Jump to content

`பேட்டை’ முதல் `மிராசு’ வரை... 2018-ல் கவனம் ஈர்த்த நாவல்கள்..! #2018Rewind


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15-க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியான இந்த ஆண்டை உண்மையில் நாவலுக்கான பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நாவல்களுள் அதிக பதிப்பு… வித்தியாசமான கதை… களம்… என 2018-ல் அதிகமாகக் கவனம் ஈர்த்த முக்கியமான சில நாவல்கள் பற்றிய மீள்பார்வை.

லக்கியத்தில் எந்த ஆண்டையும்விட இந்த ஆண்டு நாவலின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மூத்த எழுத்தாளர்களின் நாவல்கள் தொடங்கி புதிதாக வந்தவர்களின் நாவல்கள், கவிஞர்களாக மட்டுமே இருந்தவர்களின் நாவல்கள் எனப் பலரது நாவல்கள் அடங்கும். அந்த நாவல்களுள் அதிக பதிப்பு… வித்தியாசமான கதை… களம்… என 2018-ல் அதிக கவனம் ஈர்த்த முக்கியமான சில நாவல்கள் எவை என பார்க்கலாம். 

பேட்டை

தமிழ்ப்பிரபா எழுதிய `பேட்டை’, சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைக் களமாகக்கொண்ட நாவல். ரூபன் என்கிற கதாபாத்திரத்தின் வழியே மத்திய சென்னையில் இருக்கும் ஹவுஸிங் போர்டு வாழ்க்கையின் கொண்டாட்டம், அங்கு இருக்கும் மக்களின் வாழ்வியலோடு கலந்த கேரம் போர்டு, சைன் போர்டு ஆர்டிஸ்டுகள், கிறிஸ்துவ மதம், அது அந்த மக்களிடம் செலுத்தும் ஆதிக்கம் என இதுவரை யாரும் பார்த்திராத மத்திய சென்னை வாழ்க்கையைப் பேசியது. அதுமட்டுமல்ல, மனித வாழ்க்கையின் சின்னச் சின்ன ஆசைகள், கோபங்கள், அவர்களின் துன்பங்கள், இயலாமைகள், இழப்புகள் போன்றவற்றை மிக இயல்பாக ரூபன் மூலம் வாசகருக்கு அறிமுகம்செய்தது இந்த நாவல்.

 

மத்திய சென்னை பற்றிப் பல படைப்புகள் வந்துள்ளன என்றாலும், அந்த வட்டாரப் பகுதியின் தோற்றம், அந்த மக்களின் வாழ்வியல், அந்த மக்களின் கொண்டாட்டம், மொழி என அனைத்தையும் மிகவும் உயிர்ப்போடு பதிவுசெய்தது `பேட்டை'தான் என்று சொல்லலாம். இதுதான் ஒட்டுமொத்த மத்திய சென்னையின் வாழ்வியலா என்றால், இப்படித்தான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இருக்கும் என்று நிச்சயம் சொல்லலாம். ஏனென்றால், நாவலின் ஆசிரியர் தமிழ்ப்பிரபா, மத்திய சென்னையைக் கதையாகக் கேட்டவர் அல்ல; அந்த நிலத்தில் ஓர் அங்கமாக இருப்பவர். 'இதுதான் உண்மையில் அவரின் முதல் நாவலா?' என்று ஆச்சர்யமூட்டும் அளவிலான நேர்த்தியில் அமைந்த நாவல். இதுவரை மூன்று பதிப்புகளையும் உயிர்மை வழங்கிய சுஜாதா விருது மற்றும் விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கான த.மு.எ.க.ச விருது ஆகியவற்றைப் பெற்றது இந்த நாவல்.

