Sign in to follow this  
nunavilan

அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வல்வளைப்பின் குறியீடுகள்

Recommended Posts

அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வல்வளைப்பின் குறியீடுகள்- செல்வி-

 

DmQETRYUwAA5LUd-678x381.jpg

தொன்மையான வாழ்வியல் மரபைக் கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வல்வளைப்புச் செய்யப்பட்டு, தேசிய இனத்தின் அடிப்படைக் கூறான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துகொண்டிருக்கிறோம். நில ஆக்கிரமிப்பு என்பது வெறுமனே சடப்பொருளொன்று தன் அதிகாரத்தை இழப்பது என்பதல்ல. அது தேசிய இனத்தின் பொருண்மிய, பண்பாட்டு, மரபுகளை வல்வளைப்புச் செய்வதன் கண்ணுக்கு புலனாகின்ற வடிவம். மரபுவழித் தொன்மையினடியாக வந்த நாங்கள் ஒருவர் என்ற உள இயல்பின் பின்னல்களின் கட்டமைக்கப்பட்டிருக்கும் தேசிய இனத்தின் தேசமாக வாழ்தலுக்கான அவாவினை மரபு வல்வளைப்பின் மூலம் அழித்துவிடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டு, ஈழ மண்ணில் கட்டமைக்கப்பட்ட வல்வளைப்பினை ஸ்ரீலங்காவின் அரச அதிகாரம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. புத்தர் அனுராதபுரத்து மலைகளில் நின்றாலென்ன? இருந்தாலென்ன? கிடந்தாலென்ன.. அவர்களுக்கு கடவுள். ஆனால் எங்கள் மண்ணில் புத்தர் சிலைகளும் ஆக்கிரமிப்பின் குறியீடுகளே. தமிழர் மறவழி விடுதலைப் போராட்டத்தை அழித்தொடுக்கியதன் குறியீடாக, அரச இயந்திரத்தினால் நிறுவப்பட்டிருக்கும் போர் வெற்றிச் சின்னங்கள் இனவழிப்பின் குறியீடாக எமக்குத் தெரிகின்றன. தமிழர் தாயகத்திலிருக்கும் புத்தர் சிலைகளும் அந்த இராணுவ வெற்றிச் சின்னங்கள் கூறி நிற்கும் அதிகாரத்தின் மொழிக்கு கொஞ்சமும் குறைந்தவையல்ல.

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாத இயந்திரத்தின் இந்த தான்தோன்றிப் புத்தர்களின் பின்னாலுள்ள பண்பாட்டு மடைமாற்ற நோக்கைப் புரிந்துகொள்ள தமிழ்மக்களுக்கு ஆழமான அரசறிவியல் தேவைப்படாது. மறப்போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த காலத்தில் தமக்கு பின்னால் தங்கள் போராளிப் பிள்ளைகள் நிற்கிறார்கள் என்ற துணிவில் வல்வளைப்பிற்கெதிரான மக்கள் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், கைகொடுப்பதற்கான தலைமை இல்லாத நிலையில் அதிகாரத்தின் கெடுபிடிகளுக்குப் பயந்திருந்தாலும், ஆக்கிரமிப்புக்களை எதிர்க்க வேண்டிய தேவையை மக்கள் உணர்ந்தும், அந்த உணர்ச்சிகளை தேக்கியும் வைத்திருக்கிறார்கள். மாணிக்கமடுவிலிருந்து குருந்துமலை வரையிலான புத்தரின் நில ஆக்கிரமிப்பிற்கான மக்களின் பதிலிறுத்தல்கள் தேசிய இனமாக இருக்கும் விருப்பையும் தேவையையும் சுட்டி நிற்கின்றன.

தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தளவில் வரலாறு நெடுகிலும் மக்கள் மீதான தேசிய நீக்கம் அதிகாரங்களினால் செயற்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஈழத்துத் தமிழர்களின் நிலங்களின் மீதான வல்வளைப்புக்களிற்கான கருவியாக புத்தர் சிலைகள் முளைத்துக்கொண்டிருப்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்த அரச பேரினவாதத்தினால் மட்டுமல்லாது, உலகமயமாக்கலுக்கான சந்தைக்காக இலங்கையைப் பயன்படுத்தும் மேற்குநாடுகளும் தமது பொருண்மிய நலன் சார்ந்ததான ஒரு சந்தைக் கோட்பாட்டின் கீழ் தேசிய இனங்களின் இருப்பைச் சிதைக்கின்ற அத்தனை செயற்பாடுகளையும் செய்து வருகின்றன. அந்த அதிகாரங்கள் சிங்கள அரசுடன் இணைந்தோ தனித்தோ தமிழர் தாயகத்தை காவுகொள்கின்றன. மதம் என்னும் போர்வையில் கிறிஸ்தவ சபைகளினூடாக இலங்கைக்கான முதலீடுகளைப் பரிமாற்றம் செய்து வரும் உலக முதலாளிகள் இலங்கை என்னும் சந்தைக்காக தமிழ்த் தேசிய இன அடையாள அழிப்பைத் தமிழர் தாயகத்தில் செய்து வருகின்றனர். போரிற்கு பின்னரான ஏதிலி மக்களின் அவலங்களை கேடயமாக்கிக் கொண்டு, அந்த மக்களுக்கு உதவுகிறோம் என்னும் முகமூடிகளுடன் கிறிஸ்தவ சபைகள் தொண்டு நிறுவனங்களாகவும் ஆற்றுகைப்படுத்தல்களுக்கான வெளிகளாகவும் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றுள்ளன. மதம் செய்யும் அதே வேலையை எமது சமூகம் செய்யத் துணிந்தால் மதங்களின் பெயரால் நிகழும் நுண் சிதைவுகள் விலகிப்போகும்.

