Jump to content

தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்

December 30, 2018

DSC00935.jpg?resize=800%2C450

வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார். இது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்;. அவ் எச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அனாவசியமாகச் சனங்களைப் பீதிக்குள்ளாகும் நடவடிக்கை அது என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் புயலின் சேதம் பெரிதாக இருந்திருந்தால் இப்பொழுது வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்கத் திரண்டது போல தமிழ் மக்கள் வேறுபாடுகளை மறந்து திரண்டிருப்பார்கள் என்பதை மேற்படி அளவுக்கு அதிகமாக எச்சரிக்கைகள் முன்றுணர்த்தின.

எனினும் கஜாப் புயல் தாக்கப்போவதைக் குறித்து இணையப்பரப்பில் குறிப்பாக முகநூல் மற்றும் கைபேசிச் செயலிகளால் பரப்பப்பட்ட எச்சரிக்கைககள் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகளின் பின்னணியில் தனிநபர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காட்டிய அதேயளவு அக்கறையை அரசியல்வாதிகளோ அல்லது கட்சிகளோ காட்டியிருக்கவில்லை என்ற ஓர் அவதானிப்பும் உண்டு.இயற்கை அனர்த்தமொன்றைக் குறித்துத் தமிழ் மக்களை முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறு அநேகமாக எந்த ஒரு தலைவரும் அறிவித்திருக்கவில்லை. ஆபத்து வேளையில் தனது குடும்பத்தவர்களை எச்சரிப்பது போல தமது மக்ககளையும் எந்த ஒரு தலைவரும் பகிரங்கமாக எச்சரித்திருக்கவில்லை.

அது மட்டுமல்ல புயல் தாக்கலாம் என்ற எச்சரிக்கைகளின் பின்னணியில் அடுத்த நாள் பாடசாலைகளை இயக்குவதா? இல்லையா? என்பதைக் குறித்துச் சிந்திப்பதற்கும் ஒருவரும் இருக்கவில்லை. அது பரீட்சைக் காலம் ஆண்டிறுதிப் பரீட்சை. எனவே ஒரு பகுதியில் குழம்பினால் அப்பகுதிக்குத் தனியாக ஒரு பரீட்சையை ஒழுங்கு படுத்தவேண்டியிருக்கும். எனவே அது தொடர்பில் முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் தீபாவளிக்கு திடீரென்று விடுமுறை அறிவித்த வடமாகாண ஆளுநரும் உட்பட எந்த ஓர் உயர் அதிகாரியும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பது பற்றிச் சிந்தித்திருக்கவில்லை. புயல் தாக்கியதும் அன்று காலை அதுவும் பாடசாலைக்கு பிள்ளைகள் வரத்தொடங்கிய பின்னரே ஆளுநர் அலுவலகம் விடுமுறை அறிவித்தது. சில பாடசாலைகளில் காலைப் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது அறிவிப்புக் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகம் திணறியது அரச அலுவலர்கள் தான் பள்ளிக் கூடத்தில் பிள்ளையை இறக்கிவிட்டு அலுவலகத்துக்குப் போனவர்கள் உடனடியாக திரும்பி வந்து பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு போய் வீட்டில் விடுவது எப்படி?

இது தொடர்பாக வடமாகாண ஆளுநரின் முகநூல் பக்கத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பரீட்சை ஒரு பகுதியில் குழம்பியதால் மாகாணம் முழுவதுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டி வந்தது என்ற தொனிப்படி ஆளுநரின் முகநூலில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. இது தொடர்பில் ஏன் முன்கூட்டியே சிந்தித்திருக்கவில்லை என்ற தொனிப்பட ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். திருப்தியான பதில் கிடைக்காத போது மற்றொருவர்; அம்முகநூல் கணக்கை இயக்குவது ஆளுநரா அல்லது யாராவது அட்மினா என்றும் கேட்;டிருந்தார். ஆளுநரின் விரைந்து முடிவெடுக்காப் பண்பை விமர்சித்த ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் விக்னேஸ்வரனை முன்பு விமர்சித்தீர்கள் இப்பொழுது நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.

