Jump to content

ஈழத்து எழுத்துப்பரப்பில் புதியவர்களின் படைப்பு மொழி-க.சட்டநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து எழுத்துப்பரப்பில் புதியவர்களின் படைப்பு மொழி-க.சட்டநாதன்

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

நல்ல எழுத்தை-படைப்பைப் படித்தவுடன் இது நல்லது என்பதைத் தேர்ந்த விமர்சகன் இனங்கண்டு கொள்கின்றான். நல்ல வாசகனுக்கும் இந்த நுண்ணிய உணர்திறன் உண்டு. இதனை நாலுபேர் தெரிய எடுத்துரைப்பதும் விமர்சிப்பதும் விமர்சகனது கடமையாகும். ஆனால் இங்கு நமது இலக்கியச்சுழலில் இத்தகைய போக்கு மிக அருந்தலாகவே நடைபெறுகின்றது. இது கண்டனத்துக்குரியதும் கவலைதருகின்ற விடயமுமானது.  

இங்கிருக்கும் ஒரு சில விமர்சகர்கள் சூழல் முழுவதையுமே குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போல -வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், மொத்த இலக்கியச்சூழலையும் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான உணர்வுடன் -ஒருவகை மிதப்புடன் நடந்து கொள்கின்றனர். தன்னை எப்பொழுதும் முதன்மைப்படுத்தி -முன்நிறுத்தி, அதே சமயத்தில் போலியான கற்பிதங்களுடன், நல்ல படைப்பாளிகள் மீதும் ,நல்ல படைப்பு மீதும் -தப்பும் தவறுமான குற்றச்சாட்டுகளைக் கொட்டித் தீர்த்து விடுகின்றார்கள். இந்தக் கருத்தியல் ரீதியான மோதல் ( அவர்களிடம் அப்படியான கருத்தியல் ஏதாவது இருக்கின்றதா என்ன ?) அல்லது எழுத்து வன்முறை கண்டிக்கத்தக்கது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ,முன்னர் நல்ல எழுத்தாகவும் எழுத்தாளனாகவும் இனங்காணப்பட்டவர்கள், ஏதோ ஒரு காரணம் பற்றி குறித்த அந்த விமர்சகருடன் முரண்பட்டு விட்டால் அன்றில் முரண் பட்டு விட்டதாக அவர் நினைத்துக் கொண்டால் சடுதியாக அப்படைப்பாளி ஓரங்கட்டுப்படுவதுடன், விமர்சகர்களது சின்னத்தனமான தாக்குதலுக்கு இலக்காகி விடுகின்றார்கள். பல கோணங்களில் அவர்கள் குரூரமான முறையில் இம்சிக்கப்படுகின்றார்கள். இது எத்தகைய நாகரீகத்தின்பாற்பட்டது? எனக்குத்தெரியவில்லை.   

இந்தப் பின்னணியில் நல்லதை -நல்லது என்று கூறும் பண்பு, பக்குவம்-நபர் பேதமில்லாமல்- ஒரு சிலரிடம் இருக்கவே செய்கின்றது. ஏ.ஜே.கனகரத்தினா, மு.பொ, அம்பை, வேத சகாயகுமார், ரஞ்சகுமார், குப்பிளான் ஐ சண்முகன், சத்தியபாலன், செல்வமனோகரன், மதுசூதனன் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தடாலடித்தனமான ஒரு விமர்சகனாக இல்லாமல், ஒரு வாசகனாக-என்னை முன்நிறுத்தி, அண்மையில் வெளிவந்த சில சிறுகதைத் தொகுதிகள் பற்றியும் அவற்றிலிருந்து பதச்சோறாய் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பற்றியும் சிறிது கூறலாம் என நினைக்கின்றேன். தொகுதிகளாகத் தந்தவர்கள் இளைய தலைமுறையினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

முதலில் யோ கர்ணனின் ‘சேகுவாரா இருந்த வீடு’ சிறுகதைத்தொகுதியில் உள்ள ‘திரும்பி வந்தவள் ‘ என்ற கதையைப் பாப்போம். தமிழில் அண்மையில் வெளியாகிய சிறுகதைகளில் இது சிறப்பானது ஒன்றாகும்.  

பவித்திரா என்ற பதுமையான பெண்ணின்-போராளியின் கதை.அவள் போராளி ஆவதற்கு முன்னரும் அதற்குப் பின்னருமான கதைப்பொருளைக் கொண்டது. கதையில் காதலும் உண்டு. மனத்தைத் தொட்டு ஆழ்ந்த ஆழ்ந்த துயரத்தினைக் கிளர்த்தும் அனுபவச்செறிவு இக்கதைக்கு உண்டு என்பது மிகை மதிப்பீடல்ல.