ஸ்ரீலங்கா அரசினாலும் ஏனைய அரச பயங்கரவாதங்களின் கூட்டினாலும் மதமானது தேசிய இன நீக்கத்தினைச் செய்வதற்குரிய நுண்ணிய அரசியல் வடிவமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா, தெற்காசியாவிலுள்ள தேசிய இனங்களின் தனித்த அடையாளங்களை அழித்து, அவர்கள் ஒரு தனித்த தேசமாக உருவெடுப்பதைத் தவிர்ப்பதற்கான அத்தனை வேலைகளையும் செய்யும். இந்தியாவின் அகண்ட பாரதக் கொள்கை(ளை)க்குள் பலியாகிப் போனது ஈழமும் தான். இந்தியாவின் இந்த நிலைப்பாடானது தேசிய இன மக்களிற்கு இந்தியாவிற்கு எதிரான மனவுணர்வை உண்டாக்கும் என்று கணித்த இந்தியா, தனது வல்லாதிக்கத்திற்கு எதிரான மனவுணர்வை மக்கள் அடையாமலிருப்பதற்காகவும் தன் அதிகாரத்திற்கு எதிராக மக்களின் குரல் எழும்பாவண்ணமும் தடுக்கின்ற ஒரு தடுப்புப் பொறிமுறையாக மதம் என்ற பண்பாட்டுப் படையெடுப்பை தேசிய இனங்கள் மீது நிகழ்த்தி வருகின்றது. மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பில் அவர்களது மரபு சார்ந்த பண்பாட்டு அரசியல் முதன்மைக் கூறாக இருக்கின்றது. தேசிய இனங்களின் தனித்த பண்பாட்டுக் கூறுகளை  அழிக்கும் நோக்கோடு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா தனது இந்துத்துவ அடையாளத்தைச் சுமத்தி தனது பண்பாட்டு வல்வளைப்பைச் செய்து வருகின்றது. இந்தியாவின் இந்த ஆக்கிரமிப்பானது சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு கிஞ்சித்தேனும் குறைந்ததல்ல. சிங்கள பேரினவாதம் வெளித்தெரியக்கூடியதாக மக்களின் குருதி வாடைகளினால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளை நிகழ்த்த, இந்தியாவின் ஆக்கிரமிப்பானது வெளித்தெரியாத முறையில் நிகழும் உயிர்க்கொல்லி புற்றுநோயாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழர்களின் வாழ்வியலும் இறையியலும் வைதீகத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கின்றது. அது மீட்கப்படாத வரையில் இந்தியாவின் இந்தப் பண்பாட்டு ஊடுருவல் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். இறுதியில் இனம் என்ற அடையாளத்தையும் இருப்பையும் தொலைத்துவிட்டு இந்துத்துவாவினால் முழுமையாக சூழப்பட்டுவிடுவோம். சிங்கள பேரினவாதம் எங்களுக்கு எதிரி என்ற பிரகடனத்துடன் தன் வல்வளைப்புக்களைச் செய்கின்றது. ஆனால் இந்துத்துவா எங்களை அழிக்க எங்களையே தற்கொலை செய்ய வைக்கின்றது. எங்களினுள்ளே இருக்கும் பிளவுகளுக்குள்ளும் மதம் சார்ந்த மயக்கங்களுக்குள்ளும் இலகுவாக ஊடுருவி எங்கள் அடையாளங்களை அழிப்பவர்களாக எங்களையே மாற்றி, எங்கள் அடையாளங்களின் மீது எங்களையே கேள்விகேட்க வைக்கும் அரசியல் தந்திரத்தை இந்தியா நன்கு பயன்படுத்துகின்றது. அகண்ட பாரத விரிவாக்கலுக்கான பெருஞ்சமய உருவாக்கத்தினுள் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறைமைகள் காணாமலாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன தேசிய இனத்தின் அடையாளங்களை மதக் கருத்தியலின் தளத்தில் நின்று நோக்கும் நிலையானது எமக்கு வந்திருக்கின்றது. தமிழர்களின் தேசிய அடையாளங்களை மறைத்து, இந்துத்துவா என்ற கருத்தியலின்வழி சிந்தனை செய்கின்ற செம்மறி ஆடுகளாக எம்மை மாற்றிக்கொண்டிருக்கின்றது இந்தியா. தேசியத்திற்குரிய மொழி, அரசு, மதம், மரபு, பொருண்மியம், வரலாறு என்பவற்றை அடியாகக் கொண்டு எழுந்த சிலப்பதிகாரக் கண்ணகி வழிபாடு தமிழர்களின் வழக்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டும் உருமாற்றப்பட்டும், ஆரிய வழி வந்த தெய்வங்கள். எம்மை ஆக்கிரமித்துள்ளன.  தமிழர்களின் வழிபாட்டு வழக்காறுகளில் வேள்விகளும் மடைகளும் தொன்று தொட்டு நிலவி வருபவை. ஆனால் இன்று மிருக பலியைத் தடுப்பதனூடாக சட்டரீதியாக வழக்காறுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது வராத புத்தரின் அருட்பார்வை மிருகங்களுக்கு கிடைத்திருக்கின்றதெனில் அதன் பின்னாலிருக்கும் மரபு அழிப்பு அரசியலை இலகுவாகக் கடந்துவிட முடியாது. அதன் பின்னாலுள்ள அரசியல் புரியாது, இந்துத்துவாவின் கூலியாட்களான எம்மவர்களும் அதற்குத் துணைபோவது இன்னமும் வருத்தமான விடயமே.