காஜா புயலுக்கு அடுத்தநாள் பாடசாலையைத் திறப்பதா இல்லையா என்ற விவகாரத்தில் காணப்பட்ட விரைந்து முடிவெடுக்காப் பண்பானது வடக்கில் அரசியல் தலமைத்துவ வெற்றிடம் உள்ளது என்பதைக் காட்டியது. அதோடு தமிழ் நிர்வாகிகள் அனர்த்த காலங்களில் எப்படிச் செயற்படுவார்கள் என்பதையும் காட்டியது. எமது கல்வி முறைமை ஆபத்தான தருணங்களில் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடும் என்பதையும் காட்டியது. தற்துணிபோடும் முன்யோசனையோடும் முடிவெடுக்கவல்ல அதிகாரிகள் இல்லையா? என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்பு வன்னியில் பெருகிய வெள்ளம் மேற்படி விமர்சனங்களையும் சேர்த்து அடித்துக்கொண்டு போய்விட்டதா? வெள்ளம் பெருகி சனங்கள் இடம்பெயரத் தொடங்கியவுடன் சமூக வலைத்தளங்களும் கைபேசிச் செயலிகளும் வேகமாகச் செய்திகளைப் பரப்பின. கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் அரச கட்டமைப்புக்களும் மதநிறுவனங்களும் பல்கலைக்கழக மாணவர்களும் சில தனிநபர்களும் வேகமாகச் செய்திகளைப் பரப்பி உதவிகளை ஒருங்கிணைத்தார்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உடனடியாக உதவிக்கு வந்த தரப்புக்களுள் படைத்தரப்பும் ஒன்று.

எல்லாக் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் வெள்ளத்தில் இறங்கியிருக்கிறார்கள். எல்லாக் கட்சித்தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி சென்றிருக்கிறார்கள். அநேகமாக எல்லாத் தமிழ் மீடியா நிறுவனங்களும் கிட்டத்தட்ட தொண்டு நிறுவனங்களைப் போல செயற்பட்டிருக்கின்றன. வன்னியிலுள்ள ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியுலகத்திற்குப் பரப்பியது மட்டுமன்றி நிவாரணப் பணிகளிலும் உழைத்திருக்கிறார்கள். அதே சமயம் கொழும்பு மைய ஊடகங்கள் இதுவிடயத்தில் போதியளவு கவனத்தைக் குவிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.

குறிப்பாகப் படைத்தரப்பு ஆபத்தில் உதவியது. கண்டாவளை அரச அலுவலகம் ஒன்றில் வருட இறுதி கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த அரச அலுவலர்களுக்கு வெள்ளம் அவர்களை சூழ்ந்து வந்தது தெரியவில்லை. படைத்தரப்பே அவர்கள் பாதுகாப்பாக வெள்ளத்தை கடப்பதற்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