 

பேட்டை - தமிழ் பிரபா - 2018 நாவல்கள்

பேட்டை, தமிழ்ப்பிரபா, காலச்சுவடு, பக்கம்: 350, விலை:390

 

அற்றவைகளால் நிரம்பியவள்

அஞ்சனா என்கிற மருத்துவரின் வாழ்க்கைப் பயணம் குறித்த இந்த நாவலை எழுதியது பிரியா விஜயராகவன். மருத்துவரான அஞ்சனா, தன் வாழ்நாளில் 10-க்கும் மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் சந்திக்கிறாள். அவள் சந்திக்கும் அனைத்து ஆண்களாலும் காதலிக்கப்படுகிறாள். அனைத்து பெண்களும் ஏதாவது ஒரு துன்பத்துடனேயே இருக்கிறார்கள். அவர்கள் வழியாக பாலியல் வறட்சி மிகுந்த, சாதியம் பற்றிக்கொண்ட, இயலாமை மிகுந்த இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறாள் அஞ்சனா. எண்ணற்ற கதைமாந்தர்கள், ஏகப்பட்ட கிளைக் கதைகளுக்கு ஊடாக, வாழ்க்கை என்பது ஏற்றுக்கொள்ளுதலும் அதிலிருந்து கற்றுக்கொள்ளுதலுமே என்ற புரிதலில் நின்று, வாழ்வின் பக்கங்கள் அனைத்திலும் அன்பையே எழுதிச் செல்கிறாள் அஞ்சனா. இவை அனைத்தையும் பெண்ணின் பார்வையில் பார்க்கப்படுகிறது என்பதே இந்த நாவலின் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது.

 

 

இதன் ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியை விளக்கும்விதமாக ஓர் ஓவியம் வரையப்பட்டிருக்கும். அந்த ஓவியத்தையும் இந்த நாவலாசிரியரே வரைந்துள்ளார். இந்த நாவலின் சுவாரஸ்யத்துக்கு இந்த முயற்சியும் ஒரு காரணம். இது இயக்குநர் ராம் நடத்திய இணையப் பக்கத்தில் தொடராக வந்து பிறகு நாவலாக உருவம் பெற்றுள்ளது. இந்த நாவலின் ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பதால் இதில் வரும் மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. மிக நீண்டநாள்களுக்குப் பிறகு வந்த பெண் படைப்பு. பெண்கள் எழுதிய நாவல்கள் மிகக் குறைவு. அதுவும் பெண் பார்வையில் ஒரு பெண்ணால் எழுதப்பட்ட நாவல்கள் மிகக்  குறைவு. அந்த வகையில் இந்த நாவல் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

அற்றவைகளால் நிறம்பியவள் - நாவல்கள்

பிரியா விஜயராகவன், கொம்பு பதிப்பகம், பக்கங்கள்: 712, விலை: 430

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

தாங்கள் சார்ந்த அரசியல் சித்தாந்தம் பற்றி எழுதும் ஒருசில எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் தமிழ்மகன். அப்படி அவரது அரசியல் சார்போடு வெளிவந்துள்ள `வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' அவரது மற்றோர் அரசியல் புனைகதை எனலாம். தமிழ் மொழிதான் எல்லா மொழிகளுக்கும் முதன்மையாக உள்ளது. மேலும் தமிழர்கள் ஏன் தங்கள் மொழி மீது அவ்வளவு பிடிப்போடு இருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு அறிவியல், அரசியல் புனைகதையாகச் சொல்லியுள்ளது இந்த நாவல். 

இவற்றை வெறும் உணர்வு நிலை சார்ந்து மட்டுமல்லாது வரலாற்றுச் சான்றுகளான செப்பேடுகள், கல்வெட்டுகள், வெளிநாட்டினர் மற்றும் தமிழக, இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வுக் குறிப்புகளைக்கொண்டு விவரிக்கிறது. பல வரலாற்றுத் தரவுகள் இருந்தாலும் அவை நாவலின் கதையோடு ஒட்டியிருப்பது இந்த நாவலின் மிகப்பெரிய பலம். இன்றைய தலைமுறை வாசகர்களைக் கருத்தில்கொண்டு இன்றைய அரசியல் மற்றும் தமிழ்மொழியின் பெருமையை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ள வகையில் தமிழ்மகனின் ஜீன் குறிப்புகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இந்த நாவல் வெளிவந்து இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது என்பதும், டிஜிட்டல் யுகத்தில் கூடுதல் சிறப்பு.