Anch-490x297.jpgபுத்தர் சிலைகளின் ஆக்கிரமிப்புக்கு சமமாக அனுமான் சிலைகளும் தனிமாந்தச் (ஆ)சாமிகளின் பசனை மடங்களும் வடக்கு கிழக்கை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கின்றன. புத்தர் சிலையினால் இன அழிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கின்றது என அனுமார் சிலை நிழலிலே கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்குமளவுக்கு, எமது பிரக்ஞையை இந்து மதம் மறைக்கிறது. மிகப்பெரும் பண்பாட்டு ஊடுருவல்களே இந்த அனுமார் சிலைகள் என்ற இனம் சார்ந்த புரிதலுக்கு வருவதை மதம் தன் மதத்தினால் விடாது. படித்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் யாழ்ப்பாண சமூகத்தில் தான் சாயி பாபா, சீரடி பாபா, அம்மா பகவான், ஐயப்பன், பிறேமானந்தா, அனுமான் என இந்திய ஆதிக்க வலயம் தன் வலையை மிக அதிகமாக விரித்துள்ளது. இலங்கையை அழித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் அனுமான் என்ற குரங்கிற்கு கோவில் கட்டி, அதனை வணங்கும் சமூகம் காலப்போக்கில் மகிந்தவுக்கும் கோவில் கட்டி வழிபட்டாலும் வியப்பில்லை. தீபாவளி எப்படி எங்கள் பண்டிகையாக அடையாளப்படுத்தப்படுகிறதோ அதே போல ஹோலிப் பண்டிகையும் ரக்ச பந்தனும் எம் பண்டிகைகளாகும் நாள் தொலைவிலில்லை. கிராமியத் தெய்வங்களிடம் சென்று நோய்நீக்கிய மக்கள் இன்று பாபாக்களின் காலடிகளில் வீழ்ந்து கிடக்கிறார்கள். குறிப்பாக யாழ்ப்பாணிய படித்த வர்க்கம் இதன் சூழுக்குள் அமிழ்ந்து கிடக்கிறது. அரசர் எவ்வழி: குடிகள் அவ்வழி என்பார்கள். நாங்கள் அடையாள அழிப்பு என்றுசொல்லிக்கொண்டிருக்க, பிறேமானந்தாவுக்கு சிலை வைக்குமளவுக்குபகுத்தறிவுவாதியான முதலமைச்சரை தலைவராக கொண்டாடும் சமூகத்திடம்இதைவிட வேறெதை எதிர்பார்க்க இயலும்,?

தமிழர்களின் தெய்வமாக அடையாளப்படுத்தப்படும் முருகனையும் ஈழத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றெனக் என கூறப்படும் நல்லூரையும் அதன் வைதீகதாக்கத்திலிருந்து மீட்டெடுக்க எம்மால் முடியுமா? தமிழ்மொழியை சிறு பிழை விட்டு சிங்களவன் எழுதினாலே துள்ளிக் குதிச்சு, கூத்தாடி திட்டித் தீர்க்கும் நாங்கள் தான், பொருள் தெரியாத சமசுகிருதத்தில் பிராமணன் வழிபாடு செய்ய கைகளை கூப்பி, தரையில் விழுந்து எழுகிறோம். தனிச் சிங்களச் சட்டம் வந்தபோதும் சரி,  எம் மொழி மீதான ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தபோதும் சரி உரிமை என்று கொதித்தெழுந்த எம்மைச் சுற்றி, சமசுகிருதமயமாக்கல் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலும் கண்மூடி கும்பிட்டுக்கொண்டிருக்குமளவுக்கு மதம் எங்கள் பகுத்தறிவை மறைத்து வைத்திருக்கிறது. அண்மையில் நல்லூரில் முருகனின் மேல் சமசுக்கிருதத்தில் பதிகம் பாடப்பட்ட போது, எங்கள் மொழியுரிமை எங்கே போனது? நல்லூர் வீதியிலே உரிமைக்காக இறந்துபோன திலீபன் அண்ணாவின் ஈகமெல்லாம் மொழிக்காக இல்லையா? ஆரிய குளத்து பிரித்தைவிடவும் நல்லூரில் ஒலித்த சமசுக்கிருதம் கெட்டசொற்களாக தோன்றாமைக்குமதத்தை மறைத்த மாமத யானை மதமா?