பேரிடர்களின் போது பொது மக்களுக்கு உதவுவதும் அவர்களை பாதுகாப்பதும் படைதரப்பின் கடமையாகும். படைத்தரப்பு எனப்படுவது அரசு கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். முப்படையை சேர்ந்த அனைவரும் அரசு ஊழியர்களே. எனவே பேரிடர்களின் போது பொது மக்களை பாதுகாக்க வேண்டியது அரச கட்டமைப்பின் ஓர் அங்கமாகிய படைத்தரப்புக்குள்ள ஒரு பொறுப்பாகும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை யுத்த களத்தில் படைத்தரப்பு இன ஒடுக்குமுறையின் பிரதான கருவியாகச் செயற்பட்டது.அனைத்துலகச் சட்டங்;களை மதிக்கும் ஒரு பொறுப்புமிக்க தரப்பாக நடந்து கொள்ளவில்லை. என்பதோடு இன்றுவரையிலும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை. இவ்வாறான ஒரு வரலாற்றனுபவத்தின் பின்னணியில் அனர்த்த காலங்களில் படைத்தரப்பு தமிழ் மக்களுக்கு உதவும் போது அது நூதனமாகத் தெரிகிறது. சிலருக்கு அது ஒரு தொண்டாகவும் தெரிகிறது.
அதேசமயம், வன்னியில் அங்குள்ள சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் அளவுப்பிரமாணத்துக்கு அதிகமான தொகையில் படைத்தரப்பு நிலைகொண்டுள்ளது. அதுமட்டுமல்ல அவர்கள் எங்கெங்கெல்லாம் நிலை கொண்டிருக்கிறார்கள் என்பது வன்னியில் உள்ள எந்த ஒரு சிவில்க்கட்டமைப்புக்கும் தெரியாது. வன்னியைப் பொறுத்தவரை வெளிப்படையாகவும் வெளித்தெரியா விதத்தில் ஆழக்காட்டிலும் படையினர் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள்.

கடந்த வாரத்திற்கு முன்னரும் இரணைமடுக்குளத்தில் வான்கதவுகள் திறக்கப்பட்டமை ஞாபகத்திலிருக்கலாம். மைத்திரிபால சிறிசேனா வந்து அவற்றை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். அவர் மேலதிக நீரைத்திறந்துவிட்டமை தொடர்பில் வேறு ஒரு கதை உண்டு. இரணைமடுக்குளத்தின் நீரேந்து பிரதேசத்திற்கு அண்மையாக படைமுகாம்கள் உண்டு. குளத்து நீரின் வரத்துக் கூடினால் அந்த முகாம்கள் மிதக்கத் தொடங்கிவிடும் என்றும் அதனால் படைத்தரப்பே வான்கதவுகளைத் திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஒரு கதை உண்டு. அப்படியானால் இம்முறை ஊருக்குள் புகுந்த வெள்ளம் முதலில் அந்த முகாம்களுக்குட்தான் புகுந்திருக்க வேண்டும் ஆயின் வான்கதவுகளை முன்கூட்டியே திறக்குமாறு ஏன் படைத்தரப்பு வற்புறுத்தவில்லை?

எதுவாயினும் வன்னியில் உள்ள மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு என்று பார்த்;தால் அது படைத்தரப்புத்தான்.அதோடு இயற்கை அனர்த்தங்களின் போதும் விரைவாகச் செயற்படத் தேவையான ஒழுங்கமைப்பையும் பயிற்சியையும் தேவையான உபகரணங்களையும் கொண்டிருப்பதும் படைத்தரப்புத்தான். எனவே வெள்ளம் பெருகத் தொடங்கியதும் அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கினார்கள்.

தமிழ்க் கட்சிகளிடம் படைத்தரப்பிடம் உள்ளது போன்ற ஒரு மையக கட்டளைப் பீடத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்;ட மேலிருந்து கீழ் நோக்கிய ஒரு வலைக் கட்டமைப்போ அல்லது கீழிருந்து மேல் நோக்கிய ஒரு வலைக்கட்டமைப்போ கிடையாது. தவிர களத்தில் இறங்கி வேலை செய்த கட்சிகள் நிறுவனங்கள் தனிநபர்களுக்கிடையிலும் வினைத்திறன் மிக்க ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. இதனால் ஒரு கட்சி அல்லது நிறுவனம் ஒரு பொருளைக் கொடுத்தால் ஏனைய கட்சி வேறு தேவையான ஒரு பொருளைக் கொடுக்கலாம் என்ற ஒரு மையப்படுத்தப்பட்ட நிவாரணத்திட்டம் எதுவும் இருக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால் உதவி செய்யும் அமைப்புக்களையும், கட்சிகளையும் தனிநபர்களையும் ஒரு மையத்தில் இணைக்கவல்ல ஏற்பாடுகள் பலவீனமாகக் காணப்பட்டன என்பதைத் தான்.

