Sign in to follow this  
கிருபன்

சுமந்திரனை எதிர்த்தல் எனும் போதை

Recommended Posts

சுமந்திரனை எதிர்த்தல் எனும் போதை

Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 10 வியாழக்கிழமை, மு.ப. 10:53

  இலங்கை அரசியலை ஓரளவுக்குக் கவனித்து வருபவர்கள் அனைவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் வெறுக்கப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கிடைக்காத மீடிறனில், சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த எதிர்ப்புகள், தேவையான நேரங்களில் கேலிகளாகவும் 
வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.   

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் (2015) ஆண்டு, இலங்கை அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படுவதற்கு முன்பும், சுமந்திரன் இந்த எதிர்ப்பும் கேலியும் இருந்தது. ஆரம்ப காலத்தில், “தேசியப் பட்டியல் எம்.பி” என்று, அவரைக் கேலி செய்த காலமிருந்தது. ஆனால், இப்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதைத் தான் பார்க்க முடிகிறது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, ஏராளமான விமர்சனங்களை முன்வைக்க முடியும். அதன் ஆரம்பம் முதல் இப்போது வரை, அக்கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட விமர்சனங்களில் குறிப்பிடத்தக்க விமர்சனங்களை, அதன் பேச்சாளரும் அதன் இரண்டாம் நிலைத் தலைவர் போன்று செயற்படுகின்ற சுமந்திரன் மீதும் முன்வைக்க முடியும். இப்பத்தியாளர் உள்ளிட்ட தமிழ்ப் பத்தியாளர்கள் பலரால், அப்படிப்பட்ட காத்திரமான விமர்சனங்கள், இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன; இனிமேலும் முன்வைக்கப்படும்; முன்வைக்கப்பட வேண்டும்.   

ஆனால், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சில ஊடகங்களிலும் காணப்படும் சுமந்திரன் மீதான எதிர்ப்பு, பல நேரங்களில் எரிச்சலையும் சில நேரங்களில் நெற்றியையும் உள்ளங்கையையும் இணைக்கும் சேவையையும் செய்கின்றன. பேஸ்புக்கில் இருக்கின்ற கணிசமான தமிழ் இயங்குநிலைப் பயனர்கள், கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது தங்களைத் தாங்களே காண்பித்துக் கொள்கிறார்கள் என்ற அடிப்படையில், இதுவொன்றும் வியப்பான ஒரு விடயமும் கிடையாது. தேர்தலுக்கு அண்மையான காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான எதிர்ப்பு, பாரிய அளவில் வெளிப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும். எனவே, இந்த எதிர்ப்பும் கேலியும், ஓரளவுக்குப் புரிந்துகொள்ளப்படக் கூடியன. என்றாலும், எரிச்சல் உணர்வைத் தடுத்துவிட முடியாது.  

இப்படி, சுமந்திரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் திட்டித் தீர்ப்பவர்களுக்கு, பளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம், வெறும் வாயில் மெல்லுவோருக்கு, அவல் கிடைத்த போன்று தான் அமைந்திருந்தது.   

சுமந்திரனின் பெயரைக் குறிப்பிடாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் எனத் தெரிவித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) வெளியான பத்திரிகையொன்றில் வெளியான “செய்தி” தான், இச்சர்ச்சைகளுக்குக் காரணமாக அமைந்தது. கஞ்சா வைத்திருந்தோரைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் முயன்றபோது, பொலிஸாரை அவர்கள் தாக்கினர் எனவும், அதைத் தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவித்த அந்தச் “செய்தி”, அவர்களை விடுவிக்குமாறு, பொலிஸ் உயரதிகாரி மீது, குறித்த முக்கியஸ்தர், “குரைத்தார்” என்றும் குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர், அந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டிருந்தது. அதேபோல், வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்களை இல்லாது செய்யும் பொலிஸாரின் நடவடிக்கைகளில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீடு காணப்படுகிறது எனவும், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசனமடைந்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.   