கதிர்காம முருகனிடம் கையேந்திய நாங்கள் இன்று ஆகாய விமானமேறி ஐயப்பனிடம் செல்கிறோம். இந்திய அரசும் இலங்கை அரசும் சாயிபாபாவிடமும் ஐயப்பனிடமும் செல்வதற்காக சலுகைகளை எமக்கு வழங்குவதன் பின்னணி என்ன என்று சிந்திக்கத் தெரியாத முட்டாள்களாகிவிட்டோம். பிறப்பு முதல் இறப்பு வரையிலும் தமிழர்களது வாழ்வியல் சடங்குகளில் பிராமணனும் சமசுக்கிருதமும் தவிர்க்கமுடியாதவைகளாகிவிட்டன.

திருமணத்திலும் புரியாத மொழியில் பிராமணன் என்னென்னவோ சொல்ல, அறிவிலிகளாகத் தலையாட்டிக்கொண்டிருக்கிறோம். அந்த மந்திரங்களில் அந்தப் பெண்ணைப் பற்றி, அந்தப் பெண்ணைப் போகப் பொருளாக்கி, நுகரும் நேரசூசியை உருவாக்கும் (கேவலங்கெட்ட  வழக்கம்  கேரளாவில் 50 வருடங்களுக்கு முன்னர் கூட நம்பூதிரிகள் என்ற ஆரியப் பிராமணனிடம் தமது பெண்டிரை கலவியின்பம் அடைவதற்காக கொடுத்து, நான்காவது நாள் வீட்டுக்கு அழைத்து வரும் வழக்கே நாலாம் சடங்காக இன்றும் தொடரும் எச்சமாகும்)   என்ற பொருள் இருக்கின்றது என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தன் வீட்டுப் பெண்களைப் பற்றி ஒருவன் தப்பாக பேசினால் தலையை வெட்டும் மரபில் வந்த எங்கள் மக்கள், அத்தனை பேருக்கு முன்னால் அந்தப் பெண்ணைப் பற்றி, அத்தனை கேவலப்படுத்தியும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். காரணம் என்ன? மதத்தின்பிடியில் எம் அறிவைத் தொலைத்துவிட்ட சமூகம் வேறு எப்படி இருக்கும்? எமது மனக்குறைகளை எமது மொழி தெரியாத சாமியிடம் முறையிடுவதும், அதற்கு பிராமணனை முகவராக்குவதும் எத்தனை கேவலமானவிடயம். என் குல தெய்வத்திடம், என் முன்னோரிடம், எனக்குத் தெரிந்த மொழியில் கதைத்துக்கொண்டிருந்த எம்மை, இன்று வாய்கட்டி நிற்க வைத்திருக்கிறது இந்துத்துவா.

இந்து என்ற சொல்லின் பின்னாலிருக்கும் தமிழின அடையாள அழிப்பினையும் இந்தியாவின் ஆதிக்கத்தையும் புரிந்துகொள்ள முடியாதவர்களாக “இந்துக்களாக” மாறிக்கொண்டிருக்கிறோம். சமஸ்கிருதம் என்னும் ஆரியத்தின் அரசியல்மொழி இந்துமதத்தினூடாக எங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. ஒரு காலத்தில் புராண இதிகாசங்களின் வழி புனித நிலமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தியாவை ஈழத்தவர்களின் புனித நிலமாக்குவது என்பதன் அரசியல் புரிந்துகொள்ளாதவர்களாய், கிடைக்கும் விடுமுறைகளில் குருவாயூரப்பனிடமும் திருப்பதியிலும் இலங்கை ரூபாக்களும் டொலர்களும் யூரோக்களும் எம்மவர்களால் கொட்டிக்கொடுக்கப்படுகின்றன.

