேகூட அந்தக் கட்டத்துக்கு வந்திருக்கின்றார். அப்படியான நிலையில், தென் இலங்கையில் சஜித்துக்கு இருக்கும் ஆதரவுத்தளத்தை மீறியும் தமிழ்,  முஸ்லிம் மக்களின் வாக்குகளை மீறியும் வெற்றிபெற்றுவிடலாம் என்று கோட்டாபய நினைக்கிறாரா? அப்படியானால், அது அசாத்தியமான ஒன்றுதான்.  

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சதிப்புரட்சியின்-தோல்வியில்-கோட்டாபயவின்-எழுச்சி/91-228061

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.