ஏற்கெனவே காணப்படும் எதிர்ப்பு மனநிலைக்குத் தூபமிட்ட இச்செய்தியைத் தொடர்ந்து, சமூக ஊடக வலையமைப்புகளில் கேலிகளும் விமர்சனங்களும் எழுந்திருந்தன. அதேபோல், செய்தி இணையத்தளங்களில் பல கதைகள் கட்டப்பட்டிருந்தன. இத்தனைக்கும், சுமந்திரனின் பெயர், அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பெயர் எப்படியோ கசிந்திருந்தது. நகைச்சுவைகள் கொடிகட்டிப் பறந்தன.   

இந்த எதிர்ப்புகளும் கேலிகளும், ஒருவரை மாத்திரம் இலக்குவைத்திருந்தன: சுமந்திரன். ஆனால், இந்தக் கேலிகளுக்கு நடுவில், நான்கு தமிழ் இளைஞர்கள், கஞ்சா கடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டார்கள் என்பது மறக்கப்பட்டது. அந்த நான்கு பேரும், குற்றவாளிகள் போன்றே, இக்கருத்துகள் அமைந்தன.   

ஆனால், வெளியிடப்பட்ட அந்தச் “செய்தி”யில், ஏராளமான ஓட்டைகள் காணப்பட்டிருந்தன. அந்தச் “செய்தி”யின், தொனி, ஒரு வகையான இனவாத நெடியைக் கொண்டிருந்ததாகக் காணக்கூடியதாக இருந்தது. அதிலும் குறிப்பாக, “இப்படித் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறார்களாம்” என்று, பொலிஸ் அதிகாரி ஒருவர் சொன்னதாகக் கூறப்பட்ட கருத்து, அண்மைக்கால அரசமைப்பு நெருக்கடியின் போது, கூட்டமைப்பின் செயற்பாடுகளால் எரிச்சலடைந்த ஒருவரின் கருத்தென்பது தெளிவு. அதேபோல், சம்பந்தமேயில்லாமல், கிளிநொச்சியைப் பற்றி விவரிப்பதற்கு, “தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையாக அமைந்த பகுதி” என்று கூறப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்துக்குமிடையில் எச்சம்பந்தமும் இல்லையென்பதைப் பற்றிக் கவனஞ்செலுத்தியிருக்கவில்லை. அதேபோல், குறித்த தகவல் தொடர்பாக, சுமந்திரன் உள்ளிட்ட எவருடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு, அச்சம்பவம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை.   

இவற்றுக்கு மேலதிகமாக, வடக்கில் மேற்கொள்ளப்படும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழ் அரசியல்வாதிகள் இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு, மிகப் பாரதூரமானது. பொதுவான அக்குற்றச்சாட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே இலக்குவைத்தது என்பதில் எச்சந்தேகமுமில்லை. ஆனால், அதற்கான ஆதாரமாக எதையும் சமர்ப்பித்திருக்கவில்லை. பொதுவாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கும் கஞ்சா கடத்தல்களுக்குமிடையில் தொடர்புகள் இல்லையென்பது தெளிவு. எனவே, மேற்படி விமர்சனம், அடிப்படை ஆதாரங்களற்ற ஒரு விமர்சனம்.   

இப்படி, குறித்த “செய்தி” தொடர்பில் இத்தனை கேள்விகள் காணப்படும் நிலையில், அவற்றைப் பற்றிய எந்தவொரு கவனமோ, சட்டையோ இன்றி, சுமந்திரன் மீதான அவதூறுக்காக அந்தச் “செய்தி”யைப் பயன்படுத்துகின்ற மனநிலை, ஆபத்தானது. ஏனெனில், சுமந்திரனோடு சேர்ந்து, தமிழ் இளைஞர்கள் நால்வரும், அவதூறைச் சுமந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்புகள் என்று சொல்கின்ற குறித்த தரப்புகள், அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கவில்லை.   