இந்த வல்வளைப்புக்களிலிருந்து மீள வேண்டுமெனில் வைதீக நீக்கம் மேற்கொள்ளப்படவேண்டியிருக்கின்றது. ஆனால் அது உடனடியாக சாத்தியப்படாது. ஆயினும் மதம் சார்ந்த வல்வளைப்புக்கள் சார்ந்த தெளிவு எம்மிடம் உடனடியாக வரவேண்டும். இல்லையெனில் பேரீட்சைமர நிழல்களிலும், அனுமார் சிலைகளின் கீழும், அல்லேலூயா பாடிக்கொண்டும், புத்தரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டும் போராடிக்கொண்டிருக்கும் மூடர்களாக இருப்போம். அவ்வாறு நிகழாமையை உறுதிப்படுத்தவேண்டுமெனில் எம்மண்ணிற்குரிய வழக்காறுகளை மீள் கண்டுபிடிப்புச் செய்தோ அல்லது இருப்பவற்றைத் தொலைத்துவிடாது காப்பதோ எம் தலையாய கடமையாகின்றது. புத்தரின் ஆக்கிரமிப்பை தடுத்த இளைஞர்கள் என கொண்டாடும் அதே இளைஞர்கள் தான் நஞ்சுமாலை சூடிய கழுத்துகளில் ஐயப்பன் மாலையை அணிகின்றனர். இனம் சார்ந்த தெளிவு இருக்குமாயின் இந்த அனுமானின் ஆக்கிரமிப்புகள் இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட வேண்டும். கிழக்கு மண்ணிலும் அனுமானின் சிலை வைக்கப்பட்டு விட்டது. யாழ்ப்பாணத்தைப் போலல்லாது, இன்றும் எமது மரபு வழக்காறுகளின் ஆவண இடமாகத் திகழும் கிழக்கும் இந்துத்துவாவின் கைகளில் விழுந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆலமரங்கள் தறிக்கப்பட்டு, பனைகள் வடலியாகவே கருக்கப்பட்டு பேரீட்சை மரங்களின் எழுச்சி கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. சிங்களமயமாக்கலுக்கு எதிராக  மறப்போராட்டம் செய்த மொழியைப் பேசுபவர்கள், இன்று அரபு எழுத்துக்களின் பின்னால் திரளும் அளவுக்கு மதங்களினால் மதம் பிடித்துள்ளனர்.

ஊடகங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் புத்தர் சிலை பற்றிப் பேசுமளவுக்கு, அனுமன் சிலையைப் பற்றியும் பேசும் நிலை வரும்போதுதான் இனம் குறித்ததுதம் தேசிய அடையாளம் குறித்ததுமான தெளிவு வரும். வல்லையில் சிறு கல்லில் அமர்ந்த குரங்கு, இன்று முனியப்பரை விடவும் மேலோங்கி, தனக்கென ஒரு கோவிலை அமைக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. அவற்றை எப்போது ஓட ஓட துரத்தப்போகிறோம்? உலகில் அழிக்கப்பட்ட பின்னும் மீளெழுச்சியடைந்த தேசிய இனங்கள் அவர்களின் அடையாளங்களையும் நிலத்தையும் பேணியதாலேயே சாத்தியமாகின. வரலாற்று அடையாளங்களை, வழக்காறுகளை நிலைநிறுத்துவதில் இனமாக சேர்ந்து முனைப்பாக நிற்க வேண்டும். ஆனால் எமது அடையாளங்களை தாழ்த்தி, இந்துத்துவா அடையாளங்களை உயர்த்தி, அந்த இந்துத்துவ அடையாளங்களை இனத்துக்கான அடையாளங்களாக மடைமாற்றி, இந்து அடையாளங்களை தமிழ் அடையாளங்களாக நினைக்கும் இழிநிலையை உடனடியாக மாற்ற வேண்டும்.

– செல்வி-

http://www.kaakam.com/?p=1296

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this