புலோலியூர் ஆ இரத்தினவேலன் சில காலமாக எழுதி வருகின்றார். அவருடைய ‘காவியமாய்…..ஓவியமாய் …’ எனும் தொகுதியில் மெச்சத்தக்க கதைகள் இருந்த போதிலும் ‘தாச்சிச்சட்டி’ மிகவும் நல்ல கதை.

பெத்தாத்தை, அவளது மகள் சாரதா, வடலித்திடல் வீரன் என்பவர்களைச் சுற்றிச் சுழலும் இக்கதையானது, கிராமிய மக்களது மன உணர்வுகளையும் அவலாதிகளையும் பட்டும் படாத அளவு சாதி உணர்வையும் அழகாகப் பதிவு செய்கின்றது. அதேசமயம் மண்ணோடும் மனதோடுமாகிவிட்ட இளமை நினைவுகளின் லயிப்பையும் லாகிரியையும் இக்கதை மிகுந்த சுவையுடன் தருகின்றது.

பவானி சிவகுமாரனின் ‘குடைபிடிக்கும் நினைவுகள்’ கதை அவரது ‘நிஜங்களின் தரிசனம் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றது.

வாழ்ந்து கெட்ட முதியவர் சிவலிங்கத்தைப் பற்றிய கதை இது. அவரது வேண்டாத பிள்ளையான-மூத்த மகனின் வாரிசு துஷி-அவரது பேரன். அவன் புயல் போல அயல்த்தேசத்தில் இருந்து வந்து சில நாட்கள் அவருடன் வாழ்ந்த உயிர்ப்பான பகுதியைச் சொல்லும் கதையிது.

வசந்தி தயாபரன் வளர்ந்துவரும் அறிய படைப்பாளி. அவரது ‘காலமாம் வனம்’ தொகுதியில் உள்ள ‘காலம் தொலைத்த கனவு’ மிக நல்ல கதை. வாழ்க்கையைச் சொல்ல வேண்டும், அதைப்  பரசவத்துடன் சத்தியத்துடன் சொல்லவேண்டும் என முனைப்புக் கொள்ளும் இக்கதையில், இலங்கையில் இனங்களுக்கிடையிலான நேசங்களும் முரண்பாடுகளும் பதிவாகின்றது. அத்துடன் மனம் சார்ந்த உணர்வுகளும் நினைவுகளும் ரசத்துளிகளாய் சுவையூட்டுகின்றன. 

அடுத்துத் தேவமுகுந்தன். ‘ கண்ணீரின் ஊடே தெரியும் வீதி’ இவருடைய தொகுதிக்கதையாகும். இந்தத் தொகுதிக்கதைகள் பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்துகின்றன. இந்தத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை ‘வழிகாட்டிகள்’.

இக்கதை கல்விசார் நிர்வாகக் கட்டமைப்பையும் அதன் சீர்கேடுகளையும் ஒருவகை எள்ளலுடன் கூறுகின்றது. கல்விப் புலத்தில் உள்ள அதிகாரிகளின் போலி முகங்களைத் தோலுரித்துக் காட்டுவதுடன், அவர்களது பேச்சும்-செயற்பாடுகளும் இயல்பாய் கதையாய் அழுத்தம் பெறுகின்றது. 

அடுத்து ஆர்.எம்.நௌஷாத்தின் ‘வெள்ளி விரல்’ தொகுதி. இந்தத் தொகுதியில் உள்ள ‘மீள்தகவு’ கதையும் establishment-க்கு எதிரானது. சிவப்பு நாடாத் தொல்லைகள் தாங்காது நசுங்கிப் போகும் முஹம்மது யூசுப் அப்துல்லா என்ற ஏழை முஸ்லீமைப்பற்றிய கதை. அவரது நிர்கதியான நிலையானது வாசகர் மனதில் ஆசிரியரது வல்லபத்தினால் அழுத்தமாக அப்பிக் கொள்கின்றது. 

இவர்களைத்தவிர இராகவனது விட்டில்-சமகால அரசியல்ப் பகுப்பாய்வு. தாட்சாயணியின் ‘அங்கையற்கண்ணியும்’ ‘அவளது அழகிய உலகமும்’ மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப்பள்ளிக்கூடம்’ ஆகியன அண்மையில் வந்த நல்ல சிறுகதைத்தொகுதிகளாகும். இவை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

 

http://www.naduweb.net/?p=8786

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.