நாவல்கள்

தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக்கங்கள்: 184, விலை:190 

நிலநடுக் கோடு

விட்டல் ராவ் எழுதிய `நிலநடுக் கோடு' நாவல், 60-களின் சென்னையை அப்படியே சித்திரித்திருக்கிறது. ஆங்கிலோ-இந்தியன் பின்னணி  சிறப்பு, சென்னையில் இருந்த இரண்டாம் உலகப்போர்க் கால ப்ங்கர், ஜூக் பாக்ஸ், பேக்கரிகள், மின்ரயில் போக்குவரத்துகள், தேர்தல்கள், தியேட்டர்கள் எல்லாவற்றைப் பற்றியும் சொல்ல வேண்டும் என்ற அக்கறை தெரிகிறது. எல்லாவற்றையும் மிகுந்த விளக்கம் கொடுத்து எழுதியிருக்கிறார். அவருடைய நினைவாற்றலும் கதையில் அவற்றைப் பின்னியவிதமும் அற்புதம். இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதனால் எழுந்த ஆட்சி மாற்றம் ஆகியவை ஓர் எள்ளலுடன் சிறிய சிறிய வரிகளில் கடந்து செல்கிறார். அவருக்கு ஏற்பில்லாத மாற்றமாக அது இருந்திருக்கலாம். இருந்தாலும் நடந்தவற்றை விவரித்திருக்கலாம். ஆயினும் சென்னையின் ஆவண நாவல் எனும் வகையிலும் வாசிப்பில் எளிமையும் இந்த நாவலின் சிறப்பு.

Nilanadukkodu_final_13493.jpg

விட்டல் ராவ், பாரதி புத்தகாலயம், பக்கங்கள்: 328, விலை: ரூ.295 

மிராசு

சி.எம்.முத்து, தஞ்சை வட்டார வழக்கின் ஒரே ஆதாரமாக இருக்கும் எழுத்தாளர். சுதந்திர காலகட்டத்துக்குப் பிறகான தஞ்சைப் பகுதி மிராசுகளின் வாழ்வியலைப் பதிவுசெய்திருக்கும் நாவல்தான் இந்த `மிராசு'. இதில் பெரிய திருப்பங்களோ, மர்ம முடிச்சுகளோ, பெரிய பெரிய சம்பவங்களின் கோப்புகளோ இல்லை. சேது காளிரங்கராயர் என்கிற மிராசுதாரின் வாழ்வு எந்த அளவுக்கு அபாரமானதாக, ரசனையானதாக இருந்தது என்பதை மட்டும் பதிவுசெய்யாமல், விவசாயத்தை ஆதாரமாகக்கொண்டு அவர்கள் எந்த அளவுக்கு மிடுக்கான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் என ஓர் இனக்குழு வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ளது இந்த நாவல். 

இன்றைய காலகட்டத்தில் நம் பண்டைய இனக்குழு வாழ்வியலை அதன் அழகியலோடு அறிந்துகொள்வது தேவையாக இருக்கிறது. அதன் அழுத்தமான ஆரம்பம் இந்த நாவல். இது ஓர் ஆரம்பம்தான். இதைப்போல தமிழகத்தின் இனக்குழு வாழ்வியலைப் பதிவுசெய்யும் நாவல்கள் வெளிவர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது இந்த நாவல்.

மிராசு நாவல்

சி.எம்.முத்து, அனன்யா பதிப்பகம், பக்கங்கள்: 849, விலை:ரூ.780

இவை தவிர முக்கியமான பல நாவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இவை மற்ற நாவல்களிலிருந்து ஒருசில வகையில் வேறுபட்டு அமைந்துள்ளன என்பதால், இங்கே தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

https://www.vikatan.com/news/miscellaneous/145623-a-review-of-best-tamil-novels-released-in-2018.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.