எனினும் ஓர் அனர்த்த வேளையில் தமிழ்த்தரப்பு ஒற்றுமைப்பட முடியும் என்பதற்கு வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய மகத்தான முன்னுதாரணம் ஆகும். கடந்த நவம்பர் மாதம் மாவீரர் நாளை அனுஷ்டித்த போதும் தமிழ் தரப்பிடம் ஏதோ ஒரு புரிந்துணர்வு பேணப்பட்டது. விஸ்வமடு துயிலுமில்லம் தொடர்பாக வைபரில் சில வாக்குவாதங்கள் நடந்திருந்தாலும் அதுபோன்ற சில சர்சைகளுக்கும் அப்பால் மாவீரர் நாளில் வடகிழக்கில் சம்பந்தப்பட்ட கட்சிகளும் அமைப்புக்களும்;; ஒன்று மற்றதை அனுசரித்து நடந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. இத்தனைக்;கும் நினைவு கூர்தல் தொடர்பாக ஒரு பொது ஏற்பாட்டுக் குழுவை கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்க முடியாதிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் இது. எனினும் ஒரு பொது ஏற்பாட்டுக்குழு இல்லாத வெற்றிடத்திலும் ஆளுக்காள் விட்டுக் கொடுத்து மாவீரர் நாளை அனுஷ்டித்தார்கள்.

அதுபோலவே கடந்த கிழமை வெள்ள நிவாரணத்தின் போதும் ஒரு பொதுக்கட்டமைப்பு இல்லையென்ற போதிலும் தமிழ்க்கட்சிகளும், நிறுவனங்களும் தனியாட்களும் ஏதோ ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை ஒரு கடமைபோல செய்தார்கள். உண்மையில் அது ஒரு தேசியக் கடமையும் தான். ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை முற்போக்கான அம்சங்களின் அடிப்படையில் திரளாக்குவதுதான்.வன்னி வெள்ளம் தமிழ்மக்களைத் தற்காலிகமாகவேனும் ஒரு திரளாக்கியிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் இதற்குக் காரணம். சமூகவலைத் தளங்களும், கைபேசிச் செயலிகளும் தேவைகளையும், உதவிகளையும் பெருமளவிற்கு ஒருங்கிணைத்துள்ளன.

இயற்கை அனர்த்தங்களின் போது கைபேசிகளும் சமூக வலைத்தளங்களும் எப்படி விரைந்து உதவக் கூடிய வலைப்பின்னலைக் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய உதாரணம் ஆகும்.தகவல் தொடர்புப் புரட்சியானது நாடுகளையும், கண்டங்களையும் திறந்து விட்டுள்ளது. இவ்வாறு தொழிநுட்பத்தால் திறக்கப்பட்டிருக்கும் பூமியில் அனர்த்த காலங்களில் ஒரு நாடு அல்லது ஒரு மக்கள் கூட்டம் முழுமையாகத் தீவாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் ஆபத்துக்கள் குறைந்து வருகின்றன. வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய உதாரணம்.

2009 மே மாதம் வன்னிப்பெருநிலம் மூடப்பட்டிருந்தது. ஐ.என்.ஜி.ஓக்களிடமிருந்தும், ஐ.நாவிடமிருந்தும், மனிதாபிமான அமைப்புக்களிடமிருந்தும், மனிதஉரிமை அமைப்புக்களிடமிருந்தும், வெளிப் பார்வையாளர்களிடமிருந்தும் பெருமளவுக்குத் துண்டிக்கப்பட்டு வன்னி கிழக்கு ஒரு குட்டித் தீவாக மூடப்பட்டிருந்தது. அது உலகின் ஆகப் பெரிய இறைச்சிக் கடையாகவும் இருந்தது. உலகின் ஆகப் பெரிய பிணவறை அங்கேயிருந்நது.இவ்வாறு அப்பொழுது மூடப்பட்டிருந்த மக்களுக்கு உதவ முடியாமலிருந்த ஏனைய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் இப்பொழுது தங்களால் இயன்ற அளவிற்கு ஏன் சில வேளைகளில் அளவுக்கு மிஞ்சியும் உதவி வருகிறார்கள். இப்படிப் பார்த்தால் வெள்ள அனர்த்தம் தமிழ்த்தேசிய ஐக்கியத்தை நிரூபித்திருக்கிறது.