சுமந்திரன் மீதான கண்மூடித்தனமான இந்த எதிர்ப்பு, ஒரு கட்டத்தில், யதார்த்தங்களையும் நன்மைகளையும் பற்றிக் கவலைப்படாமல் செல்வதற்கு இடமுண்டு. ஒரு கட்டத்தில், தமிழீழம் பெற்றுத் தருவதாகச் சுமந்திரன் சொன்னால், “இல்லையில்லை. தமிழீழம் கூடாது. ஒற்றையாட்சி தான் வேண்டும்” என்று கேட்கவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.   

சுமந்திரனை நியாயப்படுத்துவது போல் இப்பத்தி தென்பட்டாலும் கூட, அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் அவசியமற்றவை என்பது, இப்பத்தியின் கரு கிடையாது. சுமந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் அவசியமானவை. ஆனால், உண்மைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட விமர்சனங்களாக அவை இருக்க வேண்டும். நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ, அரசியல் தீர்வு தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கதைக்கக்கூடிய ஒரே ஆளாக, சுமந்திரன் தான் இருக்கிறார். அரசியலிலிருந்து சுமந்திரன் ஓய்வுபெற்று, தற்போது 85 வயதாகியுள்ள சம்பந்தன் ஐயா காலமாகிவிட்டால், இப்பணிகளை யார் செய்வர்? அடுத்த தலைமை யார்?   

மாற்றுத் தலைமைகளாகத் தங்களை அடையாளப்படுத்தியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் என்று எவருமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சுமந்திரனதும் முயற்சிகள் தவறென்றால், அவற்றுக்கு மாற்றான, யதார்த்தமான திட்டமாக எதை வைத்திருக்கிறார்கள் என இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. கூட்டமைப்பை எதிர்ப்பது மாத்திரம் தான், அவர்களது ஒரே அரசியல் நோக்காகக் காணப்படுகிறது போன்று தென்படுகிறது. இந்நிலையில், சுமந்திரன் மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு, எதைச் சாதிக்கப் போகிறது?     

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனை-எதிர்த்தல்-எனும்-போதை/91-227776

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கஞ்சா கடத்தலுக்கு பிறகு எதிர்பார்த்த ஒரு கட்டுரை இந்த கட்டுரை என்ன இதைவிட சுமத்திரன் காந்தியத்தை கடைப்பிடிப்பவர் வாழ்வில் என்று நிறுவி ஒரு கட்டுரை வந்தாலும் ஆச்சரியபடுவதுக்கில்லை ஆனால் இந்த திரி சூடாகும். 

Share this post


Link to post
Share on other sites

இன்று மேற்குலகையும் இந்தியாவையும் அனுசரித்து கருமமாற்றுவதைத்தவிர வேறு மார்கங்கள் இல்லாத நிலையில் சுமந்திரனின் கடைசிப் நாடாளுமன்றப் பேச்சு இராஜதந்திர அடிப்படையில் வரவேன்க்கபடவேண்டியது. இறுதி யுத்தத்தை மேற்குலகம் இனக்கொலையென ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல் என்பதை மறுக்கவில்லை. மேற்குலகு புலிகள் மீது போர்குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டியுள்ளது. இராஜதந்திர ரீதியாக படைகள் புலிகள் மீதான குற்றச்சாட்டை சமன்படுத்தாமல் வேறுபடுத்துவதற்க்கு மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல் போர்குற்றங்கள்  போன்ற சொற்களை தெரிந்து பயன்படுத்துவது அவசியம் என சுமந்திரனிடம் கேட்டுக்கொள்கிறேன். அவருடைய பேச்சு இராஜததிர ரீதியாக இன்றைய நிலையில்  விமர்சனங்களுடன் வரவேற்க்க வேண்டியது 

Edited by poet

Share this post


Link to post
Share on other sites
On 1/10/2019 at 8:54 AM, கிருபன் said:

 

 

கவிஞரே கடந்த பத்து ஆண்டுகளில் மேற்குலகையும் கிந்தியாவையும் ஆதரித்து சம் சும் கும்பல் தமிழருக்கு பெற்றுக்கொடுத்ததென்ன என்பதையும்  சொல்லிவிட்டு போங்களேன்? ஒரு மாநில அரசுக்கான அதிகாரத்தையேனும் பெற முடிந்ததா?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this