இவ்வாறு ஆபத்தில் தமக்குக் கிடைத்த உதவிகள், ஆதரவு என்பவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் விரைவில் மீண்டெழுந்து விடுவார்கள். வன்னிப் பெருநிலத்தைப் பொறுத்தவரை வெள்ளம் பெருகுவதும் குளங்கள், வாய்க்கால்கள் உடைப்பெடுத்தோடுவதும் வெள்ளம் தெருக்களை அறுத்துக்கொண்டு ஓடுவதும் ஒரு புதிய அனுபவமல்ல. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் வெள்ளம் அந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி எனலாம்.

நாலாம்கட்ட ஈழப்போர் தொடங்க முன்பு இவ்வாறு வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஒரு மழைக்காலத்தில் நான் கிளிநொச்சியில் வட்டக்கச்சிக்குச் செல்லும் பாதையிலுள்ள ஐந்தடி வானின் ஒரு கரையில் வெள்ளத்தைக் கடப்பதா இல்லையா? என்று யோசித்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்பொழுது ஈழநாதம் பத்திரிகையின் பிரதான ஆசிரியரான ஜெயராஜ் எனக்கருகே வந்து நின்றார். அவரும் வெள்ளத்தைக் கடக்க வேண்டும். நீளக்காற்சட்டையை மடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை வெள்ளத்தில் இறக்க வேண்டும். நாங்கள் இரண்டு பேரும் யோசித்துக்கொண்டு நின்றோம். ஆனால் ஐந்தடி வானின் மறுகரையிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்கள் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் ஆடைகளை மேலே தூக்கிக் கொண்டு அல்லது நனைந்து கொண்டு இக்கரை நோக்கி நடந்து வந்தார்கள். அப்பொழுது ஜெயராஜ் என்னிடம் சொன்னார் ‘குளித்து விட்டு வெள்ளத்தில் இறங்குவது பற்றி நாங்கள் யோசிக்கிறோம். ஆனால் இந்த மக்களுக்கு இது ஒரு வழமை. இது ஒரு பிரச்சினையே இல்லை. அவர்கள் வெள்ளத்தோடு வாழப் பழகி விட்டார்கள். எனவே அநாயசமாக அதைக் கடந்து வருகிறார்கள்’ என்று.

ஆம். வெள்ளம் வன்னி வாழ்க்கையில் ஒரு பகுதி. அதிலும் குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் சாலைக் கடலேரியைக் கடந்து தப்பியவர்களுக்கும் வட்டுவாகல் பாலத்தைக் கடந்து தப்பியவர்களுக்கும் வெள்ளம் ஒரு பிச்சினையே அல்ல. ஏனெனில் ஓர் இனப்படுகொலையில் இருந்து தப்பிய மக்கள் அவர்கள். மரணத்தால் சப்பித் துப்பப்பட்ட மக்கள் அவர்கள். அப்படிப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திற்கு வெள்ளம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் விரைவில் மீண்டெழுவார்கள். பெருங்குளங்களின் அலைகரையில் பருவ காலங்கள் தோறும் பட்டுத் துளிர்க்கும் முதுமரங்களைப் போல அவர்கள் விரைவில் மீண்டெழுவார்கள்.

 

 

http://globaltamilnews.net/2018/108306/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.